திருத் தில்லை - 1

 


"ஓடாமல், பாழுக்கு உழையாமல், ஓரம் உரைப்பவர் பால்

கூடாமல், நல்லவர் கூட்டம் விடாமல், வெங்கோபம் நெஞ்சில்

நாடாமல், நன்மை வழுவாமல், இன்றைக்கு நாளைக்கும் என்று

தேடாமல் செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை --- திருத்தில்லையின் கண் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி உள்ள பரமாசாரியனே, ஒவ்வொரு விடயமாக ஓடாது இருக்கவும், வீணுக்கு உழைக்காது இருக்கவும், பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று தரத்திலும் பட்ச பாதமாய்ப் போசுவோரிடத்துச் சேராது இருக்கவும், நல்லவர்களின் கூட்டத்தை விட்டு நீங்காமல் இருக்கவும், என் மனத்தில் கொடிய சினமானது எழாது இருக்கவும், நன்மை தருவன எவற்றையும் நீங்காது இருக்கவும், இன்றைக்கு வேண்டும், நாளைக்கு வேம்டும் என்று பொருள் முதலியவற்றைத் தேடாது இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.  


விளக்கம் --- மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை என்றும், மற்றும் இத் தன்மையான விஷயங்களைச் சொல்லும் மயக்கநூல் வழக்குகளையே மெய்ந்நூல் எனத் துணிந்து, அக் கொள்கைகளை உடையவரிடத்து செல்லாது இருக்க வேண்டும் என்பார், "ஓடாமல்" என்றார்.


காமம், வெகுளி, மயக்கும் என்னும் முக்குற்றங்களையும் கடிந்து, இயமம், நியமம், இருப்பு, உயிர்நிலை, மனவொழுக்கம், தாரணை, தியானம், சமாதி என்று சொல்லப்படும் எண் பகுதியாகிய யோக நெறிகளில் எப்போதும் உழைத்து உயிருக்குரிய ஊதியத்தைப் பெறவேண்டுமேயல்லாது, பிற விஷயங்களில் உழைக்கக் கூடாது என்பார்,  "பாழுக்கு உழையாமல்" என்றார். "பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழ மாட்டேன், மாயமும் தெளியகில்லேன்" என்பார் அப்பர் பெருமான்.


விருப்பு, வெறுப்பு காரணமாக ஒருதலையாகப் பேசுதல் விடுத்து, சொல்ல நினைப்பவைகளைத் தீமை பயக்காதவையாகச் சொல்லுவதால் தனக்கும் கேடு இல்லை, பிறருக்கும் கேடு இல்லை.  அவ்வாறு இல்லாதவரால் கேடு விளையும் என்பதால், "ஓரம் உரைப்பவர் பால் கூடாமல்" என்றார்.  ஓரம் பேசுதல் தீயது என்பதை, "வேதாளம் சேருமே, வெள்எருக்குப் பூக்குமே, பாதாள மூலி படருமே, மூதேவி சென்று இருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே, மன்று ஓரம் சொன்னார் மனை" என்னும் ஔவைப் பிராட்டியாரின் அருள் வாக்கு தெளிவிக்கும்.


நல்லவர்களைச் சேர்ந்து இருந்தால் நல்ல குணங்களை உடையவராவர். தீய குணங்கள் உடையவரைச் சேர்ந்து இருந்தால், தீய குணங்களே மிகும் என்பதால், "நல்லவர் கூட்டம் விடாமல்" என்றார்.


நெருப்பானது தான் சேர்ந்து இடத்தை மட்டுமே சுடும். ஆனால், சினம் என்னும் நெருப்போ, தான் சேரந்தவரை மட்டுமன்றி, சுற்றத்தையும் சுடும் ஆதலால், "நெஞ்சில் வெம் கோபம் நாடாமல்" என்றார். "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்" என்பது திருக்குறள்.  


இன்பத்தின் காரணமாகச் செய்யும் தீவினைகள், முடிவில் துன்பத்தையே தருபவை ஆதலால், அதனை ஒழித்து,  ஒருவருக்கு நன்மையைச் செய்தால், அந்த நன்மையை எழுபிறப்பும் நினைத்துப் பார்ப்பர். எனவே, "நன்மை வழுவாமல்" என்றார்.


அவரவர் ஈட்டிய இருவினைக்கு ஈடாக, எப்போது என்ன என்று எழுதி வைக்கப்பட்டு விட்டது.  அதைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. தேடவேண்டியது இறையருளையே. அதனால், "இன்றைக்கு நாளைக்கு என்று தேடாமல்" என்றார்.


எல்லாவற்றுக்கும் மேலாகிய இறைவன் திருவடிச் செல்வம், மற்ற உலகியல் நலங்கள் எல்லாம் இயல்பாகவே வாய்க்கும் என்பதால்,  "செல்வம் தருவாய்" என்றார்.  செல்வம் என்பது அருட்செல்வத்தையே குறிக்கும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்னும் திருக்குறளை நோக்குக.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 2

  "பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாத...