திருத் தில்லை - 2

 


"பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி

வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து

பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாதவரைச்

சேராமல், செல்வம் தருவாய், சிதம்பர தேசிகனே."


பொழிப்புரை ---  திருத்தில்லையின்கண் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி உள்ள பரமாசாரியனே!  தமது பழைய நிலையைக் கருதாது வந்து இரப்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் இருக்கவும், இரப்பவர்கள் மீது குற்றங்களையே எடுத்துக் கூறி வராமல் இருக்கவும், பாவங்கள் என்னை வந்து அடையாமல் இருக்கவும், முன் நின்ற நிலையில் இருந்து மனம் சோர்வுபடாமல் இருக்கவும், உன்னுடைய திருவடிச் சேவையைப் பிரியாமல் இருக்கவும்,  உன்னிடத்து அன்பு வைக்காதவரை நான் அடையாமல் இருக்கவும்,  தேவரீரது திருவடியாகிய செல்வத்தைக் கொடுத்து அருள்புரிவீராக.


விளக்கம் --  இரப்பவர்கள் தமது இளிவரவைத் தமக்குச் சொல்லுவதற்கு, முன்பே அவர் குறிப்பு அறிந்து கொடுத்தலும், இன்னொருவரிடம் சென்று அவர் தமது இளிவரவைச் சொல்லாது இருக்கும்படி கொடுத்தலும், நான் இப்போது பொருள் உடையவன் இல்லை என்று சொல்லி, இரப்பவரக்குக் கொடுக்காமல், கரக்கின்ற இழிநிலை வராமல் இருத்தலும், ஈகைக் குணம் உடையவர்க்கு உரிய குணங்களாதலால், பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல் என்றார்.


பிறர்மேல் குற்றும் கூறுவதையே செய்பவருக்கு யாவரும் பகையாகவே ஆவர் என்பதால், பிறர் தீமை சொல்லா நலமாகிய சான்றாண்மை வேண்டும் என்பார், பழுது சொல்லி வாராமல் என்றார். "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்றார் திருவள்ளுவ நாயனார்.  


பிறர் தீமையைச் சொல்வதாலும், புறம் கூறுவதாலும், எல்லாப் பிறவிகளிலும் பாவங்கள் வந்து அணுகும் ஆதலால், அதைத் தவிர்த்து ஒழுகுதல் பொருட்டு, "பாவங்கள் வந்து அணுகாமல்" என்றார்.


வீட்டின்பத்தை அடைய முயலுவோர் செவி முதலாகிய ஐம்பொறிகளுக்குரிய ஓசை முதலாகிய ஐம்புலன்களையும் அவித்தல் வேண்டும். இல்லாவிடில், ஐம்புலன்கள் மனத்தைத் துன்பத்தினாலும், பாவத்தினாலும், தேடப்படும் பொருள்களின் மேல் அல்லாமல், முத்திவழியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் மார்க்கங்களில் செல்ல ஒட்டாமல் செய்யுமாதலால், "மனம் அயர்ந்து பேராமல்" என்றார்.


முத்திப் பேற்றை அடைய வேண்டுமானால், பெருமான் திருவடியில் அன்பு மிக்கு, அகம் குழைந்து, மெய் அரும்பி, கையினால் தொழுதல் வேண்டும். அந் நெறியில் சிறிதும் வழுவாமல் வழிபாடு இயற்றிட வேண்டும் என்பார், "சேவை பிரியாமல்" என்றார்.  


அதற்கு உபாயமாக உள்ளது அடியவர் திருக்கூட்டத்தினைச் சார்ந்து இருத்தலே ஆகும். அல்லாதாரோடு சேர்ந்து இருந்தால் அல்லாதவை எல்லாம் வந்து சேரும். அல்லாத கூட்டமானது, ஒருவனை இருளிலே உய்த்து விடும். எனவே, நல்லோர் கூட்டத்தை அடைதல் வேண்டும் என்பார், "அன்பு பெறாதவரைச் சேராமல்" என்றார்.


எல்லாவற்றுக்கும் மேலாகிய இறைவன் திருவடிச் செல்வம், மற்ற உலகியல் நலங்கள் எல்லாம் இயல்பாகவே வாய்க்கும் என்பதால்,  "செல்வம் தருவாய்" என்றார். செல்வம் என்பது அருட்செல்வத்தையே குறிக்கும். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருள்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்னும் திருக்குறளை நோக்குக.  


திருவடிச் செல்வமானது, இம்மை மறுமை நலன்களைத் தரும் செல்வம் போல் அல்லாமல்,  நிரதிசயானந்தத்தைத் தரும். ஆகையால், அதனையே தரவேண்டும் என்று வேண்டினார். நிரதிசயானந்த இன்பம் வாய்க்குமானால், இம்மை மறுமை இன்பங்கள் கசக்கும்.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 2

  "பாராமல் ஏற்பவர்க்கு இல்லை என்னாமல், பழுதுசொல்லி வாராமல், பாவங்கள் வந்து அணுகாமல், மனம் அயர்ந்து பேராமல், சேவை பிரியாமல், என்பு பெறாத...