பொது --- 1043, தீயும் பவனமும்

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தீயும் பவனமும் (பொது)

 

தானந் தனதன தானந் தனதன

     தானந் தனதன ...... தனதான

 

 

தீயும் பவனமு நீருந் தரணியும்

     வானுஞ் செறிதரு ...... பசுபாசத்

 

தேகந் தனைநிலை யேயொன் றிருவினை

     தீருந் திறல்வினை ...... யறியாதே

 

ஓயும் படியறு நூறும் பதினுறழ்

     நூறும் பதினிரு ...... பதுநூறும்

 

ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல

     யோகம் புரிவது ...... கிடையாதோ

 

வேயுங் கணியும்வி ளாவும் படுபுன

     மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா

 

மீனம் படுகட லேழுந் தழல்பட

     வேதங் கதறிய ...... வொருநாலு

 

வாயுங் குலகிரி பாலுந் தளைபட

     மாகந் தரமதில் ...... மறைசூரன்

 

மார்புந் துணையுறு தோளுந் துணிபட

     வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

 

தீயும் பவனமும் நீரும் தரணியும்

     வானும் செறிதரு ...... பசுபாசத்

 

தேகம் தனை நிலையே ஒன்று, இருவினை

     தீரும் திறல் வினை ...... அறியாதே,

 

ஓயும் படி அறு நூறும் பதின் உறழ்

     நூறும் பதின் இரு ...... பதுநூறும்

 

ஓடும் சிறுவுயிர் மீளும் படி,நல

     யோகம் புரிவது ...... கிடையாதோ?

 

வேயும் கணியும் விளாவும் படு புனம்

     மேவும் சிறுமி தன் ...... மணவாளா!

 

மீனம் படு கடல் ஏழும் தழல்பட,

     வேதம் கதறிய ...... ஒரு நாலு

 

வாயும், குலகிரி பாலும் தளைபட,

     மா கந்தரம் அதில் ...... மறைசூரன்

 

மார்பும், துணைஉறு தோளும் துணிபட

     வாள்கொண்டு அமர் செய்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா --- மூங்கிலும்வேங்கை மரமும்விளா மரமும் வளர்ந்து இருக்கின்ற வள்ளிமலையைச் சார்ந்து உள்ள தினைப் புனத்தில் வாழும் சிறுமியாகிய வள்ளிநாயகியின் கணவரே!

 

            மீனம் படு கடல் ஏழும் தழல் பட--- மீன்கள் உலவுகின்ற ஏழு கடல்களும் தீப்பட்டு வறண்டு போகவும்,

 

            வேதம் கதறிய ஒரு நாலும் வாயும்,குலகிரி பாலும் தளை பட --- வேதங்களை ஓதுகின்ற ஒப்பற்ற நான்கு திருவாய்களை உடைய பிரமனும்உயர்ந்த மாயமலையான கிரெளஞ்சத்தின் பக்கங்களும் (கந்தகிரியில் ஓரிடத்தே) சிறைபட்டுக் கிடக்கவும்,

 

            மா கந்தரம் அதில் மறை சூரன் மார்பும் துணை உறு தோளும் துணி பட--- பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த சூரபதுமனுடைய மார்பும்தோள்களும் அறுந்து விழும்படியாகவும்,

 

            வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே--- ஒளி பொருந்திய வேலைக் கொண்டு போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

            தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு--- தீகாற்றுநீர்மண்விண் ஆகிய ஐந்து பூதங்களால் ஆனதும்,

 

            பாச--- கட்டுக்கள் ஆகிய ஆணவம்கன்மம்மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான

 

            தேகம் தனை நிலையே ஏய் ஒன்றும்--- இந்த உடலை நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைத்து, (அழிகின்ற உடலை அழியாத உடலாகச் செய்து)

 

            இரு வினை தீரும் திறல் வினை அறியாதே--- நல்வினை,தீவினை ஆகிய இரண்டு வினைகளும் முடியும்படியான ஆற்றல் மிக்க செயல் எதையும் அறிந்து கொள்ளாமல்,

 

            ஓயும்படி அறு நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும்--- பிறப்பு ஓயும்படியாகஅறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10மடங்கு 2,000 = 20,000) மொத்தம் (600 + 1,000 + 20,000) 21,600மூச்சுகள்

 

            ஓடும் சிறு உயிர் மீளும்படி ந(ல்)ல யோகம் புரிவது கிடையாதோ --- ஓடுகின்ற சிற்றுயிரானது (இனி ஒரு உடல் சிறையில் புகாமல்) விடுதலை அடையும்படி நல்ல சிவயோகத்தைப் பயிலும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைக்காதோ?

 

பொழிப்புரை

 

     மூங்கிலும்வேங்கை மரமும்விளா மரமும் வளர்ந்து இருக்கின்ற வள்ளிமலையைச் சார்ந்து உள்ள தினைப் புனத்தில் வாழும் சிறுமியாகிய வள்ளிநாயகியின் கணவரே!

 

            மீன்கள் உலவுகின்ற ஏழு கடல்களும் தீப்பட்டு வறண்டு போகவும்வேதங்களை ஓதுகின்ற ஒப்பற்ற நான்கு திருவாய்களை உடைய பிரமனும்உயர்ந்த மாயமலையான கிரெளஞ்சத்தின் பக்கங்களும் (கந்தகிரியில் ஓரிடத்தே) சிறைபட்டுக் கிடக்கவும்பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த சூரபதுமனுடைய மார்பும்தோள்களும் அறுந்து விழும்படியாகவும்ஒளி பொருந்திய வேலைக் கொண்டு போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

            தீகாற்றுநீர்மண்விண் ஆகிய ஐந்து பூதங்களால் ஆனதும்கட்டுக்கள் ஆகிய ஆணவம்கன்மம்மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான இந்த உடலை நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைத்து, (அழிகின்ற உடலை அழியாத உடலாகச் செய்து)

நல்வினைதீவினை ஆகிய இரண்டு வினைகளும் முடியும்படியான ஆற்றல் மிக்க செயல் எதையும் அறிந்து கொள்ளாமல்பிறப்பு ஓயும்படியாகஅறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10மடங்கு 2,000 = 20,000) மொத்தம் (600 + 1,000 + 20,000) 21,600மூச்சுகள்ஓடுகின்ற சிற்றுயிரானது (இனி ஒரு உடல் சிறையில் புகாமல்) விடுதலை அடையும்படி நல்ல சிவயோகத்தைப் பயிலும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைக்காதோ?

 

கருத்துரை

 

முருகா! சிவயோகத்தைப் புரியும் பேறு வாய்க்க அருள் புரிவாய்.

 

 

 

No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...