நட்பின் இலக்கணம்நட்பின் இலக்கணம்

-----

 

     "உங்கள் நண்பரைச் சில நாளாகக் காணவில்லையே?" என்று கேட்டால், ஒரு சிலர், "என் நண்பரா? யாரைச் சொல்கின்றீர்கள்?என்று எதிர் வினா எழுப்புவர். கேள்வியை முதலில் கேட்டவர், இன்னாரைத் தான்  என்று குறிப்பிட்டுச் சொன்னால், "அவரையா சொன்னீர்கள் அவர் இப்போது  எனது நண்பர் இல்லை. ஒன்றுக்கும் உதவாத அவரை எப்படி நண்பர் என்று சொல்லமுடியும்?" என்று கேட்பார். இப்படிச் சிலரை இன்றும் காணலாம்.

 

     இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை ஒன்று உண்டு. நண்பர் என்பவர் பொருள் கொடுத்து உதவ வேண்டும் என்றும்சமயத்தில் உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. மிகவும் நெருங்கிப் பழகும் இருவர்கூட இம் மாதிரி சோதனை ஏற்படும் பொழுது பிரிந்து விடக் காண்கின்றோம். இது முற்றிலும் சரி என்று கூறிவிட  முடியாது. சரியன்று என்றும் கூற முடியாது. "உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதே நட்பு" என்று நட்புக்குத் திருவள்ளுவ நாயனார் இலக்கணம் அமைத்துக் காட்டினார். நண்பனுக்குத் துன்பம் வந்தபோது அதைக் களைய முற்படுவதே நட்புக்கு அழகு ஆகும். பொருளை எதிர்பார்த்தும், முன் செய்த ஓர் உதவிக்குக் கைம்மாறு எதிர்பார்த்தும் பழகுவது நட்புக்கு இலக்கணம் ஆகாது.

 

     உண்மை நண்பர் யார்வேண்டும் பொழுது பொருள்  கொடுத்தும், ஏனைய உதவிகள் செய்தும் உறுதுணையாக இருப்பவர்தான். நண்பர்களுக்கு இலக்கணம் கூற வந்த நமது முன்னோர், நண்பர்களுக்குச் சாவு வந்த இடத்தில் தானும் சாதலும்நோய் வந்த இடத்துத் தானும் வருந்துதலும்பிரிவை வெறுத்தலும் வேண்டும் பொழுது பொருள் கொடுத்து உதவி செய்தலும் நண்பர்கட்கு இலக்கணம் என்று கூறினர்.

 

     வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த திருவள்ளுவ நாயனார், நட்புப் பற்றி ஐந்து அதிகாரங்களை வைத்தார் என்றால்,  நட்பின் அருமையும் பெருமையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  பயனில்லாத சொல்லைப் பேசவே கூடாது என்று கட்டளை இட்ட திருவள்ளுவ நாயனார்,  நட்பைப் பற்றி மிக அதிகமாக ஐந்து அதிகாரங்களை வைத்தார் என்பதில் இருந்தே மனித வாழ்க்கையில் நட்பு எத்தனை இன்றியமையாதது என்பது விளங்கும்.  "நட்பு" என்னும் அதிகாரத்தில் நட்பின் சிறப்பு குறித்தும்,  "நட்பாராய்தல்" என்னும் அதிகாரத்தில் ஆராய்ந்து  நட்புச் செய்தல் குறித்தும், "பழமை" என்ற அதிகாரத்தில், பழகிவிட்டவரின் குறையைப் பொறுத்து நடந்து கொள்ளுதல் குறித்தும் நட்பின் சிறப்பைக் கூறிவிட்டு "தீ நட்பு" என்னும் அதிகாரத்தில் தீமை தரும் நட்பு கூடாது என்றும்"கூடா நட்பு" என்னும் அதிகாரத்தில் தகாத நட்பு கூடாது என்றும் கூறி நட்புச் செம்மையாக அமையாதபோது விளையும் தீமை பற்றியும் அழகாகக் கூறினார் நாயனார்.

 

     உலகில் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் ஒப்புயர்வற்ற நண்பர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால்இவர்கள் தொகை மிகவும் குறைவானதுதான். அதனாலேதான் இவர்கள் இலட்சியத் தன்மை உடையவர்களாகி விடுகின்றனர். இலக்கியங்களில் இத்தகைய உயர்ந்த நட்புப் படம் பிடித்துக் காட்டப்பட்டு உள்ளது. இலக்கியத்தில் கற்பனையாகத் தோன்றும் நண்பர்கள் அல்லாமல்,உண்மையாகவே வாழ்ந்த பெருமக்களும் உண்டு. நட்புக்குத் திருவள்ளுவ நாயனார் கூறிய இலக்கணம் அனைத்தும் பொருந்த வாழ்ந்த இரண்டு பெருமக்களைப் பெற்ற பெருமை உடையது இத்தமிழ் நாடு.சாதாரணமாக நண்பர்கள் என்பவர்கள் ஒத்த குடியும்செல்வ நிலையும்பண்பாடும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்று கூறுவர்.ஆனால்யசெல்வச் செழிப்பில் மிதக்கின்றஒர் அரசனும், வறுமை காரணமாகப் புரவலர்களைத் தேடிச் சென்று பாடிப் பரிசில் பெற்று வரும்புலவர் ஒருவரும், ஒருவரை ஒருவர் காணாத நிலையிலும் கூடஒத்த உணர்வினால் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தார்கள் இந்த அருந்தமிழ் நாட்டில்.

     கோப்பெருஞ்சோழன் என்பவன் சோழ வள நாட்டை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஆட்சி செய்தவன். நற்பண்புகள் பலவும் நிறைந்தவன். நல்ல குணம் நிறைந்தவரிடத்தில் நல்ல வீரமும் நிறைந்து இருக்கும். வீரத்திலும் கோப்பெருஞ்சோழன்  யாருக்கும் குறைந்தவன் அல்லன். அவனுடைய சிறந்த குணங்கள் குன்றில் இட்ட விளக்கைப்  போலப் பிற நாடுகளிலும் ஒளி விடத் தொடங்கிற்று. அவன் காலத்தில்  பாண்டிய நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள பிசிர் என்னும் சிற்றூரில் 'ஆந்தையார்’ என்ற புலவர் ஒருவர் வாழ்ந்தார். ஊர்ப் பெயரையும் சேர்த்து, அவர்  'பிசிராந்தையார்' என வழங்கப்பட்டார். அவர் சிறந்த புலவர். ஆனால் வறுமை மிக்கவர். சிறந்த பண்பு உடையவர்களைப் பாடுவது புலவர்களுக்கு வழக்கம்.  கோப்பெருஞ்சோழனுடைய நற்பண்பு  பிசிராந்தையாரின் காதுகட்கும் எட்டியது. எனவேஅவனுடைய குணங்களில் ஈடுபட்ட அவர்அவன் மாட்டு அன்பு கொண்டார்.

     ஒருவரிடம் அன்பு உண்டாகி நட்புச் செய்கின்றோம் என்றால்இரண்டு காரணங்களால் அது உண்டாகும். முதலாவது காரணம்அவர் நற்பண்புகள் உடையவர், அன்பு நிறைந்தவர் என்பதால் உண்டாவது. இக்காரணத்தால் ஏற்படும் நட்பில் இரண்டு பேரும் இலாபநட்டக் கணக்குப் பார்க்கமாட்டார்கள். பயன் தூக்க மாட்டார்கள். தூய அன்பு ஒன்றைத் தவிர வேறு எந்தப் பயனையும் கருதமாட்டார்கள். இத்தகைய அன்பைத் தான் காதல் என்று கூறுகின்றோம். இரண்டு ஆடவர்களுக்கு இடையே இது உண்டானால் நட்பு என்றும், ஓர் ஆடவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்டால் காதல் என்றும் கூறுகின்றோம். எந்தப் பெயரிட்டு வழங்கினாலும் தூய அன்பு தவிர வேறு அடிப்படை இங்கு ஒன்றும் இல்லை.

     இரண்டாவதுஒரு காரணத்தால் நட்புச் செய்பவர்களும் உண்டு. இதன் அடிப்படை பொருள் தவிரவேறு ஒன்றும் இல்லை. பையில் கனம் இருப்பவருடன் நண்பர் குழாம் நிறைந்துவிடும். அவர் பை காலி ஆனவுடன் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல அவரைச் சேழ்ந்து இருந்த நண்பர் குழாமும் மறைந்துவிடும்.

     பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு முற்றிலும் முதல் வகையையே சேர்ந்தது. இவர் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டதே இல்லை.ஒருவரைப் பற்றி மற்றவர் கேள்விப்பட்ட அளவிலேயே இருந்தனர். அவ்வாறு இருந்தும் ஆழ்ந்த நட்புக் கொண்டனர்.அவ்வாறானால் இவர்கள் நட்பும் மேற்போக்காக இருந்திருக்கும் போலும் என்று நினைத்தால், அது தவறு. ஓயாமல் ஒவ்வொருவரும் மற்றவரைப் பற்றியே நினைந்து கொண்டிருந்தனர். எவ்வளவு தூரம் ஒருவர் மற்றவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார் ஒரே எடுத்துக்காட்டு உள்ளது. பிசிராந்தையாரை யாரேனும் 'நீர் யார்?’ என்று கேட்டால், ‘யான் பேதைச்சோழன்’ என்று விடை கூறுவார். சோழனும் தன்னைப் 'பிசிராந்தை' என்றுதான் கூறுவான்.

 

     இந்நிலையில் சோழனுக்கு ஒரு தீமை நிகழ்ந்தது. அவன் பிள்ளைகளே படை சேர்த்துக்கொண்டு தந்தையின் மேல் படை எடுத்தார்கள். மக்களின் மமதையைப் போக்கச் சீறி எழுந்தான் சோழன். புல்லூர் எயிற்றியனார் என்ற புலவர் அவனைத் தடுத்தார். 'அவர்கள் அறியாமையால் போர் தொடுத்தால் நீயும் புறப்படலாமா?அவர்கள் தோற்றுவிட்டால் இந்த அரசை யாருக்குத் தரப் போகிறாய்?' என்று அவர் எடுத்துக் கூறினார். சோழன் மனம் மாறிவிட்டான். ஆட்சிப் பீடத்தை விட்டுக் கொடுத்துவிட்டுவடக்கிருக்கப் புறப்பட்டு விட்டான். வாழ்வில் வெறுப்புற்றவர் வடக்கு முகமாக அமர்ந்து ஊண் உறக்கத்தை நீத்துக் கொஞ்சங் கொஞ்சமாக உயிரை விடுவர். இதையே 'வடக்கிருத்தல்’ என்று கூறினர் நம் முன்னோர்.

 

     சோழன் வடக்கிருக்க அமர்ந்தவுடன் தனக்குப் பக்கத்தே ஒர் இடம் விட்டு வைக்கக் கூறினான். உடன் இருந்த புலவர்களும் மற்றையோரும், 'யாருக்கு?’என்று கேட்டார்கள். அரசன், ‘என் உயிர்த்தோழர் பிசிராந்தையாருக்குஎன்றான். நீ வடக்கிருப்பதை உன் நண்பர் அறியமாட்டார். உறையூரில் இருக்கும் உன் நிலையைப் பாண்டிய நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் உன் நண்பர் எவ்வாறு அறிய முடியும்?' என்று கேட்டார்கள். அதற்குச் சோழன்"செல்வக் காலை நிற்பினும்அல்லல் காலை நில்லலன் மன்னே"என்று கூறினான். அதாவது நான் நன்றாகச் செல்வத்துடன் வாழ்ந்த காலத்தில் அவர் வரவில்லை என்பது உண்மைதான். ஆனால்உண்மை நண்பராகிய அவர்நான் துன்பப்படும் இப்பொழுது வாராமல் இருக்க மாட்டார்,’என்ற பொருளில் சோன் விடை கூறியதாகப் புறநானூற்றில்,

 

"கவைக்கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல், 

தாதெரு மறுகின் போதொடு பொதுளிய 

வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளிஇ

ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை 

அவரை கொய்யுநர் ஆர மாந்தும் 

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

பிசிரோன் என்பஎன் உயிர் ஓம்புநனே

செல்வக் காலை நிற்பினும்

அல்லற் காலை நில்லலன் மன்னே".

 

இவ்வாறு ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது.

 

இதன் பொருள் ---

 

     பிளந்துபட்டு இருக்கும் வரகு அரிசிக் கதிர்களைக் குத்தி உலையில் இட்டு ஆக்கிய சோற்றை, தழைத்து வளர்ந்த வேளைச் செடியின் வெள்ளைப் பூவை, கட்டித் தயிரோடு சேர்த்து, இடைச்சியர் பெண்கள் வழங்கஅவரை கொய்பவர் விரும்பி உண்ணும், தென்னவன் பாண்டியன் ஆளும் பொதியமலை உள்ள தென்பாண்டி நாட்டின் உட்புறத்தே உள்ள சிற்றூர் ஆகிய பிசிர் என்னும் ஊரிலே, பிசிராந்தையார் என்னும் என் உள்ளம் கவர்ந்த நண்பன் இருக்கிறான். நான் செல்வச் சிறப்போடு வாழும் நாளில் வந்து என்னை அவன் கண்டது இல்லை. என்றாலும், என் உயிர் துன்புறும் இறுதி நாட்களில் என்னைக் காண வராது இருக்கமாட்டான், வருவான்.

 

     "அரசே! பிசிராந்தையார் உம்மைக் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றி நேரில் கண்டவர் இல்லை.  பல ஆண்டுகளாகப் பழகிய நண்பராயினும்நேரில் வருவது அரிது. நட்புநெறியில் திரியாது ஒழுகுவதும் அரிது” என்று சோழன்பால் இருந்த சான்றோர் கூறி, ஆந்தையாரை நினைந்து மனக் கவலைகொள்ள வேண்டாம் என்றனர். அதுகேட்ட சோழன், “அறிஞர்களே! நீங்கள் இவ்வாறு ஐயம் கொள்ளுதல் வேண்டாம். நட்புத் திரிந்து என்னை இகழும் சிறுமை எனது நண்பர் ஆகிய பிசிராந்தையாரிடம் கிடையாதுஇனிமை நிறைந்த குணங்களை உடையவர் அவர். பொய்யாமை புகழ் தருவது. ஆகையால்புகழைக் கெடுக்கும் பொய்ம்மையை அவர் விரும்புவது இல்லை.  தனது பெயரைச் சொல்லவேண்டும் இடத்து என்னின் அவர் வேறு அல்லர் என்பது விளங்க என் பெயரைத் தன் பெயராக “என் பெயர் கோப்பெருஞ்சோழன்” என்று சொல்லவார். இக்காலத்தே இப்பொழுது அவர் வாராது ஒழியார்.அவர்க்கு ஓர் இடம் ஒழித்து வைப்பீராக” என்று கூறினான். அவன் கூற்றைப் புறநானூற்றுப் பாடல் வழி காண்போம்.

 

"கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

காண்டல் இல்லாது யாண்டுபல கழிய

வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும்

அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று

ஐயம் கொள்ளன்மின், ஆரறிவாளீர்ர!

இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,

புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலனே,

தன்பெயர் கிளக்கும் காலை, என்பெயர்

பேதைச் சோழன் என்னும் சிறந்த

காதல் கிழமையும் உடையன், அதன்தலை

 இன்னதோர் காலை நில்லலன்த,

இன்னே வருகுவன், ஒழிக்க அவற்கு இடமே".

 

இதன் பொருள் ---

 

     "கேள்விப்பட்டு இருக்கிறீர்களே தவிரஒருமுறை கூட நேரில் சந்தித்துக் கொண்டது இல்லை. நேருக்கு நேர் காணாது நீங்கள் இருவரும் பல ஆண்டுகள் அன்பு பாராட்டி வாழ்பவர்கள். அப்படி இருக்க,அவர் இப்போது இங்கே எப்படி வருவார்? என்று, அறிவார்ந்த சான்றோர்களே! நீங்கள் ஐயப்பட வேண்டாம். அந்தப் பிசிராந்தையன் ஒருபோதும் என்னை இகழாதவன். இனிய பண்பினை உடையவன். எனக்கு இனிய நண்பன். புகழை அழிக்கும் போலி வாழ்வை ஒருபோதும் விரும்பாதவன். தனது பெயரைச் சொல்ல வேண்டிய இடத்திலே, எனது பெயரைத் தனது பெயராகச் சொல்லி, எனக்குப் பெருமை சேர்ப்பவன். எனது அன்புக்கு உரியவன். எனவே, அவன் என்னுடைய இந்த இறுதி நாளில் நிச்சயமாக வந்தே தீருவான். எனக்கு அருகில் அவனுக்கும் ஓர் இடத்தை ஒழித்து வையுங்கள்."

 

     கோப்பெருஞ்சோழன்பால் பெருநட்புக் கொண்டு அவனைச் சூழ இருந்த சான்றோர்களுள் பொத்தியார் என்பவர் ஒருவர். சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உண்டாகி இருந்த நட்பின் திறமும்அச் சோழனது ஆட்சி நலமும், அவனது மனப் பண்பும்அவன் வடக்கிருக்க நேர்ந்த திறமும் பிறவும் நேரில் அறிந்து அவன்பால் பிரியா அன்பு கொண்டிருந்தார். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கச் சென்றபோது பொத்தியாருடைய மனைவியார் கருப்பம் உற்று இருந்தார். ஆயினும்பொத்தியாரும் அவனுடன் சென்று ஏனைச் சான்றோர் போல வடக்கிருக்க விரும்பினார். சோழனோ அதனை அறிந்து  “உன் மனைவி கருவுயிர்த்த பின்பு வடக்கிருக்கலாம்” என்று அவரைத் தடுத்துவிட்டான். இப்படியும் ஆன்மநேயம் மிக்க ஓர் அரசன் இந்தத் தமிழ்மண்ணில் வாழ்ந்தான் என்பது எவ்வளவு பெருமைக்கு உரியது? பொத்தியார் அதனை உடன்பட்டு வடக்கிருத்தலை அப்போது மேற்கொள்ளவில்லை. ஆயினும்,  வடக்கிருந்த அவன் உயிரோடு இருக்கும்காலையில் அடிக்கடி சென்று கண்டுகொண்டு வந்தார். சில நாட்களில் கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பால் உயிர் துறந்தான். அவன் பிரிவால் பெரிதும் மனம் வருந்திய சான்றோர் ஒருவாறு தேறிஅவனுக்கு நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்தனர். அவன் நடுகல்லான சில நாட்களில் பிசிராந்தையார் வந்து சேர்ந்தார். அவர் அவனது நடுகல்லையும் சூழ இருந்த சான்றோரையும் கண்டு பெருவருத்தம் உற்றார் பிசிராந்தையார். கோப்பெருஞ்சோழன் சொன்ன குணநலம் முற்றும் பிசிராந்தையார்பால் இருக்கக் கண்ட சான்றோர்க்கு மிக்க வியப்பும் விம்மிதமும் உண்டாயின. பொத்தியார்க்கு உண்டான வியப்பு அவர் உள்ளத்தைக் கவர்ந்து ஒரு பாடலாய் வெளிப்பட்டது. அப் பாடல் இது.

 

"நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,

எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்

அதனினும் மருட்கை உடைத்தே, பிறனாட்டுத்

தோற்றம் சான்ற சான்றோன் போற்றி

இசை மரபாக, நட்புக் கந்தாக,

இனையது ஓர் காலை ஈங்கு வருதல்,

வருவன் என்ற கோனது பெருமையும்,

அதுபழுது இன்றி வந்தவன் அறிவும்

வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே,

அதனால்தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்

 சான்றோன் நெஞ்சு உறப் பெற்ற தொன்று இசை

அன்னோனை இழந்த இவ் வுலகம்

என் ஆவதுகொல்? அளியது தானே."

 

இதன் பொருள் ---

 

     நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு ஆச்சரியம் உண்டாகிறது. எவ்வளவு பெரும் சிறப்றோடு வாழ்ந்த மன்னன் கோப்பெருஞ்சோழன்! இவன் இப்படி வடக்கிருந்து உயிரை விடத் துணிந்தது மேலும் ஆச்சரியமாக உள்ளது. அயல் நாட்டில் வாழ்ந்த கற்றறிந்த மேலோன் (ஆகிய பிசிராந்தையார்), புகழுக்கு உரிய நட்பு ஒன்றையே பற்றுக்கோடாகக் கொண்டு இங்கு வந்ததும், அப்படி அவன் வருவான் என்று உறுதியாகச் சொன்ன கோப்பெருஞ்சோழனின் பெருமையும், வந்த பிசிராந்தையாரது அறிவு நலமும் நினைக்க நினைக்க ஆச்சரியம் அளிப்பதாய் உள்ளது. எனவே, தன் ஆட்சிப் பரப்புக்குள் இல்லாத ஒரு நாட்டில் வாழும் சான்றோன் ஒருவன் உள்ளத்திலும் இடம் பெற்று இருந்த புகழ் உடைய ஒருவனை (கோப்பெருஞ்சோழனை) இன்று இழந்துவிட்டது இவ்வுலகம், இந்தச் சோழவள நாடு. எவ்வளவு பெரிய துன்பம்! எத்தனை இரங்கத் தக்க நிலை இது.

 

     திருவள்ளுவ நாயனார் காட்டிய நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள் சோழ கோப்பெருஞ்சோழனும், பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், சிற்றூரில் வழ்ந்திருந்த பிசிராந்தையாரரும்.

 

புணர்ச்சி பழகுதல் வேண்டாஉணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள். உண்மை நட்புக்கு எதிர் நின்று பழக வேண்டும் என்பது இல்லை. உள்ளத்து உணர்வே நட்பை உண்டாக்கும்என்னும் இந்தக் திருக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்து காட்டிய பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும்இக்கால மக்களுக்கு நல்ல வழிகாட்டிகள் ஆவர்.

No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...