பொது - 1042. ஊனுந் தசையுடல்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஊனும் தசையுடல் (பொது)

 

தானந் தனதன தானந் தனதன

     தானந் தனதன ...... தனதான

 

 

ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி

     யூருங் கருவழி ...... யொருகோடி

 

ஓதும் பலகலை கீதஞ் சகலமு

     மோரும் படியுன ...... தருள்பாடி

 

நானுன் திருவடி பேணும் படியிரு

     போதுங் கருணையில் ...... மறவாதுன்

 

நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி

     நாடும் படியருள் ...... புரிவாயே

 

கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு

     காலங் களுநடை ...... யுடையோனுங்

 

காருங் கடல்வரை நீருந் தருகயி

     லாயன் கழல்தொழு ...... மிமையோரும்

 

வானிந் திரனெடு மாலும் பிரமனும்

     வாழும் படிவிடும் ...... வடிவேலா

 

மாயம் பலபுரி சூரன் பொடிபட

     வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.


 

பதம் பிரித்தல்

 

 

ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி,

     ஊரும் கருவழி ...... ஒருகோடி,

 

ஓதும் பலகலை கீதம் சகலமும்

     ஓரும்படி உனது ...... அருள்பாடி,

 

நான் உன் திருவடி பேணும்படி, இரு

     போதும் கருணையில் ...... மறவாது, உன்

 

நாமம் புகழ்பவர் பாதம் தொழ, இனி

     நாடும்படி அருள் ...... புரிவாயே.

 

கானும் திகழ் கதிரோனும் சசியொடு

     காலங்களும் நடை ...... உடையோனும்,

 

காரும், கடல் வரை நீரும், தரு,கயி-

     லாயன் கழல்தொழும் ...... இமையோரும்,

 

வான் இந்திரனெடு, மாலும், பிரமனும்,

     வாழும்படி விடும் ...... வடிவேலா!

 

மாயம் பல புரி சூரன் பொடிபட,

     வாள் கொண்டு அமர்செய்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

            கானும் திகழ் கதிரோனும் சசியொடு--- காட்டிலும் தனது கதிர்களை வீசும் சூரியனும்சந்திரனும்

 

            காலங்களும் நடை உடையோனும்--- இறப்புநிகழ்வுஎதிர்வு ஆகிய முக்காலங்களும்காற்றும்

 

            காரும் கடல் வரை நீரும் தருகயிலாயன் கழல்தொழும் இமையோரும்--- மேகமும்கடலும்மலையும்நீரும் ஆகிய இவைகளய் அனைத்தையும் படைத்தருளியி திருக்கயிலாய நாதனாகிய சிவபரம்பொருளின் திருவடிகளைப் பணியும் தேவர்களும்

 

            வான் இந்திரன் நெடுமாலும் பிரமனும்--- வானுகில் வாழும் இந்திரன்நெடிய திருமால்பிரமன் ஆகியோரும் 

 

            வாழும் படிவிடும் வடிவேலா--- வாழும்படியாக (சூரபதுமன் மீது) விடுத்தருளிய கூரிய வேலாயுதத்தை உடையவரே!

 

            மாயம் பலபுரி சூரன் பொடிபட--- பல மாயங்களைப் புரிந்த சூரபதுன் பொடிபட்டு அழியும்படி 

 

            வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே--- வாள் கொண்டு போர்புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

            ஊனும் தசை உடல் தான் ஒன்பதுவழி--- மாமிசமும் சதையும் கூடிய ஒன்பது வாசல்களை உடைய இந்த உடல்,

 

            ஊரும் கருவழி ஒருகோடி--- சேர்ந்து வரும் கருவின் வழி ஒரு கோடிக் கணக்கானது. 

 

            ஓதும் பலகலை கீதம் சகலமும்--- ஓதுகின்ற சாத்திரங்களையும்,இசை ஞானத்தையும்கற்கவேண்டிய மற்றவைகளையும்,

 

            ஓரும்படி உனது அருள்பாடி--- ஆய்ந்து அறிந்து உணரும்படியாக தேவரீருடைய திருவருளைத் துதித்துப் பாடி

 

            நான் உன் திருவடி பேணும்படி--- அடியேன் தேவரீருடைய திருவடிகளைப் விரும்பி வழிபாடு இயற்றும்படி,

 

            இருபோதும் கருணையில்--- இரவுபகல் பலகாலும்தேவரீருடைய கருணைத் திறத்தால்,

 

            மறவாது உன்நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள் புரிவாயே --- மறவாமல் தேவரீரது திருநாமங்களைப் போற்றிப் புகழ்கின்ற அடியவர்களின் திருப்பாதங்களை அடியேன் தொழ இனியேனும் அடியேனு உள்ளத்தில் தாடி இருக்கும்படி திருவருள் புரிந்து அருள்வாயாக.

 

பொழிப்புரை

 

     காட்டிலும் தன் கதிர்களை வீசும் சூரியனும்சந்திரனும்இறப்புநிகழ்வுஎதிர்வு ஆகிய முக்காலங்களும்காற்றும்மேகமும்கடலும்மலையும்நீரும் ஆகிய இவைகளய் அனைத்தையும் படைத்தருளியி  திருக்கயிலாய நாதனாகிய சிவபரம்பொருளின் திருவடிகளைப் பணியும் தேவர்களும்வானுகில் வாழும் இந்திரன்நெடிய திருமால்பிரமன் ஆகியோரும் வாழும்படியாகச் சூரபதுமன் மீது விடுத்தருளிய கூரிய வேலாயுதத்தை உடையவரே!

 

            பல மாயங்களைப் புரிந்த சூரபதுன் பொடிபட்டு அழியும்படி வாள் கொண்டு போர்புரிந்த பெருமையில் மிக்கவரே!

 

     மாமிசமும் சதையும் கூடிய ஒன்பது வாசல்களை உடைய இந்த உடலானது கருவில் ஊறி வருகின்ற வழி ஒரு கோடிக் கணக்கானது.  அளவில்லாத பிறவிகளை எடுத்துதேவரீரது திருவளால் மானிடப் பிறவியை எடுத்து வந்து உள்ள நான்ஓதவேண்டிய சாத்திரங்களையும்இசை ஞானத்தையும்கற்கவேண்டிய மற்றவைகளையும்ஆய்ந்து அறிந்து உணரும்படியாக தேவரீருடைய திருவருளைத் துதித்துப் பாடி அடியேன் தேவரீருடைய திருவடிகளைப் விரும்பி வழிபாடு இயற்றும்படி,இரவுபகல் பலகாலும்தேவரீருடைய கருணைத் திறத்தால்மறவாமல் தேவரீரது திருநாமங்களைப் போற்றிப் புகழ்கின்ற அடியவர்களின் திருப்பாதங்களை அடியேன் தொழ இனியேனும் அடியேனு உள்ளத்தில் தாடி இருக்கும்படி திருவருள் புரிந்து அருள்வாயாக.

 

 

விரிவுரை

 

உன்நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள் புரிவாயே--- 

 

இறைவன் திருநாமத்தை ஓதி வழிபடும் அடியவர்களைத் தொழுவதன் மூலமும்அவர்களுடைய திருநாமத்தை உச்சரிப்பதன் மூலமும் கதியைப் பெறமுடியும் என்பதால் இவ்வாறு அடிகளார் வேண்டுகிறார்.

 

"பூரணிபுராதனிசுமங்கலைசுதந்தரி,

    புராந்தகித்ரியம்பகிஎழில்

  புங்கவிவிளங்குசிவ சங்கரிசகஸ்ரதள

    புஷ்பமிசை வீற்றிருக்கும்

நாரணிமனாதீத நாயகிகுணாதீத

    நாதாந்த சத்தி என்று உன்

  நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே

    நான் உச்சரிக்க வசமோ"

 

என்று தாயுமான அடிகளாரும் அவ்வாறே வேண்டிப் பாடி உள்ளார் என்பதை அறிக.

 

இறைவனைச் சார்ந்து அவனுடைய அருட்செல்வத்தைப் பெறுவது நல்லது என்று  சொல்வதை விட்டுதொண்டர் குழாத்தைச் சாருவதுதான் கதி என்கிறார் அருணகிரிநாதர்.இறைவன் திருவருளை நேரே பெறுவது என்பது அரிய காரியம். திருவருளைப் பெறுவதற்கு எத்தனையோ தகுதி வேண்டும். தொண்டர்களுடைய குழாத்தின் சேர்க்கைச் சிறப்பால் தெளிவு கிடைக்கும். மெல்ல மெல்லச்செல்வத்தின்பாலும்செல்வர்களின்பாலும் உள்ள பற்று நழுவிவிடும். இறைவன்  திருவருள் இன்பம் ஏறும். இறைவன் நமக்கு நேரே இன்பத்தைத் தருவதைக்காட்டிலும் தன் தொண்டர்கள் மூலமாகத் தருகிற இன்பம் பெரிது. காவேரி நீர்நேரே பாயாதுகால்வாய் மூலமாகவும்மடையின் மூலமாகவும் பாய்ந்தால்தான்  வயல்களுக்குப் பயன் உண்டே அன்றி நேரே பாய்ந்தால் தாங்குவதற்கு ஆற்றல் இல்லை. அப்படிதாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படியாகச்செய்கிறவர்கள் தொண்டர்கள். இறைவனைக் காட்டிலும் தொண்டர்கள் மிக்க பயனைத்தருவார்கள். அவனை விடத் தொண்டர்கள் பெரியவர்கள். இதனை ஒளவைப் பிராட்டிசொல்கிறாள்.

 

நாம் வாழ்கிற இந்த உலகம் மிகப் பெரியது. ஆனால் இதனைப்படைத்த நான்முகன் இதைவிடப் பெரியவனாக இருக்க வேண்டும். அந்த நான்முகனும் திருமாலின் உந்திப் பூவிலே தோன்றியவன் அவன். ஆகவேஅந்த நான்முகனைக் காட்டிலும் கரிய திருமால் பெரியவன். அவ்வளவு பெரியவனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறான். ஆகையால்,அவனைக் காட்டிலும்பாற்கடல் பெரியது. கடல் பெரிதாக இருந்தாலும் அகத்திய முனிவர் அந்தக் கடலைத்தம்முடைய கையில் எடுத்துக் குடித்துவிட்டார். எனவே கடலை விடக்  குறுமுனி பெரியவர். அவர் கலசத்தில் பிறந்தவர். அதனால் குறுமுனியைவிடக் குடம் பெரியது. என்று அந்தக் கலசமோ மண்ணால் ஆனது. கலசத்தின் தாயாகிய மண் மிகப் பெரியது. அந்த  மண்ணோ ஆதிசேடனுக்கு ஒரு தலைச் சுமையாக இருக்கிறது. ஆகவே மண்ணைச் சுமக்கும்ஆதிசேடன் பின்னும் பெரியவன். அந்த ஆதிசேடனைஉமாதேவி தன்  சிறுவிரலில் மோதிரமாகப் பூட்டிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெருமாட்டிபின்னும் பெரியவள். அந்தப் பெருமாட்டியைத் தன்னுடைய ஒரு பாகத்தில்அடக்கிக் கொண் டிருக்கிற பரமேசுவரன் எல்லோரையும்விடப் பெரியவன். அவ்வளவுபெரியவனைத் தொண்டர்கள் தம்முடைய உள்ளக் கமலத்திற்குள் அடக்கிவைத்து இருக்கிறார்கள். ஆகையால்,தொண்டர்களுடைய பெருமை மிக மிகப் பெரிது. அதுசொல்வதற்கு அரிது. 

 

'பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ நான்முகன் படைப்பு: 

நான்முகன்கரியமால் உந்தியில் வந்தோன்

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடல்குறுமுனி அங்கையில் அடக்கம்

குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்

கலசமோபுவியில் சிறுமண்;

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்

உமையோஇறைவர் பாகத்து ஒடுக்கம்

இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்

தொண்டர்தம்பெருமை சொல்லவும் பெரிதே."

 

புராணங்கள் பதினெட்டு என்று சொல்வார்கள். அவற்றை மகாபுராணங்கள் என்பதுவழக்கம். இந்தப் புராணப்பெருங் கூட்டத்திற்கு நடுவிலே புதிதாக ஒரு புராணம் தோன்றியது. அந்தப் புராணம் தோன்றுவதற்கு முன்னாலே மற்றப் புராணங்கள் எல்லாம் சிறந்தனவாகபெரியபுராணங்களாக இருந்தன. இந்தப் புதிய புராணம் தோன்றிய பிறகு அவைகள் எல்லாம்சிறியவை ஆகி விட்டன. புதிதாக வந்த புராணம் "பெரியபுராணம்" என்ற பெருங்கீர்த்தியைப் பெற்றது. திருத் தொண்டர்களுடைய பெருமையைச் சொல்கிற அந்தப் புராணம் பெரிய புராணம் ஆகிவிட்டது. அந்தப் புராணத்தில் வருகிறவர்கள் யாவரும் இறைவனைக்காட்டிலும் பெரியவர்கள்.

 

இத்தகைய தொண்டர்களிடையேசார்ந்தால் நாம் பெற வேண்டிய கதி கிடைக்கும் என்கிறார் அருணகிரிநாதர்.இறைவன் திருவருள் பெற்றவர்களுக்கு வறுமைசெல்வம் ஆகிய  இரண்டிலும் மன அமைதி இருக்கும். ஆகவே, "தேர்கரிபரி ஆகிய செல்வத்தைக்கண்டு ஏமாந்து போகிற நெஞ்சமே! அவைகள் எல்லாம் நீரில் எழுத்துப் போலமாய்ந்துவிடுமே! இதனை நீ உணர்ந்திலையே! உண்மையான அருட் செல்வத்தைப்பெற்றவர்கள் கூட்டமாகக் கூடுவார்கள். அவர்களைச் சார்ந்தால் மன நிறைவுபெறலாம். வேறு யாரைச் சார்ந்தாலும் அந்த நிறைவு கிடைக்காது. தொண்டர்குழாத்தைச் சாரின் அன்றி வேறு கதியே இல்லை" என்று அருணகிரிநாதர் உபதேசம்செய்கிறார். எல்லாக் காலத்தும் உதவுகின்றஉயிரோடு ஒட்டி வருகின்றசெல்வமாகிய அருட்செல்வத்தைச் சேர்த்துக் கொண்டால் எல்லாக் காலத்தும்குறைவின்றி நிறைவான இன்பத்தைத் தரும். அந்தச் செல்வத்தைத் தம்முடையகாணியாக்கிக் கொண்டவர்கள் தொண்டர்கள். அவர்களைச் சார்ந்தால் எல்லா இடத்திலும் எந்தப்பிறவியிலும் கவலையில்லாமல் வாழ இயலும். இதனை எண்ணியே, 'தொண்டர் குழாம்சாரில் கதியன்றி வேறு இல்லை" என்று அருணகிரிநார் சொன்னார்.

 

மாயம் பலபுரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே--- 

 

வாள் --- ஒளி. அஞ்ஞானம் ஆகிய இருளைஞானசத்தியினால் முருகப் பெருமான் அழித்து ஒழித்து ஆன்மாக்களை ஆட்கொண்டு அருளுவார். "அரியும் அயனோடு அபயம் எனவேஅயிலை இருள் மேல் விடுவோனே” என்பது பிறிதொரு திருப்புகழில் அடிகளார் அருளியது. "இருள் மேல் விடுவோனே" எனவேஇருளை ஒளியே போக்கும் என்பதும்,அஞ்ஞான இருளை ஆண்டவன் தனது திருக்கரத்தில் விளங்கும் ஞானசத்தியால் போக்கினார் என்பதும் விளங்கும்.

 

மாயையின் மகனாகிய சூரபன்மன் சிவ மூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று,உள்ளம் தருக்கி,அறநெறிப் பிறழ்ந்து,அமரர்க்கு அலக்கண் விளைத்த ஞான்றுகுமாரக்கடவுள் தேவர் சிறை தீர்ப்பான் அமர்த் தொடங்கி அசுரர் அனைவரையும் அட்டனர். முடிவில் சூரபன்மன் போர்க்கோலங்கொண்டு ஆயிரத்தெட்டுஅண்டங்களிலும் உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் உற்றனன். அப் பெருந்தானையைக் கண்ட பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள்ளம் நடுங்கினர். தேவர்கள் அளக்க ஒண்ணா அலக்கணை அடைந்தனர். முருகப்பெருமானார் அப்பெருஞ் சேனைகளை எல்லாம் அழித்தனர். முருகவேளும் சூரபன்மனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபன்மனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன. அவுணர்கோன் முடிவில் இக்கு மரனைக் கொணர்ந்து போரை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று சிறிது எனது சினம் தணிந்தபின் இக்குமரனோடு போர் புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து உலகம் முழுவதும் பெரிய இருள் சூழுமாறு செய்துஅவ்விருளில் வாளை ஏந்தித் தேவர்களைக் கொல்லுதற் பொருட்டு விண்ணிடைப் பாய்ந்தனன். அதனைக் குறிப்பால் உணர்ந்த அரியயனாதி அமரர்கள்,

 

"தேவர்கள் தேவே ஓலம்;சிறந்தசிற் பரனே ஓலம்;

மேவலர்க்கு இடியே ஓலம்;வேற்படை விமலா ஓலம்;

பாவலர்க்கு எளியாய் ஓலம்;பன்னிரு புயத்தாய் ஓலம்;

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்

 

என்று முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிரு திருமுகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள்சேயினது அழுகையைக் கேட்ட தாயைப் போல் தண்ணருள் சுரந்துதமது திருக்கரத்தில் வைகும் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி,  “நீ விரைந்து சென்று சூரபன்மனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப் பிளந்து வருதி” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள் ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட இருளுருவத்தை இமைப்பொழுதில் அழித்தது.

 

சூரபன்மன் முடிவில்லாத வரத்தை உடைய என்னை இவ்வேற்படை என்ன செய்ய வல்லதுஇதன் திறத்தை நான் இப்போது காண்கின்றேன்” என்று அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்துமிகுந்த சீற்றங்கொண்டு சமுத்திரம்பூதலம்பிரமாதி தேவர்களது உலகங்கள்உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்” என்று விரைந்து சென்றுகடல் நடுவில்நெருப்புப் போலுந் தளிர்களும்புகைபோன்ற இலைகளும்மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும்மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும்மாணிக்கத்தை ஓத்த பழங்களும் கொண்டு பிரமாண்டச் சுவர்வரையிலும் வேரோடிஇலக்க யோசனைத் தூரமளவும் விசாலித்த தலைகீழான மாமர வடிவங்கொண்டுசகல லோகங்களையும் நடுநடுங்க மோதினன்.

 

"வன்னியின் அலங்கல் கான்று,வான்தழை புகையின் நல்கிப்

பொன் என இணர்கள் ஈன்று,மரகதம் புரையக் காய்த்து,

செந்நிற மணிகள் என்னத் தீப்பழங் கொண்டு,கார்போல்

துன்னு பல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்".

 

அஷ்ட நாகங்களும் திக்கஜங்களும் சந்திர சூரியரும் எல்லாவுயிர்களும் அஞ்சி ஓலமிட்டன. அந்த மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்த.குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத் தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தனஅண்டங்களெல்லாந் தகர்ந்தன. நாரணன் உலகும் நான்முகன் உலகும் அழிந்தன. தேவர்கள் எல்லாம் வெருவி திருக்கயிலையை நாடி இரிந்தனர். அக்கால் அறுமுகப் பெருமான் விடுத்த வேற்படைஆயிரங்கோடி அண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பேரனல் வடிவு தாங்கிச் சென்று,

 

"தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து   

ஆயிரகோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன,

மீஉயர்ந்து ஒழுகி ஆன்றார் வெருவருந் தோற்றம் கொண்டு

நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே".

 

மூதண்ட முகடு வரை வளர்ந்தோங்கி,கிளைகளை அசைத்து உலகங்களை எல்லாம் அசைத்து அழிக்கின்ற மாமரத்தை இரு கூறாகப் பிளந்தது.

 

"விடம்பிடித்த அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம் பிடித்திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி அன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி
மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது அன்றே".

 

"கவடு கோத் தெழும் உவரி மாத்திறல்
 
காய் வேல் பாடேன்"                       --திருப்புகழ்.

 

கருத்துரை

 

முருகா!  உனது அடியவர் திருவடிகளைத் தொழுது உய்யுமாறு அருள் புரிவாய்.

 

 

 

No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...