திருப் பந்தணை நல்லூர் --- 0858. இதசந்தன புழுகும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இதசந்தன புழுகும் (திருப்பந்தணை நல்லூர்)

முருகா!
மாதர் மயல் அகற்றி ஆட்கொள்வாய்.


தனதந்தன தனதந்தன தனதந்தன தான
     தனதந்தன தனதந்தன தனதந்தன தான
     தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான


இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
     யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர
     இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக் ...... குயில்பொலே

இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார
     இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான
     இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ......தெருமீதே

பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச
     நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட
     பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் ......பரிவாகிப்

பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர
     இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற
     பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ......துயர்தீராய்

திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
     டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
     செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் .....கொடுசூரர்

சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி
     நிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட
     சிலசெம்புள்கள் கழுகுஞ்சிறு நரியுங்கொடி யாடப் ....பொரும்வேலா

மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
     யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி
     வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ......தருசேயே

வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ
     டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர
     வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ......பெருமாளே.


பதம் பிரித்தல்


இத சந்தன புழுகும், சில மணமும் தக வீசி
     அணையும் தன கிரி கொண்டு,ணை அழகும்பொறி சோர
     இருளும் குழல் மழை என்ப, நவரசங்கொளு மோகக் ...... குயில்பொலே,

இடையும் கொடி, மதனன் தளை இடு குந்தள பார,
     இலையும் சுழி, தொடை ரம்பையும், அமுதம் தடமான
     இயல்அம் கடி தடமும், பொழி மதவிஞ்சைகள் பேசி, ...... தெருமீதே

பதபங்கயம் அணையும் பரிபுரம் அங்கு ஒலி வீச,
     நடைகொண்டிடு மயில் என்பன, கலையும் சுழல்ஆட,
     பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போலப் ......பரிவாகி,

பணம்உண்டு, னது அவலம் படு நினைவு உண்டு, டை சோர
     இது கண்டு அவர் மயல்கொண்டிட, மனமுஞ்செயல் மாற,
     பகலும் சில இரவும் துயில் சிலவஞ்சகர் மாயைத் ......துயர்தீராய்.

திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
     டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
     செகணஞ்செக எனவும்,பறை திசை எங்கினும் மோத, ......கொடுசூரர்

சிரமும், கர உடலும், பரி, இரதம், கரி, யாளி,
     நிணமும், குடல், தசையும் கடல் என, செம்புனல் ஓட,
     சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆடப் ...... பொரும்வேலா!

மதவெங்கயம் உரிகொண்டவர், மழுவும் கலை பாணி
     இடம் அன்பொடு வளரும் சிவை, புகழ்சுந்தரி, அதி
     வளரும் தழல் ஒளிர் சம்பவி, பரை, விண்டு இள தோகைத்....தருசேயே!

வதனம் சசி அமுதம்பொழி முலைநல் குறமாதொடு
     இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களி கூர
     வரு, பந்தணை நகர்வந்து உறை விமலன் குரு நாதப் ....பெருமாளே.


பதவுரை

         திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகம் துடி வீணை செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத --- திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு டகுடங்குகு டிகுடிங்குகு என்று சிறு பறைகளும், உடுக்கையும், வீணையும் ஒலிக்க, செகணஞ்செக என்னும் தாள ஒத்துடன் பெரும்பறைகள் எல்லா திக்குகளிலும் ஒலிக்க,

      கொடு சூரர் சிரமும் கர உடலும் --- கொடியவர்களான அசுரர்களின் தலைகளும், கைகளும், உடலும்,

      பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் --- குதிரை, தேர், யானை, சிங்கம் ஆகியவை அழிந்ததால் அவைகளின் குடலும், தசையும் கிழிந்து,

     கடல் என செம் புனல் ஓட --- கடல் என்னும்படியாக சிவந்த இரத்தம் ஓட,

      சில செம்புள்கள் --- சில பருந்துகளும்,

     கழுகும் --- கழுகுகளும்,

     சிறு நரியும் --- குள்ள நரிகளும்,

     கொடி --- காக்கைகளும்,

     ஆடப் பொரும் வேலா --- போர்க்களத்தில் வந்து பொருந்தப் போர் புரியும் வேலாயுதரே!

      மத வெம் கயம் உரி கொண்டவர் --- மதம் மிகுந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவரும்,

     மழுவும் கலை பாணி இடம் --- மழுவாயுதத்தையும், மானையும் திருக்கரங்களில் தரித்தவரும் ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில்,

     அன்பொடு வளரும் சிவை --- அன்பு பொருந்த வாழுகின்ற உமாதேவியாரும்,

     புகழ் சுந்தரி --- புகழப்படுகின்ற அழகு பொருந்தியவளும்,

     ஆதி --- ஆதி பராசத்தியும்,

     வளரும் தழல் ஒளிர் சம்பவி --- ஓங்கி விளங்கும் நெருப்புப் போன்ற திருமேனியை உடையவளும்,

     பரை --- பரம்பொருளானவளும் ஆகி,

     விண்டு இள தோகைத் தரு சேயே --- திருமாலின் தங்கையும் ஆகியவள் அருளிய குழந்தையே!

       வதனம் சசி --- சந்திரனைப் போன்ற திருமுக மண்டலமும்,

     அமுதம் பொழி முலை --- அமுதத்தைப் பொழிகின்ற முலைகளையும் உடையவளா,

     நல் குற மாதொடு --- நல்ல குறமகளாகிய வள்ளிநாயகியோடு,

     இசையும் சுரர் தரு மங்கையொடு --- புகழப்படுகின்ற தேவர்களால் வளர்க்கபட்ட தேவயானை அம்மையுடன்,

     இதயம் களி கூர வரு --- மனம் மகிழ்ச்சி பொருந்த வந்து,

      பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத --- திருப்பந்தணை நல்லூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானின் குருநாதரே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

      இத சந்தன புழுகும் --- இதம் தருவதான சந்தனமும், புனுகும்,

     சில மணமும் தக வீசி --- மற்றும் சில மணப் பொருள்களும் தக்க மணத்தை வீசும்படி

     அணையும் தன கிரி கொண்டு --- வந்து அணைக்கின்ற மலை போன்ற இரு மார்பகங்களைக் கொண்டும்,

     இணை அழகும் பொறி சோர --- அழகு பொருந்திய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்கள் சோர்வு அடையும்படி,

      இருளும் குழல் மழை என்ப --- மேகத்தை ஒத்த கரிய கூந்தலைக் கொண்டு,

     நவரசம் கொளும் மோகக் குயில் போலே --- நவரசங்களும் கொண்டு, இனிமையான குயில் போலும் தமது பேச்சால் மோகம் உண்டாகும்படி பேசி,

      இடையும் கொடி --- கொடியைப் போன்ற மெல்லிய இடை,

     மதனன் தளை இடும் குந்தள பார(ம்) --- மன்மதன் இட்ட தளை என்னும்படியான கூந்தல் பாரம்,

     இலையும் சுழி --- ஆல் இலை போன்ற உந்திச் சுழி,

     தொடை (அ)ரம்பையும் --- வாழைத் தண்டுகள் போன்ற தொடை,

     அமுதம் தடமான இயல் அம் கடி தடமும் --- அமுதத்தைப் பொழிகின்ற தன்மையினை உடைய அழகிய பெண்குறி ஆகியவைகள் சேர,

     பொழி மத விஞ்சைகள் பேசி --- மயக்குகின்ற வித்தை கூடிய சொற்களைப் பேசி,

      தெருமீதே --- தெருவினில்

     பத பங்கயம் அணையும் பரிபுரம் அங்கு ஒலி வீச --- பாத தாமரைகளில் பொருந்தி உள்ள சிலம்புகள் ஒலி செய்ய,

     நடை கொண்டிடு மயில் என்பன --- மயிலைப் போல நடை கொண்டு வந்து,

     கலையும் சுழலாட --- ஆடையானது சுழல,

     பரிசும் பல மொழியும் சில --- அவரவரது தன்மைக்கு ஏற்ற சில வார்த்தைகளை,

     கிளி கொஞ்சுகை போலப் பரிவாகி --- கிளியானது கொஞ்சுவது போலப் பேசி அன்பு காட்டி,

      பணம் உண்டு --- எனது பணத்தை எல்லாம் கொண்டு,

     எனது அவலம் படு நினைவு உண்டு --- அதனால், எனது கருத்தில் அவலத்தை உணர்ந்திருக்க,

     இடை சோர --- இடையிலே எனது பொருளும் சோர்ந்து போ,

     இது கண்டு --- இதனைக் கண்டு,

     அவர் மயல் கொண்டிடு அம் மனமும் செயல் மாற --- அவர்களின் மோக உணர்வு கொண்டிருந்த மனமும் அவரது செயல்களும் மாறுபாடு கொள்ள,

      பகலும் சில இரவும் துயில் --- இந்த நிலையில் (எனது கேயில் பணம் உள்ள) சில பகலும், சில இரவுமே துயில் கொள்ள இணங்குகின்ற

     சில வஞ்சகர் மாயை துயர் தீராய் ---  சில வஞ்சக விலைமாதர்கள் மீது கொண்ட காம மயக்கத்தால் உண்டாகும் துயரத்தைத் தீர்த்து அருள்வாயாக.


பொழிப்புரை


         திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு டகுடங்குகு டிகுடிங்குகு என்று சிறு பறைகளும், உடுக்கையும், வீணையும் ஒலிக்க, செகணஞ்செக என்னும் தாள ஒத்துடன் பெரும்பறைகள் எல்லா திக்குகளிலும் ஒலிக்க, கொடியவர்களான அசுரர்களின் தலைகளும், கைகளும், உடலும், குதிரை, தேர், யானை, சிங்கம் ஆகியவை அழிந்ததால் அவைகளின் குடலும், தசையும் கிழிந்து, கடல் என்னும்படியாக சிவந்த இரத்தம் ஓட, சில பருந்துகளும், கழுகுகளும், குள்ள நரிகளும், காக்கைகளும், போர்க்களத்தில் வந்து பொருந்தப் போர் புரியும் வேலாயுதரே!

     மதம் மிகுந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவரும்,
மழுவாயுதத்தையும், மானையும் திருக்கரங்களில் தரித்தவரும் ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில், அன்பு பொருந்த வாழுகின்ற உமாதேவியாரும், புகழப்படுகின்ற அழகு பொருந்தியவளும், ஆதி பராசத்தியும், ஓங்கி விளங்கும் நெருப்புப் போன்ற திருமேனியை உடையவளும், பரம்பொருளானவளும் ஆகி, திருமாலின் தங்கையும் ஆகியவள் அருளிய குழந்தையே!

         சந்திரனைப் போன்ற திருமுக மண்டலமும், அமுதத்தைப் பொழிகின்ற முலைகளையும் உடையவளா, நல்ல குறமகளாகிய வள்ளிநாயகியோடு, புகழப்படுகின்ற தேவர்களால் வளர்க்கபட்ட தேவயானை அம்மையுடன், மனம் மகிழ்ச்சி பொருந்த வந்து, திருப்பந்தணை நல்லூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானின் குருநாதரே!

     பெருமையில் மிக்கவரே!

     இதம் தருவதான சந்தனமும், புனுகும், மற்றும் சில மணப் பொருள்களும் தக்க மணத்தை வீசும்படி வந்து அணைக்கின்ற மலை போன்ற இரு மார்பகங்களைக் கொண்டும், அழகு பொருந்திய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்கள் சோர்வு அடையும்படி, மேகத்தை ஒத்த கரிய கூந்தலைக் கொண்டு, நவரசங்களும் கொண்டு, இனிமையான குயில் போலும் தமது பேச்சால் மோகம் உண்டாகும்படி பேசி, கொடியைப் போன்ற மெல்லிய இடை, மன்மதன் இட்ட தளை என்னும்படியான கூந்தல் பாரம், ஆல் இலை போன்ற உந்திச் சுழி, வாழைத் தண்டுகள் போன்ற தொடை, அமுதத்தைப் பொழிகின்ற தன்மையினை உடைய அழகிய பெண்குறி ஆகியவைகள் சேர, மயக்குகின்ற வித்தை கூடிய சொற்களைப் பேசி, தெருவினில் பாத தாமரைகளில் பொருந்தி உள்ள சிலம்புகள் ஒலி செய்ய, மயிலைப் போல நடை கொண்டு வந்து, ஆடையானது சுழல, அவரவரது தன்மைக்கு ஏற்ற சில வார்த்தைகளை, கிளியானது கொஞ்சுவது போலப் பேசி அன்பு காட்டி, எனது பணத்தை எல்லாம் கவர்ந்து கொண்டு, அதனால், எனது கருத்தில் அவலத்தை உணர்ந்திருக்க, இடையிலே எனது பொருளும் சோர்ந்து போ, இதனைக் கண்டு, அவர்களின் மோக உணர்வு கொண்டிருந்த மனமும் அவரது செயல்களும் மாறுபாடு கொள்ள, இந்த நிலையில் (எனது கேயில் பணம் உள்ள) சில பகலும், சில இரவுமே துயில் கொள்ள இணங்குகின்ற சில வஞ்சக விலைமாதர்கள் மீது கொண்டிருந்த காம மயக்கத்தால் உண்டாகும் துயரத்தைத் தீர்த்து அருள்வாயாக.


விரிவுரை

கொடி ---

கொடி என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. இங்கே காக்கை என்னும் பொருளில் வந்தது.

மத வெம் கயம் உரி கொண்டவர் ---

சிவபெருமானைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வி செய்த புலி, மான், பாம்புகள், துடி, முயலகன், பூதங்கள் இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினார்கள்.

புலியை உரித்து தோலை உடுத்திக்கொண்டார். மழுவையும் மானையும் கரத்தில் தரித்துக் கொண்டார். பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள் புரிந்தார். கயமுகாசுரனை வதைத்துத் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.


மழுவும் கலை பாணி இடம் ---

மழு --- மழுவாயுதம். முத்தலைச் சூலம்.

கலை --- மான்.

பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத ---

திருப்பந்தணை நல்லூர், சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் பந்தநல்லூர் என்று வழங்குகிறது.

கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர் --- பசுபதீசர்.
இறைவியார் --- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம்  --- சூரியதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.

இத் திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு.            

 உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக் கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார். பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையை பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப் பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம் வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.

பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.

காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.

சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞான சம்பந்தர் திருவாயில் " என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துரை

முருகா! மாதர் மயல் அகற்றி ஆட்கொள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...