திருவீழிமிழலை --- 0855. எருவாய் கருவாய்



அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எருவாய் கருவாய் (திருவீழிமிழலை)

முருகா! 
தேவரீர் திருநாமத்தை ஓதி உய்ய அருள் புரிவாய்.

தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான


எருவாய் கருவாய் தனிலே யுருவா
     யிதுவே பயிராய் ...... விளைவாகி

இவர்போ யவரா யவர்போ யிவரா
     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல

ஒருதா யிருதாய் பலகோ டியதா
     யுடனே யவமா ...... யழியாதே

ஒருகால் முருகா பரமா குமரா
     உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்

முருகா வெனவோர் தரமோ தடியார்
     முடிமே லிணைதா ...... ளருள்வோனே

முநிவோ ரமரோர் முறையோ வெனவே
     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா

திருமால் பிரமா வறியா தவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே

செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


எருவாய் கருவாய் தனிலே உருவாய்,
     இதுவே பயிராய் ...... விளைவாகி,

இவர்போய் அவராய், வர்போய் இவராய்,
     இதுவே தொடர்பாய், ...... வெறிபோல

ஒருதாய் இருதாய் பலகோடிய தாய்
     உடனே அவமாய் ...... அழியாதே,

ஒருகால் முருகா பரமா குமரா
     உயிர்கா என ஓத...... அருள்தாராய்.

முருகா என ஓர் தரம் ஓது அடியார்
     முடிமேல் இணைதாள் ...... அருள்வோனே!

முனிவோர் அமரோர் முறையோ எனவே,
     முதுசூர் உரமேல் ...... விடும்வேலா!

திருமால் பிரமா அறியாதவர் சீர்
     சிறுவா! திருமால் ...... மருகோனே!

செழுமா மதில்சேர் அழகு ஆர் பொழில்சூழ்
     திருவீழியில் வாழ் ...... பெருமாளே.


பதவுரை

         முருகா என ஓர் தரம் ஓது அடியார் --- முருகா என்ற திருநாமத்தை ஒரு முறை ஓதும்படியான அடியவர்களின்

         முடிமேல் இணைதாள் அருள்வோனே --- தலைமீது  திருவடி இணையை வைத்து அருள் புரிபவரே

         முனிவோர் அமரோர் முறையோ எனவே --- முனி புங்கவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உமது திருமுன்னர் ஓலமிட,

         முதுசூர் உரம் மேல் விடும்வேலா --- பழைய சூரபன்மனது மார்பில் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

         திருமால் பிரமா அறியாதவர் --- திருமாலும் பிரமதேவனும், அடியும் முடியும் அறிய முடியாதவராகிய சிவபெருமானின்

      சீர்ச் சிறுவா --- சிறப்பு வாய்ந்த குமாரரே!

      திருமால் மருகோனே --- திருமாலின் திருமருகரே!

      செழுமா மதில் சேர் --- செழுமை வாய்ந்த பெரிய மதில்கள் அணைந்தும்,

      அழகார் பொழில் சூழ் --- அழகு நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்தும் விளங்கும்

      திருவீழியில் வாழ் பெருமாளே --- திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே

      எருவாய் கருவாய் தனிலே உருவாய் --- மலவாயிலுக்கு அருகே உள்ள கருப்பையிலே உருப் பெற்று,

      இதுவே பயிராய் விளைவாகி --- இது ஒரு பயிர்  வளர்வதுபோல் விளைந்து மண்ணுலகில் பிறந்து வளர்ந்து,

      இவர் போய் அவராய் --- இன்ன ஊரிலே, இன்ன மரபிலே, இன்ன பேர் உடையவராய் இருந்தவர், வேறு ஊரிலே வேறு மரபிலே வேறு பெயர் உடையவராகி,

      அவர் போய் இவராய் --- அப்படி இருந்த அவர் மீண்டும் ஊரும் மரபும் பேரும் வேறு உடையவராகப் பிறந்து

      இதுவே தொடர்பாய் --- இப்படியே தொடர்ந்து பிறப்பதும் இறப்பதும் ஆகி,

     வெறிபோல --- அறிவு மயங்கியவன் போலாகி,

      ஒருதாய் இருதாய் பலகோடிய தாய் உடனே --- ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களும் ஆகி அவர்களுடன்,

      அவமாய் அழியாதே --- வீணாக அழிந்து விடாமல் புடிக்கு,

      ஒரு கால் --- ஒருமுறையாவது

     முருகா --- முருகா!

     பரமா --- பரம்பொருளே!

     குமரா --- குமாரக் கடவுளே!

     உயிர் கா என ஓத --- என்னுயிரைக் காத்தருள் என்று தேவரீரை நோக்கி ஒதி உய்ய

      அருள் தாராய் --- திருவருளைத் தந்தருள்வீர்.


பொழிப்புரை

         முருகா என்ற திருநாமத்தை ஒரு முறை ஓதும்படியான அடியவர்களின் தலைமீது இருதிருவடிகளையும் வைத்து அருள் புரிபவரே

         முனிபுங்கவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட, பழைய சூரபன்மனது மார்பில் வேலாயுதத்தை விட்டவரே

         திருமாலும் பிரமதேவனும், அடியும் முடியும் அறிய முடியாதவராகிய சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த குமாரரே

         திருமாலின் திருமருகரே

         செழுமை வாய்ந்த பெரிய மதில்கள் அணைந்தும், அழகு நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்தும் விளங்கும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமையில் சிறந்தவரே

         மலவாயிலுக்கு அருகே உள்ள கருப்பையிலே உருப் பெற்று, இது ஒரு பயிர்  வளர்வதுபோல் விளைந்து மண்ணுலகில் பிறந்து வளர்ந்து, இன்ன ஊரிலே, இன்ன மரபிலே, இன்ன பேர் உடையவராய் இருந்தவர் வேறு ஊரிலே வேறு மரபிலே வேறு பெயர் உடையவராகி, அப்படியிருந்த அவர் மீண்டும் ஊரும் மரபும் பேரும் வேறு உடையவராகப் பிறந்து இப்படியே தொடர்ந்து பிறப்பதும் இறப்பதும் ஆகி, அறிவு மயங்கியவன் போலாகி, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களும் ஆகி உடனே வீணாக அழிந்து விடாமல் புடிக்கு,  ஒரு முறையாவது முருகா, பரம்பொருளே, குமாரக் கடவுளே,  என்னுயிரைக் காத்தருள் என்று தேவரீரை நோக்கி ஒதி உய்ய
திருவருளைத் தந்தருள்வீர்.

                 
விரிவுரை


எருவாய் கருவாய் தனிலே உருவாய் ---

     மலம் தங்கும் இடத்திற்கு அருகில் கருப்பை அமைந்துள்ளது.  அவ்விடத்தில் கரு வளர்ந்து உருப் பெற்று பிறக்கின்றது.  தங்கிய இடமும் மலப்பைக்கு அருகில். இதில் தங்குவதும் மலம்.  ஆதலினால் இந்த உடம்போடு இருத்தல் அருவருப்பே. மீண்டும் மீண்டும் இம் மலக்கூட்டை எடுக்காது இருக்க வழிதேடுதல் வேண்டும். இதனையே ஆன்றோர்கள் அடிக்கடி நினைவு செய்கின்றனர்.

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல...  கசுமாலக் குடில்... ---  திருப்புகழ்.

ஊற்றைச் சரீரத்தை, ஆபாசக் கொட்டிலை, ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியை, சோறுஇடும் தோல்பையை, பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன், இறைவா! கச்சி ஏகம்பனே!.   --- பட்டினத்தடிகள்.


இதுவே பயிராய் விளைவாகி ---

     இந்த உயிரை ஒரு பயிராக அடிகள் உருவகம் புரிகின்றனர்.  விவசாயி முதலில் நாற்றங்காலில் செந்நெல்லை விதைத்து நெருக்கமாக வளர்ப்பான். அது வளர்ந்து வரும்போது, வேறு ஒரு பெரிய நிலத்தை உழுது எரு இட்டு செம்மைப் படுத்துவான்.  ஒரு சாண் அளவு நெருக்கமாக வளர்ந்த நாற்றைப் பிடுங்கி, பெரிய நிலத்தில் சற்று விரிவாக நடுவான். பின்னர் அப் பயிரிடையே களை தோன்றும். ஆட்களை விட்டுக் களை பறிப்பான். அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சுவான். மாடு கன்று பயிரை மேய்ந்து அழிக்காவண்ணம் வேலியிட்டுக் காப்பாற்றுவான். பின்னர் கதிர் தோன்றி முற்றியதும் அறுவடை செய்வான்.

     அதுபோல, தாயின் கருப்பமாகிய நாற்றங்காலில் இவ் உடம்பாகிய பயிர் நெருக்கமாகப் பத்து மாதம் வளர்ந்தது.  பின் உலகமாகிய பெரிய வயலில் நாற்றுப் பிடுங்கி நடுவது போல், பிரசூத வாய்வினால் வெளியாக்கப்பட்டது.  காமக்ரோதம் முதலிய களைகள் தோன்றுகின்றன. நல்லாசிரியர் அக் களைகளைப் பறிப்பார். அன்பு என்ற தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். மலமாயா கன்மங்களாகிய மாடு கன்று மேய்ந்து அழிக்காவண்ணம் ஞானமாகிய வேலியிடுதல் வேண்டும்.  மோகமாகிய கடுவெய்யில் உண்டாகாவண்ணம் பார்த்து உயிராகிய பயிரைப் பாதுகாத்து வந்தால் சிவகதி என்னும் கதிர் தோன்றும்.

     தண்ணீர் இன்மையாலும், வெயிலின் வன்மையாலும் பயிர் சாவியாகிவிடும்.  ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே என்பார் பிறிதொரு திருப்புகழில். (பேர வாவ)

     சொல் அரசர் ஆகிய அப்பர் பெருமான், ஒரு பயிர்த் தொழிலைக் கூறும் அழகு ஈண்டு இதனுடன் இணைத்து நோக்கத்தக்கது.

மெய்ம்மையாம் உழவைச் செய்து,
         விருப்பு எனும் வித்தை வித்தி
பொய்ம்மையாம் களையை வாங்கி,
         பொறை எனும் நீரைப்பாய்ச்சி
தம்மையும் நோக்கிக் கண்டு,
         தகவு எனும் வேலி இட்டு
செம்மையுல் நிற்பர் ஆகில்
         சிவகதி விளையும் அன்றே.

     தவராஜ செல்வராகிய தாயுமானாரும் ஒரு உழவை மிகவும் அழகாகக் கூறுகின்றனர்.

காராரும் ஆணவக் காட்டைக் களைந்து, அறக்
     கண்டு, அகங் காரமென்னுங்
  கல்லைப் பிளந்து,நெஞ் சகமான பூமிவெளி
         காணத் திருத்தி,மேன்மேல்
பாராதி யறியாத மோனமாம் வித்தைப்
         பதித்து, அன்பு நீராகவே
  பாய்ச்சி, அது பயிராகு மட்டும்,மா மாயைவன்
         பறவைஅணு காதவண்ணம்,
நேராக நின்று,விளை போகம்புசித்து, உய்ந்த
         நின்னன்பர் கூட்டம் எய்த,
நினைவின் படிக்குநீ முன்னின்று காப்பதே
         நின்னருட் பாரம், என்றும்
ஆராரும் அறியாத சூதான வெளியில்வெளி
     யாகின்ற துரியமயமே
  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
         ஆனந்த மானபரமே.

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய் எனும்
தூய்மையில் குப்பை தொலைவு இன்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கி, பொருதிறல்
மைஇருள் நிறத்து மதன்உடை அடுசினத்து
ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,
அன்புகொடு மெழுகி, அருள்விளக்கு ஏற்றி,
துன்ப இருளைத் துரந்து, முன்புறம்
மெய் எனும் விதானம் விரித்து, நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிந்தைப்
பாழ் அறை உனக்குப் பள்ளியறை ஆக்கி,
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
எந்தை நீ இருக்க இட்டனன், இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதி வெள்ளத்து
நுரை எனச் சிதறி இருசுடர் மிதப்ப,
வரைபறித்து இயங்கும் மாருதம் கடுப்ப,
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இது எனக் கலங்கா நின்றுழி,
மற்று அவர் உய்யப் பற்றிய புணையாய்
மிகநனி மிதந்த புகலி நாயக!
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்க! நின்
செல்வச் சிலம்பு மெல் என மிழற்ற,
அமையாக் காட்சி இமயக்
கொழுந்தையும் உடனே கொண்டு இங்கு
ழுந்தருளத் தகும் எம்பெருமானே".           ---  திருக்கழுமல மும்முணிக் கோவை.


இவர்போய் அவராய், அவர்போய் இவராய், இதுவே தொடர்பாய் வெறிபோல ---

     எண்ணில்லாத காலமாக எண்ணில்லாத பல பிறவிகளை எடுத்து வருவதால், ஊர் அனந்தம், பெற்ற பேர் அனந்தம், ஒவ்வொரு பிறப்பிலும் அந்தந்த பிறப்புக்குரிய குலத்தையும் அவ்வப்பொழுது வந்த நலத்தையும் பெரிதாகக் கருதியும் பேசுயும் அலைந்து அழியும். இத்தகைய தன்மையை உடைய ஆன்மா பித்துப் பிடித்ததுபோல் பயனின்றி அலைகின்றது.

ஒருதாய் இருதாய் பலகோடிய தாய் ---

     பிறப்புக்கள் பலவாதலின், அவ்வப் பிறப்புக்களில் வந்த தாய்களும் பலர். பிறவிகள்தோறும் வந்த தாய்மார்கள் தந்த முலைப்பால் முழுவதும் ஒருங்கு கூட்டினால், திருமால் பள்ளி கொண்டு இருக்கும் திருப்பாற்கடல் சிறியது என்பர் குருநமசிவாயர்...

எடுத்த பிறப்புஎல்லாம் எனக்கு வந்த தாய்மார்
கொடுத்தமுலைப் பால்அனைத்தும் கூட்டின் - அடுத்தவிறல்
பன்னாக அணைத்துயிலும் பாலாழியும் சிறிதாம்
மன்னா சிதம்பர தேவா.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னம் எத்தனை எத்தனை சென்மமோ?
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்,
இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ?
என் செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே!

என்பார் பட்டினத்தடிகள்.

     ஒவ்வொரு பிறப்பிலும் வந்த தாய்மார் முந்நூறு நாள் சுமந்து சுமந்து அயர்வுற்றனர். இனிவரும் தாயரும் அயர்வு உறுவர்.  ஆதலின் பிறவியைத் தொலைத்தல் வேண்டும். எண்ணரிய தாய்மார் இளைப்பாற என்ற அமுத வாக்கை உணர்க.

மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால்சல்த்தேன்,
வேதாவும் கை சலித்து விட்டானே --- நாதா!
இருப்பையூர் வாழ் சிவனே! இன்னம் ஓர்அன்னை
கருப்பையூர் வாராமல் கா.                    --- பட்டினத்தார்.

மண்ணும் தணல் ஆற, வானும் புகை ஆற,
எண்ணர்ய தாயும் இளைப்பு ஆற --- பண்ணும் அயன்
கை ஆறவும், அடியேன் கால் ஆறவும் கண்பார்,
ஐயா திருவை யாறா!                        --- பட்டினத்தார்.

அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி,
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி, நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண!நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி!
யான் ஒன்று உணர்த்துவன், எந்தை! மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்றநீ நினைந்த நாள் தொடங்கி,

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியும் தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையல் ஆகியும் தாயர் ஆகியும்
வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை,
யான் அவை

தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே காலமும் சென்றது, யான்இதன்
மேல்இனி
இளைக்குமாறு இலனே, நாயேன்,
நந்தாச் சோதி! நின் அஞ்செழுத்து நவிலும்

தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலரா,
சொன்னது மந்திரமாக, என்னையும்
இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்

கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.          --- பட்டினத்தார்.

     வள்ளல்பெருமான் நமக்கு அறிவுறுத்தவதைக் காண்போம்...

எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்வு
வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்
அவ்வவ் இடங்கள்தொறும் அவ்வவரை ஆண்டாண்டுஇங்கு
எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்
ஒன்றேனும் நன்றாய் உணர்ந்து இருத்தியேல் இவரை
இன்றே துறத்தற்கு இசையாயோ - நின்று ஓரில்
தாய் ழார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர்
நீயார் இதனை நினைந்திலையே - சேயேகில்
ஏங்குவரே என்றாய், இயமன்வரின் நின்னுயிரை
வாங்கிமுடி இட்டு அகத்தில் வைப்பாரோ - நீங்கிஇவண்
உன்தந்தை தன்றனக்கிங்கு ஓர்தந்தை நாடுவன், நீ
என்தந்தை என்று உரைப்பது எவ்வாறே - சென்றுபின்நின்
தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவள்எனில்
என்மனையாள் என்பது நீ எவ்வணமே - நன்மைபெறும்
நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்
உட்பகைவர் என்றுஇவரை ஓர்ந்திலையே - நட்புடையாய்
எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குள் சில்லுயிர்பால்
இம்மால் அடைந்தது நீ என்நினைந்தோ - வம்மாறில் .
எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்
அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை
மற்றைமொழி போன்று மறந்தனையே.      ---  திருவருட்பா.

எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டுத்
தனக்குத் தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத் தாய்
ஆகியவளும் அதுவானால் தாய்த் தாய்க்கொண்டு
ஏகும் அளித்து இவ் வுலகு.          --- நாலடியார்.

ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள் தாராய் ---

     ஆறுமுகப் பரம்பொருளின் திருமந்திரங்களுள் முருக மந்திரமே சிறந்தது. "சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்" என்ற சூத்திரத்தின்படி, "முருகா" என்ற திருநாமத்தை முதலில் வைத்து ஓதினார். இங்ஙனமே கந்தரநுபூதியிலும் மூன்று திருநாமங்களை எடுத்துக் கூறிய இடத்திலும், முருக மந்திரத்தை முதலில் கூறுமாறு காண்க.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்..

     தத்துவமசி எவ்வாறு சாமவேதத்துள் மகாவாக்கியமாக விளங்குகின்றதோ, அதேபோல் மந்திரங்களுக்குள் மகாவாக்கியம் முருக மந்திரம். நக்கீரதேவர் கூறிய திருமுருகாற்றுப்படையில் "பெரும்பெயர் முருக" என்பார். அத் திவ்விய பிரபந்தத்திற்கும் நாமம் முருகாற்றுப்படை என்று முருக மந்திரத்தாலேயே அமைந்துள்ளதும் உய்த்து உணர்க.

     இனி, விழிக்குத் துணை முருகனது திருவடி. பழைய சஞ்சித வினைக்குத் துணை பன்னிரு புயங்கள். கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் தனிவழிக்குத் துணை வேலும் மயிலும். மொழிக்குத் துணை முருகா என்ற திருநாமமே.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணைஅவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணைவடி வேலும்செங்க கோடன் மயூரமுமே. --- கந்தர் அலங்காரம்.

     முருகா எனும் நாமம் என்று ஒருமையில் கூறாமல் நாமங்கள் என்று பன்மையில் கூறிய நுணுக்கத்தையும் நுனித்து உணர்க.

     அன்றியும், பெருமானுடைய திருவவதாரத்தைக் கூறுமிடத்திலும் வேறு நாமங்களைக் கூறாமல், "ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம்உய்ய" என்று கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் கூறியருளியதையும் சிந்தித்தல் வேண்டும்.

     முருகா என்று இடையறாது கூறுபவர்க்கு, எல்லோரும் கண்டு அஞ்சுகின்ற கூற்றுவனுடைய முகம் தோன்றுகின்ற போது, ஆறுமுகமும் தோன்றும். அக் கூற்றுவனுடன் ஒரு வேளை போர் தோன்றினால், வேலாயுதம் தோன்றும். ஒருமுறை நினைத்தவுடன் இரண்டு திருவடியும் தோன்றும் என்பார் நக்கீரர்.

"அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,
வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்,
முருகா என்று ஓதுவார் முன்".

     எத்தனைதான் கூறினாலும், எத்தனைதான் படித்தாலும், பண்டைய தவம் புரிந்தவர்க்கே முருகா முருகா என்று ஓதும் பேறு கிடைக்கும். அங்ஙனம், முருகா முருகா என்று ஓதும் தவசீலர்க்குக் குறைவற்ற செல்வமும், நோயற்ற வாழ்வும், காலபயம் இன்மையும், வீடுபேறும் உண்டாகும்.

"முருகா எனஉனை ஓதும் தவத்தினர், மூதுலகில்
அருகாத செல்வம் அடைவார், வியாதி அடைந்து நையார்,
ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,
பொருகாலன் நாடுபுகார் சமராபுரிப் புண்ணியனே".
                                                               --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

     ஆவியைப் பிரிக்க இயமன் வரும்போது முருகா முருகா என்று ஓதினால், அவனுடைய பாசக் கயிற்றினால் பயமில்லை.  சுவாமிகள் மற்றொரு திருப்புகழில் அங்ஙனமே வேண்டுகின்றனர்.

ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடி, னது
ஆவிதனையே குறுகி           வருபோது
ஆதிமுருகா ஆதிமுருகா ஆதிமுருகா எனவும்
ஆதிமுருகா நினைவு           தருவாயே. --- (சூதினுண) திருப்புகழ்.

     ஆகலின் உண்ணும்போதும், ஒன்றை எண்ணும் போதும், பேசும் போதும், கந்தம் பூசும்போதும், நடக்கும்போது, கிடக்கும்போதும், பிறர் நம்மை வையும் போதும், தொழில் செய்யும்போதும், எழும்போதும், தொழும்போதும், முப்போது மட்டுமன்றி, எப்போதும் முருகா முருகா என்று உள்ளம் உருகி உரைத்தல் வேண்டும்.

முருகா என ஓர் தரம் ஓதுஅடியார் முடிமேல் இணைதாள் அருள்வோனே ---

     மேலே கூறிய முருக நாமத்தையே அநுவதித்து ஐந்தாவது அடியில் கூறுகின்றார்.

     முருகா என்று ஒருமுறை உள்ளம் குழைந்து ஓதுகின்றவர் சென்னிமேல், வேதாகமங்களுக்கும் எட்டாத திருவடிகள் இரண்டையும் வைத்து எம்பெருமான் இன்னருள் புரிவான்.

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லும் அதோ!
வீடும் சுரர்மா முடி வேதமும்வெங்
காடும் புனமும் கமழும் கழலே.          ---  கந்தர் அநுபூதி.

ஆலம் உண்டகோன், அகண்ட
லோகம்உண்ட மால், விரிஞ்சன்
ஆரணங்கள் ஆகமங்கள்      புகழ்தாளும்.... --- (தோலெலும்பு) திருப்புகழ்.

அண்டத்து இறைவன் பொன்முடிக்கும்
அமலக் கமலன் மணிமுடிக்கும்
அமரர் முனிவர் தலைகளுக்கும்
அணியப் பணியக் கிடைக்காத
தண்டைப் பதத்தை எனக்கு அளித்த
தலைவா தாலோ தாலேலோ...     ---  திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.

முனிவோர் அமரர் முறையோ எனவே முதுசூர் உரமேல் விடும் வேலா ---

     ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுகங்களாக ஆண்ட சூரபன்மனது கொடுமைக்கு ஆற்றாத இருடிகளும் இமையவரும் "முருகா! முறையோ? முறையோ?” என்று முறையிட்டனர்.

நண்ணினர்க்கு இனியாய் ஓலம்
         ஞான நாயகனே ஓலம்
பண்ணவர்க்கு இறையே ஓலம்
         பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற்கு அரியாய் ஓலம்
         யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதல் பெருமான் நல்கும்
         கடவுளே ஓலம் ஓலம்

தேவர்கள் தேவே ஓலம்
         சிறந்த சிற்பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம்
         வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம்
         பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற
         மூர்த்தியே ஓலம் ஓலம்.

     இங்ஙனம் முறையிட்ட அடியவர் முறைக்கு இரங்கி முருகவேள் சூரை அட்டு, அவர்தம் சீரை நல்கினன்.

திருமால் பிரமா அறியாதவர் ---

     மாலும் அயனும் தாமே பரம்பொருள் என்று மயங்கி மலைந்தபோது, அலகில் சோதியராம் அண்ணல், அருட்ஜோதித் தாணுவாக நின்றனர். அயனும் மாலும் அருகில் நின்று தேடியும் காணாது திகைத்து நின்றனர்.

மாலோடு நான்முகனும் நேட வளர்எரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்க நாலூர் மயானத்துஎம்
பாலோடு நெய்ஆடி பாதம் பணிவோமே.  ---  திருஞானசம்பந்தர்.

விதிமால் அறியா விமலன் புதல்வா ---  கந்தர் அநுபூதி.

செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே ---

     திருவீழிமிழலை மிகவும் சிறந்த திருத்தலம். சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து பத்து கி. மீ. தொலைவில் உள்ள திருத்தலம்.
திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

வீழிச் செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது.

 திருஞானசம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (ஞானசம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

 இறைவன், திருஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.

 இக்கோயிலிலுள்ள வெளவால் நத்து (வாவல் நெற்றி) மண்டபம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும். கோயில் திருப்பணிகள் செய்யும் தபதிகள் சில தலங்களில் உள்ள அரிய திருப்பணிகள் நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில இம் மண்டபமும் ஒன்றாகும்.

 வெளவால் நத்தி மண்டபம் - கல்யாண மண்டபம் உள்ளது; அழகான அமைப்பு - நடுவில் தூணில்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள அமைப்பு - பார்ப்பவரை வியக்கச் செய்யும். இக்கோயில் மாடக் கோயில் அமைப்புடையது.

திருமால் சக்கராயுதம் வேண்டி சிவபெருமானை அர்ச்சித்து குறைந்த ஒரு மலருக்காகத் தனது விழியை எடுத்து அர்ச்சித்துத் திருவாழி பெற்ற புனிதத் தலம். திருஞானசம்பந்த சுவாமிகட்கும், திருநாவுக்கரசு சுவாமிகட்கும் சிவபிரான் படிக்காசு தந்தருளிய தலமும் இதுவே ஆகும்.

கருப்பமிகும் உடல்அடர்த்துக் கால் ஊன்றிக்
         கைமறித்துக் கயிலை என்னும்
பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன்முடிதோள்
         நெரித்தவிரல் புனிதர்கோயில்
தருப்பம் மிகு சலந்தரன்தன் உடல்தடிந்த
         சக்கரத்தை வேண்டிஈண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யஇழி
         விமானம்சேர் மிழலையாமே.        --- திருஞானசம்பந்தர்.

அடல்பொருது பூசலே விளைந்திட
     எதிர்பொர ஒணாமல் ஏக சங்கர
     அரஹர சிவாம ஹாதெவ என்றுஉனி ......அன்றுசேவித்து 
அவனிவெகு காலமாய் வணங்கி,உள
     உருகிவெகு பாச கோச சம்ப்ரம
      அதிபெல கடோர மாச லந்தரன் ...... நொந்துவீழ

உடல்தடியும் ஆழி தாஎன் அம்புய
     மலர்கள் தச நூறு தாள் இடும்பகல்
     ஒருமலர் இலாது கோ அணிந்திடு ......செங்கண்மாலுக்கு 
உதவிய மகேசர் பால! இந்திரன்
     மகளைமண மேவி வீறு செந்திலில்
     உரிய அடியேனை ஆள வந்தருள் ...... தம்பிரானே.
                                                                        --- (படர்புவியின்) திருப்புகழ்.

கருத்துரை

     முருகா என்று உருகுபவர்க்கு அருள்பவரே!  பிறவிக்கடலில் அடியேன் வீழ்ந்து வருந்தாவண்ணம், "முருகா" என்று உருகி ஓத அருள் புரிவீர்.




No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...