திருப் பெருந்துறை - 0852. முகர வண்டெழும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முகர வண்டெழும் (திருப்பெருந்துறை)

முருகா!
பெண் ஆசை அற்று,
உன் ஆசை பற்ற அருள்வாய்.


தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான


முகர வண்டெழுங் கருமுகி லலையவு
     முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு
     முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும்

முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு
     மருவு சங்கநின் றொலிகொடு பதறவு
     முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அனுராகச்

சிகர கும்பகுங் குமபுள கிததன
     மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி
     தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட .....னுறமேவித்

திமிர கங்குலின் புதவிடு மவசர
     நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது
     தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே

மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்
     மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு
     வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன்

மடிய வங்குசென் றவனொரு பதுமுடி
     முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல்
     மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே

நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற
     விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை
 நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ....மிளையோனே

நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்
     பவள மும்பொரும் பழனமு மழகுற
     நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முகர வண்டு எழும் கருமுகில் அலையவும்,
     முதிய நஞ்சு உமிழ்ந்து அயில்விழி குவியவும்,
     முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும், ......அமுது ஊறும்

முருகு தங்கு செந்துகிர் இதழ் தெரியவும்,
     மருவு சங்கம் நின்று ஒலிகொடு பதறவும்,
     முழுதும் அன்பு தந்து அமளியின் உதவிய, ...... அனுராகச்

சிகர கும்ப குங்கும புளகித தனம்
     இரு புயம் புதைந்திட, நடு இடைவெளி
     தெரியல் இன்றி ஒன்றிட, உயிர் உயிருடன் .....உறமேவித்

திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர
     நினைவு நெஞ்சில் நின்று அற, அவர் முகமது
     தெரிசனம் செயும் பரிவு அற, இனி அருள் ...... புரிவாயே.

மகரம் நின்ற தெண் திரைபொரு கனைகடல்
     மறுகி, அஞ்சி வந்து, அடி தொழுதிட, ஒரு
     வடிகொள் செஞ்சரம் தொடுபவன், இருபது ...... புயவீரன்

மடிய, அங்கு சென்று, அவன் ஒருபது முடி
     முடிய, முன்பும் அண்டு, அமர் பொருது, அமர்நிழல்
     மதிலில் இங்கையும் பொடிபட அருள் அரி ...... மருகோனே!

நிகர்இல் அண்டம் எண்திசைகளும் மகிழ்வுற,
     விரகு கொண்டு நின்று, அழகு உறு மயில்மிசை
 நினைவின் உந்தி, அம் புவிதனை வலம்வரும் ....இளையோனே!

நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர, ஒளிர்
     பவளமும் பொரும் பழனமும் அழகுற,
     நிழல் குருந்தமும் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே.


பதவுரை


      மகர நின்ற தெண்திரை பொரு கனைகடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட --- மகர மீன்கள் உள்ள, தெள்ளிய அலைகள் மோதி, ஒலிக்கும் கடலுக்கு அரசன் கலக்கத்துடன் அஞ்சி வந்து திருவடியில் தொழும்படி,

     ஒரு வடிகொள் செம்சரம் தொடுபவன் --- ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தியவனும்,  

      இருபது புயவீரன் மடிய --- இருபது தோள்களை உடைய வீரனாகிய இராவணன் மடிந்து ஒழிய.   

     அங்கு சென்று --- அவன் வாழும் இலங்காபுரிக்குச் சென்று,

     அவன் ஒருபது முடி முடிய --- அவனது பத்துத் தலைகளும் அழி,

     முன்பு மண்டு அமர் பொருது --- முனைந்து நெருங்கிய போர் புரிந்து,

     நிழல் அமர் மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே --- ஒளி பொருந்திய மதில்களை உடைய இலங்கை அழிந்து ஒழிய அருளிய திருமாலின் திருமருகரே!

      நிகர் இல் அண்டம் --- ஒப்பில்லாத அண்டங்களும்,

     எண் திசைகளும் மகிழ் உற --- எட்டுத் திக்குகளும் மகிழுமாறு,

     விரகு கொண்டு அழகுஉறு மயில்மிசை நின்று --- சமர்த்துடன் அழகு பொருந்திய மயிலின் மீது அமர்ந்து,

     நினைவின் உந்தி -- மனோ வேகத்தைக் காட்டிலும் விரைவாகச் செலுத்தி,

     அம்புவி தனை வலம் வரும் இளையோனே --- அழகிய இந்த நிலவுலகினை வலமாக வந்த இளையபிள்ளையாரே!

      நிலவு அரும்பு தண்தரளமும் --- நிலவைப் போல ஒளி விடும் குளிர்ந்த முத்துக்களும்,

     மிளிர் ஒளிர் பவளமும் பொரும் --- ஒளி விளங்கும் பவளமும் பொருந்தியுள்ள,

      பழனமும் அழகு உற --- வயல்கள் அழகுடன் விளங்,

     நிழல் குருந்தமும் செறி --- நிழல் தரும் குருந்த மரமும் நிறைந்துள்ள,

     துறை வளர் உறு பெருமாளே --- திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      முகர வண்டு எழும் கருமுகில் அலையவும் --- வண்டுகள் சூழ்ந்து ரீங்காரம் செய்யும் கரிய கூந்தல் அலையவும்,

     முதிய நஞ்சு உமிழ்ந்த அயில்விழி குவியவும் --- முற்றிய விடத்தை உமிழ்வது போன்ற கூரிய கண்கள் குவியவும்,

     முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் --- பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி வியர்க்கவும்,

     அமுது ஊறும் --- அமுதம் சுரக்கின்,

     முருகு தங்கு --- நறுமணம் பொருந்தி,

     செம் துகிர் இதழ் தெரியவும் --- செம்மையான பவளம் போன்ற வாயிதழ் தெரியவும்,

      மருவு சங்கம் நின்று ஒலிகொடு பதறவும் --- சங்கு பொருந்தியது போன்ற கழுத்தில் இருந்து ஒலி விரைந்து எழவும்,

     முழுது அன்பு தந்து --- முழுமையான அன்புடன்,

     அமளியின் உதவிய --- படுக்கையில் உதவி,

     அனுராக --- காமப்பற்றுக்கு இடமாகிய,

     சிகர --- மலை போன்றதும்,

     கும்ப --- குடத்தைப் போன்றதும்,

     குங்கும --- குங்குமக் கலவையால் தொய்யில் எழுதியதும் ஆகிய,

     புளகித தனம் --- மெய் சிலிர்ப்பைத் தருகின்ற மார்பகங்கள்,

     இருபுயம் புதைந்திட --- இரண்டு தோள்களிலும் புதைந்து இருக்க,

     நடு இடைவெளி தெரியல் இன்றி ஒன்றிட --- நடுவில் இடைவெளி தெரியாத வண்ணம் ஒருவரோடு ஒருவர் ஒன்றி இருக்க,

    உயிர் உயிருடன் உற மேவி --- உயிரோடு உயிர் கலந்தது என்னும்படி கூடி,

     திமிர கங்குல் இன்பு உதவிடும் --- இருண்ட இரவுக் காலத்தில் கலவி இன்பத்தைத் தந்து உதவிய (இன்ப நிலையை எண்ணிப்),

     அவசர நினைவு நெஞ்சினின்று அற --- பொருந்திய நினைவானது எனது மனதில் இருந்து அற்றுப் போகவும்,

     அவர் முகம் அது தெரிசனம் செயும் பரிவு அற --- அவ்வாறு இன்ப ஊற்றைத் தந்த விலைமாதரின் முகத்தை மீண்டும் கண்டு, அவருடன் மகிழவேண்டும் என்னும் ஆசை அற்றுப் போகவும்,

     இனி அருள் புரிவாயே --- இனியாவது அடியேனுக்குத் திருவருள் புரியவேண்டும்.


பொழிப்புரை

     மகர மீன்கள் உள்ள, தெள்ளிய அலைகள் மோதி, ஒலிக்கும் கடலுக்கு அரசன் கலக்கத்துடன் அஞ்சி வந்து திருவடியில் தொழும்படி, ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தியவனும்,  இருபது தோள்களை உடைய வீரனாகிய இராவணன் மடிந்து ஒழிய, அவன் வாழும் இலங்காபுரிக்குச் சென்று, அவனது பத்துத் தலைகளும் அழி, முனைந்து நெருங்கிய போர் புரிந்து, ஒளி பொருந்திய மதில்களை உடைய இலங்கை அழிந்து ஒழிய அருளிய திருமாலின் திருமருகரே!

         ஒப்பில்லாத அண்டங்களும், எட்டுத் திக்குகளும் மகிழுமாறு, சமர்த்துடன் அழகு பொருந்திய மயிலின் மீது அமர்ந்து, மனோ வேகத்தைக் காட்டிலும் விரைவாகச் செலுத்தி, அழகிய இந்த நிலவுலகினை வலமாக வந்த இளையபிள்ளையாரே!

         நிலவைப் போல ஒளி விடும் குளிர்ந்த முத்துக்களும், ஒளி விளங்கும் பவளமும் பொருந்தியுள்ள வயல்கள் அழகுடன் விளங், நிழல் தரும் குருந்த மரமும் நிறைந்துள்ள,
திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         வண்டுகள் சூழ்ந்து ரீங்காரம் செய்யும் கரிய கூந்தல் அலையவும், முற்றிய விடத்தை உமிழ்வது போன்ற கூரிய கண்கள் குவியவும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி வியர்க்கவும், அமுதம் சுரக்கின், நறுமணம் பொருந்தி, செம்மையான பவளம் போன்ற வாயிதழ் தெரியவும், சங்கு பொருந்தியது போன்ற கழுத்தில் இருந்து ஒலி விரைந்து எழவும், முழுமையான அன்புடன், படுக்கையில் உதவி, காமப்பற்றுக்கு இடமாகியதும், மலை போன்றதும், குடத்தைப் போன்றதும், குங்குமக் கலவையால் தொய்யில் எழுதியதும் ஆகிய, மெய்ச் சிலிர்ப்பைத் தருகின்ற மார்பகங்கள், இரண்டு தோள்களிலும் புதையும்படி, நடுவில் இடைவெளி தெரியாத வண்ணம் ஒருவரோடு ஒருவர் ஒன்றி இருக்க, உயிரோடு உயிர் கலந்தது என்னும்படி கூடி, இருண்ட இரவுக் காலத்தில் கலவி இன்பத்தைத் தந்து உதவிய இன்ப நிலையை எண்ணிப் பொருந்திய நினைவானது எனது மனதில் இருந்து அற்றுப் போகவும், அவ்வாறு இன்ப ஊற்றைத் தந்த விலைமாதரின் முகத்தை மீண்டும் கண்டு, அவருடன் மகிழவேண்டும் என்னும் ஆசை அற்றுப் போகவும், இனியாவது அடியேனுக்குத் திருவருள் புரியவேண்டும்.

விரிவுரை

முகர வண்டு எழும் கருமுகில் அலையவும் ---

முகரம் - ஒலித்தல்.

கருமுகில் --- கரிய மேகம். கருமையான கூந்தலைக் குறித்தது.

கூந்தலில் சூடி உள்ள மலர்களில் தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து நீங்காரம் செய்கின்றன.

முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் ---

முகிள், முகிளம் --- அரும்பு.

செம் துகிர் இதழ் தெரியவும் ---

துகிர் --- பவளம்.  செம் துகிர் --- செம்பவளம்.

அவசர நினைவு நெஞ்சினின்று அற ---

அவசரம் - சமயம், விரைந்து.

அவ்வப்போது விரைந்து வந்து பொருந்திய நினைவுகள் நெஞ்சில் இருந்து நீங்கிப் பொக.

மகர நின்ற தெண்திரை பொரு கனைகடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு வடிகொள் செம்சரம் தொடுபவன் ---

இராமச்சந்திரமூர்த்தி நானாவிதமான எண்ணங்களாகிய அலைகள் ஒழியாது வீசுகின்ற சமுசாரமாகிய சமுத்திரத்தில், வைராக்கியமாகிய அணையைக் கட்டி, அதனைக் கடந்து சென்று இலங்கையில் இருந்து காமக்ரோதாதிகளாகிய அசுரர்களை அழித்தார் என்பது பொருள். "நிலையாத சமுத்திரமான சமுசார துறைகளில் மூழ்கி" என்று திருத்தணிகைத் திருப்புகழில் அருளியுள்ளது காண்க.

இராமச்சந்திரமூர்த்தி கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி, வருணனை நினைத்து, கரத்தைத் தலையணையாக வைத்து, கிழக்கு முகமாகப் படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்த அவர் திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய் மூன்று நாட்கள் தவமிருந்தார்.

தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக! என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங்கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதிமுறை வணங்கி.

மூடனான சமுத்திரராஜன் இராமருக்கு முன் வரவில்லை. இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று சமுத்திரத்தை வற்றச் செய்கிறேன், மூடர்களிடத்தில் பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டுவா; திவ்விய அஸ்திரங்களையும் எடுத்துவா. சமுத்திரத்தை வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று சொல்லி உலகங்கள் நடுங்க, கோதண்டத்தை வளைத்து நாணேற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன் மறைந்தான்; இருள் சூழ்ந்தது, எரிகொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின. மேகங்களின்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வில்லில் சந்தித்தார். 

ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர் பால் ஒருவர்,
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையில் தீரார்;
இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்;
நன்று! நன்று! என நகையொடும் புகை உக நக்கான்.

"பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதன்" என்று இகழ்ச்சி மேல் விளைய,
ஈரம் நீங்கியது, எறிகடல் ஆம்"  என இசைத்தான்.
    
வாங்கி வெஞ்சிலை வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள் அயல் வீக்கினன் கோதையின் விரலால்
தாங்கி நாணினைத் தாக்கினன்  தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல்.

மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தரெிந்து
பார் இயங்கு இரும்புனல் எலாம் முடிவினில் பருகும்
சூரியன் கதிர் அனையன சுடுசரம் துரந்தான்.

பெரிய மால்வரை ஏழினும் பெருவலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கித்,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும்மடி கொடியன சுடு சரம் எய்தான்.

இலட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப் பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டது என்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள் “இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.

உடனே மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருணன் “ராம ராம” என்று துதித்துக் கொண்டு தோன்றி, காலகாலரைப் போல் கடுங் கோபத்துடன் நிற்கும் இரகுவீரரிடம் வந்து பணிந்து, “ராகவரே! மன்னிப்பீர்; வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்” என்றான்.

இராமச்சந்திரமூர்த்தி, “நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது; இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக” என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துருமகுல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை விட்டருள்வீர்” என்று சொல்ல, இராமர், உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை சென்று அந்த இடத்தைப் பிளக்க ரஸாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரணகூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்குகிறது. அவ்விடம் “எல்லா நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக” என்று இரகுநாதர் வரங்கொடுத்தார்.

பிறகு, வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன்; விசுவகர்மாவினுடைய புதல்வன்; தந்தைக்குச் சமானமானவன்; தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன் என்மேல் அணைகட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம் பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித் திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே! விசாலமான இந்தக் கடலில் நான் எனது தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணைகட்டுகிறேன். வீரனுக்குத் தண்டோபாயமே சிறந்தது; அயோக்கியர்களிடம் சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இவன் தண்டோபாயத்தினாலேயே பயந்து அணை கட்ட இடங்கொடுத்தான். வானரவீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டிய வற்றைக் கொணரட்டும்” என்றான்.

இராமர் அவ்வாறே கட்டளையிட, வானர வீரர்கள் நாற்புறங்களிலும் பெருங் காட்டில் சென்று, ஆச்சா, அசுவகர்ணம், மருதம், பனை, வெண்பாலை, கர்ணீகாரம், மா, அசோகம் முதலிய தருக்களை வேரொடு பிடுங்கிக் கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக் கட்டிப் பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையைக் கட்டலானான். பெரிய பாறைகளும் மலைகளும் அக்கடலில் வீழ்த்தப்பட்ட பொழுது பெருஞ் சத்தமுண்டாயிற்று. மனந்தளராத அவ்வானர வீரர்கள் அணை கட்டினார்கள். அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய அச்சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் இறும்பூதுற்றன.


இருபது புயவீரன் மடிய, அங்கு சென்று, அவன் ஒருபது முடி முடிய, முன்பு மண்டு அமர் பொருது நிழல் அமர் மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே ---

மண்டுமல் --- விரைதல், கடுமையாதல், நெருங்கித் தாக்குதல்.

நிழல் --- ஒளி.

இராவணனுடைய ஆணைக்கு அஞ்சி, சூரியன் இலங்கை மீது இயங்கவில்லை. ஆதலால், மதில்கள் மீது வெயில் படியவில்லை. நிழல் தங்கி இருந்தது என்றும் கொள்ளலாம்.

இதனைப் பின்வரும் பிரமாணங்களால் தெளியலாம்....


"பகலவன் மீதுஇயங்காமைக் காத்த பதியோன்"தனை,
இகல்அழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிடம் எங்கும்நின்று ஏத்தவல் லார்க்குஇல்லை அல்லலே.  --- திருஞானசம்பந்தர்

பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி
      "பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்"
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ
      அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்-
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
      திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து
      அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்கோவே.---  திருமங்கை ஆழ்வார்.
        
"புணரியில் விரவி எழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை இலங்கை" வாழ்பதி
     பொலமணி மகுட சிரங்கள் தாம்ஒரு ......பதும் மாறிப்

புவிஇடை உருள முனிந்து, கூர்கணை
     உறுசிலை வளைய வலிந்து நாடிய,
     புயல், தி விறல் அரி, விண்டு, மால், திரு....மருகோனே! --- (நிணமொடு) திருப்புகழ்.


நிகர் இல் அண்டம், எண் திசைகளும் மகிழ் உற, விரகு கொண்டு அழகு உறு மயில்மிசை நின்று, நினைவின் உந்தி, அம்புவி தனை வலம் வரும் இளையோனே ---

சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த தெய்வ மாதுளங்கனியை ஆனைமுகப் பெருமானும், ஆறுமுகப் பெருமானும் ஒருங்கே கேட்டனர். "உலகை ஒருநாழிகைப் போதில் வலம் வருபவன் தேவசிரேட்டன்" என்று அமரர் ஒருகால் எண்ணியதைத் திருவுளங்கொண்ட எந்தை அந்திவண்ணர், "உலகங்களை எல்லாம் ஒருகணப் பொழுதில் எவன் வலம் வருவானோ, அவனுக்கு இக்கனி" என்று கூறியருளினார். அதுகேட்ட ஆறுமுகக் கடவுள் மயில்மிசை ஊர்ந்து எல்லா உலகங்களையும் ஒரு கணப்பொழுதுக்குள் வலம் வந்தனர். விநாயகமூர்த்தி எல்லாவுலகங்களும் சிவத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றன என்று ஆய்ந்து திவபெருமானை வலம் வந்து கனி பெற்றனர்.

கேவலம் ஒரு கனி பொருட்டாக முருகவேள் உலகங்களை எல்லாம் வலம் வருவாரா? ஒரு கனியை விரும்பி கணேசரும் குகேசரும் மாறுபடுவார்களா? ஏன் சிவபெருமான் அக்கனியை இருவருக்கும் உடைத்துப் பகிர்ந்து தரக்கூடாதா? அல்லது வேறு கனியை உண்டாக்கித் தர எல்லாம் வல்ல இறைவரால் ஆகாதா? காரைக்காலம்மையாருக்கு ஒரு கனிக்கு இருகனி தந்தாரல்லவா? தம்பிக்கே கனி கிடைக்கட்டுமே என்று விநாயகரும், தமையனுக்கே கனி கிடைக்கட்டும் என்றும் வேலவரும் எண்ணி அமையமாட்டார்களா? இது என்ன கதை? இப்படியும் நிகழ்ந்திருக்குமா? புனைந்துரையா? பகுத்தறிவுக்குப் பொருந்துகின்றதா? என்று பலப்பல ஐயங்கள் இதனால் எழலாம். 

கனி காரணமாக மாறுபட்டு வலம் வரவில்லை. இறைவர் எல்லாமாய் அல்லவுமாய் விளங்குபவர். அவரிடத்திலே எல்லாப் பொருள்களும் தங்கி இருக்கின்றன. அவர் எல்லாப் பொருள்களிலும் தங்கி இருக்கின்றார்.  இந்த உண்மையை விளக்கும் பொருட்டே இந்த நிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அன்பர்கள் நன்கு சிந்திக்க. எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தனர் முருகவேள். எல்லாப் பொருள்களையும் சிவத்திலே பார்த்தனர் கணபதி. ஒன்றிலே எல்லாவற்றையும், ஒன்றை எல்லாவற்றுக்குள்ளும் பார்ப்பது.  இப் பெரிய உட்பொருளை விளக்கியது இச் சரிதம்.

இந்த வரலாற்றின் உட்பொருள்

(1)   கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.

(2)   மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம்.   காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர்     தானே சிவபெருமான்.

(3)   எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.

(4)   உலகங்கள் யாவும் சிவத்துக்குள் ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை ஞானபண்டிதனான முருகவேளும்    அறிவார்.


நிழல் குருந்தமும் செறி துறை வளர் உறு பெருமாளே ---

நிழல் தருகின்ற குருந்த மரங்கள் நெருங்கி வளர்ந்துள்ள துறையில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே என்று போற்றினார். குருந்த மரம் உள்ள துறை என்றதனால், திருப்பெருந்துறை என்பது பெறப்பட்டது.

திருப்பெருந்துறை என்னும் அற்புதத் திருத்தலம், இக் காலத்தில் ஆவுடையார் கோயில் என வழங்கப்படுகின்றது.

இறைவர்  --- ஆத்மநாதசுவாமி, குருசுவாமி, பரமசுவாமி,                                                உயிர்த்தலைவர்.
இறைவியார் --- யோகாம்பாள்.
தல மரம் --- குருந்த மரம்.

உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக - பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் "பெருந்துறை" எனப் பெயர் பெற்றது.

சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும், சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன்; சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோயிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் அருவமாக இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார்.

திருப்பரங்குன்றத் திருப்புகழில் "அருக்கு மங்கையர்" என்று தொடங்கும் பாடலில் "வழியடியர் திருக்குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர்" என்று ஆத்மநாதசுவாமி போற்றப்படுகிறார்.

பண்டைநாளில் தபதிகள் கோயில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால், ஆவுடையார்கோயில் கொடுங்கைகளைப்போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் "ஆவுடையார்கோயில் கொடுங்கைகள் நீங்கலாக" என்று எழுதும் வழக்கம் இருந்ததாம்.

முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ் நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப் பிடிபோல நிறுத்தி - அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும் எண்ணத்துடன் உள்ளே செல்க என்று உணர்த்துவதாக உள்ளது.

அடுத்துள்ளது இராஜகோபுரம் - முன்பு ஐந்து நிலைகளாக இருந்ததை மாற்றி ஏழுநிலைகளாக்கித் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நெடிது உயர்ந்த இராஜகோபுரம்; தொலைவில் வரும்போதே வா என்று அழைக்கும் வான்கருணை சான்று.

ராஜகோபுர வாயிலின் இடப்பக்கதில் - சுவரில் - வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலுக்கு வைத்துள்ள தர்மத்தைப் பற்றிய சாசனக் கல்வெட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரம் வருமாறு:-

ஆவுடையார்கோயிலில் காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாருடைய தர்மம் சகலருக்கும் பிரசித்தியாகத் தெரியும் பொருட்டு நிரந்தரமான ஞாபகத்தின் பொருட்டுச் செய்த  விளம்பரமாவது:-

இறந்துபோன புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களால் வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார்கோயிலில் சாயரக்ஷை கட்டளைத் தர்மமானது. கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல் வருஷம் கறாளஉய 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும் கவர்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது.

1.                                உள்கோபுரத்தை கடந்து சென்றால் அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம் - இதை கனகசபை என்பர். முந்நூறு ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாம். கொடுங்கைகளை அழகாகப் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேற்புறச் சுவரில் எண்ணற்ற புவனங்களைக் குறிக்கும் அட்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் இருதலைகளும் ஓருடலும் கொண்டு பின்னிய நிலையிலுள்ள பாம்பும்; சாமுத்திகா லட்சணத்தைக் காட்டும் பெண் முதலான சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் நவக்கிரகங்கள் கல்லில் அடித்து வைக்கப்பட்டுள்ளன. தனியாக இக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. சந்நிதி மேற்புறத்தில் 27 நட்சத்திர வடிவங்களும் கல்லிற் செதுக்கப்பட்டுள்ளன. சந்நிதியில் வௌ¤ச்சுவரில் வண்ண ஓவியத்தில் ஸ்பரிச - உபதேச - திருவடி தீட்சை ஓவியங்கள் உள்ளன.

அடுத்தது நிருத்த மண்டபம் - நடனசபை / நர்த்தன சபை. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு. தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள் கூடத் தௌ¤வாகத் தெரியும் வண்ணம் செதுக்கியுள்ள கைவண்ணம் - வேடனின் நளினத் தோற்றம் - இவ்வாறே வலதுபுறம் காட்சித்தரும் வேடன் வேடுவச்சி சிற்பங்கள் - அற்புதமான கலையழகு கருவூலங்கள்.
   
வாயிலைக் கடந்து உட்புகுந்தால் அடுத்து வருவது தேவசபை - சுந்தர பாண்டிய மண்டபம் (சுந்தர பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது) இடப்பால் பிராகாரத்தில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி. இப்பெருமானைத் தரிசித்து விட்டுத்தான் மூலவரைத் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இக்கோயில் மரபு. சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சந்நிதி; சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம்தான். ஸ்ரீ யோகாம்பாள் சந்நிதியில் திருமேனி இல்லை. சததள பத்ம பீடத்தில் - 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் - யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கல் ஜன்னல் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். அடுத்த தரிசனமாக தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி; கல்லில் வடித்துள்ள குருந்தமரம் - கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும்மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேச ஐதீகம் நடக்கிறது. இங்குள்ள திருவாசகக் கோயிலில் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விசேடம்.
         
அடுத்த சபை, சத்சபை - இங்குள்ள விசாலமான கல்மேடையில்தான் சுவாமிக்கு கைபடாத (புழுங்கல் அரிசி) அன்னம் நிவேதிக்கப்படுகிறது. (இதனால் இதற்கு அமுத மண்டபம் என்றும் பெயர்) இங்கு புழுங்கல் அரிசி சாதம் நிவேத்தியம் சிறப்பு.
        
அடுத்தது, சித்சபை - பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாக காட்சி நல்குமிடம்.

பரமசுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே - குருவருள் கொலு வீற்றிருக்குமிடமே ஆநந்த சபை.
   
ஆவுடையார் - சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார். அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது.
   
ஆவுடையாரின் பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாசி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத்துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கினியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திரனையும் குறிக்கிறதென்பர். சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர்விடுகின்றன.

முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூரையில் தொங்கும் கற்சங்கிலிகள் கண்களைக் கவர்கின்றன. கொடுங்கைகளின் அற்புதத்தை இம்மண்டபத்திலும் காணலாம்.
   
எவ்வளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்காளக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டு காட்டியுள்ளார்கள்.
   
இத்திருக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ளது. தனிக் கோயில். மாணிக்கவாசகருக்கு முதல் உபதேசக் காட்சி அங்குதான். இக்கோயில் மாணிக்கவாசகருக்கு முன்பிருந்தே உள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் ஒரு காலத்தில் காடாக இருந்ததாம். தற்போது ஆதிகயிலாயநாதர் கோயில் உள்ள இடத்தை, வடக்கூர் (வடக்களூர்) என்றும், ஆவுடையார்கோயில் உள்ள இடத்தைக் தெற்கூர் என்றும் சொல்கின்றனர்.

ஆதிகயிலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கியது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் இங்கிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாகவும், மதுரையிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம்.

கருத்துரை

முருகா! பெண் ஆசை அற்று, உன் ஆசை பற்ற அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...