மருத்துவக்குடி --- 0857. கருத்து இதப்படு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கருத்து இதப்படு (மருத்துவக்குடி)

முருகா!
திருவடிப் பேற்றினை அருள்வாய்


தனத்த தத்தன தானா தானன
     தனத்த தத்தன தானா தானன
     தனத்த தத்தன தானா தானன ...... தனதான


கருத்தி தப்படு காமா லீலைகள்
     விதத்தை நத்திய வீணா வீணிகள்
     கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங்

கரைத்து ரைத்திடு மோகா மோகிகள்
     அளிக்கு லப்பதி கார்போ லோதிகள்
     கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை

உரைத்த புத்திகள் கேளா நீசனை
     யவத்த மெத்திய ஆசா பாசனை
     யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி

உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
     யளிக்கு நற்பொரு ளாயே மாதவ
     வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே

செருக்கி வெட்டிய தீயோ ராமெனு
     மதத்த துட்டர்கள் மாசூ ராதிய
     சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே

சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
     கதித்த முத்தமிழ் மாலா யோதிய
     செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா

வரைத்த வர்க்கரர் சூலா பாணிய
     ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த
     மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா

வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு
     தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு
     மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கருத்து இதப்படு காமா லீலைகள்
     விதத்தை நத்திய வீணா வீணிகள்,
     கவட்டு விற்பன மாயா வாதிகள், ...... பலகாலும்

கரைத்து உரைத்திடு மோகா மோகிகள்,
     அளிக் குலப்பதி கார் போல் ஓதிகள்,
     கடைக்கணில் சுழலாயே பாழ்படு ...... வினையேனை,

உரைத்த புத்திகள் கேளா நீசனை,
     அவத்தம் மெத்திய ஆசா பாசனை,
     உளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை, ......அருளாகி

உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
     அளிக்கும் நற்பொருள் ஆயே, மாதவ
     உணர்ச்சி பெற்றிடவே, நீ தாள்இணை ......அருள்வாயே.

செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும்
     மதத்த துட்டர்கள் மாசூர் ஆதிய
     சினத்தர் பட்டிடவே வேல் ஏவிய ...... முருகோனே!

சிவத்தை உற்றிடு தூயா தூயவர்,
     கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய
     செழிப்பை நத்திய சீலா! வீறிய ...... மயில்வீரா!

வரைத் தவர்க்கு அரர், சூலா பாணியர்,
     அதிக் குணத்து அரர், தீரா தீரர் தம்
     மனத்து இயல்படு ஞானா தேசிக! ...... வடிவேலா!

வருக்கையில் கனி சாறாய் மேலிடு
     தழைத்த செய்த்தலை ஊடே பாய்தரு,
     மருத்துவக்குடி வாழ்வே! தேவர்கள் ...... பெருமாளே.


பதவுரை

      செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் --- செருக்குக் கொண்டு தமக்கு மாறானவர்களை எல்லாம் அழித்த வெறி மிகுந்த தீயவர்கள் ஆகிய

     மா சூர் ஆதிய சினத்தர் பட்டிடவே --- பெரிய சூரபதுமன் முதலான சினம் கொண்ட அரக்கர்கள் அழியும்படி,

     வேல் ஏவிய முருகோனே --- வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!

      சிவத்தை உற்றிடு தூயா --- அன்பு பொருந்திய தூய வடிவினரே!

     தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய செழிப்பை நத்திய சீலா --- உள்ளத் தூய்மை உடையவர்கள் அறிந்து உணர்ந்து பாடிய முத்தமிழ்ப் பாடல்களின் வளத்தை விரும்பிய சீலத்தை உடையவரே!

     வீறிய மயில்வீரா --- சிறப்புப் பொருந்திய மயிலை வாகனமாக உடைய வீரத்தில் மிக்கவரே!

      வரைத் தவர்க்கு அரர் --- திருக்கயிலை மலைச் சாரலில் தவம் புரியும் பெரியோர்க்கு இறைவரும்,

     சூலா பாணியர் --- மூவிலைச் சூலத்தைத் திருக்கரத்தில் தாங்கியவரும்,

     அதிக் குணத்து அரர் --- அருட்குணம் மிக்கவரும் ஆகிய அரனும்,

     தீரா தீரர் தம் மனத்து இயல்படு ஞானா தேசிக --- தீரம் மிக்கவரும் ஆகிய சிவபெருமான் திருவுள்ளத்தில் பொருந்தி இருக்கும் ஞானாசிரியரே!

     வடிவேலா --- வடிவேல் பெருமானே!

      வருக்கையின் கனி சாறாய் மேலிடு --- பலாப் பழங்களின் சாறானது,

     தழைத்த செய்த்தலை ஊடே பாய்தரு --- வளப்பம் மிகுந்த வயல்களின் ஊடே பாய்கின்ற

     மருத்துவக் குடி வாழ்வே --- மருத்துவக்குடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி அடியவர்க்கு வாழ்வருள்கின்றவரே!

     தேவர்கள் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

      கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள் --- மனக் கருத்துக்கு இனிமை தரும்ம்படி பல விதமான காமலீலைகளை விரும்பிய மகாவீணிகள்.

      கவட்டு விற்பன மாயா வாதிகள் --- வஞ்சக அறிவு மிக்கு மயக்கும் செயல்களைப் புரிபவர்கள்,

     பலகாலும் கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் ---
பலகாலும் மனம் கரையும்படி பேசுவதில் வல்ல மோகம் உணர்வு மிகுந்தவர்கள்,

      அளிக்குலப் பதி கார்போல் ஓதிகள் --- வண்டுகள் கூட்டமாக மொய்க்கின்றதும், கரிய மேகத்தை ஒத்ததுமான கூந்தலை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின்,

     கடைக் க(ண்)ணின் சுழலாயே பாழ்படு வினையேனை ---
கடைக்கண் பார்வையில் பட்டு, மனம் அதிலேயே சுழன்று, பாயாகப் போகும்படியான தீவினைப் பயனை உடையவனாகிய அடியேனை,

      உரைத்த புத்திகள் கேளா நீசனை --- பெரியோர் சொல்லும் அறிவுரைகளைக் காது கொடுத்தும் கேளாத நீசபுத்தி உடையவனை,

     அவத்த(ம்) மெத்திய ஆசா பாசனை --- ஆசை என்னும் பாசத்தில் கட்டுண்டு வீணாய்ப் போவதையே விரும்பி நிற்கின்ற அடியேனை,

     உ(ள்)ளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை --- உண்மைப் பொருளை உள்ளத்தில் ஆராய்ந்து அறியாத அறிவற்றவனை,

     அருளாகி --- தேவரீர் திருவருள் புரிந்து,

       உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல்பொருள் ஆயே --- உயர்நிலை விளங்கும் மேலான அறத்தைப் புரியும் நல்லவனாக்கி,

     மாதவ உணர்ச்சி பெற்றிடவே --- மேலான தவ உணர்ச்சியைப் பெறுமாறு,

     நீ தாளிணை அருள்வாயே  --- தேவரீர் திருவடியிணையை அருள் புரியவேண்டும்.


பதவுரை

     செருக்குக் கொண்டு தமக்கு மாறானவர்களை எல்லாம் அழித்த வெறி மிகுந்த தீயவர்கள் ஆகிய பெரிய சூரபதுமன் முதலான சினம் கொண்ட அரக்கர்கள் அழியும்படி, வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானே!

      அன்பு பொருந்திய தூய வடிவினரே!

     உள்ளத் தூய்மை உடையவர்கள் அறிந்து உணர்ந்து பாடிய முத்தமிழ்ப் பாடல்களின் வளத்தை விரும்பிய சீலத்தை உடையவரே!

     சிறப்புப் பொருந்திய மயிலை வாகனமாக உடைய வீரத்தில் மிக்கவரே!

         திருக்கயிலை மலைச் சாரலில் தவம் புரியும் பெரியோர்க்கு இறைவரும், மூவிலைச் சூலத்தைத் திருக்கரத்தில் தாங்கியவரும், அருட்குணம் மிக்கவரும் ஆகிய அரனும், தீரம் மிக்கவரும் ஆகிய சிவபெருமான் திருவுள்ளத்தில் பொருந்தி இருக்கும் ஞானாசிரியரே!

     வடிவேல் பெருமானே!

      பலாப் பழங்களின் சாறானது பெருகி வளப்பம் மிகுந்த வயல்களின் ஊடே பாய்கின்ற மருத்துவக்குடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி அடியவர்க்கு வாழ்வருள்கின்றவரே!

     தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

     மனக் கருத்துக்கு இனிமை தரும்ம்படி பல விதமான காமலீலைகளை விரும்பிய மகாவீணிகள். வஞ்சக அறிவு மிக்கு மயக்கும் செயல்களைப் புரிபவர்கள். பலகாலும் மனம் கரையும்படி பேசுவதில் வல்ல மோகம் உணர்வு மிகுந்தவர்கள். வண்டுகள் கூட்டமாக மொய்க்கின்றதும், கரிய மேகத்தை ஒத்ததுமான கூந்தலை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின், கடைக்கண் பார்வையில் பட்டு, மனம் அதிலேயே சுழன்று, பாயாகப் போகும்படியான தீவினைப் பயனை உடையவனாகிய அடியேனை, பெரியோர் சொல்லும் அறிவுரைகளைக் காது கொடுத்தும் கேளாத நீசபுத்தி உடையவனை, ஆசை என்னும் பாசத்தில் கட்டுண்டு வீணாய்ப் போவதையே விரும்பி நிற்கின்ற அடியேனை, உண்மைப் பொருளை உள்ளத்தில் ஆராய்ந்து அறியாத அறிவற்றவனை, தேவரீரது திருவருள் புரிந்து, உயர்நிலை விளங்கும் மேலான அறத்தைப் புரியும் நல்லவனாக்கி, மேலான தவ உணர்ச்சியைப் பெறுமாறு, தேவரீர் திருவடியிணையை அருள் புரியவேண்டும்.


விரிவுரை


கவட்டு விற்பன மாயா வாதிகள் ---

கவடு, கபடு --- வஞ்சகம்.

விற்பனம் --- அறிவுக் கூர்மை.


கடைக் க(ண்)ணின் சுழலாயே பாழ்படு வினையேனை ---

விலைமாதர் தமது கடைக்கண் பார்வையால் காமுகரைத் தமது வலையில் வீழ்த்திப் பாழ்படுத்துவர்.

சுழல் என்றார் அடிகாளர். சுழலில் விழுந்தவர்கள் பிழைப்பது இல்லை.

விழையும் மனிதரையும் முநிவரையும் உயிர்துணிய
வெட்டிப் பிளந்துஉளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்.....   ---  திருப்புகழ்.

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப்பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.
                                                                                 ---  கந்தர் அலங்காரம்.


உரைத்த புத்திகள் கேளா நீசனை ---


காமவயப்பட்டு நிற்கும் மூடர்கள் பெரியோர் சொல்லும் அறிவுரைகளைக் காது கொடுத்தும் கேளார். "அறிவுரை பேணாத மானுட கசனி" எனப் பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில் அடிகளார் காட்டி உள்ளது காண்க.

அவத்த(ம்) மெத்திய ஆசா பாசனை ---

பாசம் --- கயிறு.  ஆசை என்னும் வலிமையான கயிற்றால் கட்டுண்டு இருப்பதால் வாழ்வு அவத்தமாகவே முடியும்.

உ(ள்)ளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை ---

ஆசை என்னும் பாசச் சிக்கில் இருந்து விடுபடவேண்டும் எனில், உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அருளாகி ---

உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ளத் திருவருள் வாய்க்கவேண்டும்.

உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல்பொருள் ஆயே ---
திருவருள் இருந்தால் குருவருள் வாய்க்கும். மேலான மெய்ப்பொருளை குருநாதர் நன்கு உணர்த்தி அருள் புரிவார்.

மாதவ உணர்ச்சி பெற்றிடவே ---

குருநாதர் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிந்தால் தவ உணர்ச்சி மேலிடும்.

நீ தாளிணை அருள்வாயே  ---

"சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு" என்பது கொன்றைவேந்தன். அழகான தவத்தைப் புரிந்தால், சிவம் திருவடிக் காட்சி நல்கும்.

தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய செழிப்பை நத்திய சீலா ---

கதித்த --- எழுதல்.

     உள்ளத் தூய்மை மிக்க அடியவர்களின் திருவாயில் இருந்து எழுந்தவை அரிய முத்தமிழ்ப் பாடல்கள்.

     உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே. இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தான். பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே.  சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.  கற்புணையை நற்புணையாக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்.  குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ்.  பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்.  இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ்.

     தென்றலும் தமிழ்த் தென்றல் ஆயிற்று.  தமிழ் வழங்கும் திசை தென்திசை. அத்திசையில் இருந்து வரும் மெல்லியக் காற்று தென்றல்.  "இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என்பது நிகண்டு. இனியக் காற்று தென்றல். “தமிழ் மாருதம்” என்று சேக்கிழாரும் கூறுகின்றனர்.

     இறைவனுக்கு மிகவும் இனிய மொழி தமிழ் ஆகும். இறைவனுக்குத் திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தமிழ்மாலையைச் சாத்தி வழிபட்டார்கள். "பன்னலம் தமிழால் பாடுவேற்கு அருளாய்" என இறைவனை வேண்டினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். "வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்" என்றார் அப்பர் பெருமான். "தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்றார் அவரே.

     தமிழ்க்கடவுளும் குறிஞ்சிக் கிழவனுமாகிய முருகவேள் தமிழ்க்குடியில் பிறந்த தமிழணங்காகிய வள்ளிநாயகியைத் தமிழ் முறைப்படி களவியலில் மணந்துகொண்டார்.  களவியலுக்கு இலக்கியமாக வள்ளியம்மையாரையும், கற்பியலுக்கு இலக்கியமாக தெய்வகுஞ்சரியம்மையாரையும் திருமணம் புரிந்து, உலகிற்கு இரு இயல்புகளையும் இறைவர் அறிவுறுத்தினார்.

     முருகப் பெருமானைத் தமிழால் பாடி, அந்த மாத்ருகா புட்ப மாலையை, ஞானமலர் மாலையைச் சாத்தி வழிபட்டால் இகம் பரம் ஆகிய இரண்டு நலன்களையும் வழங்குவான். அப்பரமனை வாழ்த்தக் கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பான் முருகன்.

     மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனம் இரங்கி, அரைக் காசும் உதவமாட்டார்கள்.

     செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.

அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,
    ஆபத்து அகற்றி அன்பாய்
ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,
    ஆண்மைஉள விசயன்நீ, என்று
எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்
    இயற்றினும் இரக்கஞ் செயார்,
இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்
    இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,
பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!
    பெருவயிற்றான் தம்பி,அப்
பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்
    பெண்மணவன், என்றுஏசினும்,
சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்
    சிறுபறை முழக்கி அருளே!
செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,
    சிறுபறை முழக்கி அருளே!     ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்

பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,
     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,
     பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே. --- (மலரணி) திருப்புகழ்.

     இறைவனுக்கு மலர்மாலை சாத்தியபின் பன்னீர் தெளிப்பார்கள். அதனால் பரிமளம் மிகுதிப்படும்.

     கடப்ப மலர்கள் முருகனுக்குச் சாத்தியபின் திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீர் தெளிக்கவேண்டும்.

     அதனால் ஞான வாசனை மிகுதிப்படும். இதனால் திருப்புகழின் பெருமையை நன்கு உணர்தல் வேண்டும்.

பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.
பாமாலை சூட்டுதல் ஞானநெறி.

     பலப்பல சங்கப் புலவர்களால் ஆய்ந்து ஆய்ந்து ஒழுங்கு செய்து, செப்பம் செய்யப்பட்ட மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி ஒன்றே திருக்கயிலாயம் சென்று அரங்கேறியது. சேரமான் பெருமாள் நாயனார் பாடி அருளிய "திருக்கயிலாய ஞானஉலா" திருக்கயிலையில் அரங்கேறியது. மொழிகளுக்குள் முதன்மை பெற்றது தமிழ்.

"முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான்.

     நம்பியாரூரைத் தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார், பனிமதிச்சடை அண்ணல் என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியலாம்.

"மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.

தேடிய அயனும் மாலும் தெளிவு உறா ஐந்து எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன
நாடிய மனத்தர் ஆகி நம்பி ஆரூரர். மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று.

"வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட
கோதுஇலா அமுதே! இன்றுஉன் குணப் பெருங் கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்?’" என மொழிந்தார்.

அன்பனை அருளின் நோக்கி அங் கணர் அருளிச் செய்வார்
"முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார்; நின்ற
வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.

கொத்து ஆர் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான்
"பித்தா பிறைசூடி"  எனப் பெரிதாம் திருப்பதிகம்
இத் தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.

"முறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தளம் முதலில்
குறையா நிலை மும்மைப்படிக் கூடும் கிழமையினால்
நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.

சொல்ஆர் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.      --- பெரியபுராணம்.

     உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்கு அணிகின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.

விரைவிடை இவரும் நினை, பிறவாமை
      வேண்டுநர் வேண்டுக, மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்
      பிறவியே வேண்டுவன் தமியேன்;
இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த
     இடையுறல் மணிக்குடக் காவைத்
தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண
     சைலனே கைலைநா யகனே.

இதன் பொருள் ----         

     சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே!  விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும்.  இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

மருத்துவக் குடி வாழ்வே --- 

     மருத்துவக்குடி ஒரு தேவார வைப்புத் தலம் ஆகும். தேவார காலத்தில் இடைக்குளம் என்று வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறைக்குத் தெற்கில் 2 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன் --- ஐராவதேஸ்வரர்.
இறைவி --- அபிராமி.

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.

நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு
         நலந்திகழும் நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
         இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
         கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறும்
         குளம் களம் கா என அனைத்துங் கூறுவோமே.    --- அப்பர் திருத்தாண்டகம்.

கருத்துரை

முருகா! திருவடிப் பேற்றினை அருள்வாய்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...