027. தவம் - 09. கூற்றம் குதித்தலும்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 27 -- தவம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தவத்தினால் ஆற்றல் மிகுந்தவர்க்கு எதிர்நிற்க அஞ்சி எமன் ஓடுதலும் கைகூடும்" என்கின்றார் நாயனார்.

     எல்லா உயிரும் தொழும் சிறப்புப் பெற்று விளங்குவதாலேயே, எமனைக் கடத்தலும் கைகூடும் என்பதும் பெற்றப்படும்.

     ஆற்றல் என்பது சாப அனுக்கிரகத்தைக் குறிக்கும்.

     மார்க்கண்டேயர் வரலாறு அறியத் தக்கது.

திருக்குறளைக் காண்போம்...

கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்
ஆற்றல் தலைப் பட்டவர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கூற்றம் குதித்தலும் கைகூடும் --- கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்,

     நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு --- தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.

         ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

ஏவார் சிலை எயினன் உருஆகி எழில் விசயற்கு
ஓவாத இன்னருள் செய்தஎம் ஒருவற்கு இடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார்
மூவாதபன் முனிவர் தொழு முதுகுன்று அடைவோமே.    --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.

பொன்னார் திருவடிக்கு ஒன்றுஉண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்ஆவி காப்பதற்கு இச்சைஉண் டேல் இரும் கூற்றுஅகல
மின்ஆரும் மூஇலைச் சூலம்என் மேல்பொறி மேவுகொண்டல்
துன்ஆர் கடந்தையுள்  தூங்கானை மாடச்  சுடர்க்கொழுந்தே. ---  அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

அந்த ணாளன் உன் அடைக்கலம் புகுத
         அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்தன் ஆருயிர் அதனை
         வவ்வி னாய்க்கு உன்தன் வன்மைகண்டு அடியேன்
எந்தை நீயெனை நமன்தமர் நலியில்
         இவன்மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துஉன் திருவடி அடைந்தேன்
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.   ---  சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

     வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , முனிவன் ஒருவன் உன்னை அடைக் கலமாக அடைய , அவனைக் காத்தல் நிமித்தமாக , அவன் மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான் , உனது அவ்வாற்றலையறிந்து , என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின் , என்தந்தையாகிய நீ, ` இவன் என் அடியான் ; இவனைத் துன்புறுத்தாதீர்` என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


தேற்றத் தெளிமின், தெளிந்தீர் கலங்கன்மின்,
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தைக்
கூற்றன் வரும்கால் குதிக்கலும் ஆமே.  ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.


உலையா முயற்சி களைகணா ஊழின் 
வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகுஅறியப் 
பால்முளை தின்று மறலி உயிர்குடித்த 
கால்முளையே போலும் கரி.         ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

      உலையா முயற்சி --- இளைத்தலில்லாத முயற்சியையே, களைகண்ஆ --- பற்றுக்கோடாகக் கொண்டு, ஊழின்வலி --- போகு ஊழினது வலிமையை, சிந்தும் --- சிதைக்கின்ற, வன்மையும் உண்டே --- வலிமையும் உண்டு, உலகறிய --- உலகமறிய, பால்முளை தின்று --- ஊழ்வினையின் முளையைத் தின்று, மறலி உயிர் குடித்த --- கூற்றுவனது உயிரையும் குடித்த கால் முளையே --- மார்க்கண்டன் என்னும் சிறுவனே, கரி --- சான்றாவன்.

     இச்செய்யுட் பொருள் "ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர்" "கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின், ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" என்னும் திருக்குறள்களில் வந்திருத்தல் கண்டுகொள்க.



No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...