035. துறவு - 03. அடல் வேண்டும்




திருக்குறள்
அறத்துபால்

துறவற இயல்

அதிகாரம் 35 -- துறவு

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "முத்தியை அடைய விரும்புவோர், ஐந்து பொறிகளுக்கும் உள்ளதாகிய ஐந்து புலன்களையும் பற்றறுக்க வேண்டும். அதற்கு, தாம் படைத்த பொருள்கள் அத்தனையையும் ஒருசேர விட்டுவிடுதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

     எரிகின்றதைப் பிடுங்கினால், கொதிக்கின்றது அடங்கும் என்பது போல, ஒருவன் தமக்கு உள்ள பொருள்கள் அனைத்தின் மீதும் கொண்டுள்ள பற்றைத் துறந்தால், பாசஞானம் நீங்கும்.

திருக்குறளைக் காண்போம்...

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் --- வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்,

     வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் --- கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.

         (புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோக ஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகு பெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.)


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...


மெய்வாய் கண் மூக்குச் செவி எனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் --- கைவாய்
கலங்காமல் காத்து உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.            --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற --- உடம்பு, வாய், கண், மூக்கு, காது என்று சொல்லப்படுகின்ற, ஐ வாய வேட்கை அவாவினை --- ஐந்து வழிகளாகச் செல்லுதலை உடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காமல் காத்து --- தீயவழிகளில் நிலைமாறிச் செல்லாமல் பாதுகாத்து, கைவாய் உய்க்கும் ஆற்றல் உடையான் --- ஒழுக்கநெறியில் செலுத்தும் வல்லமை உடையவனே, விலங்காது வீடு பெறும் --- தவறாமல் வீடுபறு அடைவான்.

         ஐம்புல விருப்பங்களை ஒழுக்கநெறியில் செலுத்தி உய்தல் வேண்டும். விடுதலை, பற்றுக்களினின்றும் விடுதலை. புலனடக்கம் என்பது, அதனை நல்வழியிற் செலுத்தலே என்று இதன்கண் அறிவுறுக்கப்பட்டமை கருத்திருத்துதற்குரியது.


துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார், - இன்பம்
இடைதெரிந்து இன்னாமை நோக்கி, மனை ஆறு
அடைவு ஒழிந்தார் ஆன்று அமைந்தார். ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     ஏழையார் --- அறிவிலார், துன்பம் பல நாள் உழந்தும் --- பல நாட்கள் துன்பத்தால் வருந்தியும், ஒரு நாளை இன்பமே --- சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே, காமுறுவர் --- விரும்புவார் ; ஆன்று --- கல்வி கேள்விகளால் நிறைந்து, அமைந்தார் --- அதற்குத் தக்கபடி அடங்கி ஒழுகும் பெரியோர், இன்பம் இடை தெரிந்து -- இன்பம் அங்ஙனம் இடையே சிறிது உளதாதல் தெரிந்து, இன்னாமை நோக்கி --- துன்பத்தின் மிகுதியை அறிந்து மனை ஆறு --- இல் வாழ்க்கையின் வழியில், அடைவு --- சார்ந்து நிற்பதை, ஒழிந்தார் --- நீங்கினார்.

         உலகத்திற் பல துன்பங்களின் இடையில் சிறிது இன்பம் உண்டாதலின், அந் நிலை தெரிந்து தவம் முயலுதல் வேண்டும்.

         இங்கே ஏழையார் என்றது அறிவில் வறுமை உடையாரை.


கசட்டு உறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும், வேத்தவை பொலிய மேவினார்.
                                ---  கம்பராமாயணம், திருவவதாரப் படலம்.

இதன் பதவுரை ---

     கசட்டு உறு வினைத் தொழில் --- குற்றங்கள் விளைவிக்கும் செயல்களை உடைய;  கள்வராய் உழல் அசட்டர்கள் --- கள்வர்களாகத் திரிகின்ற அறிவிலிகள் போன்ற; ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டனும் --- ஐம்புலன்களையும் அற்றுப் போவாராகச் செய்த வசிட்டனும்; அருமறை வடிவு போன்று ஒளிர் விசிட்டனும் --- அரிய வேதங்களின் வடிவைப் போல விளங்கும் சிறந்த முனிவனான கலைக்கோட்டு முனிவனும்; வேத்தவை பொலிய மேவினார் --- அந்த அரசவை பொலிவு எய்துமாறு அடைந்தனர்.

     வசிட்டன் என்பதற்கு அண்மையில் இருப்பவன் என்பது பொருளாம். விசிட்டன் - சிறந்தவன். அரிய மறைகளெல்லாம் திரண்டு ஒரு வடிவம் கொண்டதெனத் திகழ்பவன் என்றது கலைக்கோட்டு முனிவனை.


மைந்த ! நம் குல மரபினில் மணி முடி வேந்தர்,
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க,
ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி,
உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார்.
                                            ---  கம்பராமாயணம், மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

     மைந்த --- மகனே ! நம்குல மரபினில் மணிமுடி வேந்தர் --- நமது சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய முடிசூடி ஆண்ட வேந்தர்கள்; தம் தம்மக்களே --- தம் தம் பிள்ளைகளே;  கடன்முறை நெடு நிலம் தாங்க --- முறைப்படி நெடிய உலகை அரசர்களாகிக் காப்பாற்ற; ஐந்தொடு ஆகிய முப்பகை --- ஐந்துபொறிகளால் உண்டாகிய மூன்று பகைகளையும்; மருங்கு அற அகற்றி --- வேரோடு நீக்கி;  உய்ந்து போயினர் --- பிழைத்துப் போனார்கள்;  ஊழி நின்று எண்ணினும் --- அவ்வாறு
உய்ந்தவர்களை ஊழிக்காலம் இருந்து எண்ணினாலும்;  உலவார் --- குறையார் (எண்ணற்றவர் என்றவாறு)

     ஐந்தொடு ஆகிய முப்பகை - ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் பகைகள்.
    

'கடல்உறு மத்து இது' என்னக்
     கருவரை திரியும் காலை,
மிடல்உறுபுலன்கள் வென்ற
    மெய்த்தவர் விசும்பின் உற்றார்;
திடல்உறுகிரியில் தம்தம்
     செய்வினைமுற்றி, முற்றா
உடல்உறு பாசம்வீசாது,
     உம்பர்செல்வாரை ஒத்தார்.    --- கம்பராமாயணம், கடல்தாவு படலம்.

இதன் பதவுரை ---

     கருவரை --- கரிய மகேந்திரமலை; கடல் உறு --- பாற்கடலைச் சார்ந்த; மத்து இது என்ன --- மத்து என்று கூறும்படி; திரியும் காலை --- சுழல்கின்ற சமயத்தில்; மிடல் உறு
 --- வன்மை மிக்க; புலன்கள் வென்ற மெய்த்தவர் --- ஐம்புலன்களும் பொறிவழியே போகாமல் அடக்கிய முனிவர்கள்; விசும்பின் உற்றார் --- ஆகாயத்தை அடைந்தார்கள் (அவர்கள்); திடல் உறு கிரியில் --- மேட்டுப் பாங்கான மலையில்; தம்தம் செய்வினை முற்றி முற்றா --- தாம் தாம் செய்யவேண்டிய கடமைகளைத் தொடங்கி நிறைவு செய்யாமல்; உடல்உறு பாசம் வீசாது --- உடலின்கண் கொண்ட பற்றை விடாமல்; உம்பர் செல்வாரை, ஒத்தார் --- விண்ணுலகத்திற்குச் செல்பவரை ஒத்தார்.


தடக்கை நால் ஐந்து, பத்துத்
     தலைகளும் உடையான், தானே
அடக்கி ஐம்புலன்கள் வென்ற
     தவப்பயன் அறுதலோடும்,
கெடக் குறி ஆக,மாகம்
     கிழக்கு எழு வழக்கு நீங்கி,
வடக்கு எழுந்து இலங்கை செல்லும்
     பிரிதி வானவனும் ஒத்தான்.   --- கம்பராமாயணம், கடல்தாவு படலம்.

இதன் பதவுரை ---
    
     நால் ஐந்து தடக்கை --- இருபது பெரிய கரங்களையும்; பத்துத் தலைகளும் --- பத்துத் தலைகளையும்; உடையான் --- உடைய இராவணன்; ஐம்புலன்கள் --- ஐந்து  புலன்களையும்; தானே அடக்கி --- பிறர் உதவியின்றி ஒன்றியாக இருந்து ஒடுக்கி; வென்ற தவப்பயன் --- வெற்றி கொண்ட தவத்தின் பயனான புண்ணியம்; அறுதலோடும் --- அற்றுத் தீர்ந்தவுடன்; கெடக்குறி ஆக --- உற்பாதமாக; மாகம் --- வானத்தில்; கிழக்கு எழு வழக்கு நீ்ங்கி --- கீ்ழ்த்திசையில் உதித்தலாகிய இயல்பிலிருந்து விலகி; வடக்கு எழுந்து --- வடக்குத் திசையில் உதித்து; இலங்கை செல்லும் --- இலங்கை நோக்கிப் போகும்; பிரிதி வானவனும் ஒத்தான் --- சூரிய பகவானை ஒத்திருந்தான்.;

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...