036. மெய் உணர்தல் - 05. எப்பொருள் எத்தன்மைத்து





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 36 -- மெய் உணர்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "எந்தப் பொருள், எந்த இயல்பினை உடையதாய் இருந்தாலும், அப் பொருளில் பொதிந்து உள்ள உண்மைப் பொருளாகிய கடவுள் தன்மையை அறிந்து கொள்வதே உண்மை அறிவு ஆகும்" என்கின்றார் நாயனார்.

     மெய்யணர்வு என்பது, ஒவ்வொரு பொருளிலும் உலகத்தார் கற்பித்து வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, கழியாமல் நின்ற உண்மையைக் காணுதல் ஆகும்.

     நிர்விகற்ப ஞானம் என்று வடமொழியில் சொல்லப்படும்.

     கற்பனை --- ஏற்படுத்திக் கொண்டது. உண்மை ஆகாதது.

     கற்பனைகளைக் கழித்தலாவது, கோச்சேரமான் யானைக்கண் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை என்பவன் சேரகுலத்து அரசர்களில் ஒருவன். இவன் புறநானூற்றில் பாடப்பட்டுள்ள அரசர்களில் ஒருவன். இவனுடைய பெயருள், "கோ" என்பது அவனது அரச குலத்தையும், "சேரமான்" என்பது
அவனுடைய குலத்திற்கு வழங்கும் பெயரையும், "யானைக்கண்" என்பது அவனுக்கு இருந்த யானைக்கண் போன்ற கண்ணின் வடிவத்தையும், "சேய்" என்பது அவனது தாய் தந்தையரால் இடப்பட்ட இயற்பெயரையும், "மாந்தரஞ்சேறல் இரும்பொறை" என்பது அவனுக்கு உள்ள சிறப்புப் பெயரையும் உணர்த்தியது.
ஆக, ஒரு மனிதனுக்கு அமைந்தவை இவை என்றாலும், மன்னனாக அவன் எப்படி அரசாண்டான் என்பதையே அறிதல் வேண்டும்.

     "இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்
அம் என்றால் ஆயிரம் பாட்டு" என்றால், மிக விரைந்து பாடமுடியும் என்று உணர்தல் வேண்டும்.

     சிவன் கொக்கிறகை அணிந்தான் என்றால், சிவ வழிபாடு செய்கின்ற ஒருவன் கொக்கிறகுபோல் பூக்கும் பூவைச் சிவன் திருவுருவின் தலையில் செருகினான் என்று கொள்ளவேண்டும்.

     தேங்காய் உடைத்துத் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பது, தேங்காய் உடைந்து, நீர் சிந்தி, வெண்மையாய்த் தோன்றுவது போல், வழிபடுபவன் தான் செய்த தீவினையை நினைந்து, உள்ளம் உடைந்து, கண்ணீர் சிந்தி வழிபட்டு, தூய்மையாக வேண்டும் என்னும் கருத்தை உடையது என்று தெளிதல் வேண்டும்.

"இருட்டறை மூலையில் இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி அவனை மணம்புரிந் தாளே."  --- (திருமந்திரம்.

என்பதும் மெய்ப்பொருளைத் தெளிவித்தலே ஆகும்.

இதன் பொருள் ---

     அறியாமையாகிய இருள் சூழ்ந்த இவ் வுடலகத்து அறியாமையை நீக்கி அறிவை விளக்கும் திருவருட்குமரி மூலையில் இருப்பார் போன்று மறைந்து உறைந்தனள். அறிவுக்கண் விளங்காது குருடாக இருந்த ஆருயிர்க் கிழவனைக் கூடுதல் கருதி, அவனுக்கு ஏற்பட்ட குருடாகிய அறியாமையை அகற்றி, சிவபெருமானின் எண்குணங்களையும் வண்ணமுறக் காட்டித் தன்மாட்டே பேரன்பு கொள்ளுமாறு மயக்கி அவன்பால் சிவமணம் கமழும்படி தான் கூடியிருந்தனள்.

இப் பாடலில்,

"இருட்டறை" என்பது ஆணவமலத்தால் ஆன்மா, அறிவு விளங்காது பந்திக்கப்பட்டு இருந்ததைக் குறிக்கும்

"மூலையிருந்த" என்றது, ஆன்மா அதன் இயல்பு தோன்றாது மறைந்து இருந்ததைக் குறிக்கும்.

"கிழவி"  என்றது அநாதியாய் உள்ள அருட்சத்தியைக் குறிக்கும்.

 "குருடு"  என்றது  அறிவுக்கண் இல்லாது அஞ்ஞானத்தில் அழுந்தி இருந்ததைக் குறிக்கும்.

"கிழவன்"  என்பது ஆன்மாவைக் குறிக்கும்.

"குணம் பல" என்றது நிலையாமை உணர்வு, துறவுள்ளம் முதலியவற்றைக் குறிக்கும்.

"மருட்டுதல்" என்பது உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சியை உண்டாக்குதலைக் குறிக்கும்.

 "மணம் புணர்தல்"  என்பது ஆன்ம அறிவில் திருவருள் பதிதலைக் குறிக்கும்.

     இவ்வாறு உண்மைப் பொருளை உணர்ந்து தெளிதல் வேண்டும் என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் --- யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்,

     அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு --- அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.

         (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றால், காரண காரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய் நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான், இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய பொருள்கள் எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான் மெய் உணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பெரியபுராணத்தில் வரும் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி உள்ள ஒரு பாடல்...

பொய்ப்பொருள்மாற் றான்புரிந்த பொய்த் தவ வேடம் பொருளாய்
மெய்ப்பொருளார் கண்ட விதம்தானே --- மெய்ப்பொருள்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

         பொய்ம்மையாகிய உலக வாழ்க்கையை மெய் எனக்கொண்டு அதனை விரும்பிய சத்துருவாகிய முத்தநாதன் என்பவன் சிவனடியார்போல வேடம் பூண்டு வந்து, தன்னை வணங்கிய மெய்ப்பொருள் நாயனாரை, தன் கையிலே புத்தகக் கவளிகையில் மறைத்து வைத்திருந்த வாளினால் குத்திய காலத்தும், சிவவேடமே மெய்ப்பொருள் என்னும் உறுதியுடன் வணங்கி, அவனுக்கு ஓர் இடையூறும் நேரிடாமல் புறம்போக விடுத்த செய்தி தெரிந்து சிவபதம் அடைந்த சேதிநாட்டு அரசராகிய மெய்ப்பொருள் நாயனார் செய்த அருஞ்செயலே மெய்ம்மையாம். 

         யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும் அத் தோன்றியவற்றைக் கொண்டு ஒழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யமையாகிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வு என்பதாம்.

         பொருளாய் --- மெய்த்தவ வேடமாய், மாற்றான் --- பகைவன், என்றது முத்தநாதனை.

     பின் வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியின் தயாபரன் எம்மிறை
முன்னை அறிவு முடிகின்ற ஞானமும்
என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.   ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     சிறு தவங்களையெல்லாம் செய்து அலுத்துவிட்ட பின்பு நல்லறிவு பிறந்து செய்கின்ற பெருந்தவந்தின் வழியாக உயிர்களைப் பராவத்தையில் சேர்க்கின்ற தனது இயல்பை ஒருவன் அறிந்து தன்னை அடைய விரும்பினால் எங்கள் இறைவனாகிய சிவன் உடனே அவன் முன் தோன்றுவான். ஏனெனில் அவன் பெருங் கருணையாளன். அம்முறையில் யான் எனது பழைய சிற்றறிவு முடியும் காலத்தையும் அறிந்தேன் அதனால், சிவனது பேரறிவாலே என்னையும் அறிந்தேன். யான் இது பொழுது இன்புற்றிருக்குமாறு இவ்வாறாம்.

         குறிப்புரை : பெருந்தவம், சரியை கிரியா யோகங்கள், இவற்றை பின்னையறிவனவாகக் கூறினமையால், முன்பு சிறு தவங்களைச் செய்தமை விளங்கிற்று. அவை உலகப் பயன்களை விரும்பிச் செய்தனவாகும். அப்பயன்கள் யாவும் சில காலமே இருந்து அழிந்தொழிதலை உணர்ந்தமையால், அவற்றைத் தரும் தவங்களைச் செய்வதில் அலுப்பு உண்டாயிற்று. முன்மந்திரத்தில் சொல்லியபடி இப்பெருந்தவத்தால் சிவன் உயிர்களைப் பராவத்தையில் சேர்த்தல் பெறப்பட்டது.


பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன் அணி பூடணம்
தன்னை மறைத்தன தன் கரணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன் கரணங்களே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணி கலன்கள் தம்மிடத்துப் பொன் உள்ளதாயினும் அதனை உணரச் செய்யாது மறைத்துத் தமது அழகினையே உணரப் பண்ணி மக்களை மயக்குகின்றது. ஆயினும் அந்த அணிகலன்களின் செயற்கை நலன்களை அழித்து விட்டால், அணிகலனாய் இருந்த பொருள்கள் அழியாதிருப்பினும் அவை பொன்னாகி விட்ட அதனுள்ளே மறைந்து விடும். அவைபோல, சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற ஆன்மாவைப் பெத்தகாலத்தில் அதனுடைய தனு கரணங்கள் தம் வயப்படுத்தித் தம் மயம் ஆகச் செய்து, ஆன்மாத் தன்னைத் தான் அறியாதபடி மறைத்து அதனைத் தாமென்றே மயங்கிச் செய்து விடுகின்றன. ஆயினும், ஆன்மாக் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்து விடுதலால், ஆன்மாவில் வியாப்பியமாய்த் தமக்கெனச் சுதந்திரமின்றி ஆன்மாவின் வழியே செயற்படுகின்ற தனு கரணங்கள் தாம் அழிந்தொழியாது ஆவ்வான்மாவின் வயப்பட்டு முன்போல மருள் வழியில் இயங்காமல், ஆன்மாவைப் போலவே அருள் வழியில் இயங்கும்.


மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மாவின் பெத்த காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுவதால், உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும் பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...