031. வெகுளாமை - 02. செல்லா இடத்து






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 31 --- வெகுளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "கோபமானது தன்னின் வலியவர் மேல் உண்டானால் தனக்கே தீது ஆக முடியும். தன்னின் மெலியவர் மேல் உண்டானாலும், அதனை விடத் தீமையைத் தருவது வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

      வலியவர் மேல் செய்யும் கோபத்தால் உண்டாவது, இம்மையில் அவரால் வரும் துன்பமே. எளியவர் மேல் செய்யும் கோபமானது, இம்மையில் பழியையும், மறுமையில் பாவத்தையும் தருவதால், அதனினும் தீமையைத் தருவது இல்லை என்கின்றார்.

திருக்குறளைக் காண்போம்...

செல்லா இடத்தும் சினம் தீது, செல் இடத்தும்
இல் அதனின் தீய பிற.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     சினம் செல்லா இடத்துத் தீது --- ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்';

     செல் இடத்தும் அதனின் தீய பிற இல் --- மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை

         (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தாக்கி நிமிவதிட்டர் சாபத்தால் தம் உடல்விட்டு
ஏக்கமுற்றார் அன்றோ? இரங்கேசா! --- நோக்கினால்
செல்லா இடத்துச் சினம் தீது செல்இடத்தும்
இல்அதனில் தீய பிற.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!  நிமி வதிட்டர் --- நிமிச்சக்கரவர்த்தியும் வசிட்டமுனிவரும், தாக்கி --- (ஒருவர்மேல் ஒருவர்) கோபித்து எதிர்த்து, சாபத்தால் --- (ஒருவரை ஒருவர்) சபித்துக் கொண்டதனால், தம் உடல் விட்டு --- தமது சரீரங்களை நீக்கி, ஏக்கம் உற்றார் அன்றோ --- வருந்தினார்கள் அல்லவா,  (ஆகையால், இது) நோக்கினால் --- ஆலோசித்துப் பார்த்தால், செல்லா இடத்து --- செல்லத் தகாத மேலான இடத்தில், சினம் தீது --- கோபத்தைச் செலுத்தினால் கெடுதி வரும், செல் இடத்தும் --- செல்லத் தகுந்த தாழ்வான இடத்திலும்,  அதனின் --- அந்தக் கோபத்தைக் காட்டிலும், தீய பிற இல் --- கெடுதி செய்யத் தக்கவை வேறு இல்லையாம் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- தீராக் கோபம் போராய் முடியும்.

         விளக்கவுரை --- நிமிச் சக்கரவர்த்தி சரீர சுவர்க்க யாகம் செய்ய வசிட்டரிடத்தில் உத்தரவு பெற்றுத் தொடங்கினார்.  அப்போது வசிட்டர் யாதோ ஒரு காரணத்தால் சிவலோகம் போய்த் தங்கியிருந்தார். இங்கு யாகம் நடந்து வந்தது. பிறகு வசிட்டர் திரும்பி வந்து யாகம் நடந்தேறுவதைக் கண்டு, தாம் தந்த உத்தரவை மறந்து, நிமியை நோக்கி, ", நிமி! நீ என் உத்தரவின்றி யாகம் நடத்துவதால், உண் சரீரத்தை விட்டு நீங்கக் கடவை" என்று சபித்தார். அதற்கு நிமியும் கோபித்து, "நீர் கொடுத்த உத்தரவை மறந்து சபித்ததால் நீரும் என்னைப் போலவே சரீரத்தை விடக்கடவீர்" என்று சபித்தான். இருவரும் சரீரம் இன்றி அந்தரத்தில் திரிந்தார்கள். நாளாகவே இருவர் பொந்திகளும் அழிந்து போயின. நிமியின் மகன் மிதி என்பவன் அந்த யாகத்தை முடித்தான். பிறகு பிரமதேவர் வந்து வசிட்டரை நோக்கி, "நீ காரணமின்றிக் கோபித்ததனால் ஊர்வசி வயிற்றில் பிள்ளையாய்ப் பிறக்கக் கடவை" என்றும், நிமியை நோக்கி, "நீ பிராணிகளுடைய நிமையிலே பிறக்கக் கடவை, உன் குலம் சந்திர குலம் ஆகக் கடவது" என்றும் கோப சாப நீக்கம் கூறினார். வசிட்டர் கோபம் செல்லிடத்துக் கெடுதி விளைத்தது.  நிமி கோபம் செல்லா இடத்துக் கெடுதி விளைத்தது.  ஆகையால், ஈரிடத்தும் கோபம் சண்டாளம் என்று ஒதுக்குக.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

வலியரைச் சினப்போர், வரையினின் மோது
           மட்கலம் என உடைந்து அழிவார்;
பொலிவுறத் தமை ஒப்பவர்களைச் சினப்போர்,
           புலி இரண்டு ஒன்றை ஒன்று அடித்து
மெலிவொடு இரண்டும் கெடுவபோல் கெடுவார்;
           மெலியரை வெகுளுவோர் வேங்கை
எலியினை எதிர்த்த தன்மைபோல் இழிவுற்று,
           எரி நரகு இடை அமிழ்ந்துவரே.    ---  நீதிநூல்

 இதன் பொருள் ---

     ஆறவேண்டிய சினம் மீறி மிக்கோரைச் சினந்தால் மலையில் மோதும் மட்கலம் போன்று சினந்தவர் அழிவர். ஒத்தவரைச் சினந்தால் இரண்டு புலி ஒன்றோடொன்று சண்டையிட்டு இரண்டும் கெடுவபோல் கெடுவர். தாழ்ந்தாரைச் சினந்தால் வேங்கைப் புலி, எலியை எதிர்த்துப் பழி பெறுவதுபோல் இகழ்வெய்தித் தீவாய் நரகில் அழுந்துவர்.

எம்மையும் தெரியாமல் இச் சினம் வந்தது என்பீர்,
உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடாது ஒளிப்பீர்,
இம்மை வாழ்விலா எளியர்பால் தினம் உமக்கு எய்தும்
வெம்மை நீர் அறிந்தோ அறியாமலோ விளம்பீர். ---  நீதிநூல்.

 இதன் பொருள் ---

     உமக்குத் துன்பஞ் செய்யும் வலியவர்மேற் சினம் வந்தால் அச்சினத்தை அடக்கி மறைக்கும் நீர், வலிமையில்லாத எளியவர் பால் சினங் கொள்வது உமக்குத் தெரிந்தா? தெரியாமலா? தெரியாமல் வந்ததென்று நீர் சொல்லுவது பொருந்துமா?


பெருக்குக நாட்டாரை நன்றின்பால் உய்த்து,
தருக்குக ஒட்டாரைக் காலம் அறிந்தாங்கு,
அருக்குக யார்மாட்டும் உண்டி, சுருக்குக
செல்லா இடத்துச் சினம்.        --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     நட்டாரை நன்றின்பால் உய்த்துப் பெருக்குக --- ஒருவன் தனக்கு நண்பரானாரை நன்மையிற் செலுத்தி, நல் வாழ்வில் உயர்த்துக; ஒட்டாரைக் காலம் அறிந்து தருக்குக --- பகைவர்களை  உரிய காலந் தெரிந்து, மறங்கொண்டு வெல்க; யார் மாட்டும் உண்டி அருக்குக --- யாவரகத்தும் அடுத்து உண்ணுதலைச் சுருக்கிக் கொள்க; செல்லா இடத்து சினம் சுருக்குக --- செல்லும் தகுதியில்லா இடத்து, சினத்தைத் தணித்துக் கொள்க.


கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம், காதலித்து ஒன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல், - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா, எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்.--- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     கழிவு இரக்கம் கற்றார்முன் தோன்றா --- இழந்த பொருள்களுக்கு இரங்குதல், கற்று உணர்ந்த பெரியோர்பால் தோன்றாது; காதலித்து ஒன்று உற்றார்முன் உறா முதல் தோன்றா --- ஊக்கம் கொண்டு, ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவர் இடத்தில், விரைவில் கிட்டாமையால் ஆகிய முயற்சித் துன்பம் தோன்றாது; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா --- தெளிவாய் தீயவை செய்தார்க்கு நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும் --- எல்லா நன்மைகளும், சினந்து கொள்வாரிடத்தில் தோன்றாவாய்க் கெட்டு ஓழியும்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...