033. கொல்லாமை - 06. கொல்லாமை மேற்கொண்டு






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 33 -- கொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "உடம்பினின்று உயிரைக் கூறு கொண்டு செல்லும் இயமன், கொல்லாமையை விரதமாகக் கொண்டு நடப்பவன் மேல் செல்லமாட்டான்" என்கின்றார் நாயனார்.

     மிகப்பெரிய அறம் செய்தவரும், மிகப்பெரிய பாவம் செய்தவரும், மறுமையில் முறையே இன்பதுன்பங்களை அனுபவிப்பர். மிகப் பெரிய அறம் செய்தவனுடைய வாழ்நாள் மேல் கூற்றுவன் செல்லமாட்டான். எனவே, அவன் நெடுங்காலம் இன்புற்றிருந்து வாழ்ந்து, தத்துவஞானம் உண்டாகி, வீடுபேற்றை அடைவான் என்பது பெறப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்,
செல்லாது உயிர் உண்ணும் கூற்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் --- கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல்,

     உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது --- உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.

         (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்....

கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித் தகவு இல்லையே.   --- கம்பராமாயணம், நாட்டுப் படலம்.

இதன் பதவுரை ---

     ஓர் குற்றம் இல்லாமையால் --- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால்;  கூற்றம் இல்லை --- கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை; தம் சிந்தையின்  செம்மையால் --- அந்நாட்டு மக்களின் மனச் செம்மையால்; சீற்றம் இல்லை --- சினம் அந்நாட்டில் இல்லை; நல் அறம் அல்லது ஆற்றல் இல்லாமையால் --- நல்ல அறச் செயல் செய்வதைத் தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம் அல்லது இழிதகவு இல்லை --- மேன்மையைத்  தவிர  எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

     கூற்றம் இல்லை யென்பதால் கோசல நாட்டில் சாவே இல்லை என்பது பொருளாகாது. இயற்கை மரணமின்றி  இடையறவு படுகின்ற அற்ப ஆயுள் சாவு இல்லை என்பதே கருத்து.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...