031. வெகுளாமை - 08. இணர்எரி தோய்வுஅன்ன





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 31 --- வெகுளாமை

          இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "பல சுடர்களை உடைய பெரிய நெருப்பானது தன்மீது படிந்தது போன்ற துன்பம் தரும் செயலைத் தனக்கு ஒருவன் செய்தானாயினும், அவன் மீது சினம் கொள்ளாமல் இருத்தல் கூடுமாயின், அது நல்லது" என்கின்றார் நாயனார்.

     பொறுத்தற்கு அரிய துன்பம் செய்தவனையும் கோபியாது இருத்தல் சிறந்தது.

திருக்குறளைக் காண்போம்...


இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்,
புணரின் வெகுளாமை நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் --- பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்;

     வெகுளாமை புணரின் நன்று --- அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.

         (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்
தொல்லைநெறி வாகீசர், சோமேசா! --- கொல்ல
இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

         வெகுளாமையாவது, சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன் மாட்டு உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை.

இதன்பொருள்---

         சோமேசா! கொல்ல --- கொல்லக் கருதி, இணர் எரி தோய்வு அன்ன --- பல சுடர்களைப் பொருந்தும் மிக்க எரி வந்து தோய்ந்தாற் போன்ற,  இன்னை செயினும் --- துன்பங்களை ஒருவன் செய்தானாயினும், அவனை வெகுளாமை புணரில் --- ஒருவனுக்கு வெகுளாமை கூடுமாயின், நன்று --- அது நன்று...... 

         தொல்லை நெறி வாகீசர் --- பழமையான சைவசமய வழியில் சென்ற திருநாவுக்கரசு நாயனார்,  பல்லவர் கோன் வந்து பணிய --- குணபரன் என்னும் பல்லவ மன்னன் வந்து வணங்க, கருணை செய்தார் --- திருவருள் பாலித்தார் ஆகலான் என்றவாறு.

         புணரின் --- தீமை செய்த அவர் தம்மிடத்திலே வந்து சேர்ந்தால். வெகுளாமை --- அவர்மீது கோபம் கொள்ளாதிருத்தல். நன்று --- நல்லது எனவும் உரையில் கொள்க.

         இன்னாமையின் மிகுதி தோன்ற "இணர் எரி" என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற "இன்னா" என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் "புணரின்" என்றும் கூறினார்.

         "இனி, இணர்எரி தோய்வு அன்ன இன்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று என்புழிப் பிற உயிர்க்கு இன்னா செயின் அவை பிழையாது தமக்கு வருதல் கருதித் தம் மாட்டு அன்பும், பிற உயிர்கள் மாட்டு அருளும்;  இன்னா செய்தலான் மேன்மேல் வளரும் பிறப்பு இறப்பின் அச்சமும், நம்மால் இன்னா செய்யப்பட்டாரை நாம் அடைந்து இரத்தல் கூடினும் கூடும்.  அதனால், யார் மாட்டும் இன்னை செய்யக்கடவோம் அல்லம் என்னும் வருங்கால உணர்ச்சியும் இலராய், ஒருவர் தன்னால் ஆற்றல் கூடாத இன்னாதனவற்றைத் தன்கண் செய்தாராயினும், அவர் தமக்கு வேண்டுவதொரு குறை முடித்தல் கருதி நாணாது தன்னை அடைந்தாராயின், அவர் செய்த இன்னமை கருதி அவரை வெகுளாது, அவற்றை மறந்து, அவர் வேண்டும் குறை முடித்து முன்செய்த இன்னாமையால் அவர் கூசி ஒழுகுதல் தவிர்த்தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலியன தன்கண் குறிப்பின்றி நிகழ அவர்க்கு இனியனாய் இருத்தல் தன் சால்புக்கு நன்று என நால்வகைத் சொற்களுள் வேண்டுவன எல்லாம் தந்து அகலங் கூறி வேண்டி நிற்பன இசையெச்சமாம் என்க"  என்பது ஸ்ரீஈசானதேசிகர் மாணவராகிய ஸ்ரீசங்கரநமச்சிவாயர் உரை (நன்னூல் - 360).

         பல்லவர்கோன் வந்து பணியக் கருணை செய்தமை,

"புல்லறிவில் சமணர்க்காப்
     பொல்லாங்கு புரிந்தொழுகும்
பல்லவனும் தன்னுடைய
     பழவினைப் பாசம்பரிய
அல்லல்ஒழிந்து அங்கெய்தி
     ஆண்டஅர சினைப் பணிந்து
வல்அமணர் தமைநீத்து
     மழவிடையோன் தாள்அடைந்தான்" --- பெரிய.புராணம் - திருநாவுக்கரசு.

         திருமுனைப்பாடி நாட்டில், திருவாமூரில் வேளாள மரபில், குறுக்கையர் குடியில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் திருமகனாய் அவதரித்த திருநாவுக்கரசு நாயனார். சகல கலைகளிலும் வல்லாராய்ப் பாடலிபுத்திரம் என்னும் பதி புகுந்து, சமணரொடு கூடி, தருமசேனர் என்னும் பெயரோடு சமண குருவாய் விளங்குவதைக் கேட்ட திவகவதியார் என்னும் அவர் தமக்கையார் தம் தம்பியைச் சமணப் படுகுழியினின்றும் எடுத்தருளல் வேண்டும் என்று சிவபெருமானை நாள்தோறும் பிரார்த்தித்தார். அவ்வாறு இருக்கையில் தருமசேனருக்குச் சூலை நோய் கண்டு சமணர் செய்த முயற்சி ஒன்றானும் நீங்காதாக, தம் தமக்கையார் தொண்டு செய்திருந்த திருவதிகை வீரட்டானம் அடைந்து, அவரைக் கண்டு திருநீறு பெற்று, வீரட்டானேசுவரர் சந்நிதி அடைந்து,

கூற்றாயின வாறு விலக்ககிலீர்
         கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்
         பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே
         குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில
         வீரட்டா னத்துஉறை அம்மானே.

என்று தொடங்கும் பாடலைக் கொண்ட திருப்பதிகத்தைப் பாட, அப்போதே சூலைநோய் விட்டொழிந்தது. அஃது அறிந்த சமணர்கள், தம் அரசனாகிய பல்லவனுக்கு இல்லாததும் பொல்லாததும் சொல்லி, நாயனாரை வருவித்து நீற்றறை வைத்தல், நஞ்சூட்டல், யானைக் காலில் இடறுதல், கல்லோடு கடலில் இடுதல் முதலிய பல கொடுமைகள் செய்தும் நாயனார் திருப்பதிகங்கள் ஓதிச் சிவாநுக்கிரகத்தால் ஒரு தீங்கும் இன்றி இருந்தார். இதைக் கண்ட பல்லவன் நாயனாரை வணங்கிச் சைவனாகிப் பாடலிபுத்திரத்து இருந்த சமண் பள்ளிகளையும் பாழிகளையும் அழித்து அங்குக் குணபரவீச்சரம் என்னும் திருக்கோயிலைக் கட்டினான்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


வேண்டின வேண்டினர்க்கு
     அளிக்கும் மெய்த்தவம்
பூண்டுளர் ஆயினும்,
     பொறையின் ஆற்றலால்,
மூண்டு எழு வெகுளியை
     முதலின் நீக்கினார்;
ஆண்டு உறை அரக்கரால்
     அலைப்புண்டார் அரோ.        ---  கம்பராமாயணம், அகத்தியப் படலம்.

   இதன் பதவுரை ---

     வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த் தவம் பூண்டுளர் ஆயினும் --- விரும்பிச் செய்தவர்க்கு அவர்கள் விரும்பியவற்றை விரும்பிய வண்ணமே தரும் நற்றவம் மேற்கொண்டுள்ளவர் ஆனாலும்; பொறையின் ஆற்றலால் --- பொறுமை என்னும் வலிமையால்; மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் --- மேன்மேல்மிக்கு வரும் சினத்தை வேரொடு களைந்தார்கள். (ஆதலால்); ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார் --- அக்காட்டில் தங்கியிருந்து இராக்கதர்களால் வருத்தமுற்றார்.

     இதனால் நிறை மொழி மாந்தராம் அம்முனிவர்கள் தம் தவ வலிமையால் அவ்வரக்கரைச் சினந்து சபித்து அழிக்காது இருத்தற்குக் காரணம் கூறப் பெற்றது. கூடா ஒழுக்கமாகிய பொய்த் தவத்திலிருந்து நீக்குதற்கு 'மெய்த்தவம்' என்றார். தவத்தின் பயன் எய்த முதலில் சினத்தை நீக்கிப் பின் பொறுமையைப் பெற வேண்டும் என்பதாம். பொறை - காரணம் பற்றியோ, மடமை பற்றியோ ஒருவன் தமக்கு மிகை செய்த போது தாம் அதனை அவன் இடத்துச் செய்யாதுபொறுத்தல் ஆகும். தவத்தின் ஆற்றல் வேண்டிய வேண்டியாங்கு எய்தலாம்.


இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி
நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு.         ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     இறப்ப சிறியவர் --- குடிப்பிறப்பினால் மிகவும் இழிந்தவர்கள், இன்னா செயினும் --- துன்பந்தருஞ் செயல்களைச் செய்தாராயினும், பிறப்பினால் மாண்டார் வெகுளார் --- குடிப்பிறப்பினால் மாட்சிமைப் பட்டவர்கள் சினத்தலிலர், (அது) திறத்து உள்ளி நல்ல விறகின் அடினும் --- கூறுபாடாக ஆராய்ந்து நல்விறகினைக் கொண்டு காய்ச்சினும், நனி வெந்நீர் --- மிகவும் வெப்பமாகிய நீர்,  இல்லம் சுடுகலா வாறு --- வீட்டினை எரிக்க முடியாதவாறு போலும்.

         கீழ்மக்கள் செய்யும் துன்பத்தால் மேன்மக்கள் சினங் கொள்ளுதல் இல்லை.

         வெந்நீர் வீட்டை வேகச் செய்யாதவாறு போலப் பெரியோர்கள் கீழ்மக்களைக் கோபியார். 'பிறப்பினால் மாண்டார் வெகுளார்' எனவே. வெகுளாமை உயர் குடிப்பிறப்பின் இயல்பு என்பதாம். 'சிறியவர் இன்னா செயினும்' எனவே தீங்கு செய்தல் தாழ்ந்தகுடிப்பிறப்பின் இயல்பு என்பதும் பெறப்பட்டது.


உழந்து உழந்து கொண்ட உடம்பினைக் கூற்று உண்ண
இழந்திழந்து எங்கணுந் தோன்றச்-சுழன்று உழன்ற
சுற்றத்தார் அல்லாதார் இல்லையால், நன்னெஞ்சே!
செற்றத்தால் செய்வ துரை.           ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     நல் நெஞ்சே --- நல்ல மனமே!, உழந்து உழந்து --- முயன்று முயன்று, கொண்ட --- நாம் அடைந்த, உடம்பினை --- உடல்களை, கூற்று உண்ண --- எமன் உண்ண, இழந்து இழந்து --- பலகாலும் இழந்து, எங்கணும் --- எல்லாவிடத்தும், தோன்ற --- பிறத்தலால், சுழன்று உழன்ற --- உலக வாழ்க்கையில் நம்மொடு கூடிச் சுழன்று தடுமாறித் திரிந்த மக்களில், சுற்றத்தார் அல்லாதாரில்லை --- உறவினரல்லாதார் வேறொருவருமில்லை; (அங்ஙனமாயின்), செற்றத்தால் செய்வது உரை --- பிறர்பால் கொள்ளும் வெகுளியால் நீ செய்வது யாதோ? சொல்.

         “சுற்றிச் சுற்றிப் பார்ப்போமாயின், தோட்டியும் நமக்கு உதவுவான்” என்ற பழமொழிப் பொருளை ஈண்டுக்கொண்டு நோக்குக.


ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? - தீந்தேன்
முசுக்குத்தி நக்கும் மலைநாட! தம்மைப்
பசுக்குத்தின் குத்துவார் இல்.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தீம் தேன் முசு குத்தி நக்கும் மலைநாட! --- இனிய தேன் கூட்டை ஆண்குரங்கு கிழித்து (ஒழுகும் தேனை) நக்குகின்ற மலைநாடனே!, பசு குத்தின் குத்துவார் இல் --- பசு தம்மை முட்டினால் (சினந்து தாமும்) முட்டுவார் இல்லை, (ஆதலால்) ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்கு --- ஆராய்ந்த அறிவினை உடையரல்லாதவர்கள் சொல்லும் பொருளற்ற சொற்களுக்கு, கற்றறிந்தார் காய்ந்து எதிர் சொல்லுபவோ --- நூல்களைக் கற்று ஆராய்ந்து அறிந்தவர்கள் சினந்து எதிராகப் பொருளற்ற சொற்களைக் கூறுவரோ? கூறார்.

         ஆராய்ச்சி இல்லாதவர்கள் கூறும் அற்பச் சொற்களைப் பொருளாகக் கொண்டு கற்றறிந்தார் சினவார்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...