திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
36 -- மெய் உணர்தல்
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "மக்கள் பிறப்பினை
எடுத்து வந்தபின், கற்க வேண்டிய நூல்களைக் கற்றதோடு, அவற்றின் பொருளை அனுபவம்
உடைய ஞானாசிரியரிடத்தல் கேட்டுத் தெளிந்து, அதனால் உண்மைப் பொருளை
உணர்ந்தவர்,
மீண்டும்
இவ்வுலகில் வந்து பிறவாத நெறியை அடைவார்" என்கின்றார் நாயனார்.
"கற்று" என்றதனால், ஞானாசிரியர் பலரிடத்தும், பலதரமும்
பயில்வது பெறப்படும். "ஈண்டு" என்றதனால், முத்தி பெறுதற்கு உரிய
இந்த மானிடப் பிறவியின் அருமை பெறப்படும். "ஈண்டு வாரா நெறி" என்றதனால், அது முத்திநெறி
என்பது பெறப்படும்.
மெய்ப்பொருளை
உணர்தற்குச் சாதனமாக உள்ளவை மூன்று. அவை கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் மூன்று
ஆகும். அவற்றில் இங்கு கேட்டல் சொல்லப்பட்டது.
திருக்குறளைக்
காண்போம்...
கற்று
ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்,
மற்று
ஈண்டு வாரா நெறி.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் ---
இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான்
மெய்ப்பொருளை உணர்ந்தவர்,
மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் ---
மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.
('கற்று' என்றதனால் பலர் பக்கலினும் பலகாலும்
பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய
மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி.
வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள்
கேள்வி இதனால் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில்
வரும் அப்பாலும் அடிச் சார்ந்தார் வரலாற்றை வைத்து, "திருத்தொண்டர்
மாலை"
என்னும் நூலில் குமார பாரதி என்பார் பாடிய பாடல் ஒன்று....
பாடுமுனைப்
பாடியர்கோன் பாடலின்மெய்ப் பாடகம்கொண்டு
ஆடுவர்அப்
பாலும் அடிச்சார்ந்தார் --- நீடுஅரன்பால்
கற்றுஈண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு
வாரா நெறி.
மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களுக்கு
உரிய தமிழ்நாட்டுக்கு அப்புறத்திலே, சிவபெருமானுடைய
திருவடியை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்தி
நாயனாருடைய திருத்தொண்டத் தொகையிலே சொல்லப்பட்ட திருத்தொண்டர்களுடைய காலத்துக்கு
முன்னும் பின்னும் சிவபெருமானுடைய திருவடிகளை அடைந்தவர்களும் அப்பாலும் அடிச்சார்ந்தார்
என்று சொல்லப்படுவார்கள்.
இம்மக்கட் பிறப்பின்கண்ணே உபதேச மொழிகளை
அனுபவமுடைய தேசிகர்பால் கேட்டு அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர் மீண்டு
இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர் எனத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தார்.
முனைப் பாடியர்கோன் என்றது சுந்தரமூர்த்தி சுவாமிகளை.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல்
வைப்பு"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
அரன்
அருளாம் இன்பம் அனுபவிப்பார் வேறென்று
இருமை
பரிந்து ஒன்றை இகழ்வான் --- உரைசெயும்
கற்று
ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்,
மற்று
ஈண்டு வாரா நெறி.
இப்பிறப்பில் உபதேசம்
கேட்டு உண்மைப் பொருளை அறிந்தவர் பிறப்பை நீக்குவர் என்பது கருத்து. இருமை ---
ஆண்டான் அடிமைத்திறம். ஒன்று --- ஏகம். இருமையில் விருப்பும், ஒன்றில் வெறுப்பும் உடையவர் சைவ சித்தாந்திகள்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து,
இராமலிங்க
சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி
வெண்பா"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
செம்மைப்
பொருள்என்னத் தேர்ந்துநினைக் கும்பமுனி
மும்மலம்அற்று
உய்ந்தான், முருகேசா! -
இம்மைதனில்
கற்றுஈண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு
வாரா நெறி. 36
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, நினை --- தேவரீரை, கும்பமுனி --- அகத்தியர், செம்மைப் பொருள்
என்னத் தேர்ந்து --- முழுமுதற் பொருள் என்று உணர்ந்து, மும்மலம் அற்று உய்ந்தான் --- ஆணவம், மாயை, காமம் என்னும் மும்மலத்தையும் போக்கி
வீடுபேற்றை அடைந்தான். இம்மை தனில் --- இப்பிறப்பில், கற்று --- கற்கவேண்டிய அறிவு நூல்களைக்
கற்று, ஈண்டு மெய்ப்பொருள்
கண்டார் --- இங்கு மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள், ஈண்டு வாரா நெறி --- மீண்டும் இவ்
உலகில் பிறவாத வழியை, தலைப்படுவர் ---
அடைவார்கள்.
அகத்திய முனிவர் தேவரீரே மெய்ப்பொருள்
என்று உணர்ந்து, மும்மலங்களையும்
போக்கி வீடுபேற்றை அடைந்தார். கற்கவேண்டிய
அறிவு நூல்களைக் கற்று இவ் உலகில் மெய்ம்மைப் பொருளை உணர்ந்தவர்களே மீண்டும்
உலகில் தோன்றாத வீடுபேற்று நெறியை அடைவர் என்பதாம்.
அகத்தியர் அருள்
பெற்ற வரலாறு
அகத்திய முனிவர் ஒருகாலத்தில் சிவபெருமானுடைய
திருவடிகளில் விழுந்து வணங்கிச்,
"செந்தமிழ்
மொழியை எனக்கு அறிவுறுத்தி மெய்யறிவினையும் வழங்குதல் வேண்டும்" என்று வேண்டிக்
கொண்டார். சிவபெருமான் அகத்தியரை நோக்கி, "எத்தகைய
மேன்மை வேண்டுமாயினும் நாம் அறிவுரை பெற்ற இடமாகிய திருத்தணிகைமலைக்குச் சென்று முருகளை
நோக்கித் தவஞ்செய்வாயாக. அவ்வாறு செய்யின் உன்னுடைய எண்ணம் நிறைவேறும். அத்தணிகைக்குப்
போகலாம் என்று ஒருவர் எண்ணினாலும்,
அவ்வூர்ப்
பக்கமாகச் சென்றாலும், செல்வேன் என்று கூறிப்
பத்தடி நடந்தாலும் அவர்களுடைய நோயெல்லாம் அடியோடு ஒழிந்து போகும்.
அத் தணிகைப் பதியில் உள்ள குமார தீர்த்தம், குறை நோய், வாதநோய், சூலைநோய் முதலிய நோய்களையெல்லாம் போக்குவதன்றிப்
பேய் பூதம் முதலியவைகளால் உண்டாகிய துன்பங்களையும் நீக்கும். மந்திரங்களின் வஞ்சனைகளையும்
ஒழிக்கும்; மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை, தாய், இளமங்கையர், பெரியோர் ஆன் முதலிய கொலைளால் உண்டாகிய தீவினையையும்
ஒழிக்கும். பகைவர்களைப் பணியச் செய்ய எண்ணினாலும், நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம்முடைய சுற்றத்தார்க்குச்
செய்ய விரும்பினாலும், புதல்வர்களை அடைய எண்ணினாலும், புலமை பெற விழைந்தாலும், அரச பதவியை அடைய அவாக் கொண்டாலும், எண்வகைச் சித்திகளையும் எய்தற்கு எண்ணினாலும்
மூவுலகங்களையும் அடக்க நினைத்தாலும், இவைகளையெல்லாம்
அத்திருத்த நீராடலால் அடையலாம்.
அறியாமை பொருந்திய உள்ளத்தையுடைய ஒருவன் தணிகைமலை
என்று ஒருகால் சொன்னாலும், பலவகையான தீவினைக் கூட்டங்களும்
துன்பங்களும் விரைவில் ஒழிந்துபோகும். ஒரு முறை அத் தணிகைமலையை வணங்கப் பெற்றால் அவர்களுக்கு
அறுமுகப் பெருமானுடைய திருவருள் உண்டாகும். மக்கட்பிறப்பால் அடைய எண்ணிய நால்வகைப்
பயன்களையும் விரும்பியவர்கள் அந்தத் தணிகைமலையை உள்ளத்தில் எண்ணினாலும் நல்வினை அவர்களை
அடைவதற்குக் காலத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அருட்செல்வம் மிகுந்த தணிகை
மலையை அடைந்து அங்கு இறப்பவர்கள் கீழ்க் குலத்தினராயினும் மலங்கள் யாவும் ஒழியப் பெற்று
வீட்டுலகத்தினை அடைவர். விலைமகளிரின் மேற் கொண்ட விருப்பத்தாலோ, தொழில்முறைகளாலோ தணிகைக்குச்
சென்று முருகப்பெருமானை வணங்குவோரும் கூட மறுபிறவியில் கந்தலோகத்தை அடைந்து இன்புறுவார்கள்.
தணிகைப்பதியில் செய்யப்பெறும் அறங்கள் பிற இடங்களில் செய்வதினும் கோடி மடங்கு சிறந்ததாகும்.
அப்பதியில் முருகக் கடவுள் இச்சை,
ஞானம், செய்கை என்னும் மூன்று சத்திகளும் மூன்று
இலைகளாகக் கிளைத்தெழுந்த வேற்படையை வலக்கையில் ஏந்தி, இடது கையைத் தொடையில் இருத்தி ஞான சத்திதரன்
என்னும் பெயரோடு விளங்குவார். அத்திருவுருவை உள்ளத்திலே நன்கு பொருந்த எண்ணுகிறவர்கள்
அம்முருகப் பெருமானே ஆவர். ஆதலின் அங்குச் செல்வாயாக" என்று கூறினார்.
இவ்வாறு பல சிறப்புக்களைச் சிவபிரான் எடுத்துக்
கூறியதைக் கேட்ட அகத்தியர் பெருமகிழ்ச்சி யடைந்தார். உடனே விடை பெற்றுக் கொண்டு திருத்தணிகைக்கு
வந்தார். நந்தியாற்றில் நீராடினார்; வீராட்டகாசத்தையும் முருகக்
கடவுளையும் போற்றி வணங்கினார். ஓரிடத்தில் சிவக்குறியை நிலைநாட்டி வழிபட்டார். பிறகு
அறுமுகப் பரமனை உள்ளத்தில் எண்ணிப் பல நாள் அருந்தவம் புரிந்தார். முருகக் கடவுள் அகத்தியர்
முன் தோன்றிக் காட்சி கொடுத்து அகத்தியருக்குத் தமிழ்மொழியின் இலக்கணங்களை எல்லாம்
உரைத்தருளினார். அகத்தியர் தணிகை மலையில் நெடுநாள் இருந்து பிறகு பொதியமலையை அடைந்தார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ
வெண்பா" என்னும்
நூலில் வரும் ஒரு பாடல்...
சொற்சுவைசேர்
வாசகத்தில் சொன்னபொருள் ஈதுஎன்றே
சிற்சபையே
போனார், சிவசிவா! ---
நல்கலைநூல்
கற்றீண்டு
மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு
வாரா நெறி.
வாசகம் --- திருவாசகம். மாணிக்கவாசகர், திருவாசகம் திருக்கோவையாரின் பொருள்
அம்பலவாணரே எனக்காட்டித் திருவடி அடைந்தனர்.
மாணிக்கவாசகர் வரலாற்றுச்
சுருக்கம்
சைவ சமயாசாரியர்களுள் ஒருவராகிய மாணிக்கவாசகர்
அவதாரம் செய்த ஊர் திருவாதவூர். இது மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில்
உள்ளது. இவரது பிள்ளைத் திருநாமம் திருவாதவூரர் என்பர்.
மாணிக்கவாசகர் என்பது தீட்சாநாமம். இவர் அமாத்திய அந்தணர் மரபைச் சேர்ந்தவர். திருவாசகமும்
திருக்கோவையாரும் இவர் பாடிய நூல்களாகும். திருவாசகம் என்பது, ‘தெய்வத் தன்மை பொருந்திய மொழி’ என்பதாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டுப் பிரிந்த
பின்னர் மீண்டும் இறைவனைச் சேர வேண்டும் என்று வருந்திப் பாடிய பகுதிகளே திருவாசகத்தில்
மிகப்பலவாகும். திருக்கோவையார் அகப்பொருள் துறையில் அமைந்தது.
இவர் இளமையிலே எல்லாக் கல்வியும் நிரம்பப்பெற்றுத்
திறம்பட விளங்கினார். பாண்டிய மன்னன் இவரது திறமையையும் தகுதியையும் அறிந்து தனக்கு
அமைச்சராக ஏற்றுக்கொண்டான்.
இவர், பாண்டியன் ஏவலால் பெரும்பொருள் கொண்டு, குதிரை வாங்கும்பொருட்டுக் கீழைக்கடற்கரைக்குச்
சென்றார். அப்பொழுது வழியில் திருப்பெருந்துறையின்கண் அடிகளது முன்னைத் தவத்தால் சிவபெருமான்
ஆசிரியத் திருக்கோலங் கொண்டு குருந்த மர நீழலில் அடியார் புடை சூழ வீற்றிருக்கக் கண்டார்; காந்தம் கண்ட இரும்பு போல அவர்பால் ஈர்க்கப்பட்டு
அவரை வணங்கினார். குருவடிவாய்க் காட்சியளித்து அறவாழி அந்தணன், அஞ்செழுத்தருள் மொழியை உபதேசம் செய்து ஆட்கொண்டான்.
அடிகளை ஆட்கொண்ட பின்பு இறைவன், ‘நீ தில்லைக்கு வருக’ என்று சொல்லி அடியார்களுடன் மறைந்தருளினான்.
இனி, இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட
அடிகள் தம்மை மறந்து அவனையே நினைக்கும் இயல்பினராயினார்; தமக்கென ஒரு செயலின்றி எல்லாம் அவன் செயலே
என்று இருந்தார்; குதிரை வாங்குவதற்கென்று
கொண்டுவந்த பொருள் எல்லாவற்றையும் இறைவன் திருப்பணிக்கும், இறைவன் அடியார்க்கும் செலவிட்டார்.
ஆனால், இச்செய்தியினை உணர்ந்த பாண்டியன், சினமுற்று அடிகளுக்குத் திருமுகம் அனுப்பி
அழைத்தான். அடிகளுக்குத் தம் நினைவு சிறிதே வரப்பெற்றதும் தம்மையாட்கொண்ட பெருமானிடம்
சென்று முறையிட்டுக்கொண்டார். ‘குதிரைகள் மதுரைக்கு வந்து
சேரும்; அஞ்சாது போய் வருக’ எனப் பெருமானும் விடை தந்தருள, அடிகள் மதுரைக்குத் திரும்பிப் பாண்டியனிடம்
இந்நற்செய்தியினைக் கூறினார். எனினும், குறித்த
நாளில் குதிரைகள் வாராது போகவே,
பாண்டியன்
தண்டலாளரை ஏவி, அடிகளைச் சிறைப்படுத்தித்
துன்புறுத்தச் செய்தான். அடிகளுக்கு அருள்புரிவான் வேண்டிக் காட்டில் திரியும் நரிகளைக்
குதிரைகளாக்கித் தேவகணங்களைப் பாகர்களாகவும், தானே குதிரைச் சேவகனாகவும் குதிரைச் சாத்தோடு
மதுரை மாநகரம் வந்தான்.
பாண்டியன் தன் ஏவலரால் குதிரைகள் வருகின்றன என்பதை
அறிந்ததும் பெருமகிழ்ச்சியுற்று,
அடிகளையும்
அழைத்துக் கொண்டு, குதிரைச் சேவகனை வரவேற்று, மரியாதை பலவும் செய்து இனிதிருந்தான்.
அடிகளது இடரைத் தீர்க்கும்பொருட்டுக் கொண்டுவந்த
குதிரைகள் அன்று இரவே மீண்டும் நரிகளாகிக் குதிரைக் கொட்டத்தில் ஏற்கெனவே உள்ள குதிரைகளுக்கும்
ஊறு செய்து, மதுரை மக்களுக்கும் தீமை
புரிந்து, காட்டுக்கு ஏகின. இதனைக்
கேள்வியுற்ற பாண்டியன் வெகுண்டு,
தண்டலாளரை
ஏவி அடிகளை ஒறுக்கச் செய்தான். அதனால் அடிகள் ஆற்றாது அழுத துன்பத்தைப் போக்கும்பொருட்டு
வையையாற்றில் பெருவெள்ளம் புரண்டு வருமாறு பெருமான் அருள் புரிந்தார். வெள்ளம் இருகரைகளையும்
உடைத்துக்கொண்டு சென்று, மதுரை நகருக்குப் பெருஞ்சேதம்
விளைத்தது. பாண்டியன் அடிகளுக்கு விளைத்த துன்பமே வெள்ளத்திற்குக் காரணம் என்று தெரிந்து
அவரை விடுவித்தான். வெள்ளம் குறைந்தது. நகர மக்கள் அனைவருக்கும் கரையினை அடைப்பதற்குப்
பங்கு பிரித்துக்கொடுக்கச் செய்தான் பாண்டிய மன்னன். மன்னன் ஆணையால் வந்தி என்னும்
தவமுதியாளுக்கு ஒதுக்கப்பட்ட பங்கினை அடைக்கப் பெருமானே வந்தான். பின்னர், பெருமான் வந்திக்கு முத்தியளித்து மறைந்தான்.
அடிகளுக்காகப் பெருமான் நரியைக் குதிரையாக்கியதும், வையையில் நீரைப் பெருகச் செய்ததும், மண் சுமந்து பிரம்படி பட்டதும் உணர்ந்த பாண்டியன், மனம் மிக வருந்தினான்; அடிகளுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து, அவர் விருப்பம் போல நடந்துகொள்ள உதவினான்.
அடிகள் பின்னர் ஆலவாய் அண்ணலிடம் பிரியா விடை
பெற்றுக் கொண்டு திருப்பெருந்துறைக்கு வந்தார்; பெருமானைப் பிரிந்த பின்னர்த் தாம் படும்
துயரினை எண்ணி அழுதார். அவ்வாறு அழுது பாடிய பாடற்பகுதியே திருச்சதகமாகும். அடிகள், பெருமான் அருளால் அங்கிருந்து உத்தரகோச மங்கை
வந்து சேர்ந்தார். உத்தரகோச மங்கையிலிருந்து தில்லைக்குப் புறப்பட்டார். வழியில் பல தலங்களை வணங்கிக்
கொண்டு இறுதியாக
அடிகள் தில்லைக்கு வந்தார். அங்கே தங்கியிருக்கும் நாளில், புத்தரை வாதில் வென்று, இலங்கை மன்னது ஊமைப் பெண்ணைப் பேசும்படி
செய்து, புத்தரையும் அம்மன்னனையும்
சைவராக்கினார் என்பது சொல்லப்பெறுகிறது.
திருவாசகமும் திருக்கோவையாரும் கூத்தப்பெருமானால்
எழுதப்பெற்று, பெருமான் அருளால் தில்லையில்
பொன்னம்பலத்தில் வைக்கப்பெற்றன. அவற்றைக் கண்ணுற்ற அர்ச்சகர் வியப்புற்று ஊர் மக்களுக்குத்
தெரிவித்தார். எல்லோரும் அடிகளை அடைந்து, அவற்றின்
பொருளைக் கேட்க, அடிகள் அவர்களை அழைத்துக்கொண்டு
பொன்னம்பலத்துக்கு வந்து, ‘திருவாசகத்துக்குப் பொருள்
கூத்தப் பெருமானே’என்று கூறிச் சோதியில்
மறைந்தார்.
பின்வரும் பாடல்கள் இதற்கு ஒப்பாக
அமைந்துள்ளமை காணலாம்...
கணக்கு
அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது,
கணக்கு
அறிந்தார்க்கு அன்றிக் கைகூடா காட்சி,
கணக்கு
அறிந்து உண்மையைக் கண்டு அண்ட நிற்கும்
கணக்கு
அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே. ---
திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை
---
நூல்களைக்
கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப் பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும்
உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக்
கற்றறியாதவர்க்கு அவை கூடாவாம்.
கல்லாத
மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத
மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத
மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத
மூடர் கருத்து அறியாரே. --- திருமந்திரம்
இதன்
பொழிப்புரை
---
கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார்.
அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக்
கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர்
போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த்
தோன்றார்.
கற்றும்
சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும்
வீடார், துரிசு அறார், மூடர்கள்,
மற்றும்
பலதிசை காணார் மதியிலோர்,
கற்று
அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை
---
சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர்.
அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட
அறியார்; அவ்விருவகைப் பற்றும்
விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால்
அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம்
ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.
தறுகண்
தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்கு
உறுதி உயிரோம்பி வாழ்தல்,
அறிவிற்கு
அறிவாவது எண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு
வாரா நெறி. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
எண்ணின் --- ஆராயின், தறுகண் தறுகட்பம் --- அஞ்சாமையுள்
அஞ்சாமையாவது, தன்னைத்தான் நோவல் ---தன்கண்
குறையுளதாயின் அதனைக் கண்டு வருந்துதலாம், உறுதிக்குறுதி உயிரோம்பி வாழ்தல் --- நல்ல
செயல்களுள் நல்ல செயலாவது பிறவுயிர்களைப் பாதுகாத்து வாழ்தலாம், அறிவிற்கு அறிவாவது ஈண்டு மறுபிறப்பு
வாராநெறி --- அறிவினுள் அறிவாவது இவ்வுலகில் மீட்டும் பிறவாமைக்கேதுவாகிய
நெறியின்கண் ஒழுகுதலாம்.
பொய்தீர்
புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த
மைதீர்
உயர்கதியின் மாண்பு உரைப்பின் - மைதீர்
சுடரின்று
சொல்லின்று மாறின்று சோர்வின்று
இடரின்று
இனிதுயிலும் இன்று. --- ஏலாதி.
இதன்
பதவுரை ---
பொய்தீர் புலவர் --- பொய்ம்மை நீங்கிய
புலவர்கள், பொருள் புரிந்து
ஆராய்ந்த --- மெய்ப்பொருள் விரும்பி யாராய்ந்த, மைதீர் உயர் கதியின் - குற்றமற்ற
வீடுபேற்றின், மாண்பு உரைப்பின் ---
மாட்சிமை சொல்லுமிடத்து, மைதீர் சுடர் இன்று ---
அங்கு இருள் கெடுக்கும் ஞாயிறு இல்லை, சொல்
இன்று --- பேச்சு இல்லை, மாறு இன்று --- நிலை
மாறுதல் இல்லை, சோர்வு இன்று ---
தளர்ச்சி இல்லை, இடர் இன்று ---
துன்பம் இல்லை, இனிது துயிலும் இன்று
--- இனிது தூக்கமும் இல்லை.
பொய் தீர்ந்த அறிவு உடையார் பொருளாக
விரும்பி ஆராய்ந்த குற்றந்தீர்ந்த வீட்டுலகின் மாட்சிமையை உரைப்போமாயின், ஒளியில்லை, உரையில்லை, மாறுபாடில்லை, கேடில்லை, துன்பமில்லை, இனிய துயிலு மில்லை.
''யாவரும் எவையும் ஆய்,
இருதுவும் பயனும் ஆய்,
பூவும்
நல் வெறியும் ஒத்து;
ஒருவ அரும் பொதுமையாய்
ஆவன்
நீ ஆவது'' என்று
அறிவினார் அருளினார்;
தா
அரும் பதம் எனக்கு
அருமையோ? தனிமையோய்!
--- கம்பராமாயணம், வாலி வதைப் படலம்.
இதன்
பதவுரை ---
தனிமையோய் --- ஒப்பற்ற தனி முதல்வனே; யாவரும் --- எல்லா உயர்திணைப் பொருள்களும்; எவையும் ஆய் --- எல்லா அஃறிணைப் பொருள்களும்
ஆகி; இருதுவும் பயனும் ஆய்
--- அறுவகைப் பருவங்களும், அவற்றின் பயன்களம் ஆகி; பூவும் நல்வெறியும் ஒத்து --- மலரும் அதனிடத்துள்ள
நல் வாசனையும் ஒத்து; ஒருவ அரும் பொதுமையாய்
--- பிரிக்க இயலாத வகையில் கலந்து எல்லாப் பொருளிலும் பொதுவாயுள்ளவனே! நீ ஆவன் ஆவது என்று --- நீ யாவன் என்பதும்
நின் இயல்பு; எத்தகையது என்றும்; அறிவினார் அருளினார் --- (என்னுள் தோன்றிய)
நல்லறிவு எனக்கு விளங்க அறிவுறுத்தியருளியது.
தா அரும் பதம் --- (இனி) கெடுதல் இல்லாத கிடைத்தற்குரிய வீடு பேற்றின்பம்; எனக்கு அருமையோ --- எனக்குக் கிடைப்பது அருமையாமோ? (ஆகாது).
யாவரும் என்றது மக்கள், தேவர் நரகரயைும், எவையும் என்றது மற்ற உயிர் உள்ளவற்றையும்
உயிர் இல்லாதவற்றையும் குறிக்கும். இறைவன் உயிருடையன, உயிர் இல்லாதன ஆகிய எல்லாப் பொருள்களோடும்
நீக்கமறக் கலந்து நிற்றலால் 'யாவரும் எவையும் ஆய்' என்றான். இருது - இரண்டு மாதம் கொண்ட காலப் பகுதி. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனிலைக் குறிக்கும்
காரணங்களும் காரியங்களும் அவனே என்பதை 'இருதுவும்
பயனும்' என்ற தொடர் உணர்த்தும். இறைவன் எல்லாமாய் இருக்கும் தன்மையை நம்மாழ்வாரும்
திருவாய்மொழியில் ''யாவையும் எவரும் தானாய்'' (3:4.10) எனப்ர். ''பூவும் நல்வெறியும் ஒத்து ஒருவு அரு - மலரில்
மணம் போல இறைவன் எல்லாப் பொருள்களிலும் எங்கும் பிரிக்க முடியாமல் பரந்திருக்கும் நிலை.
இழிந்த பொருளாயினும் உயர் பொருளாயினும் வேறுபாடின்றி
ஒரு தன்மையனாய் இறைவன் இருத்தல் பற்றிப் 'பொதுமையாய்' எனப் போற்றினான். தன்னுடன்
பகைமை நிலையில் வந்த இராமன் யாவன் என்பதும் அவனது உண்மை இயல்பு இத்தகைத்து என்றும்
அவன் அருள் தன்னுள் இருந்த மெய்யுணர்வை இப்போது விளங்கிக்கொள்ள அறிவுறுத்தியதால் 'அறிவினார் அருளினார்' என்றான். அறிவின் சிறப்பு நோக்கி 'அறிவினார்' என உயர்திணையாக்கிக் கூறினான். இராமன் பரம்பொருள்
என்னும் உண்மை அறிவைப் பெற்றதால் இனிப் பரமபதம் கிடைப்பது எளிது என்பானாய்த் 'தாவரும் பதம் எனக்கு அருமையோ?' என்றான்.
ஊனம்
உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம்
முற்றுபு நண்ணினர் வீடு என,
தான
கற்பகத் தண்டலை விண்தலம்
போன, புக்கன,முன் உறை பொன்னகர்.
--- கம்பராமாயணம்,
பொழில் இறுத்த படலம்.
இதன்
பதவுரை ---
ஊனம் உற்றிட --- குற்றம் நேர்ந்திட்டதனால்; மண்ணில் உதித்தவர் --- இந்த மண்ணுலகத்தில்
பிறந்த தேவர்கள்; ஞானம் முற்றுபு --- பிறகு
ஞானம் முழுமையாக நிரம்பியவுடன்;
வீடு
நண்ணினர் என --- துறக்கத்தை அடைந்தவர்களைப் போல; தான கற்பகத் தண்டலை --- கொடைக்குணம் பெற்ற
கற்பக மரங்கள் அடர்ந்த அந்த அசோகவனச் சோலை; விண்தலம் போன --- அனுமனால் வீசி எறியப்பட்டு
வான் வழியாகச் சென்று; முன் உறை பொன் நகர் புக்கன --- முன்னே தங்கியிருந்த
சுவர்க்க லோகம் போய்ச் சேர்ந்தன போல் தோற்றம் அளித்தன.
அசோக வனத்துக் கற்பக மரங்கள், துறக்கத்திலிருந்து இராவணனால் இலங்கைக்குக்
கொண்டு வரப்பட்டவைகள். அவைகள் அனுமனால் வீசி எறியப்பெற்று, முன் இருந்த இடத்தை அடைந்து விட்டன. விண்ணுலகத்
தேவர் குற்றம் செய்து மண்ணுலகில் பிறந்து, ஞானம் முற்றி மீண்டும் விண்ணுலகம் அடைந்ததுபோல
அனுமன் எறிந்த அசோக வனத்து மரங்கள் ஆகாயத்தை அடைந்தனவாம். கவந்தன், விராதன், வீடுமன் முதலியோர் சாபக் கேட்டால் தம் தேவபதம்
நீங்கியார் மண்ணுலகில் பிறந்து ஞானம் முற்றிய பின் தம் முன்னைய
உயர் நிலையைப் பெற்ற புராணச் செய்தி இங்கு நினைக்கத் தகும்.
No comments:
Post a Comment