033. கொல்லாமை - 04. நல்லாறு எனப்படுவது






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 33 -- கொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "மேற்கதியும் முத்தியும் பெறுவதற்கு நல்ல வழியாவது, யாது என்று வினவினால், அது யாது ஓர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கும் வழியே ஆகும்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

நல்லாறு எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நல் ஆறு எனப்படுவது யாது எனின் --- மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்,

     யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி --- அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி.

         ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

கூடல் இறை அன்று கொடிய மறையோன் சுமத்தும்
வேடன்பழி அஞ்சி விடுவிக்கும், --- தேடவரும்
நல்லாறு எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

         கூடல் இறை --- மதுரை அரசனாகிய பாண்டியன்.  வேடன் பழி --- வேடனுக்கு வந்த பழியை. வழிப் பயணத்தின் இடையில் ஓர் அந்தணன் தன் மனைவியை ஓர் ஆலமரத்தடியில் இருக்கச் செய்து, தான் நீர் கொண்டுவரச் சென்றான். அச்சமயம் மரத்தில் சிக்குண்டு இருந்த ஓர் அம்பு காற்றினால் அலைப்புண்டு மேலேபட அவள் இறந்தனள்.  அந்தணன் இதனை அறியாது, அருகில் அம்மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டு இருந்த வேடனே அவளைக் கொன்றான் என்று, அவனைப் பாண்டியனிடம் கொண்டு செல்ல, மன்னவன் உண்மையை அறியாமல்,  சோமசுந்தரக் கடவுளை வேண்டி, அவர் கட்டளையின்படி மறையோனுடன் ஊருக்கு வெளியே நடைபெறும் ஒரு கலியாணத்துக்கு மாறு வேடத்துடன் சென்றான். அங்கே மணமகள் உயிரைக் கவர்ந்து செல்ல வந்து இருந்த காலதூதர், 'முன்னம் ஆலமரத்தின்கண் சிக்குண்ட அம்பைக் காற்றால் வீழ்த்திப் பார்ப்பனியின் உயிரைக் கொண்டதுபோல், இங்கே கட்டி உள்ள காளையை அவிழ்த்துவிட்டு முட்டச்செய்து இவன் உயிரைக் கவர்வோம்' என்று பேசிக் கொண்டதை அறிந்து வேடனை விடுவித்தான் என்பது திருவிளையாடற் புராணத்துப் பழியஞ்சிய படலத்துள் கண்ட வரலாறு ஆகும். 

     கொல்லாமையை மேற்கொள்வதே  நல்வழியாகும்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

ஆதி அருந்தமிழ் வள்ளுவன் நல்லாறு எனப்படுவது
யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும்நெறி எனலால்
ஓதும் உயிரைக் கொல்லாமை நல்லாறு உற்று, உனதுதிருப்
பாத மலர்ப்பணி யான் செய்வனோ? புல்லைப் பார்த்திபனே.

இதன் பொருள் ---

     திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்துக்கு மன்னனாக விளங்கும் திருமாலே! முதலில் அரிய தமிழால் திருக்குறள் என்னும் நூல் தந்த ஆசானாகிய திருவள்ளுவ நாயனார், மேற்கதியும் முத்தியும் பெறுவதற்கு நல்ல வழியாவது, யாது என்று வினவினால், அது யாது ஓர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கும் வழியே ஆகும் என்று அருளி உள்ளதால், அந்த நல் வழியை அடியேனும் பின்பற்றி, உனது திருவடிக்குப் பணி செய்யவல்லவன் ஆவேனோ?

     ஆதி --- முதலில். அருந்தமிழ் --- அரிய தமிழ் மொழியில் திருக்குறள் செய்த. நல்லாறு --- நல்வழி. புல்லைப் பார்த்திபன் --- திருப்புல்லாணிக்கு மன்னனாக விளங்கும் திருமால்.

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

கொல்லான், உடன்படான், கொல்வார் இனம்சேரான்,
புல்லான் பிறர்பால், புலான்மயங்கல் --- செல்லான்,
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான், கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு.      ---  ஏலாதி.

இதன் பதவுரை ---

     கொல்லான் --- ஓருயிரைக் கொல்லாமலும், உடன்படான் --- பிறர் கொல்வதற்கு உடன்படாமலும், கொல்வார் இனம் --- கொலைத் தொழில் பயில்வார் கூட்டத்தை, சேரான் --- சேராமலும், பிறர் பால் --- அயலார் பால், புல்லான் --- இணங்காமலும், புலால் மயங்கல் --- ஊனுண்ணுதலை, செல்லான் --- மேற்கொள்ளாமலும், குடிபடுத்து --- தனது குடும்பத்தை நன்னிலைமையில் வைத்து, கூழ் ஈந்தான் --- பிறர்க்கும் உணவு அளிப்பவன், மண் ஆண்டு --- உலகத்தை அரசாண்டு, கொல் யானை ஏறி --- கொலைபயிலும் யானை மேலேறி, அரசு --- ஏனை அரசர்களை, அடிப்படுப்பான் --- தனக்கு அடங்கச் செய்பவனாவான்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...