031. வெகுளாமை - 05. தன்னைத்தான் காக்கின்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 31 --- வெகுளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஒருவன் தன்னைத் துன்பம் வந்து நேராமைக் காக்க எண்ணுவானாயின், தன் மனதில் சினம் வராமல் காத்துக் கொள்ளவேண்டும். காக்காவிட்டால், அந்தச் சினமானது அவனையே அழித்துவிடும்" என்கின்றார் நாயனார்.

     துறவறத்தில் நின்ற ஒருவன் சினத்தால் தான்கொண்ட தவத்தினது பயனை இழந்து, பிறவித் துன்பத்தையும் அடைவது உறுதியாதலால், அதனைத் தவிர்த்து, வேண்டியதை வேண்டியவாறே கொடுக்கும் தவத்தையும் இழந்து போகாது இருக்க விரும்புவானாயின், தனது மனத்தில் சினம் என்னும் பகைவன் தோன்றாது காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

திருக்குறளைக் காண்போம்....

தன்னைத் தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தன்னைத்தான் காக்கின் சினம் காக்க --- தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச் சினம் வராமல் காக்க,

     காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் --- காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும்.

         ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தாவு சினத்தால் தலைஇழந்தான் தக்கன், உமா
தேவிமகள் ஆயும், சிவசிவா! --- ஆவல்மிகும்
தன்னைத்தான் காக்கில் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். 

     சிவபெருமானைப் புறக்கணித்துத் தக்கன் ஒரு வேள்வி தொடங்கினான். சிவபெருமான் மீது அவன் கொண்ட சினமே காரணம். அதற்கு எல்லாத் தேவர்களும் வந்திருந்தார்கள். சிவபெருமான் சினம் கொண்டார். அவர் நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரக் கடவுள் தோன்றி, தக்கன் வேள்விக்குச் சென்றார். அங்கிருந்த திருமாலை மார்பில் அடித்தார்.  அவர் கீழே விழுந்தார். மற்றத் தேவர்கள் எல்லாம் ஓடினார்கள். சந்திரனைக் காலால் தேய்த்தார். சூரியன் பற்களைத் தகர்த்தார். பகன் என்னும் ஆதித்தன் கண்ணைப் பறித்தார்.  அக்கினியின் கையை வெட்டினார்.  நாமகளின் மூக்கை அரிந்தார். பிரமன் விழுந்தான். தக்கன், எச்சன், முதலியவர்கள் தலையை வெட்டினார்.  இந்திரன் குயில் உருவம் கொண்டு ஓடினான். மற்றத் தேவரெல்லாம் பலவாறு புண்பட்டு ஓடினர். பின்னர், தக்கன் இழந்த தலைக்காக ஆட்டுத் தலையை வைத்து அவனை உயிர்ப்பித்து அருளினார்.

     அகிலாண்ட நாயகியாகிய உமாதேவியைத் தனது மகளாகப் பெறுகின்ற உயர்ந்த தவத்தை உடையவனாக இருந்தும், தனக்கு உண்டான சினத்தால் தக்கன் அழிய நேர்ந்தது என்பதை அறிய ஒருவன் தனக்கு உண்டாகும் சினத்தைக் காக்காவிட்டால் அது அவனையே அழித்து விடும் என்பது தெளிவாகும்.  

சந்திரனைத் தேய்த்து அருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள்நெரித்திட்டு, ச்சன் தலை அரிந்து,
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த,
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற.
உருத்திர நாதனுக்கு உந்தீபற.

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே, ஏடி உந்தீபற
பணைமுலை பாகனுக்கு உந்தீபற.

புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற
வானவர் கோன்என்றே உந்தீபற.

வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்புஅற உந்தீபற.

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்க நின்று உந்தீபற.

என வரும் திருவாசகப் பாடல்களைக் காண்க.


மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கில்
     முதல் அற முருக்குமா போல்
தாங்க அரும் சினத்தீ தன்னுளே பிறந்து
     தன்உறு கிளை எலாம் சாய்க்கும்,
ஆங்கு அதன் வெம்மை அறிந்தவர் கமையால்
     அதனை உள்ளடக்கவும் அடங்காது
ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும்
     உட்பகை உலகில் வேறு உண்டோ?  --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

     மலைகளில் அடர்ந்து இருக்கின்ற மூங்கில் காட்டில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதாலே நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பு மூங்கில்களை அழிக்கும். அத்தோடு அருகில் உள்ள கிளை மூங்கில்களையும் அழிக்கும். அதுபோல, ஒருவனிடத்தில் வந்த கோபமானது பெரியோர் தடுத்தாலும் அடங்காமல் அவனை அழிப்பது அல்லாமல் அவனுடைய சுற்றத்தையும் அழித்துவிடும். எனவே, கொடுமையான கோபத்தை விட்டுவிட வேண்டும். அதைவிட உள் பகை வேறு இல்லை.

கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்,
கோபத்தால் நகுடனும் கோலம் மாற்றினான்,
கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்,
கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே.   ---  விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

     விசுவாமித்திரன் தனது கோப மிகுதியினாலே வசிட்டரோடு சபதம் புரிந்து தனது தவத்தை எல்லாம் இழந்தான். நகுடன் என்னும் அரசன் நூறு அசுவமேத யாகங்களைப் புரிந்து இந்திர பதவியை அடைந்தும், முனிவர்களிடம் தனது கோபத்தைக் காட்டியதால், அகத்திய முனிவரின் சாபத்தால், அப் பதவியை இழந்து மீண்டும் பாம்பாக ஆனான். இந்திரன் ஒரு காலத்தில் உக்கிரபாண்டியனோடு போர் புரிந்து தன்னுடைய வச்சிராயுதத்தைப் போக்கினான். கோபத்தால் எண்ணிறந்த பேர் உயிர் துறந்தனர்.

உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க, - வெள்ளம்
தடுத்தல் அரிதோ? தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ? விளம்பு.              ---  நன்னெறி.

இதன் பொருள் ---

     மனத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி வளர்கின்ற சினத்தை வெளிவராமல் அடக்கிக் கொள்கிற குணமே மேலான குணம் என்று அறிவாயாக. பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கைத் தடுத்தல் அரிய செயலோ, முன் கட்டப்பட்டிருந்த கரையை உடைத்து அதனுள் அடங்கிச் சென்ற வெள்ளத்தை வெளியில் செல்ல விடுத்தல் அரிய செயலோ, நீயே சொல்வாயாக.

         கவர்ந்து --- வயப்படுத்திக் கொண்டு. ஓங்கு --- மேன்மேல் உயருகின்ற; இங்குப் பெருகுகின்ற. தடங்கரை --- பெரியகரை.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...