033. கொல்லாமை - 09. கொலை வினையர்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 33 -- கொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "கொல்லுதலைத் தொழிலாக உடைய மனிதர்கள், அக் கொலைத் தொழிலின் இழிவை அறியும் மனத்தினர் அல்லர். அதனை அறிந்தவர் இடையில், இவர்கள் புலைத் தொழிலினராய்த் தோன்றுவர்" என்கின்றார் நாயனார்.

     கொலைத் தொழிலினது இழிவை அறிந்தவர், கொலை செய்வாரைச் சண்டாளராக மதிப்பர்.

திருக்குறளைக் காண்போம்...

கொலைவினையர் ஆகிய மாக்கள், புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கொலை வினையர் ஆகிய மாக்கள் --- கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர்,

      புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் --- அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.

         (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

கொன்றான், கொலையை உடன்பட்டான், கோடாது
கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால் --- கொன்றதனை
அட்டான் இடஉண்டான் ஐவரினும் ஆகும்எனக்
கட்டுஎறிந்த பாவம் கருது.           ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

     கொன்றான் --- ஓருயிரைக் கொன்றவன், கொலையை உடன்பட்டான் --- பிறன் செய்யுங் கொலைக்கு உடம்பட்டு நின்றவன், கோடாது --- நாணாமல், கொன்றதனைக் கொண்டான் --- கொன்ற தசையை விலைக்குக் கொண்டவன், கொழிக்குங்கால் --- ஆராயுமிடத்து, கொன்றதனை அட்டான் --- அங்ஙனங் கொல்லப்பட்டதன் ஊனைச் சமைத்தவன், இட உண்டான் --- சமைத்ததனை இட உண்டவன் (என்று சொல்லப்படுகிற), ஐவரினும் --- இந்த ஐவரிடத்தும், கட்டு எறிந்த பாவம் --- வரம்பழித்ததினால் உண்டாகிய பாவமானது, ஆகும் என --- நிகழும் என்று, கருது --- நீ கருதுவாயாக.

         உயிரைக் கொன்றவன், கொலைக்குக் கோடாதே யுடன்பட்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனைக்கொண்டவன், ஆராயுங்காற் கொல்லப்பட்டதனுடைய ஊனை அட்டான், அதனை யிடவுண்டான் என இவ் ஐவர் மாட்டும் உளவாய் நிகழும் என்று வரம்பு அழித்துச் செய்த பாவத்தைக் கருது.


கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     பிற உயிரைக் கொல்லு, குத்து என்று ஏவிய விலங்குத் தன்மை படைத்த மனிதர்களை, இயம தூதர்களாகிய வலிய தண்டலாளர்கள், வலிமை உடைய கயிற்றால் கட்டி, செல், இங்கே நில் என்று கொடிய நரகத்தில் இட்டுச் சென்று, தமது தலைவனாகிய இயமன் முன், முறை செய்தவற்கு நிறுத்தவர்.

         இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.

அலைப்பான் பிற உயிரை ஆக்கலும் குற்றம்,
விலைப்பாலில் கொண்டு ஊன் மிசைதலும் குற்றம்,
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலும் குற்றமே ஆம்.     ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     அலைப்பான் --- கொன்று உண்பதற்காக, பிற உயிரை --- பிற உயிர்களை, ஆக்கலும் குற்றம் --- வளர்த்தலும் பிழையாகும்; விலைப்பாலின் --- விலைகொள்ளும் வகையால், ஊன்கொண்டு --- ஊனைப் பெற்று, மிசைதலும் குற்றம் --- உண்ணலும் பிழையாகும்; சொலற்பால அல்லாத --- சொல்லும் வகையின அல்லாதனவாகிய சொற்களை, சொல்லுதலும் குற்றம் --- சொல்லிவிடுதலும் பிழையாகும்; கொலைப்பாலும் --- கொலைவகைகளும், குற்றமே ஆம் --- பிழையேயாகும்.

         பிறவுயிர்களைக் கொன்று உண்பதற்காக வளர்த்தலும் குற்றம்; அங்ஙனங் கொல்லாமல் அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்ணலும் குற்றம்; சொல்லத்தகாதவற்றைச் சொல்லலும் குற்றம்; கொல்லலும் குற்றமேயாம்.
 
சடக்கடத்துக்கு இரை தேடி, பல உயிர் தமைக் கொன்று,
விடக் கடித்துக் கொண்டு இறுமாந்து இருந்து மிக மெலிந்து,
படக்கடித் தின்று உழல்வார்கள் தமைக் கரம் பற்றி நமன்
இடக்கடிக்கும் பொழுது ஏதுசெய்வார் கச்சி ஏகம்பனே!   ---  பட்டினத்தார்.

இதன் பொருள் ---

     திருக்கச்சி ஏமக்பத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! சட வடிவாகிய உடலைப் பாதுகாத்தல் பொருட்டு, உணவைத் தேடி, பல உயிர்களைக் கொலை செய்து, அவற்றின் மாமிசத்தைத் தின்று செருக்கு அடைந்து இருந்து, மிகவும் மெலிவினை அடைந்து ஒருந்தக் கடித்துத் தின்று உழல்வோர்களை, இயமன் கையினால் பிடித்துக் கொண்டு வருத்தப்படுத்தும் பொழுது அவன் என்ன செய்வார்?

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...