திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
29 -- கள்ளாமை
இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம்
திருக்குறளில், "பிறர் பொருளை
வஞ்சித்துக் கவர்ந்து கொள்ளலாம் என்று மனத்தால் நினைத்தலும் பாவச் செயல்தான்"
என்கின்றார் நாயனார்.
திருக்குறளைக்
காண்போம்...
உள்ளத்தால்
உள்ளலும் தீதே, பிறன் பொருளைக்
கள்ளத்தால்
கள்வேம் எனல்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
உள்ளத்தால் உள்ளலும் தீதே ---
குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம்,
பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் --- ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால்
வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க.
('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது
சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் 'எதிர்மறைக்கண்' வந்தது. இவை இரண்டு பாட்டானும்
இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக்
கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
உத்தங்கன்
ஓலை ஒளித்த நாகக் குலங்கள்
இற்ற
புகையால், இரங்கேசா! -
மற்றுலகில்
உள்ளத்தால்
உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால்
கள்வேம் எனல்.
இதன்
பதவுரை
---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!
உத்தங்கன் ஓலை --- உத்தங்கன் என்னும் வேதியன் (தன் குரு தக்கணைக்காகக்) கொண்டு
வந்த (கல் இழைத்த) காதோலையை, ஒளித்த --- களவு
செய்துகொண்டு போன, நாகக் குலங்கள் --- தஷகன் என்னும் நாகக்
கூட்டங்கள், புகையால் --- (இந்திரன் குதிரைக் காதால்
செலுத்தின) புகை சூழ்ந்துகொண்டதால்,
இற்ற
--- மடிந்தன, (ஆகையால், இது) உலகில் --- இவ் உலகத்தில், பிறன் பொருளை --- அன்னியன் உடைமையை, கள்ளத்தால் கள்வேம் எனல் --- களவால்
கைப் பற்றுவோம் என்பதை, உள்ளத்தால் ---
மனத்தால், உள்ளலும் ---
நினைத்தலும், தீதே --- கெடுதியே ஆகும்
(என்பதை விளக்குகின்றது). (கள்வேம் - திருடுவோம்)
கருத்துரை --- திருடுவோம்
என்று நினைத்தாலும் தீதாகும்.
விளக்கவுரை --- உத்தங்கன்
என்பான் ஒரு வேதியச் சிறுவன். இவன் ஓதி முடித்து, அக்கால வழக்கப்படி குரு தக்கணை கொடுக்க
நினைத்து, "என்ன வேண்டும்"
என்று குருவைக் கேட்டான். அதற்கு அவர் தம் மனைவி விரும்பியபடி "நாகரத்தினம்
இழைத்த காதோலை வேண்டும்" என்றார். அஃது
இருக்குமிடம் குருபத்தியால் தெரிந்த கொண்ட உத்தங்கன், அவ் இடத்திற்குப் போய் அதை அரிதில்
பெற்றுத் திரும்புகையில், சந்தியாவந்தன காலம்
நெருங்கியது. ஆகையால், அவன் ஓலையை
ஓரிடத்தில் வைத்து சந்தியாவந்தனம் செய்துகொண்டு இருந்தான். 'அது தான் சமயம்' என்று நாகலோகத்துப் பாம்பரசனாகிய தக்கன்
வந்து அவ் ஓலையைக் களவு செய்துகொண்டு, நாகலோகம்
போனான். பிறகு ஓலையைக் காணாத உத்தங்கன், கள்ளன்
அடிச் சுவடு பற்றி நாகலோகம் போய்த் தன் உடைமையைக் கேட்டான். அங்கிருந்த தக்கன்
முதல் யாவரும், "அதை அறியோம்"
என்று பொய் சொன்னார்கள். அது கேட்ட உத்தங்கன் வெளியில் வந்து இந்திரனை நோக்கிக்
கடுந்தவம் புரிந்தான். இந்திரன் காட்சி கொடுத்து, தான் ஏறி வந்த உச்சைசிரவம் என்னும்
குதிரையின் காது வழியால் புகை வருவித்து, அதை
நாகலோகத்தில் செலுத்தினான். அது கண்ட தக்கன் முதலிய பெரும் பாம்புகளுக்கு அறிவு
வந்து, ஓலையைக் கொண்டு வந்து
உத்தங்கனிடத்தில் கொடுத்துப் போயின. அதை அவன் கொண்டுபோய்க் குருபத்தினியிடத்தில்
கொடுத்து வணங்கினான்.
கள்ளத்தால் பாம்புகள்
மடிந்தமையை இங்குக் கவனிக்க வேண்டியது. மனம் வாக்கு காயம் என்னும் மும்மை வழியில்
முதன்மையாகிய மனத்தாலும் கள்ளம் கூடாதென்பது இதனால் பெறப்பட்டது.
பின்வரும் படால் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை
காண்க...
ஏதிலார்
பொருள் நோக்கி இச்சை உறல்
கவர்ந்தது ஒப்பாம், எழில் மின்னாரைக்
காதலாய்
நோக்குதலே கலந்தது ஒப்பாம்,
பிறர்கேட்டைக் கருதல் அன்னார்
வேதை
உறக் கொன்றது ஒப்பாம், இவ்வாறு ஓர்
பயன் இன்றி மேவும் பாவம்
ஆதலின், ஐம் பொறிவழியே மனம் செலாது
அடக்குவார் அறிவு உளோரே. ---
நீதிநூல்.
பிறர் பொருளைக் கண்டு
ஆசைப்படுதல், அப் பொருளைக்
கொள்ளையிட்டதோடு ஒக்கும். வளரும் அழகுமிக்க மின்போலும் இடையினையுடைய அயல்பெண்களைத்
தீய கருத்துடன் பார்த்தல், அம் மாதரைச்
சேர்ந்தது ஒக்கும். பிறர் கெடவேண்டுமென்று எண்ணுதல், அவர்களை மிகத் துன்புறுத்திக் கொன்றதை
ஒக்கும். இவ்வகையாக எண்ணத்தாலும் பார்த்தலாலும் பயனடையாமலே வந்து பொருந்தும் பாவம்
பாலவாம். ஆதலின், அறிவுடையோர்
தம்மனத்தைப் பொறி வழிச்செல்லவொட்டாது தடுத்துத் தம் வழிச்செலுத்தி அடக்குவர்.
இச்சை-ஆசை.
கவர்தல்-கொள்ளையிடல். வேதை-துன்பம்.
No comments:
Post a Comment