திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
37 -- அவா அறுத்தல்
இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம்
திருக்குறளில், "பிறவி அற்றவர்
என்று சொல்லப்படுபவர், அதனை அறுத்தற்கு ஏதுவாகிய அவா அற்றவர் ஆவார். மற்றவர் பிற
ஏதுக்கள் அற்றும், அவா அறாதவர்கள் என்பதால், அவர்க்குச் சில
துன்பங்கள் அறுவது அல்லாமல், பிறவி அறுவது இல்லை" என்கின்றார் நாயனார்.
பிற ஏதுக்கள் என்றது, பிறவி உண்டாவதற்கு, வழிவழிக் காரணமாக உள்ள
உயிர்களிடத்துக் கருணை இல்லாமை, புலால் உண்ணுதல், தவம் செய்யாமை, கூடாஒழுக்கம், நன்மையைத் தராத
பொய்யைப் பேசுதல், திருடுதல், கோபம் கொள்ளுதல், உயிர்களைக் கொல்லுதல்
முதலிய வேறு காரணங்கள். இவைகளை ஒழித்ததால், அவற்றால் வரும்
துன்பங்கள் ஒழிந்தன. இவை ஒழியப் பெற்றும், ஆசையை ஒழிக்காததால் பிறவித்
துன்பம் ஒழியாது.
அவா பிறவிக்கு ஏதுவாகும். அவா அறுதல்
பிறவியின்மைக்கு ஏதுவாகும்.
அவா அறுத்தல் என்று ஒரு அதிகாரத்தை, நமது கருமூலம்
அறுக்க வந்து அவதரித்த, திருமூல நாயனார் திருமந்திரம் என்னும் அருள்
நூலில் வைத்துள்ளார் என்பதை அறிக. அதில் வரும் ஒரு பாடலைக் காண்போம்...
வாசியும்
மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து
பிதற்றிப் பயன் இல்லை,
ஆசையும் அன்பும்
அறுமின்,
அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்
எளிது ஆகுமே. --- திருமந்திரம்.
இதன்
பொருள் ---
வாசி யோகத்தின் பெருமையையும், அதில் பயிலும் யோகியின் பெருமையையும்
நூல்களால் உணர்ந்து அவற்றை வகைவகையாக விரித்து உரைப்பவனைப் போல, ஞானிகளும் விரித்துரைத்துக் கொண்டு
காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால்,
நீவிர் உயிரல்லாத பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும், உயிர்ப் பொருள்கள்மேல் செல்லும்
அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீவிர் இறை நிலையை அடைதல் எளிதாகும்.
திருக்குறளைக்
காண்போம்...
அற்றவர்
என்பார் அவா அற்றார், மற்றையர்
அற்று
ஆக அற்றது இலர்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
அற்றவர் என்பார் அவா அற்றார் ---
பிறவி அற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள்,
மற்றையார் அற்றாக அற்றது இலர் --- பிற
ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால்
சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர்.
(இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதி
முகத்தானும் எதிர்மறை முகத்தானும் கூறப்பட்டது.)
இத் திருக்குளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில்
வரும் ஒரு பாடல்...
பிறவி
அறார் மற்றையவர், பிஞ்ஞகர் காண்பித்த
பலபொருளும்
வேண்டாத பண்பினவர் அன்றி,
அற்றவர்
என்பார் அவா அற்றார் மற்றையர்
அற்று
ஆக அற்றது இலர்.
பிஞ்ஞகர் --- சிவபெருமான். பண்பின் அவர்
--- திருநாவுக்கரசு நாயனார்.
இவர் திருப்பகலூரில் உழவாரப் பணி செய்கையில், சிவபெருமான் உழவாரம் நுழைந்த இடம்
எங்கும் பொன்னோடு நவமணிகள் பொலிந்து இலங்க அருளினார். அப்பரோ, அவற்றில் சிறிதும் பற்று அற்றவராகி, பருக்கைக் கற்களாக மதித்து
உழவாரத்தினில் ஏந்தி அருகே உள்ள ஒரு வாவியில் போட்டு விட்டனர். பிறகு சிவபிரான்
தேவமாதரை ஏவி இவரை மயக்க நினைத்தபோதும் அடிகள் மனம் மாறினார் இல்லை. பிறவி அற்றவர்
என்பவர் ஆசை அற்றவர்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
பொருளாசை
பெண்ணாசை பூவாசை என்னும்
மருள்
ஆசையாம் மாசை மாற்றித் --- தெருள்ஞான
வேந்தராய்
வாழலாம், மெய்யன்பால்
நன்னெஞ்சே,
பூந்தராய்
நாதரை நீ போற்று. --- திருக்கழுமல மும்மணிக்கோவை.
இதன்
பொருள் ---
எனது நல்ல மனமே! பொருள்கள் மீது வைக்கும்
பேராசை, பெண்கள் மீது வைத்த
பெரும் காதல்,
மண்ணின்
மீது வைத்த ஆசை என்கின்ற மயக்கத்தைத் தருகின்ற, ஆசை எனப்படும்
குற்றங்களை மாற்றும்படி செய்து, தெளிவை உண்டாக்கும் ஞானபூமிகள் ஆகிய, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, மீதானம்
ஏழினுக்கும் வேந்தனாக வாழலாம். உண்மையான அன்பினால் திருப் பூந்தராய் நாதராகிய
சிவபெருமானை நீ வணங்கித் துதிப்பாயாக.
துரத்தி
உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரத்தியினால்
ஆங்கு அவற்றை விட்டு --- பரத்தில் அன்பு
செய்யடா
செய்யடா, சேர்ந்த பிரபஞ்சம்
எல்லாம்
பொய்யடா
பொய்யடா பொய். ---
சிவபோகசாரம்.
இதன்
பொருள் ---
உலகங்கள் யாவும் கனவுப் போலத் தோன்றி மறைதலை
உடையன. ஆதலால், அவற்றின்மேல்
உண்டாகும் ஆசை உன்னைப் பற்றாதவாறு நீக்கி, மெய்யாகிய
பரம்பொருளிடத்து எப்போதும் நீங்காத அன்பு செய்வாயாக.
எத்தனைதான்
கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும்
எத்தனை
சாதித்தாலும் இன்புறா --- சித்தமே
மெய்யாகத்
தோன்றி விடும், உலக வாழ்வு
அனைத்தும்
பொய்யாகத்
தோன்றாத போது. --- சிவபோகசாரம்.
இதன்
பொருள் ---
நிலை உடையன போலத் தோன்றும் அனைத்தும், நிலையில்லாது ஒழியும் என்பது உனது அறிவில்
அனுபவமாகத் தோன்றும் வரையில், கல்வியாலும், கேள்வியாலும், போகம் முதலிய
முயற்சிகளாலும் இன்பநிலை உனக்கு வாய்க்காது.
தேசம்ஊர்
பேர் காணி நீர்வரிசை சாதி எனும்
ஆசையால்
நெஞ்சே அலையாதே, --- நேசப்
பொருப்பானை
நின்அறிவில் போக்கு வரவுஅற்று
இருப்பானைப்
பார்த்தே இரு. ---
சிவபோகசாரம்.
இதன்
பொருள் ---
எனது என்னும் புறப்பற்றுக்குக் காரணமாக உள்ள
நாடு, ஊர், பெயர், நிலம், நீர்நிலை, சாதி
என்பனவற்றில் அபிமானம் வைத்து உழல்வதால், மனம் அமைதி பெறாது. அதை விடுத்து, பேரருள்
உடையவனாய்,
உனது
அறிவுக்கு அறிவாகப் பிரிவின்றி நிற்கும் இறைவனிடத்தில் அன்பு வைத்து, இன்புற்று
இருப்பாயாக.
No comments:
Post a Comment