028. கூடா ஒழுக்கம் - 02. வானுயர் தோற்றம்






 திருக்குறள்
அறுத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 28 -- கூடா ஒழுக்கம்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "தான் குற்றம் என்று அறிந்த ஒன்றிலே மனம் பதியுமானால், ஒருவனுக்கு வானளவ உயர்ந்த தவ வேடமானது என்ன பயனைத் தரும்?" என்று வினவுகின்றார் நாயனார்.

     கம்பீரமாய் விளங்கும் தோற்றத்துக்கு "வான் உயர் தோற்றம்" என்பது இலக்கண வழக்கு. அறியாமல் செய்த குற்றத்திற்குக் கழுவாய் உண்டு. அறிந்தே செய்த குற்றத்திற்குக் கழுவாய் இல்லை. எனவே, செய்த குற்றம் நிற்கும். தவவேடத்தால் புறத்தாரை மருட்டியதே அல்லாமல் வேறு பயன் இல்லை.

திருக்குறளைக் காண்போம்...

வான்உயர் தோற்றம் எவன் செய்யும், தன் நெஞ்சம்
தான் அறி குற்றப் படின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வான் உயர் தோற்றம் எவன் செய்யும் --- ஒருவனுக்கு வான் போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்;

     தான் அறி குற்றம் தன் நெஞ்சம் படின் --- தான் குற்றம் என்று அறிந்த அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின்.

         ( 'வான் உயர் தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142) என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப் படாமையின், நெஞ்சு குற்றத்ததாயே விடும்; விடவே நின்ற வேட மாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது வேறு பயன் இல்லை என்பதாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

வேட நெறிநில்லார் வேடம்பூண்டு என்பயன்?
வேட நெறிநிற்போர் வேடம் மெய் வேடமே?
வேட நெறிநில்லார் தம்மை, விறல்வேந்தன்
வேட நெறி செய்தால் வீடு அது ஆகுமே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்கு உரிய கோலம் இன்றியமையாது. யினும், அத்தொழிற்கண் செவ்வே நில்லாதார் அதற்கு உரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்? செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.

         பலவகைக் கடவுள் நெறிக் கோலத்தை உடை யாரையும் அவற்றிற்குரிய செயலில் நிற்பித்தல் அரசனுக்குக் கடமையாதலை உணர்த்துவார் இங்ஙனம் பொதுப்படக் கூறினார்.

     ஒழுக்கம் இல்லாதார் வேடம் மாத்திரம் புனையின், உண்மையில் நிற்பாரையும் உலகம், `போலிகள்` என மயங்குமாகலானும், அங்ஙனம் மயங்கின், நாட்டில் தவநெறியும், சிவநெறியும் வளராது தேய்ந்தொழியும் ஆகலானும், அன்ன போலிகள் தோன்றாதவாறு செய்தல் அரசற்குக் பேரறமாம் என்பார், `அதுவே வீடாகும்` எனவும், இது செய்ய அரசற்குக் கூடும் ஆதலின் அதனை விட்டொழிதல் கூடாது என்பார், வேந்தனை, ``விறல் வேந்தன்`` எனவும் கூறினார். `உண்மை வேடத்தாலன்றிப் பொய் வேடத்தால் பயன் இன்று` என்பதை,

வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின்.

எனவும், பொய்வேடத்தால் பயன் விளையாமையே அன்றித் தீமையும் பெருகுதலை,

தவம்மறைந் தல்லவை செய்தல், புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

வலியில் நிலைமையான் வல்லுருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

எனவும்,

வேடம் புனையாராயினும், உண்மையில் நிற்பார் உயர்ந்தோரே ஆவர் என்பதனை,

மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த தொழித்து விடின்.

எனவும் திருவள்ளுவரும் வகுத்துக் கூறியருளினார்.


'மறித்து ஒரு மாற்றம் கூறான்,
      'வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல். மாதோ,
      கோது இலர் ஆதல்' என்னா;
நெறிப் பட, கண்கள் பொங்கி
      நீர் வர, நெடிது தாழ்ந்து,
பொறிப்ப அருந் துன்பம் முன்னா,
      கவி குலத்து அரசன் போனான்.   ---  கம்பராமாயணம், அரசியல் படலம்.

இதன் பதவுரை ---

     கவி குலத்து அரசன் --- (அம்மொழிகளைக் கேட்டு) குரங்குகளின் கூட்டத்திற்கு அரசனான சுக்கிரீவன்; மறித்து ஒரு மாற்றம் கூறான் --- இராமன் சொல்லுக்கு மாற்றாக ஒரு வார்த்தையும் பேச இயலாதவனாய்; 'வான் உயர் தோற்றத்து அன்னான் --- வான் போல் உயர்ந்த தவவேடத்தையுடைய இராமனின்; குறிப்பு அறிந்து ஒழுகல் --- குறிப்பை உணர்ந்து அதன்படி நடத்தலே; கோது இலர் ஆதல் என்னா --- குற்றம் இல்லாதவர் ஆகுதலால்' என்று எண்ணி; கண்கள் நீர் பொங்கி --- கண்களில் நீர் பெருகி; நெறிப்பட வர --- முறையாக ஒழுக; நெடிது தாழ்ந்து --- நெடிது விழுந்து வணங்கி; பொறிப்ப அருந்துன்பம் முன்னா --- கணக்கிட முடியாத பெரிய துன்பத்தை மனத்தில் கொண்டு; போனான் --- (கிட்கிந்தா நகரத்தை நோக்கிச்) சென்றான்.

     சுக்கிரீவன் மறுமாற்றம் கூறாது கிட்கிந்தா நகர் சென்றான் என்பதில் குறிப்பறிந்து நடக்கும் பண்பு அவனிடம் இருப்பதைக் காணலாம். 'வானுயர் தோற்றம்' (குறள் 212) என்பதற்கு 'வான்போல் உயர்ந்த தவவேடம்' என்பர் பரிமேலழகர் வானினும் உயர்ந்த மானக் கொற்றவ' (4067) என்று முன்னரும்
குறித்தது காண்க.

    
'மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என் துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன்.
                                                ---  கம்பராமாயணம், மீட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     சுந்தரப் பெருந்தோளினாய் --- அழகிய பெரிய தோள்களை
உடைய இராமனே!; மைந்தரைப் பெற்று வானுயர்  தோற்றத்து
மலர்ந்தார் என் துணைத் தாளின் பைந் துகள்களும் ஒக்கிலர்
ஆம் எனப் படைத்தாய் --- நல்ல மக்களைப் பெற்று மிக உயர்ந்த பெருமையுடன் விளங்கியவர்கள் கூட எனது இரண்டு கால்களில் உள்ள சிறு தூசுக்கும் ஒப்பாகார் என்னும்படி  நீ எனக்குச் சிறந்த பெருமையை உண்டாக்கித் தந்தாய்; உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் --- (தீவினையிலிருந்து) பிழைத்தவர்களுக்குப் பெறுதற்கரிய மேல் உலகமும்,  புகழும் (மறுமைக்கும் இம்மைக்குமாகப்) பெற்று (உன்னால் இருமையிலும்) உயர்ந்தேன்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...