திருக்குறள்
அறுத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
28 -- கூடா ஒழுக்கம்
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம்
திருக்குறளில், "உலகத்தில் உள்ள
உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று காட்டிய குற்றங்களை நீக்கி ஒழுகினால்,தவத்தைச்
செய்பவர்க்கு தலைமயிரைக் கழித்தலும், அதனைச் சடையாகப் புனைந்து கொள்ளுதலும்
வேண்டுவன அல்ல" என்கின்றார் நாயனார்.
மனுதருமம், "ஒருவன் தவ ஒழுக்கத்தில் இருந்து கொண்டு, அதற்குத் தக்க
கமண்டலம் முதலிய அடையாளங்கள் இல்லாமல் இருந்தாலும், எல்லாப்
பிராணிகளிடத்திலும் சமபுத்தி உடையவனாய்த் தருமம் செய்யவேண்டுமே அன்றி, காஷாயம்
தரித்தல் முதலிய வேடம் மாத்திரமே தருமத்திற்குக் காரணம் ஆகமாட்டாது"
என்கின்றது.
தண்டத்தைப் பிடித்து இருத்தலினாலாவது, மொட்டை அடித்து இருத்தலினாலாவது, வேடத்தினலாவது, ஆடம்பர
ஆசாரத்தினாலாவது, முத்தியானது சித்திப்பது இல்லை என்றும் மேலோரால் வகுக்கப்பட்டுள்ளது.
திருக்குறளைக்
காண்போம்...
மழித்தலும்
நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்தது
ஒழித்து விடின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
மழித்தலும் நீட்டலும் வேண்டா --- தவம்
செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா.
உலகம் பழித்தது ஒழித்து விடின் ---
உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின்.
(பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின்
அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக்
கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் விக்கமாக
அமைந்திருத்தலைக் காணலாம்...
வேட
நெறிநில்லார் வேடம்பூண்டு என்பயன்?
வேட
நெறிநிற்போர் வேடம் மெய் வேடமே?
வேட
நெறிநில்லார் தம்மை, விறல்வேந்தன்
வேட
நெறி செய்தால் வீடு அது ஆகுமே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை ---
யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்கு உரிய கோலம்
இன்றியமையாது. ஆயினும், அத்தொழிற்கண் செவ்வே நில்லாதார் அதற்கு
உரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்? செயலில் நிற்பாரது கோலமே அதனைக்
குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன
செய்வானாயின், அதுவே அவனுக்கு
உய்யும் நெறியும் ஆய்விடும்.
பலவகைக் கடவுள்
நெறிக் கோலத்தை உடை யாரையும் அவற்றிற்குரிய செயலில் நிற்பித்தல் அரசனுக்குக் கடமையாதலை
உணர்த்துவார் இங்ஙனம் பொதுப்படக் கூறினார். ஒழுக்கம் இல்லாதார்
வேடம் மாத்திரம் புனையின், உண்மையில்
நிற்பாரையும் உலகம், `போலிகள்` என மயங்குமாகலானும், அங்ஙனம் மயங்கின், நாட்டில் தவநெறியும், சிவநெறியும் வளராது தேய்ந்தொழியும்
ஆகலானும், அன்ன போலிகள் தோன்றாதவாறு
செய்தல் அரசற்குக் பேரறமாம் என்பார், `அதுவே
வீடாகும்` எனவும், இது செய்ய அரசற்குக் கூடும் ஆதலின் அதனை
விட்டொழிதல் கூடாது என்பார், வேந்தனை, ``விறல் வேந்தன்`` எனவும் கூறினார். `உண்மை வேடத்தாலன்றிப் பொய் வேடத்தால்
பயன் இன்று` என்பதை,
வானுயர்
தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி
குற்றப் படின்.
எனவும், பொய்வேடத்தால் பயன் விளையாமையே அன்றித்
தீமையும் பெருகுதலை,
தவம்மறைந்
தல்லவை செய்தல், புதல்மறைந்து
வேட்டுவன்
புள்சிமிழ்த் தற்று.
வலியில்
நிலைமையான் வல்லுருவம், பெற்றம்
புலியின்தோல்
போர்த்துமேய்ந் தற்று
எனவும்,
வேடம்
புனையாராயினும், உண்மையில் நிற்பார்
உயர்ந்தோரே ஆவர் என்பதனை,
மழித்தலும்
நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த
தொழித்து விடின்.
எனவும்
திருவள்ளுவரும் வகுத்துக் கூறியருளினார்.
"தவம்என்று
பாய்இடுக்கி,
தலை பறித்து நின்று உண்ணும்
அவம்ஒன்று
நெறி வீழ்வான்"
வீழாமே அருளும் எனச்
சிவம்ஒன்று
நெறி நின்ற
திலகவதியார் பரவப்
பவம்ஒன்று
வினை தீர்ப்பார்
திருவுள்ளம் பற்றுவார்.
--- பெரியபுராணம். அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
தவத்தை மேற்கொண்டதாக எண்ணிக் கொண்டு, பாயை உடுத்தியும், தலைமயிரைப் பறித்தும், நின்றவாறே உணவு உண்டும் வருந்துகின்ற
அவநெறியாய சமண நெறியில் விழுந்த என் தம்பியை, அவ்வாறு விழாமல் அருள் செய்ய வேண்டும்` என்று சிவத்தையே சார்ந்து நிற்கும்
திருநெறியில் வாழும் திலகவதியார் வேண்ட, பிறவி
வயப்பட்டு உழலும் வினைகளைத் தீர்ப்பவரான சிவபெருமானும் அதனைத் திருவுள்ளம்
பற்றுவாராய்,
No comments:
Post a Comment