037. அவா அறுத்தல் - 06. அஞ்சுவது ஓரும் அறனே





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 37 -- அவா அறுத்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "நிலையாமை முதல் மெய்யுணர்தல் முடிவாய் உள்ள காரணங்கள் எல்லாம் பெற்று, அக் காரணங்களால் முத்தியை அடைவதற்கு உரிய ஒருவனை, சோர்வு காரணமாக வஞ்சித்துப் பிறப்பிலே தள்ளிக் கெடுப்பது ஆவா ஆகும். ஆதலால், அதனை அஞ்சிக் காப்பதே அறம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

     நிலையைமையை உணர்ந்து துறவறத்தில் நின்று மெய்யுணர்ந்த ஒருவனை, மறதியின் வழியாகப் புகுந்து, பிறப்பில் செலுத்திக் கெடுக்க வல்லது ஆசையே ஆகும். ஆதலால், ஆசைக்கு மிகவும் பயந்து, அதனை வராமல் காத்துக் கொள்வதே அறம் ஆகும். வாசனாமலம் தாக்கும் என்றார்.

திருக்குறளைக் காண்போம்...

அஞ்சுவது ஓரும் அறனே, ஒருவனை
வஞ்சிப்பது ஒரும் அவா.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒருவனை வஞ்சிப்பது அவா --- மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா,

     அஞ்சுவதே அறன் --- ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது.

         (ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின், அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மை வேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.)


பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக உள்ளது காண்க...

ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும்
ஆசு அற்ற நல்லடியான் ஆவானே, - ஆசை
தனை அடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனை அடிமை கொண்டவனே தான்.   ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

     ஆசைக்கு அடிமைப் பட்டவன் உலகம் முழுமைக்கும் குற்றம் அற்ற நல்ல அடிமை ஆவான். உலகத்தில் உள்ள யாவர்க்கும் என்பது குறிப்பு. ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே, உலகத்தைத் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...