திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
36 -- மெய் உணர்தல்
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம்
திருக்குறளில், "ஞான யோகங்களில்
முதிர்ச்சி உடையவர்க்கு, விருப்பு, வெறுப்பு, அஞ்ஞானம்
என்னும் மூன்று குற்றங்களினது பெயரும் கெடுமானால், அந்தக் காம வெகுளி மயக்கங்களின்
காரியமாகிய வினைப்பயன்கள் உண்டாவது இல்லை; பிறவித் துன்பமும்
இல்லை" என்கின்றார் நாயனார்.
உயிருக்கு அநாதியாக உள்ள அஞ்ஞானமும், அது பற்றி உடம்பை நான் என மதிக்கும்
அகங்காரமும்,
அது
பற்றி,
எனக்கு
இது வேண்டும் என்னும் அவாவும், அது பற்றி, பொருளினிடத்துச்
செல்லும் ஆசையும், அவ்வாசை ஈடேறாதவிடத்து உண்டாகும் கோபமும் எனக் குற்றங்கள்
ஐந்து.
அறிவினால் உண்டாகும் குற்றம், உடம்பால்
உண்டாகும் குற்றம் என்று இரண்டாக வைத்து, புந்திக் கிலேசம், காயக் கிலேசம் என்று
வைத்தார் அருணகிரிநாதப் பெருமான். திருவள்ளுவ நயானார் மூன்றாக வகுத்தார்.
அகங்காரம் அஞ்ஞானத்தில் அடங்கும். ஆவா ஆசையில் அடங்கும். அடங்கவே, காமம், வெகுளி, மயக்கம் எனக்
குற்றங்கள் மூன்று என்று கொள்ளப்பட்டது.
இடையறாத ஞானயோகங்களின் முன்னர், இக் குற்றங்கள் யாவும் தீயின் முன்னர்
பஞ்சு அழிவது போல் அழிந்தொழியும் என்றார். ஞானயோகத்தைச் சொல்லவே, பத்தியோகமும்
கொள்ளப்படும். தமிழர் சமயநெறி இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று அறிவு நெறி, மற்றது அன்பு
நெறி. இதனை வடயூலார் ஞானமார்க்கம், பத்திமார்க்கம் என்பர். இவ்விரண்டும் ஒன்று
கூடியது சன்மார்க்கம். இறைவனைச் சிவன் எனத் தேறி, அவன் அன்பு வடிவினன், அறிவு வடிவினன்
என்று கொண்டதும் அவ்வாறே. திருவள்ளுவ நாயானர் "வாலறிவன்" என்றது காண்க.
இவ்வுண்மை கண்ட நமது சான்றோர், இரண்டையும்
பிரிக்கமுடியாத,
குணகுணியாக்கி, அம்மையப்பனாக
வழிபடக் காட்டினர். அம்மை அருள் வடிவம். அப்பன் அறிவு வடிவம்.
எனவே, பத்தியோகத்தலும்
உயிருக்கு உள்ள முக்குற்றங்களும் அற்று, இறையருளைப் பெறமுடியும் என்பது
தெளிவாகும். திருநாவுக்கரசு நாயனாரின் நிலைமையை உலகுக்குக் காட்டத் திருவுள்ளம்
பற்றிய சிவபெருமான், நாயனார் திருப்புகலூரில் இருக்கும் காலத்தில், புல்
செதுக்கும்போது,
உழவாரப்
படை நுழைந்த இடம் எல்லாம் பொன்னும் நவமணிகளும் பொலிந்து இலங்கும்படிச் செய்தார்.
அப்பர் பெருமான் அவற்றைப் பருக்கைக் கற்ளாக எண்ணி, உழவாரப் படையில் ஏந்தி, அருகில் இருந்த
குளத்தில் எறிந்தார். அப்பர் பெருமான், புல்லோடும், கல்லோடும், பொன்னோடும், மணியோடும், சொல்லோடும்
வேறுபாடு இல்லாத நிலையில் நின்றார். அதற்குமேல், ஆண்டவன் அருளால்
தேவதாசிகள் மின்னுக்கொடி போல, வானில் இருந்து வந்து ஆடல், பாடல் முதலியவற்றால், சுவாமிகளின்
நிலையைக் குலைக்க முயன்றார்கள். சுவாமிகளின் சித்த நிலை சிறிதும் திரியவில்லை.
திருத்தொண்டில் உறுதிகொண்டு, "பொய்ம்மாயப் பெருங்கடலுள் புலம்பா நின்ற
புண்ணியங்காள்,
தீவினைகாள்"
என்று தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடி அருளினார். தேவதாசிகளும் சுவாமிக்குச்
சிவமாகவே கணப்பட்டார்கள். அவர்கள் சுவாமிகளை வணங்கி அகன்றார்கள். "கேடும்
ஆக்கமும் கெட்ட திருவினராகவும், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்
அருளாளராகவும்" அப்பர் பெருமான் விளங்கினார். பத்திநெறியில் நின்ற
நாயனாரிடத்து,
காம, வெகுளி, மயக்கம் ஆகிய
முக்குற்றங்களும் அடியோடு ஒழிந்தன.
திருக்குறளைக்
காண்போம்....
காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்
நாமம்
கெட, கெடும் நோய்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம்
கெட --- ஞான யோகங்களின்
முதிர்ச்சியுடையார்க்கு விழைவு,
வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள்
மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான்,
நோய் கெடும் --- அவற்றின் காரியமாய
வினைப்பயன்கள் உளவாகா.
(அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும்
அவாவும், அதுபற்றி
அப்பொருட்கண் செல்லும் ஆசையும்,
அதுபற்றி
அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும்,
என
வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக் கண்ணும்
அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின்
முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு
உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக்
கொடுத்தார் காரியமாகிய வினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல்
மெய்உணர்வின் பயன் ஆகலின், இவை இரண்டு பாட்டும்
இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும்
அதுகொண்ட வினைப் பயன்களுமே என்பது பெற்றாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட
மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர்
முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
காரிகையாரைப் பொன்னைக்
காட்டவும், காமாதி மும்மைச்
சோர்வு இழந்து உய்ந்தார்
அரசர், சோமேசா! - ஓருங்கால்
காமம் வெகுளி மயக்கம்
இவைமுன்றன்
நாமங் கெடக்கெடு
நோய்.
இதன் பொருள்---
சோமேசா! ஓருங்கால் --- ஆராய்ந்து அறியும் இடத்து,, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம்
கெட --- ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையார்க்கு விருப்பு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள்
மூன்றனுடைய பெயரும் கூடக் கெடுதலான், நோய்
கெடும் --- அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா.
அரசர் ---
திருநாவுக்கரசு நாயனார், காரிகையாரை --- அரம்பை மாதரையும், பொன்னை --- பொன்னையும், காட்டவும் --- காட்டுதலும், காமாதி மும்மைச் சோர்வு --- காமம்
முதலிய முக்குற்றங்களின், இழந்து உய்ந்தார் ---
நீங்குதலான் பிழைத்தார் ஆகலான் என்றவாறு.
காரணமான
அக்குற்றங்களின் நீங்கினார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின், அவருக்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல்
மெய்யுணர்வின் பயனாம்.
"பஞ்சக் கிலேசத்தை
மூன்றாய் அடக்கிக் காமம் வெகுளி மயக்கம் என்றார் வள்ளுவரும்" (சிவஞானபோதம் -
சூத்.2 - அதி.2) என்றது சிவஞான மாபாடியம்.
திருநாவுக்கரசு
நாயனார் பூம்புகலூர்ப் பெருமானை நாள்தோறும் தொழுது உழவாரத் திருப்பணி செய்து
வரும்நாளில், பெருமான் நாயனாருடைய
நன்னிலைமையை உலகத்தார்க்குக் காட்டவேண்டி, உழவாரப்படை நுழைந்த இடமெல்லாம் பொன்னும்
நவமணியும் பிராகசிக்கும்படி செய்தருளினார். நாயனார் அவற்றைப் பருக்கை எனவே மதித்து, உழவாரப் படையின் ஏந்தித்
திருக்குளத்தில் எறிந்தார். அதன்பின்
அரம்பையர்கள் வந்து ஆடல் பாடல்களாலும் பிற செய்கைகளாலும் மயக்கியும், நாயனார் மயங்காமை கண்டு அவரை வணங்கிச்
சென்றார்கள்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...
காமத்துள்
அழுந்தி நின்று
கண்டரால் ஒறுப்புஉண் ணாதே
சாமத்து
வேதம் ஆகி
நின்றதுஓர் சயம்பு தன்னை
ஏமத்தும்
இடை இராவும்
ஏகாந்தம் இயம்பு வார்க்கு
ஓமத்துள்
ஒளியது ஆகும்
ஒற்றியூர் உடைய கோவே. --- அப்பர்.
இதன்
பொழிப்புரை
---
உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும்
ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி
நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த
யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு
ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் .
காமம்
வெகுளி மயக்கம் இவைகடிந்து
ஏமம்
பிடித்து இருந்தேனுக்கு எறிமணி
ஓம்
எனும் ஓசையின் உள்ளே உறைவதோர்
தாமம்
அதனைத் தலைப்பட்ட வாறே. --- திருமந்திரம்.
இதன்
பொழிப்புரை ---
`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான்
முற்றக் கடிந்து, எனக்குப் பாதுகாவலாய்
உள்ள பொருளை நோக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை
போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும்
எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை
நான் அடைந்தேன். இது வியப்பு.
குறிப்புரை : காமம் - விருப்பம்.
வெகுளி - சினம்; வெறுப்பு. மயக்கம் -
அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் ஆக்கியும் குற்றத்தை
`ஐந்து` என்றல் சாங்கிய நூல் முறைமை. அந்த
ஐந்தையும் அந்நூலார் `பஞ்சக்கிலேசம்` என்பர். அந்த ஐந்தையே திருவள்ளுவர். ``காமம், வெகுளி, மயக்கம்``* என மூன்றாக்கிக் கூறியதாகப் பரிமேலழகர்
உரைத்தார். எனினும், தமிழ் நூலார் மூன்றாகக்
கூறுவதையே சாங்கியர் ஐந்தாக விரித்தனராவர்.
தீமை
உள்ளன யாவையும் தந்திடும்,
சிறப்பும்
தோம்இல்
செல்வமும் கெடுக்கும், நல் உணர்வினைத் தொலைக்கும்,
ஏம
நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்
காமம்
அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். --- கந்தபுராணம்.
இதன்
பொருள் ---
ஆராய்ந்து அறிந்தால், தீமைகள் என்று எவை எவை உள்ளனவோ, அவை அனைத்தையும் தருவதும், உயிருக்கு உள்ள
சிறப்பையும் கெடுப்பதும், குற்றமற்ற செல்வத்தையும் கெடுப்பதும், நல்ல உணர்வுகைள
அழிப்பதும்,
உயிர்களை, பாதுகாவலாக
உள்ள நல்ல நெறியில் செல்லவிடாமல் தடுத்து, நரகத் துன்பத்தில்
செலுத்தவதும் ஆகிய காமத்தை விட வேறு ஒரு பகை இந்த உலகத்தில் உள்ளதா? இல்லை.
ஈட்டுறு
பிறவியும் வினைகள் யாவையும்
காட்டியது
இனையது ஓர் காமம் ஆதலின்,
வாட்டம்இல்
புந்தியால் மற்று அந் நோயினை
வீட்டினர்
அல்லரோ வீடு சேர்ந்து உளார். --- கந்தபுராணம்.
இதன்
பொருள் ---
உயிரானது எடுத்து வந்த பலப்பல பிறவிகளையும், அப் பிறவிகள் தோறும் ஈட்டிய வினைகளையும்
தருவதற்குக் காரணமாக அமைந்தது காமமே ஆகும். ஆகையால், அதனை மாற்றி, வீட்டின்பத்தை
விரும்புவோர்,
மெலிவில்லாத
தெளிந்த தமது அறிவினால், அத் துன்பத்தை அறுத்தவர்களே.
முன்
துற்றும் துற்றினை நாளும் அறம்செய்து
பின்
துற்றுத் துற்றுவர் சான்றவர்; -அத்துற்று
முக்குற்றம்
நீக்கி முடியும் அளவு எல்லாம்
துக்கத்துள்
நீக்கி விடும். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து
பின் துற்றுத் துற்றுவர் சான்றவர் --- முதலில் உண்ண எடுக்குங் கவளத்தை நாடோறும்
பிறர்க்கு உதவி செய்து அடுத்த களவத்தைப் பெரியோர் உண்ணுவர்; அத் துற்று --- பிறர்க்கு உதவி செய்த
அந்தக் கவளம், முக்குற்றம் நீக்கி
முடியுமளவெல்லாம் துக்கத்துள் நீக்கி விடும் --- அப் பெரியோருடைய காம வெகுளி
மயக்கமென்னும் மூன்று குற்றங்களையுங் கெடுத்துப் பிறவி தீருங் கால முழுமையும்
அவரைத் துன்பத்தினின்று நீக்கிவிடும்.
கட்டும்
வீடு அதன் காரணத்தது
ஒட்டித்
தருதற்கு உரியோர் இல்லை,
யாம்மேல்
உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம்
வெகுளி மயக்கம் காரணம்.... --- மணிமேகலை.
இதன்
பதவுரை ---
கட்டும் வீடும் --- கட்டும் வீடுமாகிய
இரண்டினையும் ; அதன் காரணத்ததும் ---
ஒவ்வொன்றன் காரணத்தினையும் ; ஒட்டித் தருதற்கு
உரியோர் இல்லை --- கூடியிருந்து பெறுவித்தற்கு உரியவர் பிறர் யாருமில்லை ; யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் ---
யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்கள் எல்லாவற்றிற்கும்; காமம் வெகுளி மயக்கம் காரணம் ---
காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றுங் காரணமாம்.
கட்டு என்பது துக்கமும் அதற்கேதுவும் என்ற
இவற்றோடு பிணிப்புண்டிருத்தல். வீடு, இன்பமும், அதற்குரிய ஏதுவுமாம். அதன் காரணத்தது
என்பதை இரண்டோடும் இயைக்க. கட்டும் வீடும் எய்துதற்குப் பிறர் காரணரல்லர்; அவரவரே காரணரென்பது கருத்து. கட்டும்
அதனைப் பயக்கும் ஏதுவுமாகிய இரண்டிற்கும் அடிப்படையான காரணம் காமம் வெகுளி மயக்கங்களாதலின், "மேலுரைத்த
பொருள்கட்கெல்லாம் காமம் வெகுளி மயக்கங் காரணம்" என்றார். திருவள்ளுவரும், "காமம் வெகுளி மயக்க
மிவைமூன்றன், நாமங் கெடக்கெடும்
நோய்" (குறள். 360) என்றல் காண்க.
வீடுபேற்றினைப் புதல்வராற் பெறலாமென்பாரை மறுத்தற்கு, "ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை" என்றார்.
‘தூமகேது புவிக்கு எனத்
தோன்றிய
வாம
மேகலை மங்கையரால் வரும்
காமம்
இல்லை எனின், கடுங் கேடு எனும்
நாமம்
இல்லை; நரகமும் இல்லையே.’
--- கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப் படலம்.
இதன்
பதவுரை ---
புவிக்கு --- இந்த உலகில் உள்ளவர்க்குத் (தீமை
விளைக்கத் தோன்றும்); தூமகேது என --- வால் நட்சத்திரம் என்று சொல்லும்படி; தோன்றிய --- பிறந்துள்ள,வாம மேகலை மங்கையரால் --- அழகிய மேகலாபரணம் அணிந்த பெண்களால்; வரும் --- உண்டாகின்ற; காமம் இல்லை எனின்-- - காம நோய்மட்டும் இல்லையானால்; கடும் --- கொடிய; கேடு எனும் நாமம் இல்லை
--- கெடுதி என்னும் சொல்லே இல்லையாகும்; நரகமும் இல்லையே --- நரகத்
துன்பமும் இல்லை.’
பெருங்கேடு விளைதற்கு உற்பாதம் தூமகேது. அதுபோல
மங்கையரும் கேடு விளைப்பர் என்றவாறாம்.
காமம் கேட்டிற்கும் நரகிற்கும் வாயில்
என்றார்.
‘காமத்தால் வருவன நேரே
பகையல்ல ஆயினும் ஆக்கம் சிதைத்தல்,
அழிவு
தலைத்தருதல் என்னும் தொழில்களால் பகையோடு ஒத்தலின் பகைப்பாற்படுவனவாம்’ என்னும் திருக்குறள் ‘பெண்வழிச் சேறல்’அதிகார முகவுரையில் பரிமேலழகர் உரைத்தனவற்றை இங்குக்
கருதுக. இனிப் பின்னர்க் கிட்கிந்தா
காண்டம் அரசியற் படலத்து ‘இராமன் வசிட்டன்பால் கேட்டறிந்தனவற்றைச் சுக்கிரீவனுக்கு உரைத்தமை’ “மங்கையர் பொருட்டால் எய்தும் மாநதாக்கு மரணம் என்றல், சங்கை இன்று உணர்த்தி...அங்கவர்
தங்களாலே
அல்லலும் பழியும் ஆதல், எங்களின் காண்டி” (4127) என்ற பாடலாற் கண்டு இதனுடன் இணைத்துக் கருதுக.
‘மைந்த ! நம் குல மரபினில்
மணி முடி வேந்தர்,
தம்தம்
மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க,
ஐந்தொடு
ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி,
உய்ந்து
போயினர்; ஊழி நின்று எண்ணினும்
உலவார்.
--- கம்பராமாயணம்,
மந்திரப் படலம்.
இதன்
பதவுரை ---
மைந்த --- மகனே! நம்குல மரபினில் மணிமுடி வேந்தர்
--- நமது
சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய முடிசூடி ஆண்ட வேந்தர்கள்; தம் தம்மக்களே --- தம்
தம் பிள்ளைகளே ; கடன்முறை நெடு நிலம் தாங்க --- முறைப்படி
நெடிய உலகை அரசர்களாகிக் காப்பாற்ற;
ஐந்தொடு
ஆகிய முப்பகை --- ஐந்துபொறிகளால் உண்டாகிய மூன்று பகைகளையும்; மருங்கு
அற அகற்றி --- வேரோடு நீக்கி; உய்ந்து போயினர் --- பிழைத்துப்
போனார்கள்; ஊழிநின்று எண்ணினும் --- அவ்வாறு
உய்ந்தவர்களை
ஊழிக்காலம் இருந்து எண்ணினாலும்; உலவார் --- குறையார் (எண்ணற்றவர் என்றவாறு)’
ஐந்தொடு ஆகிய முப்பகை --- ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் பகைகள்.
கொடு
நாலொடு இரண்டு குலப்பகை குற்றம் மூன்றும்
சுடுஞானம்வெளிப்பட
உய்ந்த துய்க்கு இலார்போல்
விடநாகம்
முழைத்தலை விம்மல் உழந்து,வீங்கி,
நெடுநாள்,பொறை உற்ற உயிர்ப்பு
நிமிர்ந்து நிற்ப.
--- கம்பராமாயணம், கடல்தாவு படலம்.
இதன்
பதவுரை ---
நாலொடு இரண்டு கொடும் குலப் பகை --- ஆறு வகையான
கொடிய பரம்பரையாக வரும் பகையையும்;
குற்றம்
மூன்றும் --- மூன்று குற்றத்தையும்; சுடுஞானம் --- அழிக்கின்ற
ஞானமானது; வெளிப்பட --- ஆன்மாவிலே
தோன்ற; உய்ந்த துய்க்கு இலார்
போல் --- தப்பிப் பிழைத்த பற்றற்ற ஞானிகளைப் போல; முழைத்தலை நெடுநாள் விம்மல் உழந்து --- மலைக்
குகைகளில் நீண்ட நாட்கள் பொருமி வருந்தி; வீங்கி பொறையுற்ற ---
உடல் பருத்து அடங்கிக் கிடந்த; விடநாகம் --- விடப் பாம்புகள்; உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப --- பெருமூச்சு
வெளிப்பட்டு நிலைக்க;
மலையின் குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையான பகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப்
போல விடுதலை பெற்று உயிர்த்தன. பகை ஆறு --- காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பவை. முக்குற்றம்
--- ஐயம், திரிபு, அறியாமை.
காமமும்.
வெகுளியும். களிப்பும். கைத்த அக்
காமுனி
இவண் அடைந்தனன்கொல், - கொவ்வை வாய்த்
தாமரை
மலர் முகத் தரள வாள் நகைத்
தூம
மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?”
--- கம்பராமாயணம், திருவவதாரப் படலம்.
இதன்
பதவுரை ---
காமமும். வெகுளியும் களிப்பும் கைத்த --- காமம்.
வெகுளி. மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய; அக்கோ முனி --- முனிவர்களுக்கெல்லாம் தலைவனாகிய அந்தக் கலைக்கோட்டு முனிவன்; கொவ்வை வாய். தாமரை மலர்முக
தரள வாள் நகை. தூம மென் குழலினர் --- கொவ்வைக் கனி போன்ற வாயையும். தாமரை மலர் போன்ற
முகத்தையும் முத்துப் போன்ற ஒளி பொருந்திய பற்களையும் அகிற் புகை ஊட்டிய
மென்மையான குழலையும் உடைய அப்பெண்கள் புணர்த்த சூழ்ச்சியால் --- செய்த சூழ்ச்சியினால்; இவண் அடைந்தனன்
கொல் --- இங்கு வந்து சேர்ந்தனன் போலும்.
காமம்: ஆசை. வெகுளி: கோபம். களிப்பு: மயக்கம்.
ஒரு பொருள் மீதெழும் ஆசையும். அப்பொருள் கிடைக்காத போது எழும் சினமும். இவைகளால் மனநிலை மாறுபட்டு
அடையும் மயக்கமும் ஆகியவற்றை வெறுத்து நீத்தவன் என்பதால் "காமமும்...கோமுனி" என்றார். முனிவனை அப்பெண்கள்
இனிய சொற்களைக் கூறியும். முகம் மலர்ந்து புன்னகை
காட்டியும். வணக்கத்தாலுமே அழைத்து வந்தனர் என்பது
தோன்ற, வாய், முகம், நகைகளைச் சிறப்பித்தார் எனலாம்.
திக்கு
உறும் செறி பரம் தெரிய நின்ற, திரள்
பொன்
கைக்
குறுங் கண் மலைபோல், குமரர் காமம் முதல் ஆம்
முக்
குறும்பு அற எறிந்த வினை வால், முனிவனைப்
புக்கு
இறைஞ்சினர் அருந்தவன் உவந்து புகலும்..
--- கம்பராமாயணம், விராதன் வதைப் படலம்.
இதன்
பதவுரை ---
திக்கு உறும் --- எட்டுத் திசைகளிலும் பொருந்திய; செறிபரம் --- மிகுந்த சுமையை; தெரிய நின்ற --- இவ்வளவு என அறியுமாறு தாங்கி
நின்ற, திரள் பொன்கை --- திரண்ட
அழகிய துதிக்கையையும், குறுங்கண் --- சிறிய கண்களையும்
உடைய; மலைபோல் குமரர் --- யானைகள்
போன்ற இராமலக்குவர்; புக்கு --- அம்முனிவர்
உறையுள் புகுந்து; காமம் முதல் ஆம் முக்
குறும்பு அற எறிந்த --- காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்று
குற்றங்களையும்
அடியோடு கடிந்த; வால் வினை முனிவனை ---
தவ வினை உடைய தூய்மையான செயல்களை உடைய அத்திரி முனிவனை; இறைஞ்சினர் --- வணங்கினார்கள்; அருந்தவன் --- அம்முனிவன்; உவந்து புகலும் --- மனமகிழ்ந்து சொல்வான்.
திக்குறு மலை என்பது எட்டுத் திசைகளிலுள்ள யானைகள். முக்குறும்பு - காமம் வெகுளி மயக்கம். (குறள்
360). அம்மூன்று குற்றங்கள் இல்லாதவன்.
கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார் - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என்செய்யார்,
காமம் கதுவப்பட்டார். --- நீதிநெறி
விளக்கம்.
இதன் பொருள் ---
காமத்தால் பற்றப்பட்டவர்கள், கொலைபுரியப் பயப்படார், பொய் சொல்லக் கூசார், தம்
பெருமையையும் பாதுகாவார், களவு செய்தல் ஒன்றோ! அதற்கு மேலும் மற்றுமுள்ள பலவகையான தீச்செயல்களும்
செய்வார், இந்தக் காமம், பழியொடு
பாவமாம் என்றும் நினையார், அங்ஙனமாயின் அவர் வேறு யாதுதான் செய்யமாட்டார்? எல்லாத் தீச்செய்கைகளும் செய்வார்.
அணங்குநோய் எவர்க்குஞ் செய்யும்
அனங்கனால் அலைப்புண்டு, ஆவி
உணங்கினார்
உள்ளம் செல்லும்
இடன் அறிந்து ஓடிச்
செல்லா
குணம்
குலன் ஒழுக்கம் குன்றல்,
கொலைபழி பாவம் பாரா,
இணங்கும்
இன்னுயிர்க்கும் ஆங்கே
இறுதி வந்து உறுவது எண்ணா. --- தி.வி.புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன்
பதவுரை ---
எவர்க்கும் அணங்கு நோய் செய்யும் அனங்கனால் அலைப்புண்டு
--- யாவர்க்குங் காமநோயைச் செய்கின்ற மாரனாலே அலைக்கப்பட்டு, ஆவி உணங்கினார் உள்ளம் --- உயிர்
சோர்ந்தவர்களின் உள்ளங்கள், செல்லும் இடன்
அறிந்து ஓடிச் செல்லா --- செல்லுதற்குரிய இடத்தினை அறிந்து சென்று சேரா; குணம் குலன் ஒழுக்கம் குன்றல் ---
குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும், கொலை
பழி பாவம் --- கொலையும் பழி பாவங்களும் உண்டாதலையும், பாரா --- பார்க்கமாட்டா; இணங்கும் இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி
வந்து உறுவது எண்ணா --- பொருந்திய தம் இனிய உயிர்க்கும் அவ்விடத்தே அழிவு
வருதலையும் எண்ணமாட்டா.
கள்
உண்டல் காமம் என்ப
கருத்து அறை போக்குச்
செய்வ,
எள்
உண்ட காமம் போல
எண்ணினில் காணில்
கேட்கில்
தள்ளுண்ட
விடத்தின் நஞ்சந்
தலைக்கொண்டால் என்ன ஆங்கே
உள்
உண்ட வுணர்வு போக்காது
உண்டபோது அழிக்கும்
கள்ளூண். --- தி.வி.புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன்
பதவுரை ---
கள் உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச் செய்வ
--- கள்ளுண்ணலும் காமமும் என்று சொல்லப்படும் இரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன; கள் ஊண் --- (அவற்றுட்) கள்ளுணவானது, எள்ளுண்ட காமம் போல --- இகழப்பட்ட
காமத்தைப் போல, எண்ணினில் காணில்
கேட்கில் தள்ளுண்ட இடத்தில் --- எண்ணினும் காணினும் கேட்கினும் தவறுதலுற்ற
இடத்தினும், நஞ்சம் தலைக்
கொண்டால் என்ன --- நஞ்சு தலைக்கேறியது போல, ஆங்கே --- அப்பொழுதே, உள் உண்ட உணர்வு போக்காது --- உள்ளே
பொருந்திய அறிவினைப் போக்காது, உண்ட போது அழிக்கும் ---
உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும்.
கள்ளுண்டலும் காமமும் உணர்வினை இழப்பித்தலால்
ஒக்கும்; எனினும், கள் ஊண் காமம் போல உணர்வு போக்காது உண்டபோது
அழிக்கும்.
காமமே கொலை கட்கு எல்லாம்
காரணம்; கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம்
காரணம்; கூற்றம் அஞ்சும்
காமமே கள் உண்டற்கும்
காரணம்; ஆதலாலே
காமமே நரக பூமி
காணியாக் கொடுப்பது என்றான்.
--- தி.வி.புராணம், மாபாதகம் தீர்த்த படலம்.
இதன்
பதவுரை ---
காமமே கொலைகட்கு எல்லாம் காரணம் --- காமமே கொலைகளுக்கு
எல்லாம் காரணமாயுள்ளது; கண்ணோடாத காமமே
களவுக்கு எல்லாம் காரணம் --- கண்ணோட்டமில்லாத காமமே களவு அனைத்திற்குங் காரணமாகும்; கூற்றம் அஞ்சும் காமமே கள் உண்டற்கும்
காரணம் --- கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும்; ஆதலாலே, காமமே நரகபூமி காணியாக் கொடுப்பது
என்றான் --- ஆதலினாலே, காமமொன்றே
(அவையனைத்தாலு நேரும்) நரக பூமியைக்
காணியாட்சியாகக்
கொடுக்க வல்லது என்று கூறியருளினான்.
காமவுட்
பகைவனுற் கோபவெங் கொடியனும்
கனலோப முழு மூடனும்
கடுமோக வீணனும் கொடு மதமெனும் துட்ட
கண் கெட்ட ஆங்காரியும்
ஏமமறு மாச்சரிய விழலனும் கொலையென்
றியம்பு பாதகனுமாம் இவ்
வெழுவரும் இவர்க்குற்ற வுறவான பேர்களும்
எனைப்பற் றிடாம லருள்வாய்
சேமமிகு மாமறையி னோமெனும் மருட்பதத்
திறனருளி மலய முனிவன்
சிந்தனையின் வந்தனை யுவந்த மெய்ஞ்ஞானசிவ
தேசிக சிகாரத்னமே
தாமமொளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே. --- திருவருட்பா.
இதன்
பொருள் ---
பெரு நகரமாக விளங்கும் சென்னைக் கந்தகோட்டத்துள்
இலங்கும் கோயிலில் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளே, தண்ணிய ஒளி திகழும் தூய மணிகளில் செம்மைச்
சைவ மணியாகிய ஆறுமுகம் கொண்ட தெய்வமாகிய மணியே, நலம் மிக்க பெரிய வேதங்களின் ஓம் என வழங்கும்
அருள் மொழியின் பொருட்கூறுகளை மலய மலைமேல் தங்கும் அகத்திய முனிவர்க்கு அருளிச் செய்து
அவன் சிந்தனைக்கண் வைத்துச் செய்த வழிபாட்டுக்கு உவந்தருளிய மெய்ஞ்ஞான சிவாசாரியர்கட்கு
முடிமணியாகும் பெருமானே, காமம் என்னும் உட்பகைவனும், கோபம் என்னும் கொடியவனும், கனத்த லோபம் என்னும் முழுத்த மூடனும், மிக்க மோகம் எனப்படும் வீணனும், கொடிய மதம் எனப்படும் துட்டத்தனமும் குருட்டுத்
தன்மையும் உடைய ஆங்கார உருவினனும்,
காப்பற்ற
மாற்சரியம் என்னும் விழலனும், கொலை எனப்படும் பாதகனுமாகிய
எழுவரும் இவர்கட்கு உறவினரான பிறரும் என்னைச் சூழ்ந்து தம் கைப்பற்றிக் கொள்ளாதபடி
அருள் செய்தல் வேண்டும்.
No comments:
Post a Comment