037. அவா அறுத்தல் - 01. அவாஎன்ப எல்லா






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 37 -- அவா அறுத்தல்

     அதாவது, முன் இருந்த துன்பங்களையும், இனிச் சாரவேண்டிய துன்பங்களையும் அறுத்தவர்க்கு, நடுவிலே, பிராரத்த வினை காரணமாக நின்ற உடம்பும், அதற்கு ஏற்ற வினைப்பயன்களும் உள்ளன. மேலே கூறியபடி, நிலையாமையை உணர்ந்து துறவு நெறியில் நின்று இருந்தாலும், பழைய வாசனை காரணமாக புலன்களின் மீது ஆசை செல்லும். அதுவும் பிறவிக்குக் காரணமாக அமைவதால், அந்த நினைவையும் இடைவிடாத கடவுள் உணர்வால் அறுக்கல் வேண்டும் என்றது.

     பெருங்காயம் இருந்த குப்பியானது, அதனுள் இருந்து பெருங்காயத்தை எடுத்து, நன்றாகக் கழுவியபோதும், அதனுள் காயத்தின் வாசனை சிறிது காட்டுவது போல், புலன்களின் வழியாகச் சென்ற நினைவும் பிறவிகள் தோறும் விடாது இருப்பதால், மீண்டும் புலன்களில் இச்சை செல்லும். அதனை அறுத்தற்கு மெய்ப்பொருள் உணர்வு வேண்டும். அதனாலேயே, மெய்யுணர்வு என்னும் அதிகாரத்திற்குப் பின்னர் அவா அறுத்தல் என்னும் இவ்வதிகாரம் வைக்கப்பட்டது.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "உயிர்கள் எல்லாவற்றிற்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்புக்கு, அது கொள்ளும் அவாவே காரணம் ஆகும் என்று நூலோர் சொல்லுவர்" என்கின்றார் நாயனார்.

     ஒருவனுக்கு உயிர் உடம்பை விட்டு நீங்கும் காலத்தில், அவ்வுயிரினடத்து இனி வரப்போகும் வினையும், அவ்வினையினால் உண்டாகும் கதிக்கான நிமித்தங்களும், அக் கதியில் ஆசையும் வந்து முறையே தோன்றவும், தோன்றிய அக்காலத்து நின்று அறிவினை ஆசையானது மறைக்கவும், அறிவு மறைந்த காலத்தில், அவ்வாசையானது அவ்வுயிரை வந்து உதித்த கதியினிடத்துக் கொண்டு செலுத்தும். எனவே, அந்த ஆசையானது பிறப்பினை உண்டாக்கும் விதை போல உள்ளது. ஆகவே, புலன்களின் வழியே மனத்தைச் செலுத்துவதால் உண்டாகும் ஆசையானது, உண்டாகா வண்ணம் நீக்குதலே பிறப்பை அறுத்தல் ஆகும்.

     இது, எல்லாச் சமயங்களுக்கும் ஒத்த கருத்து என்பதால் 'நூலோர் சொல்லுவர்' எனப்பட்டது.

திருக்குறளைக் காண்போம்...

அவாஎன்ப, எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து --- எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து:

     அவா என்ப --- அவா என்று சொல்லுவர் நூலோர்.

         (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும், அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டு செல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்' என்றும்,  இஃது எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும் கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல் கூறப்பட்டது.)


     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

சாரங்கம் மீது சடபரதன் சிந்தைவைத்துச்
சீரங்கம் பெற்றான், சிவசிவா! - நேரும்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.

சாரங்கம் - மான். சடபரதர் - ஒரு முனிவர். வளர்த்த மான்மேல் ஆசையால் மீண்டும் மானாகப் பிறந்தனர்.

     ஜடபரதர்,  பரதன் என்ற பெயரில் நாடாண்ட மன்னர். காட்டில் தவவாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தார். தவ வாழ்க்கையில், காட்டில் தாயை இழந்த மான் குட்டியை எடுத்து வளர்த்தார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்வரை அதன் நினைவாகவே இருந்து தவவாழ்வினை மறந்தார். மரணத் தருவாயிலும் பரதர் மான் குட்டியின் நினைவாகவே இறந்தார். இதனால் மறுபிறவியில் பரதர் மானாக பிறந்தார். தான் மானாக பிறந்த காரணத்தை உணர்ந்தார் பரதர், அதற்கு அடுத்த பிறவியில் பிறக்கும் போதே ஆத்ம ஞானியாகவே பிறந்து வளர்ந்தார். நீண்ட ஜடாமுடியுடன் என்றும் காட்சியளித்ததால் மக்கள் அவரை ஜடபரதர் என்றழைத்தனர். ஒரு நாள் சௌவீர மன்னனின் பல்லகைத் தூக்கும் நால்வரில் ஒருவராக ஜடபரதர் இருந்தார். பல்லக்கு நிலையின்றி தடுமாறி செல்வதற்கு காரணமானவர் ஜடபரதர் என்று எண்ணிய மன்னர், ஜடபரதரைப் பார்த்து உடல் பருத்திருக்கும் உன்னால் இந்த பல்லக்கை தூக்க முடியவில்லையா? என வெகுண்டார்". அதற்கு ஜடபரதர் பல்லக்கை நான் சுமக்கவில்லை, இந்த உடல்தான் சுமக்கிறது. அதுபோல உங்கள் ஆத்மா சுமக்கப்படவில்லை; உடலே சுமக்கப்பட்டது என்றார். ஜடபரதரின் பதிலுரையை புரிந்து கொண்ட மன்னன் சௌவீரன், ஜடபரதர் மிகப்பெரிய ஆத்ம ஞானி என்றுணர்ந்து, அவர் தாள் பணிந்து, தன் பிழை பொறுத்தருள வேண்டினார்.


     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்
காமக் காடு மூடி, தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறு அலைத்து ஒழுக,
இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர,
இச்சை வித்து உகுத்துழி, யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,
பொய் என் கவடுகள் போக்கி, செய்யும்
பாவப் பல்தழை பரப்பி, பூ எனக்
கொடுமை அரும்பி, கடுமை மலர்ந்து,
துன்பப் பல்காய் தூக்கி, பின்பு
மரணம் பழுத்து, நரகிடை வீழ்ந்து,
தமக்கும் பிறர்க்கும் உதவாது
இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே.
                                      ---  திருவிடைமருதூர் மும்மணிக் கோவை.

இதன் பொருள் ---

     மனமாகிய கொல்லையைப் பயனற்ற பாழ்நிலம் ஆக்கி,  காமம் என்னும் காடு மூடியதால், தீயவற்றைச் செய்கின்ற ஐம்புல வேடர்கள் வழிப்பறித்து இழுக்க, சிற்றின்பமாகிய கானல் நீரானது கைக்கு எட்டாது ஓட, கல்வி அறிவு இல்லாத உணர்வு என்கின்ற, மான் திரிந்து அலைய, ஆசை என்கின்ற விதை உதிர்ந்த காலத்து, நான் என்கின்ற, நஞ்சினை உடைய மரமானது முளைத்து, பொய் என்கின்ற பெரும் கிளைகளைப் போக்கி, செய்யப்பட்டு வருகின்ற பாவம் என்னும் பல தழைகளைப் பரப்பி, பூ எனக் கூறும்படி கொடுமையான அரும்புகளை விட்டு, தீமை என்னும் மலர் மலர்ந்து, துன்பம் என்னும் பல காய்களைத் தாங்கி, அதன் பின்பு மரணம் என்னும் கனியானது பழுத்து, நரகம் என்னும் நிலத்தில் விழுந்து, தமக்கும் பிறர்க்கும் பயன்படாது கழிந்து அழிகின்று குணம் உடையோரை இந்த உலகம் பெற்று இருக்கின்றது.

    
அல்கா நல்குரவு அவா எனப் படுமே
ஐயுணர்வு அடக்கிய மெய்யுணர்வு அல்லதை
உவாக்கடல் சிறுக உலகெலாம் விழுங்கும்
அவாக்கடல் கடத்தற்கு அரும்புணை இன்றே, அதனால்
இருபிறப்பு இயைந்த ஒருபிறப்பு எய்தும்
    
நான்மறை முனிவர் மூவாயிரவரும்
ஆகுதி வழங்கும் யாக சாலையில்,
தூஉம் நறும்புகை வான் உற எழுவது
எழுநாப் படைத்த முத்தீக் கடவுள்
கடல் அமிழ்து உமிழ்ந்தாங்கு அவி அமிழ்து உண்ண
    
வரும், பெருந்தேவரை வானவர் கோனொடும்
விருந்து எதிர் கொள்க என விடுத்தது கடுக்கும்
வலன் உயர் சிறப்பின் புலியூர்க்கிழவ! நின்  
அருள் பெற்று உய்தற்கு உரியன் யான் எனில், 
பல் உயிர்த் தொகுதியும் பவக்கடல் அழுந்த  
அல்லல் செய்யும் அவா எனப்படும்  வ்  
வறுமையினின்றும் வாங்கி  
அறிவின் செல்வம் அளித்து அருள் எனக்கே.  ---  சிதம்பர மும்மணிக் கோவை.

இதன் பொருள் ---

     "ஆசையே குறையாத வறுமை" என்பது.  புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகிய அறிவை ஒடுக்கிய மெய்யுணர்வு என்னும் உண்மை ஞானத்தால் அல்லது பௌர்ணமியில் பொங்கும் பெருங்கடலும் சிறுகுமாறு, உலகையே விழுங்கிக் கொண்டு இருக்கும் அவா என்னும் பெருங்கடலைக் கடத்தற்கு உரிய புணை இல்லை. ஆதலால்,  உபநயனத்திற்கு முன் ஒருபிறப்பும், அதன் பின்னராகிய ஒரு பிறப்பும் உடைய இருபிறப்பாளர் ஆகிய, தில்லையில் உள்ள அந்தணர் மூவாயிரவர் புரியும் வேள்வியில் வான் உற எழும் புகையானது அக்கினி தேவன், அவி உண்ணவரும் தேவர்களை விருந்தாக எதிர்கொள்ள விடுத்தது போல விளங்கும் பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லையில் திருநடம் புரியும் பெருமானே! உனது திருவருள் பெற்று உய்தி பெறுதற்கு உரியவன் அடியேனாக இருப்பின், பல உயிர்களின் கூட்டமும் பிறவியாகிய பெருங்கடலில் அழுந்துமாறு துன்பத்தைப் புரிகின்ற, அவா என்னும் வறுமையில் இருந்து என்னு விடுவித்து, மெய்யறிவு ஆகிய செல்வத்தை எனக்கு அளித்து அருள்வாயாக.


இருளாய்க் கழியும் உலகமும், யாதும்
தெரியாது உரைக்கும் வெகுள்வும், - பொருளல்ல
காதல் படுக்கும் விழைவும், இவைமூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு.    ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     இருளாய்க் கழியும் உலகமும் --- (அறிவில்லாதவர்க்கு இடமாய் அதனால்) இருட்டாய் நாள் கழிக்கின்ற இடமும், யாதும் தெரியாது உரைக்கும் வெகுள்வும் --- (நன்மை தீமைகளில்) ஒன்றும் தெரியாமல் சொல்கின்ற கோபமும்; பொருள் அல்ல காதல் படுக்கும் விழைவும் --- நற் பொருள் அல்லாதவற்றில் அன்பு வைக்கச் செய்யும் விருப்பமும்; இவை மூன்றும் வாழும் உயிர்க்குப் பேதைமை --- ஆகிய இம் மூன்றும் உடலோடு கூடி வாழ்கின்ற உயிர்கட்கு அறியாமையைத் தருவனவாம்.

         அறிவில்லாதவர் இருக்கும் இடமும், நன்மை தீமை தெரியாது கோபித்து உரைப்பதும், தீயவற்றில் செல்லும் விருப்பமும் மேன்மேலும் அறியாமைக்கு ஏதுவாகிய காரியங்களாம் என்பது.


அவா அறுக்கல் உற்றான், தளரான் அவ் வைந்தின்
அவா அறுப்பின் ஆற்ற அமையும் - அவா அறான்
ஆகும் அவன் ஆயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு
போகும் புழையுள் புலந்து.                --- ஏலாதி.

இதன் பதவுரை ---

     அவா அறுக்கல் உற்றான் --- அவாவினைக் கெடுத்தற்குக் கருதியவன், தளரான் --- உறுதி தளராமல், ஐந்தின் --- ஐம்பொறிகளின் வழிச்செல்லும், அவா அறுப்பின் --- அவாவினைக் கெடுப்பானாயின், ஆற்ற அமையும் --- அவன் கருத்து மிகவும் நிரம்பும், அவன் --- மற்று அவன், அவா அறான் ஆகுமாயின் --- ஐம்பொறி அவாவினைக் கெடுத்துக் கொள்ளான் ஆனால், அவ் ஐங்களிற்றின் --- அவ்வைம் பொறிகள் என்னும் யானைகளால், ஆட்டு உண்டு --- அலைப்புண்டு, புழையுள் --- அவற்றின் புழையாகிய புலமென்னும் வாயிலில், புலந்து போகும் --- சென்று துன்புறுவான்.

     அவா அறுத்தலாவது, ஐம்பொறி அடக்கமாகும்.


ஆசைக்கு ஓர் அளவில்லை, அகிலம் எல்லாம் கட்டி
          ஆளினும், கடல்மீதிலே
      ஆணை செலவே நினைவர், அளகேசன் நிகராக
          அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்,
           நெடுநாள் இருந்தபேரும்
      நிலையாகவேய இனும் காயகற்பம் தேடி
          நெஞ்சு புண்ணாவர், எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
          உறங்குவதும் ஆகமுடியும்;
      உள்ளதே போதும் நான் நான்எனக் குளறியே
          ஒன்றை விட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல், மனமு அற்ற
          பரிசுத்த நிலையை அருள்வாய்;
      பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்அற நிறைகின்ற
          பரிபூரண ஆனந்தமே.                   ---  தாயுமானார்.

இதன் பொருள் ---

     ஆரா இயற்கை அவா ஆதலின், அவாவினுக்கு ஒரு வரம்பில்லை. ஏனெனின் நிலவுலகம் அனைத்தினையும் ஒரு குடைக்கீழ் ஆளினும், ஆளும் வேந்தனது எண்ணம் கடல் நடுவே காணப்படும் எண்ணிலாத் தீவுகளையும் தன்னடிப்படுத்துத் தன் ஒப்பற்ற ஆணையினை அவற்றின்கண்ணும் செலுத்தவே நாளும் எண்ணும். (மேலும் கடலையும் தன் ஆளுகைக்கு உட்படுத்தலும், வானத்தை உட்படுத்தலும், திங்கள் மண்டிலம் முதலிய கோள் உலகங்களைத் தன் ஆளுகைக்கு உட்படுத்தலும் ஆகிய ஆனாத முயற்சியில் தானாக முனைந்து அறிவியல் வாயிலாக நடக்கின்றமையை இன்றுங் காண்கின்றாம்.) எண்ணமும் முயற்சியும் மேலிட்டுச் சேறலும் கொள்வர்: செல்வக் கோமானாகிய குபேரனை ஒத்த பெரும் பொருட்குவியலை வரம்பின்றி அடைந்தவர்களும், மேலும் பொருட்குவியல் தொகுக்கவேண்டும் என்று ஆசை கொண்டு, செம்பு முதலிய பொருள்கள் பொன்னாக மாறும் இரசவாதத் தொழிலுக்குக் காடும் மலையும் நாடுமாய்த் திரிந்து அலைந்து வாடுவர். இவ்வுலகில் அளவிறந்த காலம் சிற்றின்ப நுகர்ச்சியை இடையறாது அனுபவித்து வாழ்ந்தவரும், மனநிறைவு கொள்ளாது, இன்னும் என்றும் அழியாமல் உடலுடனே கூடியிருக்க நினைந்து காயகற்பம் என்னும் மருந்து தேடி, அதற்காக வீணே வருந்தி அலைந்து, நெஞ்சு புண்ணாவர். இவை அனைத்தும் ஆழ்ந்து எண்ணுங்கால், வயிற்றுப் பசிநோய் தீரச் சோற்று மருந்து உண்ணவும், காமநோய் தீரச் சிற்றின்ப நுகர்வும், உடல் இளைப்புத் தீர அயர்ந்து உறங்குவதுமாகவே முடியும். ஆதலால், வினைக்கு ஈடாகக் கிடைத்தவற்றைக் கொண்டு, உள்ளதே போதும் என்ற நிறைவை அடைந்து, ஆணவ முனைப்பினால் நான் நான் என்று ஆங்கார மேலிட்டுக் குளறுதல் புரிந்து நுகர்பொருள்களாகிய புலன்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப், பாசம் எனப்படும் மும்மலப் பிணிப்பாகிய பெருங்கடலுள் வீழாமல், மனம் அடங்குதலாகிய தூய (அடிமை) நிலையினை அடியேற்கு அருள்புரிவாயாக.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...