033. கொல்லாமை - 01. அறவினை யாதெனின்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 33 -- கொல்லாமை

     கொல்லாமையாவது, ஓர் அறிவு முதல் ஐந்து அறிவு உடைய உயிர்களை மறந்தும் கொல்லுதலைச் செய்யாமை. இது முன்னர் கூறியுள்ள அருளுடைமை முதலிய அறங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது என்பதால் விரதங்களின் முடிவில் வைக்கப்பட்டது.

     ஓர் அறிவு முதல் ஐயறிவு உடைய உயிர்கள் ---

சத்த, பரிச, ரூப, ரச, கந்தங்களை அறிவது ஐந்து அறிவு உயிர்.
பரிச, ரூப, ரச, கந்தங்களை அறிவது நான்கு அறிவு உயிர்.
பரிசம், ரசம், கந்தங்களை அறிவது மூன்று அறிவு உயிர்.
பரிசம், ரசம் அறிவது இரண்டு அறிவு உயிர்.
பரிசம் மாத்திரம் அறிவது ஓர் அறிவு உயிர்.

     புல், செடி, கொடி, மரம் முதலியவை, பரிசம் என்னும் உற்று அறிவதை மட்டுமே உடைய ஓர் அறிவு உயிர் ஆவன.

     சங்கு, சிப்பி, நத்தை முதலியன, உற்று அறிதல், சுவைத்து அறிதல் ஆகிய இரண்டும் உடைய இரு அறிவு உயிர் ஆவன.

     செல், எறும்பு முதலியவை, உற்று அறிதல், சுவைத்து அறிதல் ஆகிய இரண்டு அறிவுகளோடு, மோந்து (கந்தம்) அறிவது ஆகிய மூன்று அறிவுகளை உடையன.

     நண்டு, தும்பி முதலியவை, உற்று அறிதல், சுவைத்து அறிதல், மோந்து அறிதல் ஆகிய மூன்று அறிவுகளோடு, கண்டு அறிவது ஆகிய நான்கு அறிவுகளை உடையன.

     விலங்கு, மாக்கள் முதலியவை, மேற்கூறிய நான்கு அறிவுகளுடன், கேட்டு அறிவதாகிய ஐந்து அறிவுகளை உடையன.

     அத்தகைய ஐந்து அறிவுகளுடன், செய்யத் தகுந்தவை, தகாதவை என்று பகுத்து அறிகின்ற மன அறிவும் சேர்ந்து, அறு அறிவினை உடையவர் மனிதர். மக்கள் உடம்பினை எடுத்தும், பகுத்துணர்வு இன்றி இருப்பவர் விலங்கோடு ஒப்பவர்.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே,
இரண்டு அறிவதுவே, அதனொடு நாவே,
மூன்று அறிவதுவே, அவற்றொடு மூக்கே,
நான்கு அறிவதுவே, அவற்றோடு கண்ணே,
ஐந்து அறிவதுவே, அவற்றொடு செவியே,
ஆறு அறிவதுவே, அவற்றொடு மனனே,
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
                       --- தொல்காப்பயிம், மரபியல் சூத்திரம்.

     ஓரறிவு உயிர் என்பது உடலால் உணர்வது; இரண்டறிவு உயிர் என்பது உடல் மற்றும் வாயினால் அறிவது; மூன்றறிவு உயிர் என்பது உடல், வாய் மற்றும் மூக்கால் அறிவது; நான்கறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண் இவற்றால் அறிவது; ஐந்தறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண், காது இவற்றால் அறிவது; ஆறறிவு உயிர் என்பது உடல், வாய், மூக்கு, கண், காது, மனம் இவற்றால் அறிவது; இதை நேராக கண்டு உணர்ந்தவர்கள் வகை படுத்தி இருக்கிறார்கள்.
    
     மக்கள் எனப்படுபவர் மன உணர்ச்சி உள்ளவர். மன உணர்ச்சி இல்லாதோர் மக்கள் பிறப்பாக இருந்தாலும், விலங்கோடு ஒப்ப வைத்து எண்ணப்படுபவர்.

     இந்த அதிகாரத்தில் முதலாவதாக வரும் திருக்குறளில், "அறங்கள் எல்லாம் ஆகிய செய்கை யாது எனில், அது ஓர் உயிரையும் கொல்லாமை ஆகும். கொல்லுதல், பாவச் செயல்கள் எல்லாவற்றையும் தானே உண்டாக்கும்" என்கின்றார் நாயனார்.

     அறவினை --- சாதி ஒருமை. கொல்லாமையோடு, அழுக்காறாமை, வெகுளாமை, பெரியாரைப் பிழையாமை முதலாக விலக்கினவற்றைச் செய்யாது, நல்வினையையே செய்தல்.

     பிறவினை --- மற்றப் பாவங்கள் ஆகிய பிறன்மனை விரும்புதல், கள் குடித்தல், சூதாடல், பிறர் பொருளைக் கவர எண்ணுதல் முதலிய செயல்களால் உண்டாவன.

     அறவினை இன்பத்தைச் செய்யும்.

     பிறவினை துன்பத்தையே செய்யும்.

திருக்குறளைக் காண்போம்...


அறவினை யாது எனின் கொல்லாமை, கோறல்
பிறவினை எல்லாம் தரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறவினை யாது எனின் கொல்லாமை --- அறங்கள் எல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம்,

     கோறல் பிற வினை எல்லாம் தரும் --- அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான்.
        
         (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.)

     பின்வரும் படால்கள் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

அறிவு எனப்படுவது துன்பம் துடைத்தல்
செறிவு எனப்படுவது மும்மையும் செறிதல்
ஆண்மை எனப்படுவது ஐம்புலன் வென்றல்
கேண்மை எனப்படுவது கேட்டிடத்து உதவல்
அருமை எனப்படுவது அறநெறி வழுவாமை
பெருமை எனப்படுவது பிறனில் விழையாமை
அறம் எனப்படுவது ஆருயிர் ஓம்பல்
உறவு எனப்படுவது உற்றுழி நிற்றல்
வாய்மை எனப்படுவது வருந்தாது உரைத்தல்.
தூய்மை எனப்படுவது உள்ளம் தூய்மை.
இன்பம் எனப்படுவது ஈறில் இன்பம்
அன்பு எனப்படுவது ஆர்வம் உடைமை
தவம் எனப்படுவது ஐம்புலம் வெறுத்தல்
வதம் எனப்படுவது கொல்லா விரதம்.   --- சீவசம்போதனை.


நசைகொல்லார் நச்சியார்க்கு என்றும், கிளைஞர்
மிசைகொல்லார், வேளாண்மை கொல்லார், --சைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய்! நன்கு  உணர்ந்தார்
என் பெறினும் கொல்லார் இயைந்து.    ---  சிறுபஞ்சமூலம்.


இதன் பதவுரை ---

     பொன்பெறும் --- பொன்னிறத்தைப் பெற்ற, பூ --- அழகாகிய, சுணங்கின் --- தேமலையுடைய, மெல் முலையாய் --- மெல்லிய முலைகளை உடையவளே!

     நச்சியார்க்கு நசை என்றும் கொல்லார் --- தம்மை விரும்பினவரது விருப்பத்தை, எக்காலத்தும் கொல்லமாட்டார்; கிளைஞர் மிசை கொல்லார் --- உறவினர் உண்ணும் உணவினைக் கொல்லமாட்டார்; இசை கொல்லார் --- தமக்கு வரும் புகழையுங் கொல்லமாட்டார்; வேளாண்மை கொல்லார் --- ஒருவர் மற்றொருவர்க்குச் செய்யும் உபகாரத்தைக் கெடுக்கமாட்டார்; நன்கு உணர்ந்தார் --- அறத்தை அறிந்தவர், என்பெறினும் --- எவ்வின்பத்தைப் பெறலாயிருப்பினும், இயைந்து --- மனம் இசைந்து, கொல்லார் --- ஓர் உயிரையும் கொல்லமாட்டார்;

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...