029. கள்ளாமை - 10. கள்வார்க்குத் தள்ளும்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 29 -- கள்ளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில், "களவினைப் பழகுகின்றவர்க்குத் தம்மின் வேறு அல்லாத உடம்பு தள்ளும். களவினைச் செய்யாதவர், தேவர் உலகினை அடைவது தவறாது" என்கின்றார் நாயனார்.

     உயிர் தங்குவதற்கு இடமாய் உடம்பு உள்ளதால், அது உயிர்நிலை ஆயிற்று.

     கள்ளத்தனம் உள்ளார் இம்மையில் அரச தண்டத்திற்கு உள்ளாவதோடு, மறுமையில் எம தண்டனைக்கும் உள்ளாவர். எனவே, இவர்க்கு உயிர்நிலை தள்ளும்.

     கள்ளத்தனம் இல்லாதவர் இம்மையில் புகழை அடைவதோடு, மறுமையில் தேவர் ஆதல் கூடும். எனவே, இவரைப் புத்தேள் உலகு தள்ளாது.

திருக்குறளைக் காண்போம்...


கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை, கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் --- களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும்,

     கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது --- அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது.

         (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


பொய்யாற்று ஒழுக்கம் பொருள்எனக் கொண்டோர்  
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?
களவுஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர்  
இளவேய்த் தோளாய்க்கு இதுஎன வேண்டா
மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்குஇவை   
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்.     ---  மணிமேகலை, சிறைவிடு காதை.

இதன் பதவுரை ---

     பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர் --- பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் காரியமாகக் கொண்டவர்கள், கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ --- செயலறவு ஆகிய துன்பத்தினின்றும் நீங்கியதும் உண்டோ?  

     எஞ்ஞான்றும் துன்புறுவர் என்றபடி. இதனால் பொய்ம்மையின் தீமை கூறப்பட்டது.

     களவு ஏர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் --- களவாகிய ஏரால் உழுதலைச் செய்து வாழ்வோர் அடையுங் கொடிய துன்பத்தை, இளவேய்த் தோளாய்க்கு இது என வேண்டா --- இளைய மூங்கிலனைய தோள்களையுடைய நினக்கு யான் இத்தகைத்து எனக் கூறுதல் வேண்டா;

         களவு செய்தோர் கடுந்துயர் உறுதல் வெளிப்படையாகலின் ''இதுவென வேண்டா'' என்றாளென்க. இதனால் களவின் தீமை கூறப்பட்டது.

     மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு --- மிகப் பெரிய உலகத்தில் வாழும் மக்களுக்கு, இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் --- ஈண்டுக் கூறப்பட்ட காமம் முதலிய ஐந்தும் துன்பந் தருவன ஆகலின், அவற்றைக் கைவிடல் வேண்டும்;


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...