032. இன்னா செய்யாமை - 06. இன்னா எனத்தான்






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 32 -- இன்னா செய்யாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "துன்பம் தருவன என்று அனுமானப் பிரமாணத்தினால் தான் அறிந்தவற்றை, பிறன் ஒருவனிடம் செய்யாது இருத்தல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...


இன்னா எனத்தான் உணர்ந்தவை, துன்னாமை
வேண்டும், பிறன்கண் செயல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இன்னா எனத் தான் உணர்ந்தவை --- இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை,

     பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் --- பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும்.
                 
         (இன்ப துன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.)

பின் வரும் பாடலைக் காண்க....

வினைப்பயன் ஒன்றின்றி வேற்றுமை கொண்டு
நினைத்துப் பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும்,
புனப்பொன் அவிர்சுணங்கில் பூங்கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா இன்னா பிறர்க்கு.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     புனம் பொன் அவிர் சுணங்கின் பூம்கொம்பர் அன்னாய் --- புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை ஒப்பாய்!, தனக்கு இன்னா பிறர்க்கு இன்னா --- தனக்குத் துன்பந்தருவன பிறருக்குந் துன்பந் தருவனவாம் (ஆதலால்), வினைபயன் ஒன்று இன்றி --- செய்கின்ற செயலிற் பயனொரு சிறிதுமில்லாமல், வேற்றுமை கொண்டு --- பகைமை ஒன்றே கொண்டு, நினைத்து --- ஆராய்ந்து, பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் --- பிறர்வருந்தத் தக்கனவற்றைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.

         பிறரையும் தம்மைப்போல நினைத்துத் தீங்கு செய்யாதிருத்தல் வேண்டும்.


No comments:

Post a Comment

39. காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு

“ ஓதரிய வித்தைவந்தால் உரியசபைக்      கழகாகும் ; உலகில் யார்க்கும் ஈதலுடன் அறிவுவந்தால் இனியகுணங்      களுக்கழகாய் இருக்கும் அன்றோ ? ந...