திருக்குறள்
அறுத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
28 -- கூடா ஒழுக்கம்
இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "குன்றிமணியின் மேல்
பாகத்தைப் போல,
வேடத்தால்
செம்மை உடையவராக இருந்தாலும், அந்தக் குன்றிமணியின் மூக்குப் போல வஞ்சனையாகிய
கருமையை உள்ளத்தில் உடையார் உலகில் உண்டு" என்கின்றார் நாயனார்.
உலகமானது உள்ளத்தில் வஞ்சனையையும், புறத்தே தவவேடத்தையும் உடையவர்களையும்
உடையதாய் இருக்கின்றது. வெளிவேடத்தைக் கண்டு மயங்கல் ஆகாது.
திருக்குறளைக்
காண்போம்...
புறம்
குன்றி கண்டு அனையரேனும்,
அகம்
குன்றி
மூக்கில்
கரியார் உடைத்து.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
குன்றிப் புறம் கண்டு அனையரேனும் ---
குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும்,
குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து
--- அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம்
('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன
பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின்
மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
வாழும்
படிஒன்றும் கண்டிலம்,
வாழி இம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின
வால்,தொண்டை அம்கனிவாய்
யாழின்
மொழிமங்கை பங்கன்சிற்
றம்பலம் ஆதரியாக்
கூழின்
மலிமனம் போன்று, இரு
ளாநின்ற கோகிலமே. ---
திருக்கோவையார்.
இதன் பொருள் ---
அம் தொண்டைக் கனிவாய் --- அழகிய கொவ்வைக்கனி
போலும் வாயினையும்; யாழின் மொழி மங்கை
பங்கன் சிற்றம்பலம் ஆதரியா --- யாழின் இனிய இசை போலும் இனிய மொழியினையும் உடைய உமாதேவியை
தனது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானது திருச்சிற்றம்பலத்தை விரும்பாத; கூழின் மலி மனம் போன்று --- உணவையே
விரும்பி இருக்கும் மனம் போல, இருளா நின்ற கோகிலம் --- ஒரு காலைக்கு
ஒருகால் நிகருமை நிறம் வளரும் குயில்கள்; இம்மாம்
பொழில் தேன் சூழும் முகச் சுற்றும் பற்றின --- சூழ்ந்த மாஞ்சோலையில் வண்டுகள் தேன்
ஒழுகும் இடங்களில் எல்லாம் சூழ்ந்து கொண்டன; வாழும் படி ஒன்றும் கண்டிலம் --- இனி உயிர்
வாழும் வகை அறியாது உள்ளேன் (என்று தலைவி வருந்தினாள்)
மெய்எலாம்
நீறு பூசி
வேணிகள் முடித்துக்
கட்டிக்
கையினில்
படைக ரந்த
புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி
விளக்கே என்ன
மனத்தினுள் கறுப்பு
வைத்துப்
பொய்தவ
வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த
நாதன். --- பெரியபுராணம்.
இதன்
பொழிப்புரை
---
தன் உடல் முழுமையும்
திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச்
சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச்
சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத்
தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப்போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு
பொய்யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.
குறிப்புரை : வேணிகள் - சடைகள்.
புத்தகக் கவளி - புத்தகப் பை. ஒளிவிளக்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள இடத்திற்கு
விளக்கம் தரினும், அவ்விளக்குத் தரும்
சுடருக்கடியில் கறுப்பு நிறத்தைப் பெற்றிருக்கும். அதுபோல முத்தநாதனும் புறத்தால்
தவமுடையான் போலக் காட்டிக்கொள்ளினும், தன்னகத்தே
வஞ்சனை உடையவனாக இருந்தான். முத்தநாதன்: முக்தன் - விடுபட்டவன்: அஃதாவது
அறிவினின்றும் விடுபட்டவன் எனக் கொண்டு, இப்பெயர்
அப்பகைவனின் செயல் நினைந்து தந்த பெயர் என்று கூறுவர் சிலர்.
இங்குத் திருநீறு எரிக்கும்
தன்மையாலே மாயா மலத்தையும்,
விரிந்த
சடையை முடித்தலால் விரிந்து செல்லும் கன்மமலத்தையும், ஞானத்தின் உறையுளாகிய
புத்தகத்தால் அறியாமையாகிய ஆணவமலத்தையும் போக்குவதாகிய ஞானாசாரிய அடையாளங்களைத்
தாங்குவதே இத் தவவேடமாம்.
அத்தகைய தவவேடத்தை, தீய பண்புகள் நிறைந்த முத்தநாதன் பூண்டு வந்தான்.
அகத்தே
கறுத்துப் புறத்துவெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே
திருத்தி, சன்மார்க்க
சங்கத்து அடைவித்திட, அவரும்
இகத்தே
பரத்தைப் பெற்றுமகிழ்ந்
திடுதற்கு என்றே, எனைஇந்த
உகத்தே
இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே. ---
திருவருட்பா.
இதன்
பொருள் ---
மனத்தில் தீய எண்ணங்களால் அழுக்குற்றுப் புறத்தே
தூயவர் போல ஒழுகுகின்ற மக்கள் அனைவரையும் திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் சேர்க்கவும், அவர்களும் இவ்வுலக வாழ்க்கையிலேயே மேலுலக
இன்பத்தைப் பெறுவித்திடுதற்கு என்றே என்னை இந்தக் காலத்தில் இறைவன் வருவிக்க வந்து
அவனது திருவருளைப் பெற்றுள்ளேன். எ.று.
No comments:
Post a Comment