திருக்குறள்
அறத்துபால்
துறவற
இயல்
அதிகாரம்
35 -- துறவு
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறளில், "தவத்தைச்
செய்வார்க்கு ஒரு பொருளின் மீதும் பற்று இல்லாமல் இருப்பது இயல்பு. பொருளின் மீது
பற்று இருந்தால், திரும்பவும் அறிவு மயக்கம் உண்டாகும்" என்கின்றார்
நாயனார்.
எல்லாப் பொருள்களையும் விட்டு, ஒரு பொருளை
விடாதபோதும்,
அப்பொருள்
சார்பாக விட்ட பற்றுக்கள் எல்லாம் திரும்ப வந்து, தவத்திற்கு விரோதமாய்
மனக் கலக்கத்தை உண்டு பண்ணும் என்பது கருத்து.
திருக்குறளைக்
காண்போம்...
இயல்பு
ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை, உடைமை
மயல்ஆகும்
மற்றும் பெயர்த்து
இதற்க்ப்
பரிமேலழகர் உரை ---
ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் ---
பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம்,
உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் ---
அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை
அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும்
மயங்குவதற்கு ஏதுவாம்.
(இழிவுசிறப்பு உம்மை விகாரத்தால்
தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். பெயர்த்தலான்
என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப்
பெயர்த்தலான்' என வேற்றுமைப்
படுத்துக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாகவிட்டன எல்லாம் மீண்டும்
வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட
மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர்
முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
கோவணம்ஒன்று
இச்சிப்பக் கூடினவே பந்தம் எல்லாம்,
தூவணஞ்சேர் மேனியாய், சோமேசா! --- மேவில்
இயல்பாகும்
நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும்
பெயர்த்து.
இதன் பொருள்---
தூவணம் சேர் மேனியாய்
சோமேசா --- தூய நிறம் பொருந்திய திருமேனியை உடைய சோமேசரே! மேவில் ---
பொருந்துமாயின், ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பாகும் --- பற்றப்படுவது ஒரு பொருளும் இல்லாமை தவம்
செய்வார்க்கு இயல்பாம், உடைமை --- அங்ஙனமன்றிப் பற்றப்படுவது
ஒன்றாயினும் உடைமை, பெயர்த்து --- அத்
தவத்தைப் போக்குதலான், மற்றும் மயல் ஆகும் ---
மீண்டும் மயங்குதற்கு ஏதுவாம்,
கோவணம் ஒன்று
இச்சிப்ப --- கோவணம் ஒன்றை விரும்ப,
பந்தம்
எல்லாம் கூடின --- பற்றுக்கள் யாவும் வந்து சேர்ந்தன ஆகலான் என்றவாறு.
ஒன்று என்றது சிறிய
அளவு. ஒன்றும் என விகாரத்தால் உம்மை தொக்கது. இழிவுச் சிறப்பும்மை. நோன்பு -
விரதம், தவம். நோற்றலின் நோன்பு ஆயிற்று. நோன்பு, மயல் ஆகுபெயர்கள். பெயர்த்து, பெயர்த்தலான் என்பது திரிந்து நின்றது, நோன்பைப்
பெயர்த்தலான் என வேற்றுமைப் படுத்துக் கூட்டுக.
எல்லாப்
பொருள்களையும் விட்டு, ஒரு பொருளை
விடாதவழியும், அது சார்பாக விட்டன
எல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து.
இதனால் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது. கோவணம் ஒன்று -
கோவணம் ஒன்றுமே.
ஒரு துறவி தன்
கோவணத்தை எலி கறித்தல் கண்டு, எலி பிடித்தற்கு ஒரு
பூனை வளர்க்க, பின் அதற்குப் பால்
தர ஒரு பசுக் கொள்ள, அப் பசுவை
ஓம்புதற்கும் தொழுவத்தைச் சுத்தி செய்தற்கும் ஒரு பணிப்பெண்ணை அமைக்க, முடிவில் அப் பணிப்பெண்ணை ஏவல் கொளற்கு
ஒருத்தியை மணந்து குடும்பியானார். வடமொழியில், "கௌபீன சம்ரட்சணார்த்தம்
அயம்படாடோப" என்னும் வழக்குண்மை காண்க.
பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.
மூப்புப்
பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும்
எல்லாம் சலம் இலவாய் --- நோக்கீர்!
பருந்துக்கு
இரையாம் இவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து
மறப்பதோ மாண்பு. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரல்
சாக்காடும் எல்லாம் --- மூப்பு நோய் மனைவி மக்களைப் பிரிதல் வறுமை மரணம் ஆகிய
இவைகள் எல்லாவற்றையும் அவற்றின் காரணங்களையும், சலமிலவாய் நோக்கீர் --- பொய்யின்றி
மெய்யாக ஆராயமாட்டீர், பருந்துக்கு இரை ஆம்
--- கழுகுகளுக்கு இரை ஆகிய, இவ் யாக்கையைப்
பெற்றால் --- இவ்வுடலைப் பெற்றால்,
மருந்து
மறப்பதோ மாண்பு --- இனி உடலை அடையாவாறு தடுக்கும் மருந்தாகிய தவத்தினை மறப்பது
பெருமையாகுமோ? ஆகாது.
No comments:
Post a Comment