திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
30 -- வாய்மை
இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம்
திருக்குறளில், "யாம்
மெய்ந்நூல்களாக அறிந்த நூல்களுள், யாதொரு தன்மையாலும், மெய் பேசுதலை விடச்
சிறந்த அறமாகச் சொல்லப்பட்டவை எவையும் இல்லை" என்கின்றார் நாயனார்.
மெய்ப்பொருளை அறிவிக்கின்ற நூல்களை
"மெய்" என்றார். மெய்ந்நூல்கள் என்பவை
தம்மிடத்து மயக்கம் இல்லாமையினால்,
பொருள்களை
உள்ளபடி அறியவல்லார்க்கு, காமக் குரோதங்கள் இல்லாமையினால், அப் பொருள்களை
அறிந்த மேலோரால், நன்மையை அடையும்படிச் சொல்லிய ஆகமங்கள். அவை எல்லாவற்றினும், பொய் பேசுதலைத்
தவிர்த்து,
மெய்
பேசதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
திருக்குறளைக்
காண்போம்...
யாம்
மெய்யாக் கண்டவற்றுள் இல்லை,
எனைத்து
ஒன்றும்
வாய்மையின்
நல்ல பிற.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
யாம் மெய்யாக் கண்டவற்றுள் --- யாம் மெய்ந்நூல்களாகக்
கண்ட நூல்களுள்,
எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற
இல்லை - யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள்
இல்லை.
(மெய் உணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தம்கண் மயக்கம்
இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை
உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான்
உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது
ஒப்ப முடிந்தது என்பதாம்.)
பின்வரும் பாடலைக் காண்க....
வண்மையிற்
சிறந்தன்று வாய்மை உடைமை. --- முதுமொழிக்
காஞ்சி.
இதன்
பதவுரை ---
வாய்மை உடைமை --- உண்மையுடைமை, வண்மையின் --- செல்வமுடைமையைக்
காட்டிலும், சிறந்தன்று ---
சிறந்தது.
வண்மையை ஈகையென்று கொள்வதுமாம்.
செல்வத்தால்
ஆகும் நன்மையைக் காட்டிலும் வாய்மையால் ஆகும் நன்மை சிறந்தது.
No comments:
Post a Comment