திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
30 -- வாய்மை
இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "ஒருவன்
உள்ளத்தால் பொய்யாமை என்னும் அறத்தை (பொய்த்துப் போகாமல்) உண்மையாகவே
கடைப்பிடித்து வந்தால், அதுவே அவனுக்குப் பிற அறங்களைச் செய்வதால் வரும்
பயன்களை நல்கும். அவன் பிற அறங்களைச் செய்ய வேண்டுவதில்லை" என்கின்றார்
நாயனார்.
ஒருவன் பொய் கூறாது எக்காலத்தும்
நிற்பானேயாயின், அவன் பிற
அறங்களைச் செய்தலே அவசியம் இல்லை. ஏனெனில், பல தரப்பட்ட அறங்களை
ஒருவன் செய்ய முயன்று, அவ்விதம் செய்யுங்கால், ஏதேனும் ஒன்றில் சிறிது
குற்றப்பட்டு,
குறைபட்டுப்
போகும். இப் பொய்யாமை என்னும் ஒரு அறமே, எல்லா அறங்களின் பயனையும் ஒருங்கே
தரவல்லது என்றார்.
திருக்குறளைக்
காண்போம்...
பொய்யாமை
பொய்யாமை ஆற்றின், அறம் பிற
செய்யாமை
செய்யாமை நன்று.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் --- ஒருவன்
பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய
வல்லவனாயின்,
பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று ---
அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று
(அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை
மேற்று, ஏனையது துணிவின்
மேற்று. 'பல அறங்களையும்
மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே
தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று 'என்பார், 'செய்யாமை செய்யாமை நன்று' என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் 'பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற
அறம் செய்கை நன்று',எனப் பொழிப்பாக்கி, 'பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது' என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும்
உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது
மிகுதி கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர்
முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
மாழ்கித்
தருமன்ஒரு பொய்உரைத்தே வன்துயருள்
மூழ்கிமிகச்
சோரந்தான், முருகேசா! - தாழ்கல்
இன்றிப்
பொய்யாமை
பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை
செய்யாமை நன்று.
இதன்
பொருள் ---
முருகேசா --- முருகப் பெருமானே, தருமன் --- பாண்டவர்களில் முதல்வராகிய
தருமர், ஒரு பொய் உரைத்து --- ஒரு பொய்யைக்
கூறிவிட்டு, மாழ்கி --- பிறகு
வருத்தத்தை அடைந்து, வன் துயருள் மூழ்கி
மிகச் சோர்ந்தான் --- வலிய துன்பத்துள் அமிழ்ந்து மிகத் தளர்ச்சியை அடைந்தான்.
தாழ்கல் இன்றி --- தாழ்த்துதல் இல்லாமல், பொய்யாமை
பொய்யாமை ஆற்றின் --- பொய்யைமையாகிய அறத்தை உண்மையாகவே செய்தால், பிற அறம் --- பிற அறங்களை, செய்யாமை செய்யாமை நன்று ---
செய்யாதிருத்தலும் நன்மையே ஆம்.
தருமர் ஒரு பொய்யைக் கூறிவிட்டுப் பிறகு
மனம் வருந்தி மிகுந்த துன்பத்தை அடைந்து சோர்ந்தார். ஒருவன் பொய் புகலாமையாகிய
அறத்தை மேற்கொண்டு ஒழுகுவானாயின் அவன் வேறு அறங்களைச் செய்யாதிருந்தாலும் கூட
அவனுக்கு நன்மையே உண்டாகும் என்பதாம்.
தருமர் பொய்யுரைத்த
கதை
பாரதப் போரில் துரோணரை வெற்றி கொள்வது
மிகக் கடினமாக இருந்தது. அவர் மிகக் கொடுமையாகப் போல் புரிந்தார். அசுவத்தாமா
இறந்துவிட்டான் என்றால் துரோணர் தளர்ந்து விடுவார். அச் சமயத்தில் அவரைக்
கொன்றுவிடலாம் என்று கண்ணன் முதலியோர் முடிவு செய்தனர். ஒருநாள் அசுவத்தாமா
என்னும் யானை ஒன்று இறந்து போய்விட்டது.
இச்சமயத்தில் கண்ணன் முதலியோர், தருமரிடம்
வந்து அசுவத்தாமா யானை மாண்டு போன செய்தியைத் துரோணருடைய காதிலே விழுமாறு
கூறவேண்டும் என்று வற்புறுத்தினர். தருமனாகிய மெய்யன் இதனால் தீமை உண்டாகும் என்று
முதலில் மறுத்தானாயினும் பிறகு கூறினான். அதனால்
துரோணர் இறந்தார். போர் முடிந்து அரசுரிமை பெறத் தொடங்கும் சமயத்தில், பொய் கூறிய தீவினையை அகற்றாமல் அரசாளுதற்கு
உரியவனாக மாட்டாய் என்று விண்ணொலி விளம்பியது. தருமன் மனம் கலங்கினான். வியாசர்
விளம்பியவாறே சேதுவுக்குப் போய் நீராடி அத்தீவினையைப் போக்கிக் கொண்டான்.
No comments:
Post a Comment