திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
30 -- வாய்மை
இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம்
திருக்குறளில், "ஒருவனுக்கு உடல்
தூய்மையானது நீரினால் உண்டாகும். உள்ளத் தூய்மையானது அவன் பேசும் வாய்மையால்
காணப்படும்" என்கின்றார் நாயனார்.
உடம்பு தூய்மை ஆதல் --- புறத்திலே உள்ள
அழுக்கு நீங்குதல்.
மனம் தூய்மை ஆதல் --- மெய்ம்மையை உணர்தல்.
மனம் தூய்மை ஆவதற்கு மெய் பேசுதல் அன்றி, வேறு காரணம் இல்லை.
திருக்குறளைக்
காண்போம்...
புறம்
தூய்மை நீரால் அமையும், அகம் தூய்மை
வாய்மையால்
காணப் படும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
புறம் தூய்மை நீரான் அமையும் ---
ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்:
அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். -
அதுபோல, மனம் தூய்தாந் தன்மை
வாய்மையான் உண்டாம்.
(காணப்படுவது உளதாகலின் , 'உண்டாம்' என்று உரைக்கப்பட்டது. உடம்பு
தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு
நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம்
தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும்
வேண்டும்" என்பதூஉம் பெற்றாம்.)
பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை
காணலாம்...
மெய்ம்மையாம்
உழவைச் செய்து
விருப்புஎனும் வித்தை
வித்திப்
பொய்ம்மையாம்
களையை வாங்கிப்
பொறைஎனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவுஎனும் வேலி
இட்டுச்
செம்மையுள்
நிற்பர் ஆகில்
சிவகதி விளையும்
அன்றே. --- அப்பர்.
பொழிப்புரை
---
சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச்
செய்து, விருப்பம் என்னும்
விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை
நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ
தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்று,
திருநீறு
சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத் தியானமாகிய செந்நெறியில்
நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும்.
காயமே
கோயிலாக
கடிமனம் அடிமையாக
வாய்மையே
தூய்மையாக
மனமணி இலிங்கமாக
நேயமே
நெய்யும் பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை
ஈசனார்க்குப்
போற்று அவி காட்டினோமே. --- அப்பர்
பொழிப்புரை
---
இந்த உடம்பையே கோயிலாகவும், உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும், தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும்
கருவறையாகவும் எம்பெருமான் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும்
அமைய, அடியேனுடைய அன்பே
நெய்யும் பாலுமாக அவ் இலிங்கமூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும்
அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம்.
பொய்கடிந்து
அறத்தின் வாழ்வார்
புனல்சடை
முடியார்க்கு அன்பர்
மெய்அடி
யார்கட்கு ஆன
பணிசெயும் விருப்பில்
நின்றார்
வையகம்
போற்றுஞ் செய்கை
மனைஅறம் புரிந்து
வாழ்வார்
சைவமெய்த்
திருவின் சார்வே
பொருள் எனச் சாரும்
நீரார். --- பெரியபுராணம்.
பொழிப்புரை
---
நிலையில்லாத உலகியற் பொருள்களில் பற்று
வையாது, நிலையுடைய
மெய்ப்பொருளிலேயே பற்று வைத்து வாழ்பவர். கங்கை அமைந்த திருச்சடையை உடைய
சிவபெருமானிடத்து அன்புடையவர். உண்மையான அடியவர்களுக்கு உரிய தொண்டுகளைச் செய்து
வரும் விருப்புடையவர். உலகினரால் போற்றப்பெறும் செயற் பாடுகளையுடைய இல்லறத்தை
ஏற்று ஒழுகுபவர். சைவத்தின் உண்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபரம்பொருளைச்
சார்ந்து வாழ்வதே வாழ்வெனக் கருதும் தன்மையர்.
No comments:
Post a Comment