திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
31 --- வெகுளாமை
இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம்
திருக்குறளில், "ஒருவனுக்குத்
தீமை என்பன எல்லாம் அவன் கொள்ளும் சினத்தினால் உண்டாவதால், யாரிடத்திலும் சினம்
கொள்ளுதலை விட்டு ஒழிக்கவேண்டும்" என்கின்றார நாயனார்.
யாரிடத்திலும் என்பது, தம்மினும்
உயர்ந்தாரையும்,
தம்மை
ஒத்தாரையும்,
தம்மினும்
மெலியவரையும் குறிக்கும்.
மனத்தால் யான் எனது என்னும் இருவகைப்
பற்றையும் விட்டவர்க்கு ஆகாத கொடிய எண்ணங்கள் எல்லாம் சினம் கொள்ளுவதால் வரும்
என்பதால்,
"தீய
பிறத்தல் அதனால் வரும்" என்கின்றார்.
தீய எண்ணங்களாவன, பழிபாவங்களுக்கு அஞ்சாமை, கருணை இல்லாமை, கலைஞானம்
இல்லாமை,
மேற்கொண்ட
விரதத்தை விட்டுவிடுதல் ஆகியவை.
வசிட்டரின் மக்களை, வேடர்கள் ஆகும்படி விசுவாமித்தரர் சபித்தது. கபில
முனிவர் சகரர்களைச் சபித்தது. இந்திரன் விசுவரூபன் என்னும் குருவின் தலையை
வெட்டியது,
இன்ன
பிற கேடுகள் யாவும் சினத்தினால் விளைந்தவையே.
திருக்குறளைக்
காண்போம்...
மறத்தல்
வெகுளியை யார் மாட்டும்,
தீய
பிறத்தல்
அதனால் வரும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் ---
யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக',
தீய பிறத்தல் 'அதனான் வரும்' --- ஒருவற்குத் தீயன
எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.
(வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும்
ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய
தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர்
முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
சித்தராமன்
வெகுளி மூண்டுஇழந்தான் தீக்கண்ணை
முத்தன்
அல்லமன்பால், முருகேசா! - நித்தம்
மறத்தல்
வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல்
அதனால் வரும்.
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, முத்தன் அல்லமன்பால் --- வீடுபேற்றிற்கு
உரியவராகிய அல்லம தேவரிடத்திலே,
சித்தராமன்
வெகுளி மூண்டு --- சித்தராமன் என்பவர் மிகுந்த சினம்கொண்டு, தீக் கண்ணை இழந்தான் --- தீக் கண்ணைப்
போக்கடித்துக் கொண்டான். நித்தம் --- நாள்தோறும், யார்மாட்டும் வெகுளியை மறத்தல் ---
எவரிடத்திலும் சினத்தை மறந்து விடுதல் வேண்டும், இன்றேல், தீய பிறத்தல் --- தீமையானவைகள் உண்டாதல், அதனால் வரும் --- அந்தச் சினத்தினாலே
உண்டாகும்.
அல்லம தேவரிடத்திலே சித்தராமர் சினம்
கொண்டு அதனால் தம்முடைய தீக்கண்ணை இழந்தார். எவரிடத்திலும் சினம் கொள்ளாமல்
சினத்தை மறந்து விடுதல் வேண்டும்.
தீமைகளெல்லாம் உண்டாதல் அந்தச் சினத்தினால் தான் என்பதாம்.
சித்தராமர் கதை
சித்தராமர் என்பவர் சொன்னலாபுரம்
என்னும் ஊரில் வாழ்ந்திருந்தார். குளம் வெட்டல் முதலிய அறங்களை அவர் செய்து
கொண்டிருந்தார். சித்தராமரை அத்தொழில்களிலே இருந்து விலக்கி வீடுபேற்று வழியிலே
செலுத்தவேண்டும் என்று அல்லமதேவர் எண்ணினார். சித்தராமரிடம் சென்று அறிவுரைகள்
பலவற்றைக் கூறினார். அல்லம தேவர் கூறிய உரைகளைக் கேட்டுச் சித்தராமர் மிகுந்த
சினம் கொண்டார். தம்முடைய நெற்றிக் கண்ணால் அல்லமதேவரை எரித்துவிட எண்ணினார். அக் கண்ணைத் திறந்து அல்லமதேவரைப் பார்த்தார்.
அக்கண் அல்லமதேவரை யாதும் செய்யமுடியாமல் ஒளி மழுங்கிப்
போய்விட்டது. இதனைக் கண்ட சித்தராமர் ஆணவம் அடங்கியவராய் அல்லமதேவருக்கு அடிமையாய்
நல்லவரானார்.
பெரியவர்
தம்கைக் காய்ந்தான்,
பிறங்கல் கல்லிய கோல் ஒப்பான்,
புரிவன
புரியப்பட்டுப்
புலம்புவன் ஒத்தார்க் காய்ந்தான்,
எரிநரகு
அதனில் வீழ்வான்,
இழிந்தவர்க் காய்ந்தான் என்னில்,
ஒருவர்
தம் இடத்தும் சீற்றம்
உறாமையே நன்று மாதோ.
எனவரும்
பிரபுலிங்க லீலைப் பாடல் காண்க.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக
அமைந்துள்ளமை காண்க...
இழிவுடை
மூப்புக் கதத்தில் துவ்வாது.
--- முதுமொழிக் காஞ்சி.
பதவுரை
---
இழிவு உடை மூப்பு --- இழிவோடு கூடிய மூப்பு, கதத்தின் துவ்வாது --- கோபத்தின் நீங்கி ஒழியாது.
கோபம் பிறரால் வெறுக்கத் தக்கதே :
இழிவுடை மூப்பும் பிறரால் வெறுக்கத் தக்கதே. ஆகவே இரண்டையும் ஒழித்தல் வேண்டும்.
நல்லறம் நல்லொழுக்கம் உடையோர் மூப்பு வந்தவிடத்தும் கௌரவ குணங்கள்
வாய்ந்திருப்பர். அங்ஙனமான மூப்பு எல்லாராலும் போற்றப்படுவதாகும்.
கழிவிரக்கம்
கொள்ளார், கதழ்வாளார், வேர்த்துப்
பழிமுறுகக்
கோடார், பயன்பேர்த்து --- அழிமுதலை
இல்லம்
கொண்டு ஆக்கார், இடும்பைத் தளைதணப்பர்,
நல்லறனை
நாளணிகொள் வார். ---
இன்னிலை.
இதன்
பதவுரை ---
கழிவு இரக்கம் கொள்ளார் --- தம்மிடமிருந்து
நீங்கிய பொருள்களைக் குறித்து வருந்தாதவரும், கதழ்வு ஆளார் ---சினத்தை மேற்கொள்ளாதவரும், வேர்த்து பழிமுறுக கோடார் ---வெகுண்டு
பழி மிகுதியாகும்படி அதற்குரிய செயல்களைச் செய்யாதவரும், பயன் பேர்த்து அழிமுதலை இல்லம் கொண்டு
ஆக்கார் --- அறப்பயனை நீக்கிக் கெடுக்கும் முதல் பொருளைத் தமது மனையிற்
கொண்டுபோய்ச் சேர்த்துச் செல்வத்தைப் பெருக்காதவரும் (ஆகிய அறிஞர்) இடும்பை தளை
தணப்பர் ---துன்பமாகிய கட்டினை அறுப்பார், நல் அறனை நாள் அணி கொள்வார் --- நன்மையைத்
தரும் அறத்தை நாள்தோறும் தமக்கு அணியும் அணியாகக் கொள்வார்.
No comments:
Post a Comment