திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
32 -- இன்னா செய்யாமை
அதாவது, தனக்கு ஒரு பயனைக் கருதியாவது, சினம் பற்றியாவது, அறியாமையினாலாவது, ஓர் உயிருக்குத்
துன்பம் தருவனவற்றைச் செய்யாமை. (இன்னா --- துன்பம்)
சினம் வந்தபோது, உடனே தீங்கு செய்ய
இயலாவிட்டாலும்,
சினம்
தணிந்த பிறகு,
தனக்குச்
சினம் உண்டாகுமாறு செய்தவனுக்கு தீங்கு செய்ய, மனத்தால் எண்ணுதலும்
ஆகாது.
இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம்
திருக்குறளில்,
"ஒருவன்
தன் மீது சினம் கொண்டு, துன்பம் தரும் செயலைச் செய்தபோதும், அவனுக்குத்
துன்பம் தருவனவற்றைத் திருப்பிச் செய்யாமல் இருப்பது சான்றோர் கொள்கை ஆகும்"
என்கின்றார் நாயனார்.
திருக்குறளைக்
காண்போம்...
கறுத்து இன்னா செய்த
அக்கண்ணும், மறுத்து இன்னா
செய்யாமை மாசு
அற்றார் கோள்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் ---
தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும்.
மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள்
--- மீண்டு தாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு.
(இறந்தது தழீஇய எச்ச
உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....
மாற்றாராய்
நின்றுதம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை
என்னார் அறிவுடையார், - ஆற்றாமை
நேர்த்து
இன்னா மற்றவர் செய்தக்கால், தாம் அவரைப்
பேர்த்து
இன்னா செய்யாமை நன்று. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு ---
தமக்குப் பகைவராய் இருந்து அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையோர் ---
தாமும் அப் பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை அறிவுடையோர் மாட்டாத தன்மை என்று
சொல்லி இகழமாட்டார்கள்; ஆற்றாமை நேர்த்து
இன்னா மற்று அவர் செய்தக்கால் --- தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல்
எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை
நன்று --- தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது.
தமக்குத் துன்பம் செய்தவர்களுக்குத்
தாமும் துன்பம் செய்வது ஆற்றலன்று ;
துன்பம்
செய்யாமையே ஆற்றலாவது.
பிறர்க்கு
இன்னா செய்தலில் பேதைமை இல்லை;
பிறர்க்கு
இன்னாது என்று பேரிட்டுத் - தனக்கு இன்னா
வித்தி
விளைத்து வினைவிளைப்பக் காண்டலில்
பித்தும்
உளவோ பிற. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
பிறர்க்கு இன்னா செய்தலின் --- மற்றவர்கட்குத்
துன்பம் செய்தலைக் காட்டிலும், பேதைமை இல்லை --- அறியாமை
வேறு ஒன்று இல்லை, பிறர்க்கு இன்னாது
என்று பேரிட்டு ---மற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்து, தனக்கு இன்னா வித்தி விளைத்து வினை
விளைப்பக் காண்டலின் ---தனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை
கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும், பிற பித்தும் உளவோ --- பிற அறியாமைதான்
வேறு உண்டோ? நீயே கூறு.
கறுத்து
ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து
ஆற்றிச் சேறல் புகழால், - ஒறுத்து ஆற்றின்
வான்ஓங்கு
மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்
நோன்றிட வரும் சால்பு. --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
வான் ஓங்கும் மால் வரை வெற்ப --- வானளவு
உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே!, தான்
நோன்றிட வரும் சால்பு --- ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம், (ஆகையால்) கறுத்து ஆற்றி தம்மை கடிய
செய்தாரை --- சினத்தின்கண் மிக்குத் தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை, பொறுத்து ஆற்றி சேறல் புகழால் --- அவர்
தீச் செயல்களைப் பொறுத்து அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழாகும், ஒறுத்து ஆற்றின் பயன் இன்று ---
கோபித்துத் தாமும் தீயசெய்கைகளைச் செய்தால் அதனால் புகழ்உண்டாதல் இல்லை.
தீங்கு செய்தார்க்கும் நன்மை செய்தல்
வேண்டும்.
இறப்பச்
சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால்
மாண்டார் வெகுளார் - திறத்து உள்ளி
நல்ல
விறகின் அடினும், நனி வெந்நீர்
இல்லம்
சுடுகலா வாறு. --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
இறப்ப சிறியவர் --- குடிப்பிறப்பினால்
மிகவும் இழிந்தவர்கள், இன்னா செயினும் ---
துன்பந்தருஞ் செயல்களைச் செய்தாராயினும், பிறப்பினால்
மாண்டார் வெகுளார் --- குடிப்பிறப்பினால் மாட்சிமைப் பட்டவர்கள் சினத்தலிலர், (அது) திறத்து உள்ளி நல்ல விறகின்
அடினும் --- கூறுபாடாக ஆராய்ந்து நல்விறகினைக் கொண்டு காய்ச்சினும், நனி வெந்நீர் --- மிகவும் வெப்பமாகிய
நீர், இல்லம் சுடுகலாவாறு ---
வீட்டினை எரிக்க முடியாதவாறு போலும்.
கீழ்மக்கள் செய்யும் துன்பத்தால் மேன்மக்கள்
சினங் கொள்ளுதல் இல்லை.
வெந்நீர் வீட்டை வேகச் செய்யாதவாறு
போலப் பெரியோர்கள் கீழ்மக்களைக் கோபியார்.
No comments:
Post a Comment