028. கூடா ஒழுக்கம் - 06. நெஞ்சில் துறவார்





திருக்குறள்
அறுத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 28 -- கூடா ஒழுக்கம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "மனத்தளவில் பற்றுக்களைத் துறவாது இருந்து, துறந்தவர் போல், தானம் செய்வாரை வஞ்சித்து வாழ்கின்றவரைப் போல, கொடுமையை உடையோர் உலகத்தில் ஒருவரும் இல்லை" என்கின்றார் நாயனார்.

     நாம் இந்த தவசிக்கு ஏதாவது கொடுப்போமானால், மறுமையில் தேவலோகத்தை அடைதல் கூடும் என்று எண்ணி, கொடுப்பவர் இல்லறத்தார்கள். அவர் பொருளைப் பெற்றுக் கொண்டு, அவரைத் தாழ்ந்த நிலையினர் ஆக்குதலும், தமக்கு ஆவன செய்யாதார்க்கு, ஆகாதனவற்றைச் செய்தலும் வஞ்சகச் செயல்கள் ஆகும்.

     இப்படி, பொய்யான ஒழுக்கத்தால் பிறரை வஞ்சித்தவர்கள் மிகவும் கொடியவர்கள். அவர்கள் மறுபிறப்பில் இழிவான பிறப்பை அடைவார்கள் என்பர் பெரியோர்.

திருக்குறளைக் காண்போம்...

நெஞ்சின் துறவார், துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின், வன்கணார் இல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நெஞ்சின் துறவார் --- நெஞ்சால் பற்று அறாது வைத்து,

     துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் --- பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல்,

     வன்கணார் இல் --- வன்கண்மையை உடையார் உலகத்து இல்லை.

         (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம் மறுமைக்கண் தேவராதற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின் 'வன்கணார் இல்' என்றார்.)

பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...


நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப் போர்வை
கஞ்சுகம் அன்று, பிறிது ஒன்றே, --- கஞ்சுகம்
எப்புலமும் காவாமே மெய்ப்புலம் காக்கும், மற்று
இப்புலமும் காவாது இது.           --- நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     நெஞ்சு --- தமது மனம்; புறம்பு ஆ --- புறத்திலே (கட்டுப்படாமல்) செல்ல, துறந்தார் --- துறந்தவர்களுடைய, தவப்போர்வை --- தவக்கோலமாகிய போர்வை, கஞ்சுகம் அன்று --- சட்டையைப் போன்றதுமாகாது, (ஏனெனில்) கஞ்சுகம் ---சட்டையானது, எப்புலமும்--- எல்லாம் புலன்களையும். காவாமே --- காக்காவிடினும், மெய்ப்புலம் --- உடம்பாகிய புலனை மட்டுமாவது, காக்கும் --- (பனி குளிர் முதலியவற்றினின்று) காக்கும், (ஆனால்), இது --- இந்தப் பொய்த்தவப் போர்வையானது, இப்புலமும் --- இந்த உடம்பையும், காவாது --- (குளிர், பனி முதலியவற்றினின்று) காக்கமாட்டாது, பிறிது ஒன்றே --- (ஆதலால் இப்பொய்த் தவக்கோலம்) வேறு ஒரு பொருளே,  

         மனத்தைப் புறஞ்செல்லவிட்டு மேலுக்கு மட்டும் துறந்தார்போல நடிப்பாரது துறவுக் கோலத்திற்கு, ஓர் எளிய சட்டைக்கு இருக்கும் பெருமைகூடக் கிடையாது என்றார். சட்டையாவது குளிரினின்று காக்கும்; இப் பொய்த்தவப் போர்வையோ அதுவும் செய்யாது; ஆகையால் இது வேறொரு பொருளே. துறந்தார் என்போர் எல்லாப் பற்றையும் அறவே நீத்தாராகையால் அவர்கள் மனம் ஒன்றிலும் பற்றுதல் கூடாது, ஏதாவது ஒரு காரியம் விரும்பிப் போகிறவன், அதற்குத் தகுதியான சட்டை அணிந்து செல்லுதல் போல, மனம் அடக்காது கருத்திலே கரவு கொண்டாரது தவக்கோலமும் தீச்செயல் புரிதற்கென்று அணியப்படுவது போல் தோன்றலால், அது போர்வை என்றும் ஆனால் போர்வைபோல் அது பயன்படாமையால் போர்வையும் அன்று, பிறிதொரு பொருள் என்றுங் கூறினார். "நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து, வாழ்வாரின் வன்கணாரில்" என்றது திருக்குறள்.  

         மனத்தைக் கட்டுப்படுத்தாத துறவிகளின் தவக்கோலத்தால் யாதும் பயனில்லை.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...