திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
31 --- வெகுளாமை
அதாவது, கோபம் கொள்ளுதற்குக்
காரணம் ஒருவனிடத்தில் உண்டான போதும், அதைச்
செய்யாமல் இருத்தல் கூறப்பட்டது. பொய் பேசுவது பற்றி உண்டாகும் கோபத்தை விலக்கல்
என்பதால்,
இது
வாய்மையின் பின்னர் வைக்கப்பட்டது.
இந்த அதிகராத்தில் வரும் முதல் திருக்குறளில், "தனது கோபம் பலிக்கும்
இடத்தில்,
அது
எழாதவாறு தடுப்பவனே அருளினால் தடுப்பவன் ஆவான். அது பலியாத இடத்தில் தடுத்து என்ன? தடுக்காவிட்டால்
என்ன?"
என்கின்றார்
நாயனார்.
வலியவரிடத்தில் வெகுளியைக் காத்துத்தான்
ஆகவேண்டும். அங்கு வெகுளியைச் செலுத்துவதால் பயன் இல்லை. பயத்தின் மிகுதியால்
தடுத்ததே அல்லாமல், அது அருளாகாது. மெலியவரிடத்தில்
வெகுளி செல்லுமாயினும், செல்லாமல் காப்பதே
அருள் ஆகும் என்றார்.
திருக்குறளைக்
காண்போம்...
செல்இடத்துக்
காப்பான் சினம் காப்பான்,
அல்இடத்துக்
காக்கில்
என், காவாக்கால் என்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் ---
தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான்,
அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என்
--- ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்?
('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும்
வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான்
அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும்
அறன் இல்லை என்பார், 'காக்கின் என்
காவாக்கால் என்' என்றார். இதனான்
வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....
பெருக்குக
நாட்டாரை நன்றின்பால் உய்த்து,
தருக்குக
ஒட்டாரைக் காலம் அறிந்தாங்கு,
அருக்குக
யார்மாட்டும் உண்டி, சுருக்குக
செல்லா
இடத்துச் சினம். --- நான்மணிக்கடிகை.
இதன்
பதவுரை ---
நட்டாரை நன்றின்பால் உய்த்துப் பெருக்குக ---
ஒருவன் தனக்கு நண்பரானாரை நன்மையிற் செலுத்தி, நல் வாழ்வில் உயர்த்துக; ஒட்டாரைக் காலம் அறிந்து தருக்குக ---
பகைவர்களை உரிய காலந் தெரிந்து, மறங்கொண்டு வெல்க; யார் மாட்டும் உண்டி அருக்குக ---
யாவரகத்தும் அடுத்து உண்ணுதலைச் சுருக்கிக் கொள்க; செல்லா இடத்து சினம் சுருக்குக ---
செல்லும் தகுதியில்லா இடத்து, சினத்தைத் தணித்துக் கொள்க.
உள்ளம்
கவர்ந்து எழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும்
குணமே குணம் என்க, - வெள்ளம்
தடுத்தல்
அரிதோ? தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல்
அரிதோ? விளம்பு. ---
நன்னெறி.
இதன்
பொருள் ---
மனத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி
வளர்கின்ற சினத்தை வெளிவராமல் அடக்கிக் கொள்கிற
குணமே மேலான குணம் என்று அரிவாயாக. பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கைத்
தடுத்தல் அரிய செயலோ? முன்
கட்டப்பட்டிருந்த கரையை உடைத்து அதனுள் அடங்கிச் சென்ற வெள்ளத்தை வெளியில் செல்ல
விடுத்தல் அரிய செயலோ? நீயே சொல்வாயாக.
உயிரும்
உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்
செயிரும்
சினமும் கடிந்து, --- பயிரிடைப்
புல்களைந்து
நெல்பயன் கொள்ளும் ஒருவன் போல்
நற்பயன்
கொண்டு இருக்கற் பாற்று. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி --- உயிரும்
உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்து, பயிரிடை புல் களைந்து --- பயிர்களின்
இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நெல் பயன்கொள்ளும் ஒருவன்போல் --- பயிர்களைக்
காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போல, செயிரும்
சினமுங் கடிந்து --- மயக்கம் வெகுளிகளை நீக்கி, நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று --- இன்பத்துக்கு
ஏதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.
நெடுங்காலம்
ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம்
இன்றிப் பரக்கும், --- அடுங்காலை
நீர்கொண்ட
வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட
சான்றோர் சினம். --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
நெடுங் காலம் ஓடினும் --- நீண்ட காலம்
சென்றாலும், நீசர் வெகுளி ---
கீழ்மக்கள் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும்
--- தணியுங்காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் ---
காய்ச்சுங் காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம்
--- பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்.
No comments:
Post a Comment