திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
29 -- கள்ளாமை
கள்ளாமையாவது, பிறர் உடைமையாய் உள்ள யாதொரு பொருளையும், அவரை வஞ்சித்துக் கொள்ள நினையாமை.
நினைத்தலும் செய்ததற்குச் சமானாமாதலால், அவ்வாறு கூறினார். இல்லறத்தில் உள்ளவர்கள்
சுற்றத்தார் முதலியோரிடத்து, விளையாட்டு வகையாலாவது, அவரை வஞ்சனை செய்து
கொள்ளுதற்குத் தக்க பொருள்களை அவ்வாறு கொள்ளலும் பொருந்தும். ஆனால், துறவறத்தார்க்கு
அது பெரியதொரு குற்றம் ஆகும். எனவே, கள்ளாமை, துறவறத்தில்
கூறப்பட்டது. கூறப்படவே, இல்லறத்தார் பிறர் பொருளைக் கவர எண்ணலாம் போலும்
என்று கொள்ளக் கூடாது. விளையாட்டு வகையால் என்று கூறப்பட்டதை நினைவில்
கொள்ளவேண்டும். துறவறத்தில்
நின்றாருக்கு, மனமானது
பொறிகளின் வழியில் புறத்தில் சென்று மடங்காமல், ஒரு முகப்பட்டு உயிரையே
நோக்கி நிற்கவேண்டும். புறத்தில் செல்லுவது என்பது உடம்பின் பொருட்டாகவே அமையும்.
உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்கி, அதனை வஞ்சித்துக் கொள்ள நினைத்தல் பெரும் குற்றம்
ஆகும்.
இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறளில், "முத்தியை இகழாமை
விரும்புகின்றவன், யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ள நினையாதபடி தன்
மனத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்" என்கின்றார் நாயனார்.
முத்தியை இகழ்தலாவது, பிரத்தியட்சப் பிரமாணமே பிரமாணம் என்றும், மண், நீர், தீ, காற்று எனப்
பூதங்கள் நான்கே என்றும், அப் பூதங்களின் கூட்டுறவால் தோன்றி, பிரிவினால்
அழிவது ஆகிய உடம்பின் இடத்தே, அறிவானது மதுவினிடத்து உண்டாகும் களிப்புப் போல்
வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின்னே பிறவாது என்றும், இன்பமும்
பொருளும் ஒருவனது முயற்சியால் வருவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க
நூங்களைத் தெளிந்து, தெளிந்தவற்றிற்குப் பொருந்த நடத்தல் ஆகும். ஞானத்திற்கு
ஏதுவாகிய மெய்ந்நூல்களை ஆசிரியனை வழிபட்டு அல்லாமல், அவனை வஞ்சித்துக்
கொண்டால்,
அதுவும்
களவு ஆகும். எனவே, "எனைத்து ஒன்றும்" என்றார். துறந்தார்க்கு
விக்கப்பட்ட கள்ளுதலாவது, களவு செய்ய நினைத்தல் ஆகும்.
ஞானத்திற்கு ஏதுவாகிய மெய்ந்நூல்களை ஆசிரியரை
வஞ்சிக்காமல்,
வழிபட்டுப்
பெறவேண்டும்,
வஞ்சித்துப்
பெறுவது பாவம். பலன் தராது என்றார். இதற்கு, மகாபரத்ததில் வரும் ஒரு
வரலாறு சான்றாகும். சத்திரியரைக் கருவறுக்கவேண்டும், சத்திரியருக்கு ஆயுத
வித்தையோ,
மந்திர
உபதேசமோ செய்யக் கூடாது என்று விரதம் பூண்டு இருந்த பரசுராமரிடத்தில், சத்திரியன் ஆகிய
கர்ணன்,
அந்தணர்
வேடம் தரித்துப் போய், பரசுராமரிடத்தில் ஆயுத வித்தையைப் பயின்று வரும் காலத்தில், ஒரு நாள் கர்ணன்
தொடையின்மீது தலை வைத்துப் பரசுராமர் உறங்குங்கால், கண்ணபிரான் வண்டு உருவம்
கொண்டு போய்,
கர்ணனுடைய
தொடையைத் தொளைக்க, இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. குருவினுடைய உறக்கத்திற்குப்
பங்கம் நேரக் கூடாது என்று, வண்டு தனது தொடையைத் துளைத்த வருத்தத்தைக்
கர்ணன் பொறுத்துக்கொண்டான். பரசுராமர், இரத்த வெள்ளத்தில் நனைந்து விழித்துப்
பார்த்து,
நடந்ததை
அறிந்து,
இவன்
உண்மையைலேயே அந்தணனாக இருந்தால் இவ்வளவு துன்பத்தைப் பொறுத்திருக்கமாட்டான். அவன்
சத்திரியனாகவே இருக்கவேண்டும் என்று கருதி, கர்ணனை உண்மையைச்
சொல்லுமாறு வற்புறுத்தவும், கர்ணன் உண்மையைக் கூறினான். வஞ்சகமாக வந்து
வித்தையையும்,
மந்திர
உபதேசங்களையும் பெற்றதால், அவை காலத்துக்கு உதவாமல் போவதாகட்டும் என்று, கர்ணனைச்
சபித்தார்.
உலோகாயதம் முதலிய மயக்க நூல்கள் என்றார்
பரிமேலழகர்.
கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள், உலகாயதர்கள்.
இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல்
என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற
நிலம்,
நீர், தீ, காற்று ஆகிய
நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள்.
முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க
மறுக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின்
சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்கின்றனர். அது எது போல என்றால், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய
மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு
பூதங்களின் சேர்க்கையால், அவற்றிற்கு வேறாகிய ஓர் உணர்வு உண்டு என்றும், அந்த
உணர்ச்சியானது உடம்பு வளருந்தோறும் வளர்ந்து, தேயும்தோறும் தேய்ந்து
போவது என்பது. உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர்
கூற்று. மேலும்,
உடம்பிற்கு
நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய். இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை
என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர்.
மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும்
யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும்
இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத்
தழுவி,
மோட்ச
இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே
அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை
மணந்து,
நல்ல
உணவை உண்டு, நல்ல ஆடைகளை
உடுத்து,
போகத்துடன்
வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும்
வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.
இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில்
மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண்
திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான்.
மேலும், இவ்விதம் கூறிய நான்கு
பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த
உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை
அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதோர் மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது
உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர்.
அல்லாமலும்,
பொன்
தானம்,
நிலத்
தானம்,
உணவுத்
தானம் என்பவர்கள் வறுமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம்
முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச்
செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு
இல்லாமலும்,
தங்களின்
பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம்
விட்டுவிட்டு,
மனம்
விரும்பு உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து
வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.
ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு
என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய்
இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை
என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று
கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து
எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி
கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும்
தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும்
என்பதைப் போல,
அவைகளை
உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர்.
தேகான்மவாதி --- நான் என்னும் புத்திக்கு
விடயமாய் இருப்பது ஆன்மா. நான் மனிதன், பார்ப்பான், பருத்தேன், இளைத்தேன்
என்னும் அனுபவத்தினால், தேகத்திலேயே நான் என்னும் புத்தி உண்டாவதால், தேகமே ஆன்மா.
ஆபத்து நேர்ந்த போது தேகத்திலேயே அபிமானம் உண்டாவதால், அதைவிடப் பிரியமான
பொருள் வேறு இல்லை. தேகத்தில் உள்ள விருப்பத்தின் பொருட்டே, பிறரிடத்து
விருப்பம் உண்டாகின்றது. எனவே, உடம்பைக் காப்பாற்றுதல், அலங்கரித்தல் முதலியனவே
புருஷார்த்தங்கள். ஆகாயம், ஊழ், கடவுள், பிறவி என்பது இல்லை.
பூதங்களில் கூட்டுறவால் உண்டாவது உடம்பு. இதன் மரணமே மோட்சம். இது தேகான்மவாதியின்
மதம்.
இந்திரியான்மவாதி --- காணப்படும் இந்த உடம்பு
இந்திரியங்கள் இருந்தால் இருக்கின்றது. இல்லாவிட்டால் செத்துப் போகின்றது. எனவே, உடலுக்கு வேறாக உள்ள, இந்திரியமே
ஆன்மா என்பது இவர் மதம்.
பிராணான்மவாதி --- பிராணவாயு இருந்தால் இந்த
உடம்பு இருக்கின்றது. அது நீங்கிப் போனால் அழிகின்றது. எனவே, உடம்பு நிலைத்து இருக்கக் காரணமான பிராணனே
ஆன்மா என்பது இவர் மதம்.
மனவான்மவாதி --- பிராணனுக்கு உணர்ச்சி இல்லை.
மனமே ஆன்மா என்பது இவர் மதம்.
புத்தியான்மவாதி --- மனமானது புத்தியின்
வசமாய் இருக்கின்றது. புத்தியின் ஆகாரமே மனம். ஆதலால், புத்தியே ஆன்மா என்பது
இவர் மதம்.
அவை எல்லாம் உண்மை அல்ல. மனத் தூய்மைக்கு இவை
வழி வகுக்காது. கயமைத் தனத்திற்கே காரணம் ஆகும் என்று தெளிவுபடுத்துகின்றார்
வள்ளல்பெருமான் பின் வரும் திருவருட்பாவால்....
பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,
பசுஏது, பாசம்ஏது,
பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,
பாவபுண் ணியங்கள் ஏது,
வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,
மனம்விரும்பு உணவு
உண்டு, நல்
வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு
மலர்சூடி, விளையாடி,மேல்
கரம்மேவ
விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு
கலந்து மகிழ்கின்ற
சுகமே
கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்
கயவரைக் கூடாது அருள்,
தரம்
மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!
சண்முகத் தெய்வமணியே!
அரிவையர்இன்
புறும்முத்தி கந்தம் ஐந்தும்
அறும்முத்தி
திரிகுணமும் அடங்கும் முத்தி
விரிவுவினை
கெடும்முத்தி மலம்போம் முத்தி
விக்கிரக நித்தமுத்தி
விவேக முத்தி
பரவும்உயிர்
கெடுமுத்தி சித்திமுத்தி
பாடாண முத்திஇவை
பழிசேர் முத்தி
திரிமலமும்
அகலஉயிர் அருள்சேர் முத்தி
திகழ்முத்தி
இதுமுத்தித் திறத்தது ஆமே.
--- சிவப்பிரகாசம்.
பல்வேறுபட்ட சமயங்களிலே முத்திநிலை
என்று கொள்ளப்படுவன பின்வருமாறு அமைகின்றன. மகளிரிடத்து நுகர்கிற இன்பமே முத்தி
என்பது உலகாயதர் கொள்கை. உருவம்,
வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்ற ஐந்து கந்தங்களும்
கெடுவதே முத்தி என்பது நான்குவகைப் பவுத்தர்களில் ஒரு சாரர் ஆன சவுத்திராந்திகர்
கொள்கை. முக்குணங்களும் கெடுவதே முத்தி என்பது சமணரில் நிகண்ட வாதியும். நிரீசுர
சாங்கியமும் கொண்ட கொள்கை. வினைகள் கெடுவதே முத்தி என்பது பிரபாகர சமயத்தின்
கொள்கை. ஆணவ மலம் முற்றிலும் அழிந்து போவதே முத்தி என்பது அகச் சமயத்துள் பேத
வாதிகள் கூறும் கொள்கை. இவ்வுடல் முத்தி நிலையிலும் அழியாது நிலை பெற்றிருக்கும்
என்பது சிவசமவாதிகள் கூறும் கொள்கை. இந்த வுடலில் கட்டுப்பட்டு நிற்கிற ஆன்மா
விவேக ஞானம் பெறுவது முத்தி என்பது மாயா வாதிகளின் கொள்கை. ஆன்மா என்ற ஒன்றே
அழிந்து போவது முத்தியாகும் என்பது பாற்கரிய வாதிகளின் கொள்கை. உயிர் பசு கரணம்
கெட்டுச் சிவகரணம் பெறுவதே முத்தி என்பது அகச் சமயங்களில் ஒன்றான
சிவசங்கிராந்தவாதிகளின் கொள்கை. உயிர் ஒன்றையும் அறியாமல் கல்லைப்போல் கிடக்கும்
நிலையே முக்தி என்பது பாடாண வாதிகள் கூறும் கொள்கை. இவ்வாறு பத்து வகையாகச்
சொல்லப்பட்ட முத்திகளும் குற்றமுடையன. முத்தி நிலையைப்பற்றிய சரியான கொள்கை
எதுவெனில் ஆணவம், கன்மம் மாயை ஆகிய
மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று உயிர் அருளோடும் கூடிப் பேரின்பத்தை
எய்துவதே முத்தியைப் பற்றிய சிறந்த கொள்கையாகும்.
இது வரையில் காரண அவத்தை என்று
சொல்லப்படும் கேவல அவத்தை. சகல அவத்தை, சுத்த
அவத்தை ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் விரிவாகக் கூறி வந்த ஆசிரியர் முத்தி நிலை
பற்றிப் பொது அதிகாரத்தின் இறுதியிலே எடுத்துரைக்கிறார். பிற சமயங்களிலே
கூறப்படுகிற பத்து வகை முத்தி நிலைகள் மட்டும் எடுத்துக் கூறி அவையாவும் பழிசேர்
முத்தி என்று எடுத்துக் காட்டுகிறார்.
இவற்றுக்கு மாறாக சைவசித்தாந்தத்தில்
கொள்ளப்பட்ட முத்தி நிலை பற்றிய கொள்கையே சரியான கொள்கை என்றும் அதனாலே முத்தி
நிலையின் உண்மையான இயல்பு உயிர் மும்மலங்களையும் விட்டு நீங்கித் திருவருளோடும்
கூடி மாறாத பேரின்பம் அநுபவிப்பதாகிய சித்தாந்த முத்தியே சிறந்த முத்தி என்றும்
நிலை நாட்டுகிறார்.
இவ்வுலகத்தில் வாழ்கின்ற உயிர்கள்
துன்பத்திலும் இன்பத்திலும் மாறி மாறி உழன்று வருவதால் இவ்உலக வாழ்வு குறை உடையது
என்பது எல்லாச் சமயங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. எனவே
கட்டுக்களிலிருந்தும் விடுபெற்று இதனினும் உயர்ந்த நிலையினை உயிர்கள் எய்தல்
வேண்டும் என்பதும் எல்லாச் சமயங்களுக்கும் ஏற்புடைய கருத்து. முத்தி என்ற சொல்
விடுதலை. கட்டு நீங்கிய நிலை, வீடு பேறு என்ற
பொருள்களைத் தரும். ஆனால் இந்த முத்தி நிலை ஆகிய வீடு பேறு எத்தகைய தன்மை உடையது
என்று இப்பாடலில் ஆசிரியர் பத்து வேறுபட்ட சமயங்களில் முத்தி நிலை பற்றிய
கொள்கைகளைக் கூறி அவற்றை மறுக்கிறார்.
திருக்குறளைக்
காண்போம்...
எள்ளாமை
வேண்டுவான் என்பான், எனைத்து ஒன்றும்
கள்ளாமை
காக்க தன் நெஞ்சு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
எள்ளாமை வேண்டுவான் என்பான் ---
வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான்,
எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க
--- யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க.
('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை
எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு
மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால்
செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு
ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும்,
ஆசிரியனை
வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல்
கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல்
வைப்பு"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
ஈசனுக்கும் பெண்டு
என்று இருந்தாரும் நெய்திருடி
ஆயர்மனைப் பட்டபாடு
ஆர்படுவார் --- சீசீ என்று
எள்ளாமை
வேண்டுவான் என்பான், எனைத்து ஒன்றும்
கள்ளாமை
காக்க தன் நெஞ்சு.
பெண்டு என்று இருந்தார் --- திருமால். பாடு
--- துன்பம்.
பட்டபாடு
கிருஷ்ணாவதாரத்தில்.
கிருஷ்ணன் ஆயர்குலத்தில் அவதரித்து, வெண்ணிய் திருடி பட்டபாடுகளை இங்குக்
குறிப்பிடுகின்றார்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட
மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர்
முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
நாய்வால் களவினால்
ஞாலம் இகழப்பட்டான்
தூயனாம் காதிமகன், சோமேசா! - ஆயதனால்
எள்ளாமை வேண்டுவான்
என்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன்
நெஞ்சு.
இதன் பொருள்---
சோமேசா! தூயன் ஆம்
காதி மகன் --- பரிசுத்தனாகிய விசுவாமித்திர முனிவன், நாய் வால் களவினால் --- நாயினது நீரில்
ஊறிய வாலைக் களவு செய்தமையால், ஞாலம் இகழப்பட்டான் ---
உலகத்தாரால் இழித்து உரைக்கப்பட்டான்..
ஆயதனால் --- அந்தக் காரணம் பற்றி,
எள்ளாமை வேண்டுவான்
என்பான் --- வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்றும் கள்ளாமை தன் நெஞ்சு
காக்க --- யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக்
காக்க என்றவாறு.
இந்த வரலாறு, மணிமேகலை என்னும் காப்பியத்திலும் குறிக்கப்
பெற்றது காணலாம்...
"புன்மரம் புகையப்
புகை அழல் பொங்கி
மன்னுயிர் மடிய
மழைவளம் கரத்தலின்,
அரசுதலை நீங்கிய
அருமறை அந்தணன்
இருநில மருங்கின்
யாங்கணும் திரிவோன்
அரும்பசி களைய
ஆற்றுவது காணான்
திருந்த நாய் ஊன்
தின்னுதல் உறுவோன்."
---
மணிமேகலை
- பாத்திரம்பெற்ற காதை.
விசுவாமித்திர
முனிவர் பசியின் கொடுமையால் நாய் ஊன் தின்பதற்கு முயன்றார் என்பதை, மனுஸ்மிருதி, 10-ஆம் அத்தியாயம், 108-ஆம் சுலோகத்தில் காண்க.
விசுவாமித்திர
முனிவர் நீண்ட காலம் நிஷ்டை கூடி இருந்து கண் விழித்தபோது எங்கும் வற்கடம்
(பஞ்சம்) சென்றமையால், தமது பசித் தீயைத்
தணித்தற்கு ஒன்றும் பெறாது, ஒரு வேடன் மனையில்
நாய் இறைச்சி இருக்கக் கண்டு களவாடி வாலை உண்ணப் புகுமளவில் வேடன் வர நடந்தது
கூறிப் பொறுத்துக் கொள்ளவேண்டிப் பின் மழை பெய்வித்தார்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
கள்ளாமை
வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை
வேண்டுந் தகுதி உடையன,
நள்ளாமை
வேண்டுஞ் சிறியரோடு, யார்மாட்டும்
கொள்ளாமை
வேண்டும் பகை . --- நான்மணிக் கடிகை.
இதன்
பதவுரை ---
கடிய வருதலால் கள்ளாமை வேண்டும் --- அஞ்சத்
தகுந்த துன்பங்கள் பின்பு வருதலால், பிறர்பொருளைத் திருடாமை வேண்டும்; தகுதியுடையன தள்ளாமை வேண்டும் --- தமக்குத்
தகுதியுடைய ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும்; சிறியாரோடு
நள்ளாமை வேண்டும் --- சிற்றினத்தாரோடு நட்புக் கொள்ளாமை வேண்டும்; யார் மாட்டும் பகை கொள்ளாமை வேண்டும் ---
யாரிடத்திலும், பகையைப் பாராட்டாமை வேண்டும்.
களவு
செய்குதன் மனத்தினில் நினைக்குதல் கவரென்று
உளம
கிழ்ந்துப தேசித்தல் உதவிசெய் தொழுகல்
வளமி
லாப்பொருண் மாறுதன் மிகுவிலை வாங்கல்
அளவி
னும்நிறை தனினும்வஞ் சித்தப கரித்தல். ---
நீதிநூல்.
இதன்
பொருள் ---
களவு செய்தல், செய்ய நினைத்தல், செய் என்று வழி சொல்லிக் கொடுத்தல், துணைபோதல், பழுதான பொருளை விற்றல், கூடின விலை வாங்குதல், அளத்தல் நிறுத்தல் முதலியவற்றில்
ஏமாற்றிக் கொள்ளையிடல் களவின்பாற் படுவன.
கண்டு
எடுத்தஓர் பொருள் அனுபவித்தலும்,
களவின்
பண்டம்
வாங்கலும், வாங்கிய கடன்கொடாப்
பழியும்,
மண்டும்
வண்பொருள் ஆசையால் பொய்வழக்கு இடலும்
தொண்டு
செய்பவர் கூலியைக் குறைக்கின்ற தொழிலும். --- நீதிநூல்.
இதன்
பொருள் ---
கண்டெடுத்த பிறன்பொருளைக் கொண்டு துய்த்தலும், களவு முறையாக நுகர்பொருளை வாங்கலும், பெற்ற கடனைத் திரும்பக் கொடாமையும், பேராசையால் இல்லாத வழக்கைத் தொடர்தலும், உழைப்பவர்க்குத் தரும் கூலியைக் குறைத்துக்
கொடுத்தலும் களவாம்.
நட்டமே
பிறர்க்கு எய்திடச் செய்தலும்,
நம்பி
இட்டர்
வைத்த நற்பொருள் அபகரித்தலும், இறப்ப
வட்டம்
வட்டிகள் வாங்கலும், சூதிற்பொன் பெறலும்
இட்ட
வேலை செய்யாது கைக் கூலிகொள் இயல்பும். --- நீதிநூல்.
இதன்
பொருள் ---
பிறருக்குப் பொருள் இழப்பு உண்டாக்கலும், நண்பர்கள் நம்பித் தந்த பொருளைத்
தனதாக்கிக் கொள்ளலும், அளவு மீறி வட்டம்
வட்டி வாங்குதலும், சூதாடிப் பொருள்
சேர்த்தலும், வேலை செய்யாது கூலி
பெறுதலும் களவாம்.
கன்னம்
வைத்தல், செல்லாப் பணம்
வழங்குதல், கள்ளம்
மன்னு
சீட்டை உண்டாக்குதல், கைலஞ்சம் வாங்கல்,
என்னும்
யாவுமே களவதாம், இத்தொழிற்கு இயை ஓர்
மன்னர்
ஆக்கினை வசை நரகு அடைந்து வாடுவரால். --- நீதிநூல்.
இதன்
பொருள் ---
கன்னம் வைத்தலும், செல்லாக் காசை வழங்கலும், கள்ளச் சீட்டுப் பிறப்பித்தலும், கைக்கூலி வாங்கலும் முதலிய எல்லாமும்
களவாகும். களவு செய்வோர் வேந்தரால் தண்டிக்கப்படுவர். பழியும் நரகும் எய்துவர்.
கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை
நள்ளான், உயிர் இரங்க நாவாடான், நள்ளானாய்
ஊன்மறுத்துக்
கொள்ளானேல் உடம்பு எஞ்ஞான்றும்
தான்
மறுத்துக் கொள்ளான் தளர்ந்து. ---
சிறுபஞ்சமூலம்.
இதன்
பதவுரை ---
கள்ளான் --- (பிறர்பொருளைக்) களவு
செய்யாதவனாய்; சூது
என்றும் கழுமான் --- சூதாட்டத்தில்
எக்காலத்தும் கலவாதவனாய்; கரியாரை நள்ளான் - கீழ்மக்களை நட்புக் கொள்ளாதவனாய்; உயிர் இரங்க நா ஆடான் - பிறவுயிர்கள் இரங்கும்படி சொல்லாடாதவனாய்; ஊன் நள்ளான் ஆய் --- ஊனுணவைப்
பொருந்தாதவனாய், மறுத்து --- தடுத்து, கொள்ளானேல் --- அவ்வூனுணவை ஒருவன்
கொள்ளாதிருப்பானாயின், தான் --- அவன் தான், மறுத்து --- மீட்டும், ஊன் உடம்பு --- தசையோடு கூடிய உடம்பை, எஞ்ஞான்றும் --- எந்நாளும், தளர்ந்து --- ஒழுக்கம் தளரந்து, கொள்ளான் --- எடுக்கமாட்டான்.
பிறர் பொருளைக் கள்ளாமலும், சூதாடாமலும், கயவருடன் நட்புக் கொள்ளாமலும், பிறர் வருந்த வன்சொற் கூறாமலும், ஊன் உண்ணாமலும் ஒருவன் இருப்பானாயின்
அவன் மீட்டும் பிறக்கமாட்டான் என்பதாம்.
No comments:
Post a Comment