031. வெகுளாமை - 10. இறந்தார் இறந்தார்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 31 --- வெகுளாமை


     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறளில், "கோபத்தில் மிகுந்து இருப்பவர், உயிரோடு இருந்தாராயினும், அவர் செத்தாரோடு ஒப்பர். சினத்தை விட்டவர், பற்றுக்களை விட்ட துறவியர்க்கு நிகர் ஆனவர்" என்கின்றார் நாயனார்.

     அதிக கோபத்தினை உடையவர் ஞானத்தைப் பெறுவதற்கு அவருடைய உடலில் உயிர் இருப்பதாயினும், அவர் ஞானத்தை அடையாமை நிச்சயம் என்பார் இறந்தார் என்றார். கோபத்தை விட்டவர், ஞானத்தினால் முத்தியை அடைவது நிச்சயம் ஆதலின், துறந்தார் என்றார்.

திருக்குறளைக் காண்போம்...


இறந்தார் இறந்தார் அனையர், சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இறந்தார் இறந்தார் அனையர் --- சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர்,

     சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.

         (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும், கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

             
கண் சிவந்திட, மெய்யெலாம் நடுங்கிடக் காலால்
மண் சிதைந்திட உதைத்து, நாக் கடித்து, தழ் மடக்கி
எண் சிதைந்திடச் சினங்கொள்வீர்! நும்மெயோடு இதயம்
புண் சுமந்தது அலால், பிறர்க்கு என்குறை புகல்வீர்.   ---  நீதிநூல்

இதன் பொருள் ---

     தீப்போல் கண் சிவப்பேற உடம்பெலாம் நடுங்க மண்ணைக் காலால் உதைத்து நாக்கைப் பல்லால் கடித்து உதட்டை மடக்கிக் கருத்தழியச் சினங் கொள்வீர். அச்சினத்தால் உம்முடைய நெஞ்சந் துடிக்கும்; உடம்பெலாம் கொப்புளிக்கும். இவற்றையன்றிப் பிறர்க்கு என்ன குறையுண்டு சொல்வீர்.

        
கோட வாள்முகம் சுழித்து, தழ்
           மடித்து, ழில் குலையச்
சேடன் மீதியான் சினம் உற்ற
           பொழுது எதிர் திகழும்
ஆடி நோக்க யான் யான் கொல், மற்
           றார்கொல் அன்று அயிர்த்துத்
தேடி நோக்க ஓர் குரூபமே
           கண்டு உளம் திகைத்தேன்.    ---  நீதிநூல்

 இதன் பொருள் ---

     ஒளிபொருந்திய முகத்தைக் கோணவைத்துச் சுருக்கு விழ உதட்டை மடித்து அழகுகெட வேலையாள்மேல் சினங்கொண்டேன். அப்பொழுது என் எதிரிலிருந்த கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். எனக்கே ஐயம் உண்டாகிவிட்டது. யான் யானா? மற்று யாரோ? என்று. நன்றாக ஆராய்ந்து பார்க்க என் தீய உருவமே கண்டு உள்ளந் திகைத்தேன்.


சினம் உளோன்,மனை மைந்தர்கள் அவன்வெளிச் செல்லும்
தினம் எலாம் திரு விழவுகொண் டாடுவர், செல்லாது
இணையன் தங்குநாள் இழவுகொண் டாடுவர், இறப்பின்
மனையில் ஓர்பெரு மணவிழா வந்தது என மகிழ்வார். ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

     சினமுள்ளவனின் மனைவியும் மக்களும் அவன் வெளியில் போகும் நாளெல்லாம் வீட்டில் திருழவிழாக் கொண்டாடுவர். வெளியில் போகாது வீட்டில் தங்குநாளில் இழவு கொண்டாடுவர். அவன் இறந்தால் அன்று வீட்டில் திருமண விழா வந்ததுபோல் மகிழ்வர்.


நாளும் நாம்கொளும் துயர்க்கு எலாம் காரணம் நாடின்,
மூளுஞ் சீற்றத்தின் விளைவதா முனிவுஅகம் உடையோர்
தேளும் பாம்பும் வெஞ்சின விலங்கினங்களும் நனிவாழ்ந்து
ஆளும் கானில் வாழ்பவர் எனத் தினம் அஞர் அடைவார். ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

     என்றும் நாம் அடையும் துன்பத்திற்குக் காரணம் சினமேயாம். உள்ளத்தில் சினமுடையோர் தேள் பாம்பு கொடிய விலங்குகள் முதலியன மிகுதியாக வாழ்ந்து ஆட்சிசெய்யும் கொடுங்காட்டில் வாழ்பவர் போன்று நாள்தோறும் நீங்காத் துன்பம் அடைவார்.

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...