திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
29 -- கள்ளாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம்
திருக்குறளில், "களவு செய்தல்
ஒன்றைத் தவிர,
பிற
நற்செயல்களை அறியாதவர்கள், அளவில்லாத தீய நினைவுகளை நினைத்து, அப்போதே
கெடுவர்" என்கின்றார் நாயனார்.
தீய நினைவுகள் ஆவன --- பொருள் உடையாரை
வஞ்சிக்கும் விதமும், அவ் வஞ்சனையால் பொருள் கொள்ளும் விதமும், கொண்ட அப்
பொருள்களால் புலன் இன்பங்களை அனுபவிக்கும் விதமும் பற்றிய நினைவுகள். பிறர் பொருள்
அபகரிக்க நினைத்தலும், அப்படிச் செய்வதற்குச் சமானம் ஆதலால், "செய்து"
என்றும்,
அந்த
நினைப்பானது,
அவனை
அப்போதே கெடுக்ககும் என்பதால் "ஆங்கே வீவர்" என்றும் சொல்லினார்.
திருக்குறளைக்
காண்போம்...
அளவு
அல்ல செய்து ஆங்கே வீவர்,
களவு
அல்ல
மற்றைய
தேற்றா தவர்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
அளவு அல்ல செய்தாங்கே வீவர் ---
அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர்,
களவு அல்ல மற்றைய தேற்றாதவர் --- களவு
அல்லாத பிறவற்றை அறியாதவர்.
(தீய நினைவுகளாவன :
பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால்
அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம்
புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து
அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையாவன:
துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய்,
கனி
,கிழங்கு சருகு
முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும்
தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை.
இதனால், கள்வார் கெடுமாறு
கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும்,
மரபு இல் கொட்பும்,
தஞ்சம்
என்றாரை நீக்கும்
தன்மையும், களிப்பும், தாக்கும்:
கஞ்ச
மெல் அணங்கும்
தீரும், கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும்
கொல்வது அல்லால்,
நரகினை நல்காது அன்றே?
--- கம்பராமாயணம், கிட்கிந்தைப் படலம்.
இதன்
பதவுரை ---
கள்ளினால் --- கள்ளைக் குடிப்பதால்; வஞ்சமும் களவும் --- வஞ்சனையும் திருட்டும்; பொய்யும் மயக்கமும் --- பொய் பேசுதலும் அறியாமையும்; மரபு இல் கொட்பும் --- தொன்றுதொட்டு வந்த
முறைக்கு மாறானகொள்கையும்; தஞ்சம் என்றாரை --- அடைக்கலமாக
அடைந்தவரை; நீக்கும் தன்மையும் ---
பாதுகாவாது நீக்கும் தீய பண்பும்;
களிப்பும்
--- செருக்கும்; தாக்கும் --- (சேர்ந்து
வந்து) வருத்தும்; கஞ்ச மெல் அணங்கும் --- செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மென்மை
நிரம்பிய திருமகளும்; தீரும் --- நீங்குவாள்; நஞ்சமும் --- நஞ்சும்; அருந்தினாரைக் கொல்வது அல்லால் --- உண்பவரைக் கொல்லுமேயல்லாமல்; நரகினை நல்காது --- (அவர்களுக்கு) நரகத்தைக் கொடுக்காது.
தன்னை உண்டவரது உடம்பை மட்டும் நஞ்சு அழிக்கும்; கள்ளோ உடம்பையழித்தலோடு உயிரையும் நரகத்தில் சேர்க்கும்
என்பது. உவமானமாகிய நஞ்சைவிட உவமேயமாகிய
மதுவுக்கு வேற்றுமை தோன்றக் கூறியது: வேற்றுமையணி. கள்ளினால் - வேற்றுமை மயக்கம். 'துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார்
கள்ளுண் பவர்' - (குறள்- 926) என்ற குறட் கருத்தை ஒப்பிட்டுணர்க.
குடிவெறியால் கைப்பொருள் அனைத்தும் இழந்து வறியராவர்
ஆதலின் கஞ்ச மெல்லணங்கும் தீரும் என்றார்.
வஞ்சமும்
களவும் வெஃகி,
வழி அலா வழிமேல் ஓடி,
நஞ்சினும்கொடியர்
ஆகி,
நவை செயற்கு உரிய நீரார்,
வெஞ்
சின அரக்கர் ஐவர்;
ஒருவனே! வெல்லப்பட்டார்
அஞ்சு
எனும்புலன்கள் ஒத்தார்;
அவனும், நல் அறிவை ஒத்தான்.
--- கம்பராமாயணம், பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்.
இதன்
பதவுரை ---
வஞ்சமும் களவும் வெஃகி --- வஞ்சகத் தன்மையும்
களவுத் தொழிலையும்
விரும்பி; வழி அலா வழி மேல் ஓடி
--- நல்வழி அல்லாத தீய வழியில் ஓடித் திரிந்து; நஞ்சினும் கொடியர் ஆகி
--- விடத்தை விடக் கொடிய தன்மை உடையவர்களாகி; நவை செயற்கு உரிய நீரார்
--- பிறர்க்குத் தீமை செய்வதையே தமக்குக் குணமாகக் கொண்டவர்களாய்; வெல்லப்பட்டார் --- அனுமனால் வெல்லப்பட்டவரான; வெஞ்சின அரக்கர் ஐவர் --- கடுங்கோபம் கொண்ட அரக்கராகிய பஞ்ச
சேனாபதிகள்; அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் --- ஐந்து புலன்களுக்கு
ஒப்பராயினர்; ஒருவனே அவனும் --- தனி வீரனாய் (ஐவரை வென்ற) அனுமனும்; நல் அறிவை ஒத்தான் --- (புலன்களை வென்று) சிறக்கும்
நல்ல ஞானத்தை ஒத்தவனானான்.
பஞ்ச சேனாபதிகளுக்குத் தீய வழியில் செல்லும் ஐம்புலன்களும், அவர்களை வென்ற அனுமனுக்குப் புலன்களை வென்ற
ஞானமும் உவமைகளாக வந்தன.
'தஞ்சமும் தருமமும் தகவுமே, அவர்
நெஞ்சமும்
கருமமும் உரையுமே; நெடு
வஞ்சமும்
பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ?
--- கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப்படலம்.
இதன்
பதவுரை ---
அவர் நெஞ்சமும் கருமமும் உரையுமே --- அந்த மனிதர்களுடைய
நெஞ்சமும் செயலும் பேச்சும்; தஞ்சமும் தருமமும்
தகவுமே --- பிறருக்கு அபயமளித்தலும், அறச்செயல் செய்வதும், நடுநிலை நின்று உண்மை
கூறுவதுமாகும்; நெடு
வஞ்சமும்
பொய்யும் வல்ல நாம் --- அவ்வாறன்றி நெஞ்சில் வஞ்சனையும், செயலில் பாவமும், பேச்சில் பொய்யும் வல்ல
அரக்கர்களாகிய
நாம்; உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ --- உய்யமுடியுமா?அவர்களின் தருமத்திற்குக் குறை
ஏதாவது உண்டாகுமா என்றவாறு.
No comments:
Post a Comment