திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
32 -- இன்னா செய்யாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "மனம் அறிந்து துன்பச்
செயல்களை,
எக்காலத்திலும், யார்க்கும், சிறிதும்
செய்யாது இருத்தலே தலையாய அறம்" என்கின்றார் நாயனார்.
வல்லமை உண்டான காலத்திலும் செய்தல் கூடாது
என்பார், "எஞ்ஞான்றும்"
என்றார். தன்னினும் மெலியார்க்கும் செய்தல் கூடாது என்பார், "யார்க்கும்"
என்றார். செயல் சிறிதானாலும், பாவம் பெரிதாகும். எனவே, "எனைத்தானும்"
என்றார்.
திருக்குறளைக்
காண்போம்...
எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு
உளவாகின்ற இன்னாத செயல்களை;
எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும்
செய்யாமை தலை --- எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய
அறம்.
(ஈண்டு மனத்தான் ஆகாத
வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின், 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)
பின் வரும் படாலைக்
காண்க...
இல்லார்க்கு
ஒன்று ஈயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை
உள்ளும் நெறிப்பாடும், - எவ்வுயிர்க்கும்
துன்புறுவ
செய்யாத தூய்மையும், இம்மூன்றும்
நன்றறியும்
மாந்தர்க்கு உள. --- திரிகடுகம்.
இதன்
பதவுரை ---
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் ---
வறியவர்க்கு, ஒருபொருளைக் கொடுக்கும் செல்வமும்; இவ்வுலகில் நில்லாமை உள்ளும் நெறிப்பாடும்
--- இவ்வுலகத்தின் பொருள்களின் நிலையாமையை ஆராய்ந்து அறியும் வழியில் பொருந்துதலும்; எவ்வுயிர்க்கும் துன்பு உறுவ செய்யாத
தூய்மையும் --- எல்லா வுயிர்க்கும்
துன்பம்
அடைவதற்கு ஏதுவாகிய செய்கைகளைச் செய்யாத தூய தன்மையும்; இ மூன்றும் நன்று அறியும் மாந்தர்க்கு உள
--- ஆகிய இம் மூன்றும் அறத்தை அறியக்கூடிய மக்கட்கு உண்டு.
வறியோரைக் காக்கும் செல்வமும், பொருள்களின் நிலையாமையை யறிந்து
நடக்குந் தன்மையும் எவ்வுயிர்க்கும் இன்பம் அளிக்கும் செம்மையும் அறம் உணர்ந்தவர்கள்
இடத்திலேயே உண்டு என்பது.
No comments:
Post a Comment