திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
30 -- வாய்மை
இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம்
திருக்குறளில், "குற்றத்தின்
நீங்கிய நன்மையைப் பிறர்க்குத் தருவதாகில், சொல்லுகின்ற பொய்யும்
மேய்யே" என்கின்றார் நாயனார்.
குற்றத்தில் இருந்து நீங்கிய நன்மையை அறம்
என்றார். அது, கேட்டையாவது, மரணத்தையாவது
அடைய நின்ற ஓர் உயிருக்கு, சொற்களின் பொய்ம்மையால், அந்தக் கேட்டிலிருந்தும், மரண தண்டத்தில்
இருந்தும் நீக்கி, நன்மையை அடையச் செய்தல்.
தீமையைத் தராத நடந்ததைச் சொல்லுதலும், நன்மையைத் தரும் நடவாததைச் சொல்லுதலும் மெய்ம்மை.
நன்மையைத் தராத நடவாததைச் சொல்லுதல்
பொய்ம்மை. தீமையைத் தரும் நடந்ததைச் சொல்லுதல் பொய்ம்மை.
திருக்குறளைக்
காண்போம்...
பொய்ம்மையும்
வாய்மை இடத்த, புரை தீர்ந்த
நன்மை
பயக்கும் எனின்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் ---
பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் ,
பொய்ம்மையும் வாய்மை இடத்த ---
பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம்.
(குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப்
பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல்
எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே
அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. 'தீங்கு பயவாத
நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும்
நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும்
நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட
மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர்
முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
பிள்ளையுடன் உண்ணப்
பேசி அழைத்தார் அன்பு
துள்ளு சிறுத்தொண்டர், சோமேசா! -
உள்ளுங்கால்
பொய்ம்மையும் வாய்மை
இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும்
எனின்.
வாய்மையாவது
மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை
விலக்குவதாயிற்று.
இதன் பொருள்---
சோமேசா! உள்ளுங்கால் --- நினைக்குமிடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் ---
பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்மை
இடத்த --- பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலவாம்,
அன்பு துள்ளு
சிறுத்தொண்டர் --- அன்பு மிக்க சிறுத்தொண்ட நாயனார், பின்னை --- தமது மகனாகிய சீராளதேவர், உடன் உண்ண ---
வைரவருடன் உண்ணும்படி, பேசி அழைத்தார் ---
அவன் உயிரோடு இருப்பது போல்ச் சிலவற்றைச் சொல்லி அழைத்தருளினார் ஆகலான் என்றவாறு.
குற்றம் தீர்ந்த
நன்மை அறம். அதனைப் பயத்தலாவது கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றது ஓர் உயிர்
அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறுதலும் நன்மை பயவாதாயின்
பொய்ம்மையாம், நன்மை பயப்பின் மெய்ம்மையாம் என்பது
கருத்து. இதனால் தீங்கு பயவாத நிகழ்ந்தது
கூறலும், நன்மை பயக்கும்
நிகழாதது கூறுதலும் மெய்ம்மை எனவும்; நன்மை
பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும்
நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை எனவும் அவற்றின் இலக்கணம் கூறப்பட்டது.
"நிகழ்ந்த ஒழுக்கம்
மறைத்துக் களைந்து படைத்து மொழிந்தமையால் பொய் உரைத்தவாறாம், பிற எனின் பொய்யுரைக்கப்பட்டது ஆகாது.
என்னை? பழியும் பாவமும் அதனால் வாராமையின்
பொய்ம்மை .... எனின்" என்றார் ஆதலின் குற்றமன்று என்பது (இறையனார் களவியல் - 29 - நக்கீரர்).
சிறுத்தொண்ட
நாயனார் வரலாறு
இந்த நாயனாரின் இயற்பெயர் -
பரஞ்சோதியார். திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் மாமாத்திரர்
குலத்தில் தோன்றியவர். ஆயுள்வேதக் கலைகளிலும் வடமொழிக் கலைகளிலும் புலமை
வாய்ந்தவர். படைத் தொழில், யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவற்றிலும் பயிற்சி
பெற்றவர். சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்தவர்.
பரஞ்சோதியார் சோழ மன்னனிடத்தில்
அமைச்சராய் அமர்ந்து கடனாற்றி வந்தார்.
அவர், வேற்றரசர்களை
வெல்வதிலும், அவர்கள் நாடுகளைப்
பற்றுவதிலும் பேர்பெற்று விளங்கினார். ஒரு
முறை வடபுலத்திலே உள்ள வாதாபி என்னும் நகரத்தில் போர் மூண்டது. அப் போரில் பரஞ்சோதியார் தலைப்பட்டு வெற்றி
பெற்றார். அவ் வெற்றியின் பயனாக மணி, நிதி முதலியவற்றைக் குவியல்
குவியலாகவும், யானை குதிரை
முதலியவற்றைக் கூட்டம் கூட்டமாகவும் பரஞ்சோதியார் திரட்டி வந்தார். அவற்றைக் கண்ட மன்னன், பரஞ்சோதியார் திறத்தை வியந்து
பேசினான். அப்பொழுது அங்கு இருந்த மற்றை
அமைச்சர்கள் மன்னனைப் பார்த்து,
"இவர்
சிவனடியார். இவருக்கு எதிராவார் ஒருவரும்
இல்லை" என்று சொன்னார்கள். அது கேட்ட
மன்னன் நடுக்குற்றான். "அந்தோ கெட்டேன். இதுவரை இவரைச் சிவனடியார் என்று
உணர்ந்தேனில்லை. போர்முகத்துக்கு அனுப்பினேன், பாவியானேன்" என்று வருந்தினான்.
பரஞ்சோதியார் காலில் விழுந்து,
"அடியவரே, என் பிழை பொறுத்து அருளல்
வேண்டும்" என்று வேண்டினான். பரஞ்சோதியார், "என் கடமையைச் செய்தேன், அதனால் என்ன தீங்கு" என்றார்.
மன்னன் அவருக்கு நிதிக்குவியல்களையும், விருத்திகளையும்
கொடுத்து, "உமது மெய்ந்நிலையை
நான் அறியாதவாறு நடந்து வந்தீர். இனி என் கருத்துக்கு இசைந்து நடக்குமாறு
வேண்டுகிறேன். இனி, இப்பணி செய்தல்
வேண்டாம். திருத்தொண்டு செய்தல் வேண்டும்" என்று வணங்கி விடை கொடுத்தான்.
பரஞ்சோதியார் விடைபெற்றுத் தம் திருப்பதி சேர்ந்தார்.
பரஞ்சோதியார் திருச்செங்காட்டங்குடியில்
உள்ள கணபதீச்சரப் பெருமானை வழிபடுவார். தமக்கு இல்லக் கிழத்தியாக வாய்த்த
திருவெண்காட்டு நங்கையார் என்னும் பெருமாட்டியுடன் கலந்து நல்லறம் ஓம்புவார். சிவனடியார்களுக்கு அமுதூட்டிய பின்னர்த் தாம்
உண்பார். அவர், அடியவர்களிடத்தில் மிகச் சிறியராய்
நடப்பார். அதனால், அவருக்குச் "சிறுத்தொண்டர்"
என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாறு ஒழுகி வரும் நாளில், சிறுத்தொண்டர் மனைவியார் கருவுற்றார்.
அவருக்கு ஒரு மகன் பிறந்தான். சீராளதேவர்
என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது. அவர் தக்க பருவத்தில் பள்ளிக்கு
அனுப்பப்பட்டார்.
திருச்செங்காட்டங்குடிக்குத்
திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவர் தம் வருகையைக் கேள்வியுற்ற
சிறுத்தொண்டர், அவர் எதிர்கொண்டு
அழைத்து வந்தார். அன்பில் மூழ்கிப் பலவித உபசாரம் செய்தார். திருஞானசம்பந்தப் பெருமான் தமது
திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருளினார்.
சிறுத்தொண்டரின் திருத்தொண்டு
திருக்கயிலையையும் ஈர்த்தது. அவர் அன்பை நுகரச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார்.
ஒரு வயிரவத் திருக்கோலம் தாங்கி,
திருச்செங்காட்டங்குடி
சேர்ந்தார். பசியால் பீடிக்கப் பட்டார் போல் நடந்தார். "சிறுத்தொண்டரின் வீடு
எங்கே" என்று கேட்டு வந்தார்.
வீட்டின் வாயிலில் வந்து நின்று, "சிறுத்தொண்டர்
வீட்டில் உள்ளாரா" என்று கேட்டார். தாதியாராகிய சந்தன நங்கையார், "மாதவர்
வந்துள்ளார்" என்று விரைந்து வந்து வயிரவர் திருவடியிலே விழுந்து வணங்கி, "நாயனார் அடியவர்களைத்
தேடிச் சென்றிருக்கிறார். அடிகள் உள்ளே எழுந்தருளலாம்" என்று சொன்னார்.
அதற்கு வயிரவர், "பெண்கள் உள்ள
இடத்தில் நாம் தனித்துப் புகுவதில்லை" என்று திருவாய் மலர்ந்து
அருளினார். அவ்வுரை திருவெண்காட்டு நங்கையாருக்குக்
கேட்டது. 'அடியவர் போய் விடுவாரோ' என்று எண்ணி ஓடி வந்தார். வந்து, "அடிகளே, நாயனார், அடியவர்கட்கு நாள்தோறும் அமுது
செய்விப்பது வழக்கம். இன்று ஓர் அடியவரும் வரவில்லை. அதனால், அவர் அடியவர்களைத் தேடிப்
போயுள்ளார். இப்பொழுது வருவார். புதிதாக
அடிகள் எழுந்தருளி இருக்கிறீர். அடிகள்
திருவேடத்தைப் பார்த்தால் நாயனார் மகிழ்வெய்துவார். அடிகள் உள்ளே எழுந்தருள்க" என்று
வேண்டினார். அவ் வேண்டுதலுக்கு இசையாது, "நாம் இருப்பது
வடதேசம். சிறுத்தொண்டரைக் காணவே வந்தோம்.
அவர் இல்லாத வேளையில் இங்கே தங்கமாட்டோம். கணபதீச்சரத்தில் திருஆத்தியின் கீழ்
இருப்போம். சிறுத்தொண்டர் வந்ததும் தெரிவியுங்கள்" என்று கூறிக் கணபதீச்சரத்தைச்
சேர்ந்தார்.
அடியவர்கள் யாரையும் காணாது
சிறுத்தொண்டர் வீடு வந்தார். நிலைமையை
மனைவியார்க்குக் கூறி வருந்தினார்.
அம்மையார், நாயனாரைப் பார்த்து, "இப்பொழுது இங்கே ஒரு
வயிரவர் வந்தார்" என்று சொன்னார். அதைக் கேட்டதும் நாயனார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று கூத்தாடினார்.
அவர் எங்கே என்று கேட்டு, ஓடோடிச் சென்று வயிரவரைக் கண்டார், வணங்கினார். வயிரவர், நாயனாரைப் பார்த்து,
"பெரிய
சிறுத்தொண்டர் நீரோ" என்றார். நாயனார் வயிரவரை மீண்டும் வணங்கி, "சிவனடியார்கள்
எளியேனை அப்படிச் சொல்வது வழக்கம். அடிகளே, ஏழைக் குடிலுக்கு எழுந்தருளல்
வேண்டும்" என்று முறையிட்டார். வயிரவர் சிறுத்தொண்டரைப் பார்த்து, "உம்மைக் காண
வந்தோம். நாம் வடதேசத்தினோம். எமக்கு
அமுதளிக்க உம்மால் இயலாது" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "அடிகளின் உணவு
முறையைத் தெரிவியுங்கள். அவ்வாறே
செய்விப்பேன். அருமை ஒன்றும் இல்லை"
என்றார். அதுகேட்ட வயிரவர், "நாம் ஆறு மாதத்துக்கு
ஒரு முறை உண்போம். அந்த நாள் இந்நாள் ஆகும். பசுவைக் கொன்று சமைத்து உண்பது எமது
வழக்கம். இது உமக்கு அருமையானது அன்றோ" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "சால நன்று எமக்கு
முந்நிரையும் உண்டு. ஒன்றும் குறைவில்லை. அடிகளுக்குத் திருவமுது ஆகும் பசு
இன்னதென்று தெரிவித்தல் வேண்டும்.
தெரிந்தால், நான் போய் விரைவில்
அமுதாக்குவித்துத் திரும்புவேன்" என்றார்.
வயிரவர், "தொண்டரே, நாம் உண்ணும் பசு நரப் பசுவாகும். ஐந்து வயது உடையதாய், உறுப்பில் பழுது இல்லாததாய் இருத்தல்
வேண்டும். இன்னும் அதன் இயல்பைக் கூறுவோம். கூறினால், அது உமக்கு புண்ணில் வேல் எறிந்தால்
போல் தோன்றும்" என்றார்.
சிறுத்தொண்டர் "நன்றாகக் கூறலாம்" என்றார். வயிரவர், "அச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய்
இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்கத் தந்தை உவந்தே அரிதல் வேண்டும்.
இவ்வாறு அரிந்து சமையல் செய்தால் நாம் உண்போம்" என்றார். சிறுத்தொண்டர், "இதுவும் எமக்கு அரிது
அன்று. அடிகள் திருவமுது செய்ய இசைவது போதும்" என்றார்.
சிறுத்தொண்டர் பேரானந்தத்துடன் வீடு
நோக்கி வந்தார். அவரது வருகையை ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டு இருந்த திருவெண்காட்டுநங்கையார், நாயனார் முகமலரச்சியோடு வருதவதைக் கண்டு
உள்ளம் மகிழ்ந்தார். நாயனார் வயிரவர் விருப்பத்தைத் தெரிவித்தார். அது கேட்ட
அம்மையார், "ஒரு குடிக்கு ஒருவனாக
உள்ள சிறுவனுக்கு ஏங்கே போவது" என்றார்.
நாயனார் அம்மையாரைப் பார்த்து, "நினைவு
நிரம்பப் பொருள் கொடுத்தாலும், பிள்ளையை யாரும்
தரமாட்டார்கள். தந்தாலும் உவப்புடன் அரியும் பெற்றோர் இருப்பாரா? இனிக் காலம் தாழ்த்தல் ஆகாது. நமது
அருமைப் புதல்வனை அழைப்போம்" என்றார். அம்மையார், "நம் குலமணியைப் பள்ளியில் இருந்து
அழைத்து வாரும்" என்றார்.
பள்ளியிலிருந்து ஓடி வந்து தன்னைத்
தழுவிக்கொண்ட சீராளதேவனை, தோள் மேல் சுமந்து
வீட்டுக்கு வந்தார். அம்மையார் பிள்ளையை
வாங்கினார். தலைமயிரைத் திருத்தினார். முகம் துடைத்தார். திருமஞ்சனமாட்டி
அலங்கரித்துத் தமது ஆருயிர்க் கணவரிடம் கொடுத்தார். சிறுவனை அன்போடு வாங்கிய சிறுத்தொண்டர்
அடுக்களைக்குச் செல்லாமல் வேறோர் இடம் சென்றார். அம்மையார் பாத்திரங்களைக் கழுவி
எடுத்துக் கொண்டு பின் சென்றார்.
பிள்ளையின் தலையைச் சிறுத்தொண்டர் பிடிக்க, அம்மையார் பிள்ளையின் கால்களை மடியிலே
இறுக்கினார். இரண்டு கைகளையும் தமது இரண்டு கைகளால் பற்றினார். சீராளதேவர்
பெற்றோர் மகிழ்வதாகக் கருதி நகை செய்தார்.
சிறுத்தொண்டரும் அம்மையாரும், நம்
புதல்வன் நமக்குப் பெரும்பேற்றை அளித்தான் என்று மகிழ்வெய்தினர். அம் மகிழ்வுடன் செயற்கரும் செய்கையினைச்
செய்தனர்.
"தலை இறைச்சி
அமுதுக்கு உதவாது" என்று அதை விலக்குமாறு தோழியாரிடம் அம்மையார் கூறினார்.
மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.
நாயனார் களிகூர்ந்து, திரு ஆத்தியை அடைந்து, "அடிகள் விரும்பியவாறு
சமையல் செய்யப்பட்டது. அருள் கூர்ந்த எழுந்தருள்க" என்று வேண்டினார்.
இருவரும் வீடு சேர்ந்தனர்.
நாயனாரும் அம்மையாரும் முறைப்படி
வயிரவருக்கு வழிபாடு செய்து "அமுது படைக்கு வகை எப்படி" என்று கேட்டனர்.
"சோற்றுடன் கறிகளையும் ஒக்கப் படைக்க" என்றார் வயிரவர்.
திருவெண்காட்டுநங்கை பரிகலம் திருத்தி, சோறு
கறிகளை முறைப்படி படைத்தார். அதனைப் பார்த்த வயிரவர், "பசுவின் உறுப்புக்கள் எல்லாவற்றையும்
சமைத்தீரா" என்று கேட்டார். "தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று
அதனைக் கழித்தோம்" என்றார் திருவெண்காட்டுநங்கையார். "தலையும் வேண்டும்" என்றார் வயிரவர்.
நாயனாரும் அம்மையாரும் திகைத்து நிற்கையில், தாதியாராகிய சந்தன நங்கையார், "வயிரவர் திருவமுது
செய்யம்போது அவர்தம் எண்ணம் தலை இறைச்சியின் மீது செல்லினும் செல்லும் என்று
நினைந்து, அதையும் சமையல்
செய்து வைத்திருக்கிறேன்" என்றார். திருவெண்காட்டுநங்கையார் அகமகிழ்ந்து தலை
இறைச்சியையும் கொண்டு வந்து படைத்தார்.
பிறகு வயிரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து, "நாம் தனியே
உண்பதில்லை. சிவனடியார்களுடன் உண்பதே வழக்கம்.
அவர்களை அழைத்து வாரும்" என்றார்.
நாயனாருக்கு வருத்தம் மேலிட்டது. "ஐயோ, இரு திருவமுது செய்ய இடையூறு
நேர்ந்ததே" என்று ஏங்கியபடியே வெளியே போனார். சிவனடியார் ஒருவரையும்
காணவில்லை. நிலையை வயிரவருக்குத் தெரிவித்தார். "திருநீரு அணிந்தவர்க்கே நான்
சோறிடுவது வழக்கம்" என்று சொல்லி வணங்கினார்.
வயிரவர், நாயனாரை நோக்கி, "உம்மைப் போலத் திருநீறு இட்டவரும் உளரோ? ஆகவே, நீர் எம்மோடு திருவமுது செய்வீர்"
என்றார். நங்கையாரை நோக்கி,
"நமக்குப்
படைத்த சோறு கறிகளில் இருந்து எடுத்து இவருக்கும் படைக்க" என்று பணித்தார்.
நங்கையாரும் அப்படியே செய்தார். 'நாம் உண்டால்
வயிரவரும் உண்பார்' என்று எண்ணி, சிறுத்தொண்டர் உண்ணப் புகுந்தார்.
நாயனாரைப் பார்த்து வயிரவர்,
"நாம்
உண்டு ஆறு மாதங்கள் ஆயிற்று. நீரோ நாளும் உண்பவர். நாம் உண்ணும் வரை பொறுக்கல்
ஆகாதா? நம்முடன் உணவு
கொள்வதற்குப் புத்திரன் இல்லையோ?
இருப்பின், அவனை அழையும்" என்றார். நாயனார், "எனக்குப் புதல்வன் உண்டு. ஆனால் அவன்
இப்போது இங்கு உதவான்" என்றார். வயிரவர், "அவன் வந்தால் அன்றி நாம் உண்ணோம்.
அவனைத் தேடி அழைத்து வாரும்" என்றார்.
நாயனாரும் நங்கையாரும் செய்வது அறியாமல், திருவருளை நினைந்து வெளியே வந்து, "மைந்தா! மணியே!
சீராளா! வாராய்! வாராய்! வயிரவர் உண்ண அழைக்கின்றார், வாராய்! வாராய்!" என்று ஓலமிட்டு
அழைத்தனர்.
"வைய நிகழும்
சிறுத்தொண்டர்,
'மைந்தா
வருவாய்' என அழைத்தார்,
தையலாரும் தலைவர் பணி
தலை நிற்பாராய்த் தாம் அழைத்தார்,
'செய்ய மணியே, சீராளா,
வாராய், சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உண்ண
அழைக்
கின்றார்' என்று ஓலமிட" --- (பெரியபுராணம் - சிறுத்தொண்டர்).
ஆண்டவன் அருளால், சிராளதேவர் பள்ளியினின்று ஓடி வருபவர்
போல வந்தார். அம்மையார் அருமைப் புதல்வரை எடுத்து அணைத்து, நாயனார் கையில் கொடுத்தார். நாயனார், "அடியவர் அமுது
செய்யப் பெற்றோம் பெற்றோம்" என்று ஆனந்தம் கொண்டார். பிள்ளையுடன் வீட்டிற்கு விரைந்து வந்தார்.
அதற்கு முன்னரே வயிரவர் மறைந்தருளினார். சிறுத்தொண்டர் திகைத்தார், விழுந்தார், எழுந்தார், மயங்கினார். "வயிரவர் எங்கே
எங்கே" என்றார். இறைச்சியும் அமுதும் கலத்தில் காணோம். நடுக்குற்று வெளியே
வந்தார்.
அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாருடனும், முருகப் பெருமானுடனும் மழவிடைமேல்
காட்சி தந்தார். பெருமான் அந்த நால்வருக்கும் அருள் சுரந்து, தங்களைப் பிரியாத பெருவாழ்வு நல்கி, உடன் அழைத்துச் சென்றார்.
"தான்பெறு மழலை மொழி
மகன் தன்னைத் தன் கையால் உளம் களித்து அரிந்து, சமைத்து உலகறிய இடு பெருந்தொண்டன் தனைச்
சிறுத்தொண்டன் என்று அவன் சேய் ஊன் பெறு நீயே உரைத்தனை என்றால் உரிமை ஓர் சற்றும்
இலாதேன் உன் திருத்தொண்டன் என்று இருப்பதனுக்கு உன்னுதல் பெரும் பிழை அன்றோ"
என்னும் நெடுங்கழிநெடில் பாட்டு ஈண்டு அறியத்தக்கது.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி
மாலை"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
தாய்மலர் மங்கை தழைத்த புல்லாணி வந்தாய், பொய்ம்மையும்
வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில்,
தூய்மன மெய்ந்நன்மை யாதேனும் இன்றிச்சொலும் பொய்ம்மையன்
ஆய், மெலிந்தேனை மெய் ஆளாக்கு, இனிஉன் அடியிணைக்கே.
வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில்,
தூய்மன மெய்ந்நன்மை யாதேனும் இன்றிச்சொலும் பொய்ம்மையன்
ஆய், மெலிந்தேனை மெய் ஆளாக்கு, இனிஉன் அடியிணைக்கே.
இதன் பொருள் ---
எனது தாயாகிய
திருமகளின் செல்வநலம் சிறந்து ஓங்கும் திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில்
வந்து திருக்கோயில் கொண்டு அமர்ந்த திருமாலே! குற்றத்தின் நீங்கிய
நன்மையைப் பிறர்க்குத் தருவதாகில், சொல்லுகின்ற பொய்யும் மேய்யே என்றால், தூய்மையான மனம்
இல்லாமல்,
நன்மை
அற்ற சொற்களையே,
உனது
அருளாகிய நன்மையை வேண்டிப் பேசுபவன் ஆகி இளைத்த என்னை, உனது திருவடிக்கு
உண்மைத் தொண்டன் ஆக்கி அருள்வாய்.
பின்வரும் பாடல்கள்
இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
'உம்மையில் மறுமைதன்னில்
உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில்
விளங்கும் யார்க்கும்
அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே
ஒருவர்க்கு உற்ற
விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும்
மெய்ம்மை போலப்
புண்ணியம் பயக்கும் மாதோ! --- வில்லிபாரதம், 15-ஆம் போர்.
இதன்
பதவுரை ---
உம்மையில் --- கழிந்த பிறப்பிலும், மறுமை தன்னில் ---வரும் பிறப்பிலும், உறு --- பொருந்திய, பயன் இரண்டும் ---வினைப்பயன்கள் இரண்டும், பார்க்கின் --- ஆராயுமிடத்து, இம்மையில் அவர் அவர் இயற்கையாலே --- இப்பிறப்பில் காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலே, யார்க்கும் --- எல்லார்க்கும், விளங்கும் ---
விளங்கும்; ஒருவர்க்கு உற்ற விபத்தினை
--- ஒருவர்க்கு மிக்க ஆபத்தை, பொய்ம்மையும் --- அசத்தியமும், மெயம்மையே மீட்கும் ஆகில் --- உண்மையாகவே போக்குமானால், மெய்ம்மை போல --- சத்தியம் போலவே, புண்ணியம்
பயக்கும். நல்வினைப் பயனைத் தரும்.
இப்பிறப்பில் ஒருவர் அநுபவிக்கிற இன்பதுன்பங்களினால்
முற்பிறப்பில் அவர்செய்த நல்வினை தீவினைகளை
ஊகித்து அறியலாம் என்பதும், இப்பிறப்பில் ஒருவர் செய்யும் நல்வினை தீவினைகளைக் கொண்டு
வருபிறப்பில் அவர் அடையும்
இன்பதுன்பங்பளை
ஊகித்து அறியலாம் என்பதும் முன்னிரண்டடிகளின் கருத்து, பின்னிரண்டடியினால், பெரிய ஆபத்துக் காலத்தில் அதனை நீக்கும்
பொருட்டுப் பொய் கூறலாம் என்று வற்புறுத்தியபடி, "பொய்ம்மையும் வாய்மையிடத்த
புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்"
என்றதுங் காண்க. இதனால் அசுவத்தாமா
இறந்தானென்பது
ஒருவகையாற் பொய்யாயினும் நன்மை பயத்தலால் மெய் போன்றதே என்று கூறியவாறு.
அயலார்செய்
குற்றங்கள் கூறாமல்
மறைத்தலே அறமாம், அன்னார்
துயர்
உறா வண்ணம்நாம் பொய்த்தாலும்
பிழைஅன்று, சொந்தமா ஓர்
பயன்வேண்டிச்
சிறியதோர் பொய்சொலினும்
பெரும்பழியாம், பார்மேல் கீழாய்
அயர்வாகப்
புரண்டாலும் பிறர்க்கு இன்னா
தரும்பொய்யை அறையல் நெஞ்சே. ---
நீதிநூல்.
இதன்
பொருள் ---
மற்றவர்களுடைய நன்மைக்காம் குற்றத்தைக்
கூறாமல் நீக்குதலே நன்மையாம். அவர்கள் துன்புறாதபடி நாம் பொய் சொன்னாலும்
குற்றமாகாது. நமக்கு ஒரு பயன் கருதிச் சிறு பொய் சொன்னாலும், அது பெரியதொரு பழியாகும். உலகம்
கீழ்மேலாகத் தடுமாறினும் பிறர்க்குத் துன்பந் தரும் பொய்யை, மனமே! சொல்லாதே.
அயலார்-மற்றவர்.
மறைத்தை-நீக்குதல். சொந்தம்-தனது. பார்-உலகம். அயர்வு-தடுமாற்றம்.
No comments:
Post a Comment