திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
33 -- கொல்லாமை
இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம்
திருக்குறளில், " தான் உண்பதனைப்
பசித்த உயிர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, ஐவகை உயிர்களையும் காப்பாற்றுதல், மேலோர் தொகுத்த
அறங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையானது ஆகும்" என்கின்றார் நாயனார்.
ஓம்புதல் என்பது மறந்தும் கொலை வாராதபடி, ஐவகைப் பிராணிகளையும் காப்பாற்றுதல்.
"கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க, எல்லார்க்கும் சொல்லுவது
என் இச்சை பராபரமே" என்னும் தாயுமானவர் அருள் வாக்காலும், "கொல்லா நெறியே
குருவருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே" என
வள்ளல்பெருமான் பகர்ந்த அருள் வாக்காலும் அறியப்படும்.
திருக்குறளைக்
காண்போம்...
பகுத்து
உண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள்
எல்லாம் தலை.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் ---
உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும்
ஓம்புதல்,
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை --- அறநூலை உடையார் துறந்தார்க்குத்
தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம்.
('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால்
தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப்
பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால
வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக்
கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும்
பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப
முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
பட்டார்ப்
படுத்துப் படாதார்க்கு வாள்செறிந்து
விட்டு
ஒழிவது அல்லால் அவ் வெங்கூற்றம்--ஒட்டிக்
கலாய்க்கொடுமை
செய்யாது கண்டது பாத்து உண்டல்
புலால்
குடிலால் ஆய பயன். --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
பட்டார்ப் படுத்து ---முற்பிறப்பில் அறம்
செய்யாது குறைந்த வாழ்நாளை இப் பிறப்பில் பெற்றோர்களைக் கொன்றும், படாதார்க்கு வாட்செறிந்து --- முன்னை
அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளைப் பெற்றோர்க்கு அவர்க்கு முன் தன் வாளை உறையுள்
புதைத்து அவரைக் கொல்லாது, விட்டு-விடுதலை
செய்து, ஒழிவதல்லால் --- செய்வதல்லாமல், அவ் வெங் கூற்றம் --- அந்தக் கொடிய யமன், ஒட்டிக் கலாய்க் கொடுமை செய்யாது --- தன்மனம்
சென்றவாறு முறையின்றிக் கோபங் கொண்டு துன்பம் செய்யான்; ஆதலால், கண்டது பாத்து உண்டல் --- ஒருவன்
தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல், புலால் குடிலாலாய பயன் --- புலாலினாலாய
உடம்பினைப் பெற்றதாலுண்டாம் பயன்.
காவோடு
அறக்குளம் தொட்டானும், நாவினால்
வேதம்
கரைகண்ட பார்ப்பானும், - தீதுஇகந்து
ஒல்வது
பாத்து உண்ணும் ஒருவனும், இம்மூவர்
செல்வர்
எனப்படு வார். ---
திரிகடுகம்.
இதன்
பதவுரை ---
காவோடு அறக் குளம் தொட்டானும் --- சோலையை
உண்டாக்குதலுடன், அறத்துக்குரிய
குளத்தைத்- தோண்டுவித்தவனும்;
நாவினால் வேதம் கரை கண்ட பார்ப்பானும் ---
நாவினால் ஓதி வேதத்தை முடிவுகண்ட அந்தணனும்;
தீது இகந்து ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும்
--- தீய வழியைக்
கடந்து, தனக்கு இசையும் பொருளை, பகுத்து உண்கின்ற ஒப்பற்ற இல்லறத்தானும்;
இ மூவர் செல்வர் எனப்படுவார் --- ஆகிய
இம் மூவரும் செல்வத்தை உடையார் என்று
கருதப்படுவார்.
தோப்பும் குளமும் அமைத்தவனும் மறைநூல் ஓதி உணர்ந்தவனும், பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும்
இல் வாழ்வானும் உண்மைச் செல்வராவர் என்பது.
காவோடு குளந்தொட்டான் என்பதில்
மூன்றனுருபு வேறு வினை உடன் நிகழ்ச்சியாதலால், கா என்றதற் கேற்ப உண்டாக்குதல் என்னுந்
தொழில் வருவிக்கப்பட்டது. கரை கண்ட என்பது ஒரு சொல்லின் தன்மையது.
No comments:
Post a Comment