திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
29 -- கள்ளாமை
இந்த அதிகாரத்தில் வரும் நான்காம்
திருக்குறளில், "பிறர் பொருளை
வஞ்சித்துக் கொள்வதில் மிகுந்த ஆசையானது, அப்போது இனிது போலத் தோன்றி, தான் பயனைக்
கொடுக்கும் காலத்தில் தொலையாத துன்பத்தைக் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.
திருக்குறளைக்
காண்போம்...
களவின்கண்
கன்றிய காதல், விளைவின்கண்
வீயா
விழுமம் தரும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
களவின்கண் கன்றிய காதல் --- பிறர்
பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை,
விளைவின்கண் வீயா விழுமம் தரும் ---
அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக்
கொடுக்கும்.
(கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே
பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும்
என்றார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர்
முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
நாக
வசுக்கள் வசிட்டன் நல்சுரபியைப் பற்றும்
மோகம்
மல்கிக் கெட்டார், முருகேசா! ---
போகும்
களவின்கண்
கன்றிய காதல், விளைவின்கண்
வீயா
விழுமம் தரும்.
இதன்
பதவுரை ---
முருகேசா --- முருகப் பெருமானே, நாக வசுக்கள் --- தேவருலகில் உள்ள அட்ட வசுக்கள்
என்பார், நல் சுரபியைப்
பற்றும் --- வசிட்டருடைய இருப்பிடத்திலிருந்த நல்ல காமதேனுவைக் கைப்பற்றிக்
கொள்ளும், மோகம் --- இச்சையானது, மல்கிக் கெட்டார் --- மிகுதிப்பட்டபடியினாலே
கெட்டொழிந்தார்கள். போகும் --- செய்யும், களவின்கண்
கன்றிய காதல் --- களவினிடத்திலே மிகுந்த விருப்பத்தைக் கொள்ளுதல், விளைவின்கண் --- அதன் பயனை நுகர நேரும்
காலத்தில், வீயா விழுமம் தரும் ---
கெடாத துன்பத்தைக் கொடுப்பதாகும்.
தேவர்கள் ஆகிய வசுக்கள் எண்மரும்
வசிட்டருடைய காமதேனுவைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்னும் விருப்பம்
மேலிட்டபடியினாலே கெட்டொழிந்தார்கள்.
களவின்கண் மிகுந்த விருப்பத்தைக் கொள்லுதல், அதன் பயனை நுகர வேண்டிய காலத்தில் கெடாத
துன்பத்தை அடைய வேண்டியதாக முடியுமென்பதாம்.
வசுக்கள் கதை
அனலன் முதலியோர் அட்டவசுக்கள் என்று ஒரே
தொகையாகக் குறிக்கப் பெறுவர். இவர்களில் ஒருவனுடைய மனைவி காமதேனுவை விரும்பித்
தன்னுடைய கணவனிடம் சொன்னாள். அவன் தன்னுடைய அண்ணன்மார்களையும் துணைக்குக் கொண்டு, வசிட்டருடைய இருப்பிடத்திற்குப் போய்
அங்கிருந்த காமதேனுவைக் களவு செய்து கொண்டு சென்றான். இச் செய்தியை வசிட்டர் உணர்ந்தார். அவர்கள் அனைவரும் மனிதர்களாகப் பிறக்குமாறு தீமொழி புகன்றார்.
அவர்கள் அவ்வாறே பிறந்து துன்பத்தை அடைந்தார்கள். களவின் பயன் பெருந்துன்பமாக
முடிந்துவிட்டது.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு
ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
நல்வினை
தீவினை என்றுஇரு வகையால்
சொல்லப்
பட்ட கருவில் சார்தலும்
கருவில்
பட்ட பொழுதினுள் தோற்றி
வினைப்பயன்
விளையும் காலை உயிர்கட்கு
மனப்பேர்
இன்பமும் கவலையும் காட்டும்.. --- மணிமேகலை.
இதன்
பதவுரை ---
நல்வினை தீவினை என்று இருவகையால் ---
நற்செய்கையும் தீச்செய்கையுமாகிய இருவகைச் செய்கைகளால்; சொல்லப்பட்ட கருவில் சார்தலும் ---
மக்கள் தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை அடைவதும் ; கருவிற்பட்ட பொழுதினுள் தோற்றி --- அப்
பிறப்புக்களில் இயைந்த காலத்தே அவற்றோடே தோன்றி; வினைப்பயன் விளையுங்காலை --- செய்வினைப்
பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில்;
மனப்
பேரின்பமும் --- மனத்தின்கண் பெரிய இன்பத்தையும் ; கவலையும் --- துன்பத்தையும், காட்டும் --- காட்டுவதும் செய்யும்.
திலக
வாணுதல் தேவியைச் சேயரைப் பிரிந்து
கலகல என்னவே ஒலிசெய் மா விலங்கு கால் பூண்டு, இவ்
உலகம்
ஏசிடச் சிறையகத்து உற்று, மண் சுமந்து
சிலுகு
எலாம் உறல் சிறிது பொன் திருடலால் அன்றோ. --- நீதிநூல்.
இதன்
பொருள் ---
சிறுபொருள் களவால் மனைவியையும் மக்களையும்
நீங்கி, கையிலும் காலிலும்
இருப்பு விலங்கு பூண்டு, உலகோர் பழிக்கச்
சிறைபுகுதல், மண்சுமந்து துன்புறல்
முதலியன உண்டாகும்.
நுதல்-நெற்றி. தேவி-மனைவி. சேய்-மக்கள்.
சிறை-காவற்கூடம். சிலுகு-துன்பம்.
தள்ள
அரும்பெரும் பழியுளார் என்னினுந் தரையில்
எள்ளல்
சோழி குலத்தரே என்னினும் ஏசிக்
கள்ளர்
என்றவர்ப் பழித்திடப் பொறாரெனிற் களவிற்கு
உள்ள
பேர் அவமானத்தை உரைப்பதென் உளமே. --- நீதிநூல்.
இதன்
பொருள் ---
நீக்க முடியாத பெரும்பழி உள்ளவரும், தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவரும்
தங்களைக் கள்வரெனப் பிறர் திட்டினால் மனம் பொறுக்க மாட்டார். அதனால் களவுப்
பட்டத்தால் உண்டாகும் பேரிழிவு எவ்வளவு என்று சொல்ல முடியுமா?
அரிமுழை
நுழைதல் போல
அயலகம் புகும்போது அச்சம்;
பொருள்
திருடும் போது அச்சம்;
புறப்பட்டு ஏகும் கால் அச்சம்;
தெருவினில்
எவர்க்கும் அச்சம்;
கவர்ந்தன திளைக்க அச்சம்;
உரும்
உருக் கொண்டு கள்வர்
உளங்குடி கொண்ட போலும். ---
நீதிநூல்.
இதன்
பொருள் ---
சிங்கத்தின் குகையுள் நுழைவார் கொள்ளும்
நடுக்கம் போன்று களவு செய்வதற்காக அயல் வீட்டில் நுழையும்போது அச்சம். பொருளைக்
களவு செய்யும்பொழுது அச்சம். வெளியில் வரும் பொழுது அச்சம். தெருவில்
கண்பார்க்கெல்லாம் அச்சம். களவுப் பொருளை நுகரும்பொழுது அச்சம். அதனால், அச்சமே உருக்கொண்டு கள்வர் நெஞ்சத்துக்
குடிகொண்டது ஆகும்.
நிரந்தரம்
பலநோய் உற்று,
நெடிது அயரினும் கை ஏந்தி
இரந்து
உணப் பெரு நிரப்பே
எய்தினும், பகர ஒண்ணா
அரந்தை
சூழினும், பொன் வவ்வும்
அத்தொழிற்கு இயையா
வண்ணம்
வரந்தர
வேண்டும் என்னக்
கடவுளை வழுத்தாய்
நெஞ்சே. --- நீதிநூல்.
இதன்
பொருள் ---
எந்நாளும் நீங்காத பல நோய் அடைந்து
துன்புற்றாலும், கை ஏந்திப் பிச்சை
எடுக்கும்படி வறுமை வந்தாலும், சொல்ல முடியாத
வருத்தம் ஏற்பட்டாலும் களவு செய்யும்படியான தீச்செயலுக்கு இசையாதபடி வாழ, நெஞ்சமே! ஆண்டவனை வணங்கித் தொழு.
No comments:
Post a Comment