திருக்குறள்
அறத்துப்பால்
துறவற
இயல்
அதிகாரம்
32 -- இன்னா செய்யாமை
இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம்
திருக்குறளில், "பிறர்க்குத்
துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால், தமக்குத் துன்பங்கள், பின்னதாக
யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்கின்றார் நாயனார்.
திருக்குறளைக்
காண்போம்...
பிறர்க்கு இன்னா
முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் ---
துறந்தவர் பிறர்க்கு இன்னாதனவற்றை ஒரு பகலது முற்கூற்றின்கண் செய்வராயின்,
தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் ---
தமக்கு இன்னாதன அதன் பிற்கூற்றின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
('முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்க ஆறாம்
வேற்றுமைத் தொகை. தவம் அழிதலின்,
அங்ஙனம்
கடிதினும் எளிதினும் வரும். அதனால்,
அவை
செய்யற்க என்பதாம். இனி 'தானே வரும்' என்பது பாடமாயின் அச்செயல் தானே தமக்கு
இன்னாதனவாய் வரும் என உபசார வழக்காக்கி, ஆக்கம்
வருவித்து உரைக்க.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை
வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல்
வைப்பு"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
இரணியனைக் கொன்று
இருக்க, எண்ணினவர் கேடும்
அரன் வெகுளப்
பின்நிகழும் ஆற்றால் --- ஒருவர்
பிறர்க்கு இன்னா
முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.
திருமால்
நரசிங்கமூர்த்தியாகத் தோன்றி இரணிய கசிபுவைக் கொன்றபின், தருக்குற்று அட்டகாசம் செய்வதைப் பிரமன்
வாயிலாகக் கேள்வியுற்ற சிவபெருமான்,
எட்டுக்
கால்களையும் இரண்டு தலைகளையும் உடைய சரபப் புள்ளாக வந்து நரசிங்கத்தின் தோலை
உரித்துப் போர்த்துக் கொண்டார் என்பது வரலாறு.
அடுத்து, இத் திருக்குறளுக்கு
விளக்கமாக,
திராவிட
மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர்
முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
பிள்ளையார்
வைப்பினில் தீப் பெய்வித்த மீனவன், தீத்
துள்ளு வெப்பு நோய் உழந்தான், சோமேசா! - எள்ளிப்
பிறர்க்குஇன்னா
முற்பகல் செய்யில் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
இதன்பொருள்---
சோமேசா! எள்ளி ---
இகழ்ந்து, பிறர்க்கு இன்னா ---
பிறர்க்குத் துன்பங்களை, முற்பகல் செய்யின் ---
ஒரு பகலினது முற்பகுதியின்கண் செய்வாராயின், தமக்கு இன்னா --- தமக்குத் துன்பங்கள், பிற்பகல் தாமே வரும் --- அதன்
பிற்பகுதியின்கண் அவர் செய்யாமல் தாமே வரும்.
பிள்ளையார் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், வைப்பினில் --- எழுந்தருளி இருந்த
திருமடத்தில், தீ பெய்வித்த மீனவன் ---
சமணர்கள் தீக் கொளுவுவதற்குக் காரணனாய் இருந்த கூன் பாண்டியன், தீ துள்ளு வெற்பு நோய் உழந்தான் ---
தீக்கொதிப்பு மிக்க சுரமோயால் வருந்தினான் ஆகலான் என்றவாறு.
இவ்வதிகாரம்
துறவறவியலில் வந்துள்ளமையால் பரிமேலழகர், 'துறந்தவர்
பிறர்க்கு இன்னாதனவற்றை ---- செய்வாராயின்' என உரை வரைந்தார். எனினும், 'இல்லறத்தார் துறவறத்தார் என்னும்
யாவராயினும்' எனக் கொள்க. துறவறத்தார்க்கு இது இன்றியமையாதது.
பாண்டி நாட்டை
சமணக்காடு மூடவே, கூன் பாண்டியனும் அவ்
வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும், மந்திரியாகிய குலச்சிறையாரும் மனமிக
வருந்தி என்று பாண்டியன் நல்வழிப்படுவான் என்று இருக்கும்கால், திருஞானசம்பந்தப் பிள்ளையார்
திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து, அவ் இருவரும் விடுத்த
ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டுமெனக்
குறையிரந்தமையான், பிள்ளையார் அவர்க்கு
விடை தந்து பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மதுரை அடைந்தார். அச்
செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப்போது தீயிடப்
பிள்ளையார் அத்தீ, பையவே சென்று
பாண்டியற்கு ஆகவே என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது.
அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை
வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க அவர்
சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து
அனல்வாதம், புனல்வாதங்களில்
தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.
பின்வரும் பெரியபுராணப் பாடல்களைக் காண்க....
பெருகும் அச்சமோடு
ஆர்உயிர் பதைப்பவர், பின்பு
திருமடப்புறம்
மருங்கு தீது இன்மையில் தெளிந்து,
"கருமுருட்டு அமண்
கையர் செய் தீங்கு இது, கடைக்கால்
வருவது எப்படி
ஆம்" என மனம் கொள்ளுக் பொழுது.
இதன் பொழிப்புரை ---
மேன்மேலும்
பெருகும் அச்சத்துடன், அரிய உயிர் பதைக்கும்
அவர்கள் இருவரும், அதன் பின்பு
திருமடத்தின் வெளியில் தீமை இல்லாமையைக் கேட்டதால் தெளிவடைந்து, `கரிய முருட்டுடல் உடைய சமணர்கள் செய்த
இத்தீங்கு இதன் மூலமாக விளைவது எப்படியாகுமோ?' என்று உளங்கொண்டபொழுது,
"அரசனுக்கு வெப்பு
அடுத்தது" என்று அருகு கஞ்சுகிகள்
உரை
செய, பதைத்து ஒரு தனித்
தேவியார் புகுத,
விரைவும்
அச்சமும் மேல்கொளக் குலச்சிறை யாரும்
வரைசெய்
பொன்புய மன்னவன் மருங்குவந்து அணைந்தார்.
இதன்
பொழிப்புரை
---
`மன்னனுக்கு வெப்புநோய்
உண்டாயிற்று\' என்று அவன் அருகில்
இருக்கும் கஞ்சுகி மாக்கள் வந்து சொல்லத் துடித்து, ஒப்பில்லாத அரசமாதேவியார் அரசனது
இருப்பிடத்தில் புக, விரைந்த செலவும்
அச்சமும் பொருந்தக் குலச்சிறையாரும், மலை
போன்ற அழகிய தோள்களையுடைய மன்னனின் அருகே வந்து சேர்ந்தார்.
ஆன
வன்பிணி நிகழ்வுழி, அமணர்கள் எல்லாம்
மீனவன்
செயல் கேட்டலும், வெய்து உயிர்த்து, அழிந்து,
"போன கங்குலில்
புகுந்ததின் விளைவுகொல்" என்பார்,
மானம்
முன் தெரியாவகை மன்னன் மாட்டு அணைந்தார்.
இதன்
பொழிப்புரை
---
இங்ஙனம் வன்மையாக
அந்நோய் மூண்டு கிடந்த போழ்து, சமணர்கள் அனைவரும்
மன்னனின் நிலைமையைக் கேட்டலும்,
பெருமூச்சு
விட்டு, வருத்தம் அடைந்தனர்.
அச்சமணர்கள், `கடந்த இரவில் செய்த
செயலால் வந்த விளைவுதானோ இது?' என்று ஐயம் கொண்டு, தமக்கு நேர்ந்த கீழ்நிலை (அவமானம்) முன்
தெரியாதவாறு மறைத்து, அரசனிடம் வந்து சேர்ந்தனர்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக்
கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச
வெண்பா"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..
பாந்தள்
முனிமேல் படுத்த பரிச்சித்தன் தான்
ஏந்து
துன்பம் உற்றன், இரங்கேசா! - மாந்தர்
பிறர்க்கு
இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல்
தாமே வரும்.
இதன்
பதவுரை
---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! பாந்தள்
--- பாம்பை, முனிமேல் படுத்த ---
வனத்தில் தவம் செய்திருந்த முனிகள்மேல் போட்ட, பரிசித்தன் --- பரிசித்தன் என்னும்
சந்திரகுலத்து அரசன், தான் ஏந்து துன்பம்
உற்றான் --- தான் சாபத்துக்கு ஆளாய மிகுந்த துன்பம் அடைந்தான், (ஆகையால், இது) மாந்தர் --- மனிதர்கள், பிறர்க்கு --- அன்னியர்க்கு, இன்னா --- கெடுதிகளை, முன்பகல் செய்யின் --- காலையில்
செய்தால், தமக்கு ---
அவர்களுக்கு, இன்னா --- கெடுதிகள், பிற்பகல் --- (அன்று)
மாலையிலேயே, தாமே வரும் ---
எதிர்பாராதபடி தாமே வந்து சேரும் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- முற்பகல்
செய்யின் பிற்பகல் விளையும்.
விளக்கவுரை --- சந்திரகுலத்துப்
பரிசித்து என்னும் அரசன் வேட்டைக்குச் சென்றபோது வனத்தில் ஒரு முனிவன் கண்மூடித்
தவம் செய்திருந்தான். அஃது உணராமல் கண்மூடித் தன்மையாய் அவன் அந்த முனிவரைச் சில
கேள்விகள் கேட்டான். அதற்கவர் விடை கூறாமைக்குக் கோபித்துக் கொண்ட பரிசித்தன்
அங்கு மரித்துக் கிடந்த பாம்பொன்றை எடுத்து அவர் கழுத்தில் மாட்டிச் சென்றான்.
பிறகு அம் முனிமகன் வந்து, தந்தை கழுத்தில்
பாம்பு மாட்டியிருக்கக் கண்டு கோபித்து, "இது செய்தவன்
இன்றைக்கு ஏழாம் நாள் தட்சன் என்னும் பெரும் பாம்பு கடித்து மாளக்கடவன்"
என்று அருஞ்சாபம் இட்டான். அப்படியே அவனுக்கு மரணம் உண்டாயிற்று. இதனால் "முற்பகல் செய்யின் பிற்பகல்
விளையும்" என்பது விசதமாகின்றது. நன்மையும் இப்படியே வருவதனாலும் அது
எல்லாரும் விரும்பத்தக்கது, செயற்கரியது. ஆகையால், தீமையே இங்கு எடுத்தோதினார். பிறர்க்கு
நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருப்பது நலம்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம்
பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ
வெண்பா"
என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
புறம்பியத்து
மின்னைஉயிர் போக்கவந்தான் பட்ட
திறம்
தெரியாதோ, சிவசிவா! -
பிறழ்ந்து
பிறர்க்குஇன்னா
முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல்
தாமே வரும்.
மதுரையில் வசிக்கும்
வணிகன் ஒருவன், உடல்நிலை சரியில்லாத
தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பயம் என்னும் சிவத் திருத்தலத்திற்கு வந்தான்.
மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடினான்.
அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லுமுன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான்.
இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம்
முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணை
கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி
வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது
பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும்
பழி கூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதரை சென்று திருமணம்
நடந்ததற்குச் சாட்சி பகன்றார். வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி
சாட்தி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி
சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை
சுந்தரேசுவரர் ஆலயத்தின் ஈசானிய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக
இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும்
இருப்பதைக் காணலாம். செட்டிப்பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு
சாட்சியாக இருந்த வன்னிமரம், இத்தலத்தின் இரண்டாம் திருச்சுற்றில் உள்ளது.
பின்வரும்
பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க....
கோவேந்தன்
தேவி கொடுவினை யாட்டியேன்
யாவும்
தெரியா இயல்பினேன் ஆயினும்
முற்பகற்
செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல்
காண்குறூஉம் பெற்றிய காண் நற்பகலே.. ---
சிலப்பதிகாரம்.
இதன்
பதவுரை ---
கோ வேந்தன் தேவி-- - பேரரசன் ஆகிய பாண்டியன்
பெருந்தேவியே, கொடுவினையாட்டியேன்
யாவும் தெரியா இயல்பி னேன் ஆயினும் --- கணவனை இழந்த தீவினையுடையேனாகிய யான்
ஒன்றுமறியாத தன்மையேன் ஆயினும்,
முற்பகல்
செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய காண் --- பிறனுக்கு
முற்பகலில் கேடு செய்தானொருவன் தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காணலுறும்
தன்மையையுடையன வினைகள் ;
நெடியாது
காண்கிலாய் தீ எளியை; நெஞ்சே!
கொடியது
கூறினாய், மன்ற - அடியுளே
முற்பகல்
கண்டான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல்
கண்டு விடும். --- பழமொழி நானூறு.
இதன்
பதவுரை ---
நெஞ்சே கொடியது கூறினாய் --- நெஞ்சே! தீய
செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய். (ஆதலால்) நீ எளியை --- நீ அறிவு
இல்லாதாய், நெடியது காண்கிலாய்! ---
(பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங் காலத்திற்குப் பின் அறியாய், அடியுளே --- அந்த நிலையிலே, பிறன்கேடு முன் பகல் கண்டான் --- பிறன்
ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற்பகுதிக்கண் செய்தான், தன் கேடு பின்பகல் மன்ற கண்டு விடும் ---
தனக்கு வரும் தீங்கினைப் பகலின் பிற்பகுதிக்கண் தப்பாமல் அடைவான்.
முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.
நெஞ்சே, தீங்கின் பயனை அடைதற்கு நீண்ட நாட்கள்
செல்லும் என்று நினைத்தலை ஒழி. உடனேயே பயனை அடைவாய். ஆதலால், யார்மாட்டும் தீங்குசெய்ய நினைத்தலை
விட்டுவிடு. 'பிறர்க்(கு) இன்னா
முற்பகல் செய்யின் தமக்(கு) இன்னா,
பிற்பகல்
தாமே வரும்.' இஃது இக்கருத்துப்
பற்றி எழுந்த திருக்குறள்.
முற்பகல்
செய்யில் பிற்பகல் விளையும்...
--- கொன்றை வேந்தன்.
இதன்
பொருள் ---
ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு
செய்தால் பிற்பாகத்தில் தனக்கு அத்தீங்கு உண்டாகும்.
முற்பகல்
பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. நன்மை தீமை
இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகவும் கொள்ளலாம்.
பிறர்க்கு
இன்னா செய்தலில் பேதைமை இல்லை,
பிறர்க்கு
இன்னாது என்று பேரிட்டுத் - தனக்கு இன்னா
வித்தி
விளைத்து வினை விளைப்பக் காண்டலில்
பித்தும்
உளவோ பிற. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
பிறர்க்கு இன்னா செய்தலின் --- மற்றவர்கட்குத்
துன்பம் செய்தலைக் காட்டிலும், பேதைமை இல்லை --- அறியாமை
வேறு ஒன்று இல்லை, பிறர்க்கு இன்னாது
என்று பேரிட்டு ---மற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்து, தனக்கு இன்னா வித்தி விளைத்து வினை
விளைப்பக் காண்டலின் ---தனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை
கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும், பிற பித்தும் உளவோ --- பிற அறியாமைதான்
வேறு உண்டோ? நீயே கூறு.
முன்னைச்
செய்வினை இம்மை யில்வந்து
மூடு மாதலின் முன்னமே
என்னை
நீதியக் காதெ ழும்மட
நெஞ்சமே! எந்தை தந்தையூர்
அன்னச்
சேவலோ டூடிப் பேடைகள்
கூடிச் சேரு மணிபொழில்
புன்னைக்
கன்னி களக்கரும்பு
புறம்ப யம்தொழப் போதுமே. ---
சுந்தரர் தேவாரம்.
இதன்
பொழிப்புரை ---
அறியாமையையுடைய மனமே! ஒருவர் முற்பிறப்பிற்
செய்த வினை, இப்பிறப்பில் வந்து அவரைச்
சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மையாதலின், அங்ஙனம்
வந்து சூழ்வதற்கு முன்பே, எமக்கும் பிறர்க்கும்
தந்தையாகிய சிவபெருமானது ஊராகிய ,
அன்னப்
பேடைகள், அவற்றின் சேவல்களோடு முன்னே
ஊடல் கொண்டு, பின்பு கூடலைச் செய்து
வாழ்கின்ற அழகிய சோலைகளில் உள்ள இளைய புன்னை மரங்கள் கழிக்கரையில் நின்று மணம் வீசுகின்ற
திருப்புறம் பயத்தை வணங்கச் செல்வோம்; என்னை
நீ கலங்கச் செய்யாது புறப்படு .
முந்திச்
செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்கன் ஆகிக் கழிந்தன காலம்,
சிந்தித்தே
மனம் வைக்கவும் மாட்டேன்,
சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்,
அந்தி
வெண்பிறை சூடும் எம்மானே!
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!
எந்தை!
நீ எனக்கு உய்வகை அருளாய்,
இடைமருது உறை எந்தை பிரானே. ---
சுந்தரர் தேவாரம்.
இதன்
பொழிப்புரை ---
மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடிய வனே, திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே, என் தந்தையே திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற
எம் குலதேவனே, முற்பிறப்பிற் செய்த வினைகள்
இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலி னால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே
காலமெல்லாம் போயின ; நன்மை தீமைகளைச் சிந்தித்து, உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும்
மாட்டாதேனாயினேன் ; உலகியலிலும், இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு
சிறிது ஈதலும் செய்தி லேன் ; எனக்கு, நீ, உய்யும் நெறியை வழங்கியருளாய்.
பந்தித்த
பாவங்கள் அம்மையில் செய்தன,
இம்மைவந்து
சந்தித்த
பின்னைச் சமழ்ப்பது என்னே,
வந்து
அமரர் முன்னாள்
முந்திச்
செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடி வணங்கும்
நந்திக்கு
முந்துற ஆட்செய்கிலா விட்ட நன்னெஞ்சமே. --- அப்பர்
தேவாரம்.
இதன்
பொழிப்புரை ---
வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த
பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான்
பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய்
நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில்
அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?
பொற்பகல்
சிகரியுள் பொருந்தி ஆழ்பவர்
அற்பகல்
நுகருமீன் அவரை நுங்குமால்
முற்பகல்
ஓர்பழி முடிக்கின், மற்று அது
பிற்பகல்
தமக்கு உறும் பெற்றி என்னவே. --- கந்தபுராணம்.
முற்பகல் இன்னா செய்தவர், பிற்பகல் இன்னல் உற்று அழிவர் என்னும்
தன்மை போல்,
போரில்
அழிந்து கடலில் வீழ்ந்த தானவரை,
மீன்கள்
நுங்கின. முன்பு தம்மை உண்டவரை, இன்று அவை தின்று களித்தன.
விடுக
இந்த வெகுளியைப் பின்பு உற,
அடுக
நும் திறல் ஆண்மைகள் தோன்றவே,
வடுமனம்
கொடு வஞ்சகம் செய்பவர்
கெடுவர்
என்பது கேட்டு அறியீர்கொலோ.
--- வில்லிபாரதம், அருச்சுனன் தவநிலைச் சருக்கம்.
இதன்
பதவுரை ---
இந்த வெகுளியை --- இக்கோபத்தை, விடுக --- (இப்பொழுது) விடுவீர்களாக; பின்பு உற --- (வனவாச அஜ்ஞாதவாசங்களின்)
பின்பாக, நும் திறல் ஆண்மைகள் தோன்ற --- உம்முடைய பலபராக்கிரமங்கள் வெளிப்படும்படி, அடுக --- (பகைவர்களைக்) கொல்லுவீராக; 'வடுமனம் கொடு --- குற்றத்தையுடைய மனத்தை உடையவர்களாய், வஞ்சகம் செய்பவர் --- வஞ்சனை செய்பவர்கள், கெடுவர் --- கெட்டே விடுவர்,'என்பது --- என்னும் வார்த்தையை, கேட்டு அறியீர்கொல் ஓ --- (நீவிர்) கேட்டும் அறிந்தீரில்லையோ?
மனக் குற்றங்கொண்டு பிறர்க்குத் தீமை செய்பவர்
கெடுவர். ஆதலால், இப்போது சீற்றங்கொண்டு
துரியோதனாதியரைச் செறல் ஆகாது என்பதாம். இனி 'கெடுவான் கேடு நினைப்பான்' என்ற பழமொழிக்கு ஏற்ப, துரியோதனாதியர் கேடு நினைத்தலால் தாமே கெடுவார்: அவரைக்
கெடுக்கவேணும் என்று இப்போது வெகுளி கொள்ளவேண்டாம்
என்றுமாம். "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா, பிற்பகல் தாமே வரும்" என்றார், திருவள்ளுவரும்.
No comments:
Post a Comment