033. கொல்லாமை - 07. தன்னுயிர் நீப்பினும்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 33 -- கொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "தனது உயிரே போகுமானாலும் கூட, தான் மற்றொன்றின் உயிரை நீக்கும் செயலைச் செய்யாது ஒழியவேண்டும்" என்கின்றார் நாயனார்.

     தன் உயிர் நீப்பினும் என்பதற்கு, தோஷ நிவாரணமாகச் செய்யாதவழி, பிறிதொரு பிராணியப் பிறரைக் கொண்டு கொலை செய்வித்தல் முடியாத இடத்து, தன் உயிர் போகுமானாலும் என்று உரை கூறுவாரும் உண்டு. பிறர், தனது நிமித்தம் ஓர் உயிரைக் கொலை செய்தலும் துறவிக்கு ஆகாது என்பதால், இது பொருந்தாது.

     மிருகம் முதலியவற்றைத் தான் கொன்றால் பாவமே அல்லாது, தன் நிமித்தம் பிறர் கொன்றால் பாவம் இல்லை. ஆதலால் அவறைப் பிறரால் கொல்விக்கலாம். அவ்வாறு செய்தல் முடியாத இடத்து, தன் உயிர் போகுமாயினும், பிறிதொரு பிராணியின் உயிரைக் கொல்லல் ஆகாது என்பது பிறர் உரையின் தாற்பரியம். அதனைப் பரிமேலழகர், தன்பொருட்டுப் பிறர் செய்யும் கொலைப்பாவம் தனக்கே வருவதாய் இருத்தலால, அது கூடாது என மறுத்தார்.

     உடல் சார்பு, உயிர் சார்பு, பொருள் சார்பு ஆகியவைகளை விட்டு இருக்கவேண்டிய துறவி, தன்னைக் காத்தல் இறைவனது பாரம் என்று உறுதியோடு இருக்கவேண்டுமே அல்லாமல், உடல் சார்பு கொண்டு பிறிதொரு உயிரைப் பிறரைக் கொண்டும் கொல்வித்தல் பெரும்பாவம்.

திருக்குறளைக் காண்போம்...


தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான் பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தன் உயிர் நீப்பினும் --- அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்:

     தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க --- தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க.

         ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

வேந்துமகன் தேர்க்கால் விடல்அஞ்சி, மந்திரிதான்
சோர்ந்து, தனது ஆவிவிட்டான், சோமேசா! --- ஆய்ந்துஉணர்ந்தோர்
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீங்கும் வினை.

இதன்பொருள்---

         சோமேசா! தன் உயிர் நீப்பினும் --- தான் அது செய்யாவழித் தன் உயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும், தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை --- தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலை, ஆய்ந்து உணர்ந்தோர் --- பொருளின் இயல்பை நன்கு ஆராய்ந்து அதன் உண்மையை உள்ளவாறு உணர்ந்தோர் செய்யற்க.... 

         மந்திரி --- சோழ அரசனுடைய அமைச்சன், வேந்து மகன் --- தன் அரசனாகிய மனுச் சோழருடைய மகனாகிய இளவரசனை, தேர்க்கால் விடல் அஞ்சி --- மனுச்சோழர் கட்டளைப்படி அவ்வீதியில் தேர்க்காலில் வைத்து ஊர்தற்குப் பயந்து,  சோர்ந்து தனது ஆவி விட்டான் --- மனச் சோர்வுற்றுத் தான் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறந்தான் ஆகலான் என்றவாறு.

         தன்கீழ் வாழ்வோர் குற்றம் செய்யின், அக்குற்றத்தை நாடி, யாவரிடத்தும் கண்ணோட்டம் வையாது நடுவு நிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லப்பட்ட தண்டத்தை ஆராய்ந்து, அவ்வளவினதாகச் செய்வதே அரசனுக்கு முறையாம். "ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும் தேர்ந்து செயவஃதே முறை" என்பது திருக்குறள். இதுவே ஒரு பக்கத்திலே சாயாமல் செவ்விய கோல் போலுதலின் செங்கோல் என்று சொல்லப்படும். பொதுவாக உயிர்களைக் காத்தல் புண்ணியமாம். ஆயினும், பசு பெண்கள் அந்தணர் சிவனடியார்கள் முதலியோரைக் காத்தல் பெரும் புண்ணியமாம். இதனை, "ஆவையும் பாவையும் மற்றற வோரையும், தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும், காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல், மேவு மறுமைக்கு மீளா நரகமே" என்பது திருமந்திரம்.

         இங்கே மந்திரி, தனக்கு அரசர் ஆணையிட்டபடியே தான் அவருடைய மகனைக் கொல்லுவானாயின் அவருக்குப் பின் அரசு இயற்றுதற்கு ஒருவரும் இல்லாமையால், குரு லிங்க சங்கமங்களுக்கு இடையூறு நிகழும். மற்றும் உயிர்களெல்லாம் இடுக்கம் இன்றி இன்புற்று வாழ்தல் கூடாது என்பதனை "மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்" என்று நன்கு சிந்தித்துச் சிவபத்தியானும், சீவகாருண்ணியத்தானும் தன்னுயிரை விடுத்தான்.

         "மன்னவன் தன் மைந்தனை அங்கு
                  அழைத்துஒரு மந்திரி தன்னை
         முன் இவனை அவ் வீதி
                  முரண் தேர்க்கால் ஊர்க என,
         அன்னவனும் அது செய்யாது
                  அகன்று தன் ஆருயிர் துறப்பத்
         தன்னுடைய குலமகனைத்
                  தான்கொண்டு மறுகு அணைந்தான்".  ---பெரிய புரா. திருநகரச் சிறப்பு.43

         மனுச் சோழனுடைய மகனாகிய வீதிவிடங்கன் ஒருநாள் தேர் ஏறி, அரசுவீதியில் தானை சூழச் செல்லுங்கால், ஓர் ஆண் கன்று துள்ளி வந்து தேர்க்காலின் இடைப்புகுந்து இறந்ததாக, அவ் ஆன் அரண்மனை வாயிலில் கட்டிய ஆராய்ச்சி மணியைக் கொம்பினால் அடிக்க, அம் மணியொலி கேட்ட சோழன் துயரம் அடைந்து, தன் குலத்திற்கு ஒரு மகன் என்பதும் மறந்து, "திருவாரூரில் பிறந்த ஒரு உயிரைக் கொன்றதனால் அதற்குப் பிராயச்சித்தம் இல்லை. அவ் ஆன் அடைந்த துன்பத்தை யானும் அடைதல் முறை" என்று கூறி, ஒரு மந்திரியை நோக்கி, 'முன் இவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க' என்று ஏவினான். அவன் அது செய்தற்கு அஞ்சித் தன் உயிர் துறப்பத் தன் மகனைத் தானே தேர்க்கால் அவன் மார்பின் மீது செல்லும்படி ஊர்ந்த அளவில் வீதிவிடங்கப் பெருமான் காட்சி தந்து, ஆன் கன்றும், சோழன் மகனும், மந்திரியும் உயிர் பெற்றெழச் சோழனுக்குத் திருவருள் பாலித்தார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

சொல்லார் முனிக்கு இறுதி சூழ் கார்த்தவீரன் குலம்
எல்லாம் இறந்தது, இரங்கேசா! --- கொல்லவே
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீங்கும் வினை.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சொல் ஆர் --- புகழோடு கூடிய, முனிக்கு --- ஜமதக்கினி முனிவர்க்கு, இறுதிசூழ் --- மரணத்தை உண்டாக்கிய, கார்த்தவீரன் குலம் --- கார்த்தவீரியார்ச்சுனனுடைய வமிசம், எல்லாம் இறந்தது ---அடங்கலும் நாசமாயிற்று, (ஆகையால், இது) கொல்ல --- பிறர் கொல்வதனால், தன் உயிர் நீப்பினும் --- தன் உயிர் நாசமாவதாயிருந்தாலும், தான் --- ஒருவன், பிறிது இன் உயிர் நீக்கும் வினை --- வேறொன்றின் இனிய உயிரை வாங்கும் காரியத்தை, செய்யற்க --- செய்யாதிருக்கக் கடவன் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- தன்னுயிர் போகினும் மன்னுயிரை வாட்டற்க.

         விளக்கவுரை --- கார்த்தவீரியார்ச்சுனன் வேட்டைக்குச் சென்று பரசுராமன் தந்தையாகிய ஜமதக்கினி ஆசிரமத்தில் சேனையோடு வந்து, அம் முனிவனை வணங்கினான். அவர் மனமகிழ்ந்து, அவற்கும் அவன் சேனைக்கும் காமதேனுவைக் கொண்டு வந்து விருந்து செய்வித்தார். விருந்துண்டு மகிழ்ந்த கார்த்தவீரியன், அப் பசுவைக் கட்டிக்கொண்டு போக முயன்றதனால், அது, தன் மயிர்க்கால்கள் தோறும் சேனாவீரர்களை உண்டாக்கி, அவன் சேனைகளை அழித்தது.  அதுகண்ட கார்த்தவீரியன் கடும் கோபம் கொண்டு தன் கை வாளால் ஜமதக்கினியைக் கொன்றான். தன் கணவன் இறந்ததைக் கண்ட பரசுராமன் தாய் இரேணுகை என்பாள், இருபத்தொரு முறை தன் மார்பில் அறைந்து அழுதாள். தாய் அழுததைக் கண்ட பரசுராமர் மனம் பொறாமல், கார்த்தவீரியன் குலமாகிய சத்திரிய குலத்தை இருபத்தொரு தலைமுறை கருவறுத்துக் கொன்றார். ஆகையால், தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது இன்உயிர் நீக்கும் வினை என்றார் நாயனார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

மேவும் வனசரன்ஓர் வேதியனைக் காத்தநலம்
தேவன்அறி வானே, சிவசிவா! --- பூவுலகில்
தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. 

     வனசரன் - காட்டில் திரியும் கள்வன். வேதியன் - மறையவன்.  வேதியனிடத்து மாணிக்கம் இருந்தது. கள்வன் பறிக்கத் துணிந்தான். வேதியன் மணியை விழுங்கினான். இருவரும் மாணிக்கம் மற்றவர் வயிற்றில் இருக்கிறதென்று சண்டையிட்டனர். வேடன் ஒருவன் வந்தான். கள்வன் வேதியனைக் காக்கத் தன் வயிற்றைக் கீறிக்காட்டி மாண்டனன்.

     பின்வரும் படல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

கோனைக் காவி, குளிர்ந்த மனத்தராய்,
தேனைக் காவிஉண் ணார்சில தெண்ணர்கள்,
ஆனைக் காவில்அம் மானை அணைகிலார்,
ஊனைக் காவி உழிதர்வர், ஊமரே.  --- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     தெளிவற்ற சிலர் , உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத்தேனை உண்ணாதவராயுள்ளனர் ; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணேசுமந்து திரிவர் !

தேனைக் காவல் கொண்டு விண்ட
     கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார்
     அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே
     அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட்டு உன்னை
     உகப்பார் உணர்வாரே.           ---  சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

     திருவானைக்கா, திருவண்ணாமலை என்னும் திருத்தலங்களில் எழுந்தருளி இருப்பவனே! தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே! வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே! அழித்தல் தொழிலை உடையவனே! மேலானவனே!  உடலை ஓம்புதலை விட்டு, உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே, உன்னை உணர்வார்கள் .

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...