036. மெய் உணர்தல் - 09. சார்பு உணர்ந்து





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 36 -- மெய் உணர்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "ஒருவன் எல்லாப் பொருள்களுக்கும் சார்பாகிய செம்பொருளை உணர்ந்து, யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் அறவே கெடும்படி நடக்கவல்லவன் ஆனால், முன் அவனை அடைதற்கு உரியனவாய் நின்ற துன்பங்கள் அழிந்து, மீண்டும் அவனை அவை அடையமாட்டா" என்கின்றார் நாயனார்.

     சார்பு என்னும் இரண்டு சொற்களுள்,  முன்னது, எல்லாப் பொருள்களுக்கும் சார்பாக உள்ள செம்பொருளாகிய இறைவனையும், பின்னது, உயிர்களைச் சார்ந்து உள்ள இருவகைப் பற்றுக்களையும் குறித்தது.

     நடத்தை என்பது ஒழுக்கத்தைக் குறித்தது. அது யோக ஒழுக்கம் ஆகும். அட்டாங்க யோகத்தைக் குறித்தது.

     உயிரானது அடைதற்கு உரியனவாக நின்ற துன்பங்கள், பிறவி அநாதியாய் வருவதால், உயிரினால் அளவில்லாமல் ஈட்டப்பட்டுள்ள நல்வினை, தீவினை என்னும் இருவகை வினைகளின் பயனை இறந்த உடம்புகளால் அனுபவித்தனவும், பிறந்த உடம்பால் அனுபவிக்க முகர்ந்து வந்ததும் போக, இனிவரும் உடம்புகளால் அனுபவிக்க உள்ளனவும் ஆகும்.

     அத் துன்பங்கள் விளக்கின் முன் இருள் நீங்குவது போ, கதிரவன் ஒளி முன் பனி நீங்குதல் போல, ஞானயோகங்களின் முன் நில்லாமல் நீங்கிப் போகும் என்பதால், "அழித்துச் சார்தரா" என்றார். நல்வினையும் பிறவிக்குக் காரணமாதலால், நல்வினைப் பயனும் நோய் எனப்படும்.

     வினை நீக்கம் குறித்துத் திருமுறைகளில் கூறியுள்ளது காண்போம்...

     வானளாவ அடுக்கி வைக்கப்பட்ட விறகுத் தொகுப்பில், கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதி இல்லாமல் எல்லாம் சாம்பலாகும்.
எவ்வுளவு விறகானாலும், சிறிய நெருப்பானது பொசுக்கிச் சாம்பலாக்கி விடுவது போ, இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தே ஆகும் என்கின்றார் அப்பரடிகள் பின்வரும் பாடலில்....

விண்உற அடுக்கிய விறகின் வெவ்அழல்
உண்ணிய புகில்அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின்று அறுப்பது நமச்சி வாயவே.

     கொடிய நெருப்பில் போட்ட விறகினைப் போ, உயிர்களின் வினைத் தொகுதியும், அவற்றால் வரும் துன்பங்களும் அழிந்து ஓழியும் என்கின்றார், அப்பரடிகள் பின்வரும் பாடலில்....

"சந்திரற் சடையில் வைத்த 
     சங்கரன் சாமவேதி, 
அந்தரத்து அமரர் பெம்மான்
     ஆன்நல் வெள்ளேறு  ஊர்தியான் தன்
மந்திரம் நமச்சிவாய
     ஆக நீறு அணியப் பெற்றால்
வெந்து அறும் வினையும் நோயும்
     வெவ்வழல் விறகு இட்டு அன்றே"

 திருஞானசம்பந்தப் பெருமானும்

"மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை
     வருபுனல் மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல்வினை
     கனல் இடைச் செதிள் அன்றே"

என்று அருளி உள்ளார்.


     ஆண்டாள் நாச்சியாரும் தமது திருப்பாவையில்,  "மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை,  தூய பெருநீர் யமுனைத் துறைவனை,  ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,  தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை,   தூயோமாய் வந்து,  நாம் தூமலர் தூவித் தொழுது,  வாயினால் பாடி,  மனத்தினால் சிந்திக்க,  போய பிழையும், புகுதருவான் நின்றனவும்,  தீயினில் தூசு ஆகும் என்றே சாதித்துக் காட்டினார்.

          பகவத் கீதை நான்காம் அத்தியாயத்தில், 37-ஆவது பாடலில், "யதா ஏதாம்ஸி ஸமித்தோக்னிர் பஸ்மஸாத் குருதே அர்ஜுன, ஞானாக்னி ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா" என்றும் சொல்லப்பட்டுள்ளது.  இதன் கருத்து, "அருச்சுனா! சுடர்விட்டு எரியும் தீயானது விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறதோ, அப்படியே ஞானாக்கினியானது எல்லாக் கர்மங்களையும் சாம்பலாகச் செய்கிறது".

"விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் -  விளக்கு நெய் 
தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு, நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது"

என்பது நாலடியார். 

     இல்லக விளக்கு புற இருளைப் போக்கும்.  திருஅஞ்செழுத்து அக இருளைப் போக்கும் என்பதை,

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு, து சோதி உள்ளது
பல் அக விளக்கு அது பலரும் காண்பது
நல் அக விளக்கு அது நமச்சி வாயவே.

என்னும் அப்பர் தேவாரத்தால் அறியலாம்.

இறைவனை நமக்குச் சார்பானவன், அவனால் அருள் நலம் விளங்கும் என்பதை உணர்ந்து, வினையின் சார்பை விடுத்து, அருள்நெறியில் ஒழுகினால், உயிரைச் சார்ந்துள்ள வினையினால் வரும் துன்பங்கள் இல்லை ஆகும்.

திருக்குறளைக் காண்போம்...

சார்பு உணர்ந்து, சார்பு கெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் --- ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்;

     சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா --- அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.

         (ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு'  என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச் சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்' எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடைய உயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்' என்பது இதனால் கூறப்பட்டது.)

                                                              
     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திருநாவுக்கரசு நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

தரைசேர் சமண்நீங்கிச் சைவம்சேர் நாவுக்கு
அரைசர் வயிற்றுவலி அற்றார் --- உரைசேர்ந்த
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

         உலகமுழுதும் பரவியிருந்த ஆருகத சமயத்தை, சிவபெருமான் அருளாமையினால், மருள்நீக்கியார் அநுட்டித்து அச்சமயத்திற்குத் தலைவரும் ஆயினார். தருமசேனர் என்னும் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். திலகவதியார் வேண்டிக்கொள்ள, அவர் முன்பு செய்த சிவபுண்ணியம் முதிர, மருள்நீக்கியாரை ஆட்கொள்ளும் கருணையினால் சிவபெருமான் சூலைநோயை ஏவினார். அவர் அதனால் உண்டாகிய துன்பம் அதிகரித்துச் சமண் பள்ளியை விட்டுத் திருவதிகையை அடைந்தார். சிவத்தொண்டு செய்துகொண்டிருந்த தமக்கையாரின் ஆணைப்படி சைவசமயம் சார்ந்தார். வயிற்று வலியும் அற்றார்.  தேவாரத் திருப்பதிகம் பாடினார். திருநாவுக்கரசர் என்ற பெயரையும் கொடுத்து ஆட்கொண்டு அருளினார்.

         ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின், அவனை முன் சாரக் கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ் உணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
  
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்
சார்பு உணர்தல் தானே தியானமுமாம் ---  சார்பு
கெட ஒழுகின் நல்ல சமாதியும் ஆம், கேதப்
பட வருவது இல்லைவினைப் பற்று. --- திருக்களிற்றுப்படியார்.

இதன் பொருள் ---

     திருவருளை உணர்ந்து, திருவருள் நீங்கும்படிக்கு ஒழுகினால் என்று திருவள்ளுவர் உரைத்த படியினாலே, திருவருளை உணருகிறதே தியானமுமாம். திருவருள் நீங்கும்படிக்கு ஒழுகினால் அதுவே நல்ல சமாதியுமாம். இவை கைகூடினால் நாம் துன்பப்டும்படிக்கு வினை பாசம் நம்மை வந்து பொருந்துவது இல்லை.

     திருவருட்சார்பு இருந்தால், எந்நாளும் இன்பமே என்பதை விளக்கும் பாடல்கள்....

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடும்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவன் உறைவிடம் திருவல்லமே. ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.

     சார்ந்தவர்க்கு - திருவடியே சரண் என்று சார்ந்த ஞானிகட்கு. நேர்ந்தவன் - திருவுளம் பற்றியவன்; தேர்ந்த ஞானியரையும் தேடச்செய்து அவர்கட்குப் பாலினெய்போலவும் தேடுவாரைத் தேடச்செய்து விறகின் தீப்போலவும் தோன்றி நிற்பவன்.

சலம்இலன் சங்கரன் சார்ந்த வர்க்குஅலால்
நலமிலன் நாள்தொறும் நல்கு வான்நலன்
குலம்இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதுஓர்
நலம்மிகக் கொடுப்பது நமச்சி வாயவே. ---  அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான் , தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான் . அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான் . உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும் .


சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன்,
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும்,
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல் காட்டிடும்,
சேர்ந்தவர் தேவரைச் சென்று உணர்வாரே.   ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     பொதுவாக, `தேவரைச் சேர்தல்` என்பது தேவரை அவரை உணரும் நெறியிற் சென்று உணர்தலே யாகும். அம்முறையில் சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்ப நிலையாகிய வீட்டையும், சாராது நீங்கினவர்கட்குத் துன்ப நிலையாகிய பிறப்பையும் கொடுப்பான். இதனை உணர்ந்து அவனிடத்தில் அன்பு மிகப் பெற்றவர்கட்கே அவன் தனது திருவடி நிழலைத் தருவான்.


தேர்விலாச் சிறிய பருவத்தில் தானே
     தெய்வமே தெய்வமே எனநின்
சார்வுகொண்டு, ல்லாச் சார்வையும் விடுத்தேன்;
     தந்தையும் குருவும்நீ என்றேன்;
பேர்வுஇலாது உளத்தே வந்தவா பாடிப்
     பிதற்றினேன்; பிறர்மதிப்ப அறியேன்;
ஓர்வு இலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன்;
     இன்றுநான் உரைப்பது இங்கு என்னே.  ---  திருவருட்பா.

இதன் பொழிப்புரை ---

     நன்று தீங்குகளைப் பகுத்தறிய வாராத சிறுபருவத்திலேயே தெய்வம் என்று உன்னையே சார்பாகக் கொண்டு பிற சார்புகள் அனைத்தையும் கைவிட்டு எனக்குத் தந்தையும் குருவும் நீயே என்று கொண்டேன்; அதனால் உள்ளம் தளராது நினைவில் வந்தவற்றைப் பாடிப் பிதற்றினேன்; பிறர் என்னைப் பற்றிப் பாடியதையும் பொருளாகக் கொண்டிலேன்; நினைத்தற் கில்லாத பிழைகள் யாதொன்றையும் செய்தறியேன்; ஆகவே இப்பொழுது யான் இவ்விடத்து உரைப்பதற்கு யாதொன்றும் இல்லை. எ.று.


திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
நீரற நீர்ச்சார் வறும்.             ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     சுடர் திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக ஏர் எரியும் --- விளக்கு திரியையும் அகலையும் நெய்யையும் பற்றுக் கோடாகக் கொண்டு அழகாக எரியும்; சார்வுகளின்றேல் எரியாது, அனைத்தாய் தெரியுங்கால் --- அது போன்று ஆராயுமிடத்து, சார்வு அற --- சார்வாக நின்ற மூவகை வினையும் அற்றுப்போக (அவ்வினையறுதலே), பிறப்பு அறுக்கும் --- பிறவித் துன்பத்தை நீக்கும், அஃதே போல் நீர் அற நீர்சார்வு அறும் --- அதைப் போலவே நீர் அற்றுப் போகவே அந்நீரிற் சார்ந்து வாழும் உயிர்களும் இறந்து போகும்.

         வினையறவே பிறப்பறும். மூவகை வினையாவன சஞ்சிதவினை, பிராரத்துவவினை, ஆகாமிய வினை என்பன. ஆகாமிய வினை பற்றற்றான் பற்றினைப் பற்றியவழி யல்லது நீங்காமையின், அது நீங்குதற் பொருட்டு அவனடியைப் பற்றவேண்டும்; பற்றவே, மூவகை வினையற, அதனால் பிறவி நீங்கும்.


உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்,
அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
தயிரும், வேரியும், தலைமயங்குமே.   ---  கம்பராமாயணம், நாட்டுப் படலம்.

இதன் பதவுரை ---

     உயரும் சார்விலா உயிர்கள் --- உயர் கதியான வீடு பேறடைவதற்கு உரிய ஞானமில்லாத உயிர்கள்; செய்வினைப் பெயரும் பல்கதி --- தாம் செய்த வினைப்பயனைத் துய்க்க மாறி  மாறிப் பல பிறவிகளிலும்; பிறக்கும் ஆறு போல் --- பிறக்கின்ற விதம் போல; அயிரும் தேனும் இன் பாகும் --- சர்க்கரையும்,  தேனும்,  இனிய பாகும்;  ஆயர் ஊர்த் தயிரும் வேரியும் --- இடையர் ஊர்களில் கிடைக்கும் தயிரும் கள்ளும் ஆகியவை; தலைமயங்கும் --- இடம் மாறுபடும்.

     ஓரிடத்தில் உற்பத்தியாகும் அயிர் முதலிய வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு,   உயர்கதி அடையும் வாய்ப்பில்லாத உயிர்கள் வேறு வேறு பிறவிகளில்  மாறிப் பிறத்தல் உவமையாகக் கூறப்பட்டது.  உயிரும்  சார்பாவது அஞ்ஞான வயத்தால் பிறந்து இறந்து தாழ்ந்த   கதிகளிற் செல்லுதல் ஒழிந்து,  மோட்சத்தை அடைதற்குக் கருவிகளாகிய மெய்ஞ்ஞானம் - இராமசாமி நாயுடு உரை. இறைவனை அடைவதற்குரிய ஏதேனும் ஒரு நெறியைக் கடைப்பிடித்து, பிறவித் துன்பத்திலிருந்து ஈடேறுவதே உயிர்களின் கடமை என்பதனை இதனால் உணர்த்தினார்.


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...