029. கள்ளாமை - 08. அளவறிந்தார்





திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 29 -- கள்ளாமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "அளவு என்பதை அறிந்து ஒழுகியவர் உள்ளத்தில் அறம் நிலைபெறுவதைப் போல, களவு அறிந்தவர் உள்ளத்தில், வஞ்சகம் தங்கிப் பெருகும்" என்கின்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்,
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் --- அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும்,

     களவு அறிந்தார் நெஞ்சில் கரவு --- களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை.

         (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

குத்திரம் செய்தலின் கள்வன்ஆதல் அறிப.  ---  முதுமொழிக் காஞ்சி.

குத்திரம் - படிறு, வஞ்சகம்.

இதன் பதவுரை ---

     குத்திரம் செய்தலின் --- ஒருவன் ஒருவருக்குச் செய்யும் வஞ்சகச் செயலால், கள்வன் ஆதல் --- அவன் திருடன் என்பதை, அறிப --- அறிவர்.

         ஒருவன் களவு செய்யும் கருத்தினன் என்பதற்கு அவனுடைய வஞ்சகச் செயலே அறிகுறி.


நஞ்சு உடைமை தான்அறிந்து நாகம் கரந்து உறையும்,
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு, - நெஞ்சில்
கரவு உடையார் தம்மைக் கரப்பர், கரவார்
கரவு இலா நெஞ்சத்தவர்.             --- மூதுரை.

இதன் பதவுரை ---

     நாகம் - விடப்பாம்பானது, தான் நஞ்சு உடைமை அறிந்து --- தான் விடம் உடையதாய் இருத்தலை அறிந்து, கரந்து உறையும் --- மறைந்து வசிக்கும்; நீர்ப் பாம்பு --- (விடமில்லாத) தண்ணீர்ப் பாம்பானது, அஞ்சா புறம் கிடக்கும் --- அஞ்சாமல் வெளியே கிடக்கும்; (அவை போல்) நெஞ்சில் கரவு உடையார் --- மனத்தில் வஞ்சனையை உடையவர், தம்மைக் கரப்பர் --- தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர்; கரவு இலா நெஞ்சத்தவர் --- வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர், கரவார் --- தம்மை மறைத்துக்கொள்ளார்.

         வஞ்சனை உடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனை இல்லாதவர் வெளிப்பட்டு ஒழுகுவர்.        

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...