036. மெய் உணர்தல் - 04. ஐயுணர்வு எய்திய






திருக்குறள்
அறத்துப்பால்

துறவற இயல்

அதிகாரம் 36 -- மெய் உணர்தல்

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களின் வேறுபாட்டால், ஐந்தாகிய உணர்வு, அப் புலன்களை விட்டுத் தமக்கு வசப்பட்டது ஆயினும், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, அதனால் பயன் இல்லை" என்கின்றார் நாயனார்.

      ஐந்தாகிய உணர்வு --- மனம் வசப்பட்டு மடங்கி தைலதாரை போல ஒருமுகப்பட்டுத் தாரணையில் நிற்றல்.
தரித்தல் --- தாரணை.

     மனம் அடக்கல் யோகம். மயக்கு அறுத்தல் ஞானம். மன மயக்கினை அறுக்கும் ஞானம் இல்லாது, மனம் அடக்கும் யோகத்தால் பயன் இல்லை என்றார்.
    
     அடயோகத்தால் மெய்ஞ்ஞானம் வாய்க்காது என்பது.

திருக்குறளைக் காண்போம்...

ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே,
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே --- சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம்,

     மெய்யுணர்வு இல்லாதவர்க்கு --- மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.

         (ஐந்தாகிய உணர்வு - மனம், அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.)


     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

கர்ப்பத்திலே சுகனார் கேடில் பொருளைக் குறித்தார்
இப்புதுமைக்கு அன்பாம், இரங்கேசா! - உற்பத்தி
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயனின்றே
மெய்யுணர் வில்லாதவர்க்கு.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! கர்ப்பத்தில் ---  (கிளி வடிவம் கொண்ட திலோத்தமையின் கருப்பையில் இருக்கும்போதே), சுகனார் --- சுக முனிவர், கேடு இல் பொருளைக் குறித்தார் --- அழியாப் பொருளாகிய பிரமஞானத்தைக் குறித்தறிந்து கொண்டார். இப் புதுமைக்கு --- இவ் அபூர்வ காரியத்திற்கு, அன்பு ஆம் --- (உடந்தையாயிருக்க, உமக்கு) அன்பு அதிகரித்து இருந்தது, (ஆகையால், இது) மெய்  உணர்வு உற்பத்தி இல்லாதவர்க்கு --- உண்மை அறிவு உற்பத்தி இல்லாதவர்களுக்கு, ஐயுணர்வு எய்தியக் கண்ணும் --- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களிலும் செல்லும் ஐந்தறிவும் வசப்பட்ட இடத்தும், பயன் இன்றே --- பிரயோசனம் இல்லையாம் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- உண்மை அறிவு இல்லாதவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

         விளக்கவுரை --- கிளிவடிவாயிருந்த திலோத்தமை வயிற்றில் சுகர் குழந்தையாய் இருந்தார். இவர் தந்தை வியாச முனிவர். சுகர் தன் தாய் வயிற்றில் இருக்கும்போதே உண்மைப் பொருளாகிய பிரமஞானத்தை அடைந்திருந்தார். ஆகையால், உலகத்தில் பிறந்து மாய்கையில் உழல அவர்க்கு மனமில்லை. அதனால் அவர் தம் தாய் வயிற்றை விட்டு வெளியே வராமலே காலம் கழித்தார். இந்திரன் முதலிய தேவர்களும் எத்தனையோ வேண்டி அழைத்தும், அவர் வெளிப்படாமல், கருவில் இருந்தபடியே அவர்களுக்குத் தக்க சாமாதானம் கூறிக் காலம் போக்கினார். இப்படி அவர் திலோத்தமை வயிற்றில் பன்னீராண்டு கழித்தார். பிறகு திருமால் வந்து அவரை "வெளியே வா" என்றழைத்தார். அதற்கு அவர், "மாயவராகிய உமது மாயத்துக்கு அஞ்சியே நான் வெளியில் வர அஞ்சுகின்றேன்" என்றார். அதுகேட்ட மாயவர், "நம்முடைய மாய்கை ஆரையும் விடாது. உம்மை அது, கண்ணாடியில் உழுந்து உருள்போதேனும் வாட்டுவதற்கு நீர் ஒப்பியே தீரவேண்டும்" என்றார். "அப்படியே" என்று ஒப்பிய சுகர், கண்ணாடி வருவித்து, அதைச் சாய்த்து நிறுத்தி, உளுந்த உருட்டச் சொல்லித் தாம் வெளியில் வருவதுபோல் போக்குக் காட்டினார். உளுந்தும் உருண்டோடிற்று. சுகரும் வெளிப்பட்டு உலக மாயையின் நீங்கி, பிரமஞானத்தோடு விளங்கினார். மாயவன் மாயம் அவரை ஒன்றும் செய்யாமல் ஒடுங்கிற்று.

         மெய்யுணர்வில்லாமல் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது இதனால் விளங்குகின்றது.

     சுகம் - கிளி. சுகனார் - கிளி முகத்தோடு இருந்தவர்.

     இவர் பரம வேதாந்தியாய் கொஞ்சமேனும் அகப்பற்றுப் புறப்பற்று இன்றி,  'சேற்றில் இருந்தும் ஒட்டாத பிள்ளைப் பூச்சி போல', உலகத்திருந்தும் அதன் மாயகையில் சிக்காமல் பிரமஞானியாய்ப் பேறு பெற்று வீடு பெற்றார்.

    
     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரா பாடல்...

பற்று ஒழிந்தும் என்ன, பிறர், பண்டு அரனைத் தூதுவிடக்
கற்றவர் போல் மெய்ப்பொருளைக் கண்டார்கொல், --- உற்றதுகேள்
ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே,
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.

         தூதுவிடக் கற்றவர் ---  சுந்தரமூர்த்தி சுவாமிகள். சங்கிலி நாச்சியார்பால் உறவு வைத்திருந்தமையை எண்ணிப் பரவை நாச்சியார் ஊடல் கொண்டனர். அதனை மாற்றிச் சுந்தரரை அவரிடம் சேர்ப்பிக்கச் சிவபெருமான் பரவையார் இல்லத்துக்கு இருமுறை தூது சென்ற வரலாறு பெரியபுராணத்தால் அறியப்படும்.  சுந்தர்மூர்த்தி சுவாமிகள் மெய்ப்பொருள் உணர்ந்தவர். மெய்ப் பொருள் --- உண்மை அறிவு,  சிவஞானம்.

     பின் வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

ஊறினார், ஒசையுள் ஒன்றினார், ஒன்றிமால்
கூறனார் அமர்தரும் குமரவேள் தாதைஊர்
"ஆறினார் பொய் அகத்து, ஐயுணர்வு எய்தி,மெய்
தேறினார்" வழிபடும் தென்குடித் திட்டையே.  ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர். எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர். திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர். குமரக்கடவுளின் தந்தை. அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் இவற்றைக் களைந்து, நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை அடக்கி , மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி , சிவனே மெய்ப்பொருள் எனத் தெளிந்தவர்கள் வழிபடும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .


No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...